ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன்

இலங்கையின் கடைசி மன்னன். தாய் மொழி தெலுங்கு. தமிழும் சிங்களமும் தெரிந்தவன். பவுத்த மதத்தையும் இந்து மதத்தையும் ஒன்றாக மதித்தவன். இசையை மிகவும் ரசித்தவன். அவன் ஆண்ட கண்டி ராஜ்ஜியத்தின் தலைநகர் கண்டியை ஒரு தேவலோக நகரம் போலக் கட்டி எழுப்பத் திட்டம் போட்டிருந்தான். ஆனால் விதி வேறு ஒரு திட்டம் போட்டிருந்தது.

மதிப்புக்குரிய பேராசிரியர் கணநாத் ஒபேசேகர, அவரின் “The Doomed King” ஏட்டில், இலங்கை வரலாற்றிலேயே இப்படி ஓர் துரதிர்ஷ்டசாலி மன்னன் வாழ்ந்ததில்லை என்று ஆரம்பிக்கிறார் அவர்.

பேராசிரியரும் கண்டி நகரில் பிறந்து வளர்ந்தவர். 1930 களில், அவர் சின்னப் பையனாக இருந்தபோது, மன்னன் ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் காலத்திலே நடந்த ஒர் பெரும் பயங்கரத்தை, பேராசிரியரின் மாமனார் ஒருவர் சோகக் கவிதையாகப் பாடிக் கொண்டிருப்பாராம். அதுவும் அடிக்கடி.

தவிர, வீட்டுப் பெரியவர்கள், டேய், இருட்டு நேரங்களில் கண்டி தெப்பக்குளம் பக்கம் போயிராத. போனாக் கதை முடிஞ்சிரும். கைக்குழந்தையோடு ஒரு பெண்.. வெள்ளைச் சீலையில் .. அது உன் கிட்ட வந்து .. என்று வேறு பயமுறுத்தி வைத்திருந்தார்கள். ஆகவே, யார்ரா அவன், ராஜசிங்கன் என்று அவர் மனசில் அப்போதே ஒரு ஆர்வம் துளிர் விட்டிருக்கிறது.

1815 களில் ஆங்கிலேயர் கைகளில் வீழும் வரை, பல தலைமுறைகளாக, நாயக்க வம்சத்தைச் சேர்ந்தவர்கள் கண்டி அரசை ஆண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் நாயக்க மன்னர்களின் ஆட்சி துவங்கிய காலகட்டத்தில் இருந்து அவர்களுக்கும் கண்டி மன்னர்களுக்கும் இடையில் நட்புறவு, திருமண உறவுகள் பலமாக இருந்திருக்கின்றன.

இலங்கையின் மன்னன் விமலதர்மசூரிய (1590-1604) படையில் வடுக (தெலுங்கு) போர்வீரர்கள் இருந்திருக்கிறார்கள். 1635-1667 காலகட்டத்தின் இலங்கை மன்னன், இரண்டாம் ராஜசிங்கன் (Great Rajasingha -11) மதுரை திருமலை நாயக்க மன்னர் அனுப்பிய படை உதவியுடன் இலங்கைக்குள் ஊடுருவிய போர்த்துக்கேயர்களை அடித்து விரட்டி இருக்கிறான்.

மதுரையில் இருந்து இலங்கை வந்து வாழ்ந்த இரண்டு இந்து ராணிகள் பவுத்த மதத்தைத் தழுவியதை இலங்கையின் மகாவம்சம் பெருமையோடு பேசுகிறது. அவர்களுக்காக 99 அத்தியாயங்களை ஒதுக்கியிருக்கிறது.

இலங்கை வந்து வாழ்ந்த நாயக்கர்கள் இந்து தெய்வங்களையும் புத்தரையும் ஒன்றாக வணங்கி வந்திருக்கிறார்கள்.

1798 ம் ஆண்டு. கண்டி அரசின் மன்னர் ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் வாரிசு எவரும் இல்லாத நிலையில் இறந்து போக, அவரின் மருமகன் கண்ணசாமியை மன்னராக முடி சூட்டுகிறார்கள். புதிய மன்னர் பேர் ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன். ஒரு பக்கம், பிராமணர்கள் யாகம் நடத்தி மந்திரங்கள் ஓத, மறுபக்கம், பவுத்த பிக்குகளின் பிரித் சடங்குகள் நடக்க, முடிசூட்டுவிழா பிரமாதமாக நடந்தது.

வேறு இளவரசர்களும் அரியணையின் மீது கண் வைத்திருந்தார்கள் – முத்துசாமி, துரைசாமி). இருந்தும் அரசியலில் அதிக செல்வாக்கு படைத்திருந்த அதிகாரி பிலிமத்தலாவை குறி வைத்திருந்தது கண்ணசாமியை மட்டும் தான்.

ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனுக்கு அபூர்வ சக்திகள் அல்லது கூர்மையான அரசியல் அறிவு ஏதாவது இருந்ததா என்றால் அப்படி எதுவுமில்லை. ஆனால் நாள் போகப்போக, அரசியலின் நெளிவு சுளிவுகளை வெகுவேகமாகக் கற்றுக் கொண்டான் என்பது மட்டும் உறுதி.

இலங்கையின் பவுத்த சிங்கள மக்களும், மன்னர் பரம்பரைகளும் ஒரு விஷயத்தில் மிகவும் கெட்டியாக இருந்தார்கள் என்பதைப் பேராசிரியர் நினைவுபடுத்துகிறார். புத்தரின் புனித பல் அடங்கிய பேழை, வைரங்கள் பொறித்த அரச பரம்பரை வாள், தங்கத்தால் செய்த அரியணை. இந்த மூன்றும் எவரிடம் பாதுகாப்பாக இருக்கிறதோ அவர் தான் மன்னர். வேறு எவருக்கும் அந்த உரிமை இல்லை.

(கி.பி 4 ம் நூற்றாண்டு வாக்கில் பண்டைய இந்தியாவில் இருந்து (ஒடிஷா மாநிலம்) ஒரு பிராமணப் பெண்ணால் கொண்டு வரப்பட்ட புத்தரின் புனித பல் சக்தி வாய்ந்தது. இடர்கள் ஏற்பட்டால் இலங்கையைக் காப்பாற்றும் சக்தி அதற்குண்டு என்பது பவுத்த சிங்கள மக்களின் நம்பிக்கை – அது இன்றும் தொடர்கிறது.)

இலங்கையை உரிமை கொண்டாட, முதலில் போர்த்துக்கேயர்கள், பிறகு டச்சுக்காரர்கள், மூன்றாவதாக, ஆங்கிலேயர்கள் என்று வரிசையாக வந்தது தெரிந்ததே. போர்த்துக்கேயர்கள் வந்த காலகட்டத்தில் இலங்கை மூன்று ராஜ்ஜியங்களாக இருந்தது. வடக்கே ராஜரட்டை. மத்தியில் மாயாரட்டை (கண்டி அரசு). தெற்கில் ருகுணுரட்டை.

போர்த்துக்கேயர்களும் டச்சுக்காரர்களும் ராஜரட்டை, ருகுணுரட்டை பகுதிகளை அவர்கள் வசம் கொண்டு வந்திருந்தாலும் கண்டி பெரும் சவாலாக இருந்தது.

கண்டி அரசு மலைகளும் காடுகளும் அடர்ந்த நிலப்பரப்பு. கெரில்லா யுத்தத்துக்கு வசதியாக அமைந்திருந்த இயற்கை அரண். மேலும் மறைந்திருந்து தாக்குவதில் கண்டி வீரர்கள் கில்லாடிகள். எனவே கண்டியை மடக்க முடியாமல் திணறிய டச்சுக்காரர்கள் முற்றுகையில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். பின்னாளில் வந்த ஆங்கிலேயர்களும் அதையே தொடர்ந்தாலும் எப்படி உள்ளே நுழையலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தார்கள்.

மன்னன் ராஜசிங்கன் வந்த ஆட்சிக்கு வந்துவிட்டான். ஆனால் ஆங்கிலேயர்களின் முற்றுகையால் கண்டி ரொம்பவும் தளர்ந்து போயிருந்தது. அரசின் கடல் வணிகம் முழுவதும் பறிபோன நிலையில் இருந்தது. அவசியமான உப்பு, கருவாடு, மற்றும் ஆடைகள் உட்பட பல்வேறு பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவியது. (முன்பு முஸ்லிம் வணிகர்கள் மூலம் பொருள்கள் கிடைத்தன.)

விரைவில் கண்ணசாமிக்கு பெப்பே காட்டிவிட்டு அல்லது முடித்துவிட்டு அவரே மன்னராகிவிடலாம் என்று ஏற்கெனவே கணக்குப் போட்டிருந்தார் பிலிமத்தலாவை. ஆனால் விசுவாசம் கொண்ட உளவாளிகள் மூலம் அவரின் நோக்கத்தை வந்த சில நாட்களிலேயே கண்டுபிடித்திருந்தான் மன்னன்.

நாயக்க வம்சம் தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததை பிலிமத்தலாவை வெறுத்தார். மன்னனுக்கு எதிராக ஆங்கிலேயர்களுடன் ரகசியமாக தொடர்புகள் வைத்திருந்தார். (அதை மன்னன் அறிந்திருந்தாலும் திருந்திவிடுவார் என்கிற நம்பிக்கை அவனுக்கிருந்தது.)

பிலிமத்தலாவை மட்டுமல்ல, அரசின் பல மேலதிகாரிகள் ஆங்கிலேயர்களுடன் கூட்டு வைத்திருந்தார்கள். மன்னனுக்கு ஆதரவாய் நடித்தபடி, ஆங்கிலேயர்களுக்குத் தகவல்கள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

மன்னன் கொடூரமானவனா? இல்லை என்கிறார் பேராசிரியர். சில சமயங்களில், அவனுக்கு எதிரான சூழ்நிலைகள் ஏற்பட்டபோது, அவனின் நடப்புகள் அவனைக் கொடியவனாகக் காட்டுகின்றன.

பேராசிரியர், நூற்றுக்கணக்கில் ஆதாரங்கள், தகவல்கள் தந்திருக்கிறார். (ஏட்டில், ஒவ்வோர் தொடரின் இறுதியிலும் குறிப்புகள் – எங்கிருந்து எடுத்தேன், ஏன் சில தகவல்களை ஒதுக்கித் தள்ளினேன்? சொல்லாடல்களில் மறைந்திருக்கும் உட்பொருள், சில மேற்கோள்களைக் காட்டி, என் ஊகங்கள் சரி என்று நினைக்கிறேன்….)

1800 களில் மன்னனை சந்தித்த பிரிட்டிஷ் அதிகாரி, ராபர்ட் பேர்சிவல் (Robert Percival), கண்டியை ஆண்ட மன்னர்கள் யாரையும் விட, மென்மையான குணம் படைத்த மன்னர் ராஜசிங்கன் என்கிறார்.

மன்னன் ராஜசிங்கன் கைதியாகக் கப்பலில் செல்லும்போது கூடவே இருந்த மருத்துவர், மார்ஷல் (Marshall) எழுதுகிறார் : ஏற்கெனவே மன்னர் ராஜசிங்கனை அறிந்திருக்கிறேன். ஆறடி உயரம். அழகான, கம்பீரமான நடை. யாருடனும் இயல்பாகப் பழகும் நேர்த்தி. கீழதிகாரிகளுடன் முதலில் கலந்து பேசிய பிறகே எந்த முடிவையும் எடுக்கும் பண்பு. அறிவார்ந்த பேச்சு. அதே சமயம் அவர் மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் விசுவாசம், பயம் கலந்த பணிவு.

1815 களில் மகாமுதலிய டீ சரம் (Mahamudaliya de Saram) எழுதிய நாட்குறிப்பில், மார்ஷல் சொன்ன கருத்துகளை அப்படியே அவர் ஆமோதிக்கிறார்.

சாதாரண கண்டி மக்கள் மற்றும் அரசில் கீழ்நிலைப் பதவிகள் வகித்தவர்கள் மன்னனை நேசித்தார்கள். அரசவைக்கு வந்த வழக்குகளில் மன்னன் ஏழைகளுக்கு சார்பாகத் தீர்ப்பளித்திருக்கிறான். அரசவையில் தமிழிலும் சிங்களத்திலும் பேசினார்கள். (இது மேல்நிலையில் பதவிகளில் இருந்த அதிகாரிகளுக்கு மற்றும் செல்வந்தர்களுக்குப் பிடிக்காமல் போனது.)

குருதெனியா பகுதியில் வயல்கள், பல்லேகல பகுதியில் தென்னந் தோப்புகள், ஹாரகம பகுதியில் மகாவலி கங்கை ஓரமாகக் கத்தரி மற்றும் வாழைத்தோட்டங்கள் அமைத்து விவசாயத்தை ஊக்குவித்தவன் மன்னன் ராஜசிங்கன்.

அவனுக்கு இசையில் பெரும் நாட்டம் இருந்தது. மாளிகையைச் சுற்றி பூமரங்கள், தாவரங்கள் நட்டு அழகாக வைத்திருக்க மிகவும் ஆசைப்பட்டான். தோட்டத்தை மேற்பார்வை செய்வது பிடித்த பொழுது போக்கு.

கண்டி தெப்பக்குளத்தை மன்னன் 1812 களில் கட்டி முடித்தான். அதன் திறப்புவிழாவில் மக்கள் பெருமளவில் கூடி மன்னனுக்குப் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். தெப்பக்குளத்துக்கு அவன் வைத்த பேர் : பாற்கடல் (சிங்கள மொழியில் கிரி முகுத). இந்து மத புராணங்களில் விஷ்ணு பகவான் பள்ளிகொண்டிருக்கும் அதே பாற்கடல் பெயர்.

கண்டியில் புத்தரின் புனித பல் இருக்கும் கோயிலின் முன்னால் கம்பீரமாகக் காட்சியளிக்கும் எண்கோணக் கட்டிடம் (பட்டிருப்புவ) அவனால் கட்டப்பட்டது. (பின்னாளில் அதை ஆங்கிலேயர்கள் தரைமட்டமாக்கினாலும் அதே வடிவில் மீண்டும் கட்டிக் கொடுத்தார்கள்.)

மேல்நிலை அதிகாரிகள் தான் அவன் செயல்பாடுகளைக் கண்டு தினமும் பொறாமையில் வெந்தார்கள். இவர்கள் ஒவ்வொருவரின் மனசிலும் நான் எப்படியும் அரசனாக வந்துவிடவேண்டும் என்கிற சுயநலம் வெறித்தன்மையோடு வளர்ந்திருக்கிறது. அதற்காக, எவரோடும் கூட்டு சேரத் தயாராக இருந்திருக்கிறார்கள்.

இந்த வரிசையில், முன்பு குறிப்பிட்ட இளவரசர்கள் மற்றும் பிலிமத்தலாவை, ஏகெலப்பொல, தும்பர மீகாஸ்தென்ன, ஏக்னாலிகொட என்று ஏகப்பட்டவர்களின் சரித்திரங்கள், காட்டிக் கொடுப்புகள் பரவலாக ஏட்டில் விரிவாக வருகின்றன.

மன்னன் முடிசூடிய அதே ஆண்டு, இலங்கையின் ஆளுநராக இங்கிலாந்தில் இருந்து வந்த நோர்த்துக்கு (Governer North) முதலில் கண்டியைப் பிடிப்பதில் ஆர்வம் இருக்கவில்லை. சமாதானம் செய்துகொள்ள ஆள் யோசித்தாலும் மேலிடத்திலிருந்து நெருக்கடி : கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யவும். கண்டியை எப்படியாவது நம் கைக்குள் கொண்டு வரவும்.

ஆங்கிலேயர்கள் எதைச் செய்தாலும் அதில் ஒரு நியாயம் இருப்பதாகக் காட்டிக் கொள்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே தான். 1800ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், மன்னன் ராஜசிங்கனை சந்திக்க, மேஜர் மாக்டொவல் தலைமையில் ஒரு தூதுக்குழு அனுப்பப்பட்டது.

ஆங்கிலேயரின் கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை மன்னன் முன் வாசித்துக் காட்டப்பட்டது.

மன்னரே உங்கள் பாதுகாப்புக்காக, 600 ஆங்கிலேய வீரர்கள், 1200 கூலிப்படை வீரர்கள் அடங்கிய ஒரு பட்டாளத்தைக் கண்டியில் நிரந்தரமாக நிறுத்துவோம். அதன் முழு செலவையும் மன்னர் ஏற்றுக் கொள்ளவேண்டும். அங்கிருந்து திருகோணமலைக்கு ஒரு வீதி அமைக்க அனுமதி தேவை. லவங்கப்பட்டை (கறுவாப்பட்டை) வர்த்தகம் நம் (ஆங்கிலேயரின்) கையிலேயே இருக்கவேண்டும்.

மன்னன் வேறு கோரிக்கைகள் வைத்தான். அதில் ஒன்று : கரையோரப் பட்டினங்கள் சிலாபமும், புத்தளமும் என் அதிகாரத்தில் இருக்கவேண்டும். தூதுக்குழு முடியாது என்று சொன்னது. ஆகவே எந்த முடிவை ஆங்கிலேயர்கள் எதிர்பார்த்தார்களோ அது தானாக வந்து சேர்ந்தது.

ஆங்கிலேயர்கள் போருக்கு ஆயத்தமானார்கள். மூன்று படையணிகள், இலங்கையின் வடக்கு, தெற்கு, கிழக்கிலிருந்து புறப்பட்டன.

இதில் ஒரு சங்கடமான செய்தி : படையணிகள் போகும் வழியில் கிராம மக்கள் போர்வீரர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்க முனைந்தார்கள். (கண்டியைப் பிடிக்கப் போகிறார்கள். இனி இலங்கை, முழுதாக ஆங்கிலேயர் கையில் வீழ்ந்துவிடும் என்று அவர்களுக்கு முன்னேயே தெரிந்திருந்தது.)

போர் நடந்தது. ஆனால் ஆனானப்பட்ட ஆங்கிலேயர்களிடம் தோற்கப் போகிறோம் என்றும் கண்டி அரசுக்குத் தெரிந்தது. ஆகவே மன்னனும் அதிகாரிகளும் மக்களும் வழக்கம் போல் ஊவா மாகாணத்தில் போய் ஒளிந்துகொண்டார்கள்.

21.02.1802 அன்று ஆங்கிலப்படை கண்டி நகருக்குள் நுழைந்தபோது ஒரு சில நாய்களைத் தவிர, அங்கே மனிதர்களே இருக்கவில்லை.

எப்படியோ வந்துவிட்டோம். அதற்காக சும்மா இருக்க முடியுமா? கண்களில் பட்ட எண்கோண மண்டபம், குடியிருப்புகள் அனைத்தையும் தரைமட்டம் ஆக்கினார்கள். கிடைப்பதைக் கொள்ளை அடித்தார்கள்.

இருந்தும் ஏராளமான வீரர்களின் இழப்பு, நோய்கள் ஆங்கிலேயர்களை வதைத்தது மட்டுமல்ல, கண்டி வீரர்களின் கெரில்லா தாக்குதல்கள் பயங்கரமாக இருந்தன. ஆகவே பின்வாங்கினார்கள்.

மன்னனின் வீழ்ச்சிக்கு, ஆங்கிலேயர்களின் போர்கள் அல்ல தந்திரங்கள் தான் காரணம் என்பதை நிரூபிக்கிறார் பேராசிரியர். அவர்களின் சூழ்ச்சிகளின் பின்னால் இருந்தவன் ஆங்கிலேய அரசின் தலைமை உளவாளி, ஜான் டொய்லி (John D’Oyly).

1801ம் ஆண்டு இலங்கை வந்த டொய்லி, யுத்தங்களினால் பணச்செலவும் உயிரிழப்புகளும் கூடுமே தவிர, வேறு பலன்கள் கிடைக்காது. ஆகவே எதிரியை அவன் கோட்டைக்குள்ளேயே இருந்து தோற்கடிக்க வேண்டும் என்று அவன் ஆங்கில அரசுக்கு ஆலோசனை சொன்னதை ஏற்றுக் கொண்டார்கள்.

மெல்ல மெல்ல, அவன் கண்டியின் மேலதிகாரிகளுக்கு வலை விரிக்க ஆரம்பித்தான். பிலிமத்தலாவை தொடக்கம் கண்டியின் மேலதிகாரிகளுக்குப் பரிசுப் பொருள்கள் (பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணத்து மாம்பழங்கள் உட்பட ) மற்றும் உத்தரவாதங்கள் தாராளமாகக் கொடுக்கப்பட்டன. பொது மக்களை விட்டுவிட்டால், பிரபலம் வாய்ந்த பல பவுத்த பிக்குகள் கூட டொய்லிக்கு உதவி இருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் தரும் செய்தி.

வதந்திகளை மக்களிடையே தாராளமாகப் பரப்புவதில் வெற்றி கண்டவன் டொய்லி. மன்னன் குடிக்கு அடிமை ஆகிவிட்டான். எல்லாப் பதவிகளிலும் தமிழர்களை மட்டுமே நியமிக்கிறான் என்று டொய்லி அவன் ஆட்கள் மூலம் செய்திகள் பரப்ப ஆரம்பித்தான்.

(கண்டியில் வாழ்ந்திருந்த தெலுங்கு (நாயக்க) குடிமக்களைத் தமிழர்கள் என்றே சிங்கள மக்கள் நினைத்தார்கள். வடுக தெமலா என்று கேலியாக அழைத்திருக்கிறார்கள். ஏன் போர்த்துக்கேயர்களைக் கூடத் தமிழர்கள் என்று அவர்கள் நினைத்திருக்கிறார்கள். கண்டியின் மேல்மட்ட வர்க்கத்துக்கு உண்மை தெரிந்திருந்தாலும் பொதுமக்கள் பாமரர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று பதிவு செய்கிறார் பேராசிரியர்.)

மன்னன் ராஜசிங்கன் எதை வேண்டுமானாலும் மன்னிப்பான். ஆனால் துரோகத்தை மட்டும் அவனால் தாங்கிக் கொள்ள முடியாமல் போய்விட்டது.

அவனின் அதிகாரிகள் ஒவ்வொருவராக ஆங்கிலேயர்கள் பக்கம் சாய்ந்தபோது அல்லது சந்தேகம் ஏற்பட்டபோது கடுமையான தண்டனைகள் விதித்தான். சித்திரவதை, மரண தண்டனை ஒரு வகை. குற்றவாளியின் காது, மூக்குகளை அறுத்து, உயிரோடு எதிரிகளின் பாசறைக்கே அனுப்புவது இன்னொரு வகை.

அன்றைய கண்டி அரசில் இவை சாதாரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிமுறைகள், சட்டங்கள்.

குமாரிஹாமியின் கதை இன்றும் சிங்கள மக்களிடையே துயரத்தை ஏற்படுத்தும் கதை. மன்னன் ராஜசிங்கனின் வாழ்க்கையில் அழிக்கவே முடியாத கறை.

ஆங்கிலேயர்களோடு குலாவுவதில் மேலதிகாரி எகெலப்பொல, பிலிமத்தலாவையை விட ஒரு படி மேலே போயிருந்தான். மன்னன் ராஜசிங்கனுக்கு அவனின் சதித் திட்டங்கள் தெரிய வந்தன. கண்டிக்கு வந்து என்னை சந்திக்கவும் என்று மன்னனிடமிருந்து கட்டளை போனது. வரவில்லை. இரண்டாம் தடவையும் கட்டளை போனது. வரவில்லை.

மன்னன் கோபம் தலைக்கு மேல் எகிறியது. எகெலப்பொல குடும்பத்தையே கைது செய்து பணயக் கைதிகளாகக் காவலில் வைத்தான். எகெலப்பொலவுக்கு அது தெரிந்தும் வரவில்லை. முடிவில் குடும்பத்தின் அத்தனை பேரையும் கொலை செய்ய ஆணையிட்டான் மன்னன்.

அப்பாவி குமாரிஹாமியும் அவளின் குழந்தைகளும் தலைகள் கொய்யப்பட்டு ஒரு குளத்தில் மூழ்கடிக்கப்பட்டது உண்மை.

ஆனால் ஒவ்வொருவராக அவர்களைக் கொலை செய்ததை தலதா மாளிகை (புத்தரின் புனித பல் வைக்கப்பட்டிருக்கும் கோயில் ) முன்னுள்ள எண்கோண மண்டபத்தில் அமர்ந்தபடி மன்னனே நேரடியாகப் பார்வையிட்டான் என்பது அண்டப் புளுகு என்கிறார் பேராசிரியர்.

இந்தப் புரளியைக் கிளப்பிவிட்டவர்கள் ஆங்கிலேயர்கள். டொய்லியின் உதவியாளராக இங்கிலாந்தில் இருந்து வந்த ஜான் டேவி (John Davy) இப்படி அளந்து விட்டிருக்கிறான் என்று என்கிறார் அவர்.

1814 ல் நடந்த இந்தத் துயர சம்பவத்தை 1816 ல் வந்து சேர்ந்த இவன் எப்படி அறிந்து கொண்டான்? ஒரு கண்டி அதிகாரி (வெல்லச திசாவை) சொன்னானாம். அந்த அதிகாரி அதை நேரடியாகப் பார்த்தானா? இல்லை. அந்த அதிகாரிக்கு யாரோ ஒருவர் சொன்னாராம். மேலும், இந்த நிகழ்வை மக்கள் திரளாக வந்து பார்த்துக் கூக்குரலிட்டு அழுதார்களாம். இத்தனைக்கும் அந்த அதிகாரிக்கு ஆங்கிலம் தெரியாது. ஜான் டேவிக்கு சிங்களம் தெரியாது. இருவருக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளரும் இல்லாமல் எந்த மொழியில் பேசிக் கொண்டார்கள்?

இதே காலகட்டங்களில், இங்கிலாந்தில் அரசர்கள் எதிரிகளைக் கொன்றால் அவர்களின் உடலைத் துண்டுகளாக வெட்டி, அரண்மனை வாசலிலும் மற்ற ஊர்களிலும் காட்சிக்கு வைப்பது அவர்களின் பண்பாடு. மேலும் இந்த நிகழ்வுகளை வேடிக்கை பார்க்க மக்கள் கூட்டங்கூட்டமாக வருவதும் அவர்களின் பண்பாடு. (ஜான் டேவி, தன் சொந்த நாட்டின் நிலவரங்களை இலங்கையின் பின்னணியில் சேர்த்தால் இன்னும் பரபரப்பாக இருக்குமே என்று நினைத்தானோ என்னமோ?)

இலங்கையின் பவுத்த பாரம்பரியத்தில் இப்படி அவலங்கள் நடந்ததற்கு எந்த சாட்சியுமில்லை.

மன்னன் ராஜசிங்கனும் முன்னைய மன்னர்களும் அரண்மனையிலிருந்து சில நிமிட தூரத்தில் அமைந்திருந்த மல்வத்தை பவுத்த பீடத்தின் தலைமை பிக்குகளிடம் பாடம் பயின்றவர்கள். அவர்களிடம் பெருமதிப்பு கொண்டவர்கள். பிக்குகள் இப்படி ஒரு சம்பவம் நடக்க விட்டிருப்பார்களா?

அடுத்து, எகெலப்பொல சம்பவம் நடந்த சில நாட்களின் பின் டொய்லியை சந்தித்திருக்கிறான். ஆனால் டொய்லியின் நாட்குறிப்பில், இந்தக் கோர நிகழ்வு பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

மன்னனின் அரண்மனை, தலதா மாளிகையின் (புத்தரின் புனித பல் வைக்கப்பட்டிருக்கும் கோயில்) பக்கத்திலேயே இருந்தது. அது புனித நிலம். புனித கோயில் பகுதியில் குமாரிஹாமி குடும்பத்தை வைத்து வெட்டியிருப்பான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

கோயிலுக்கு வரும் எவருமே முதலில் குளித்துவிட்டு, மிகவும் தூய்மையாக வரவேண்டும் என்று கடுமையான சட்டங்கள் போட்டிருந்தான் மன்னன். அதற்கென்றே தெப்பக்குளத்துக்கு அருகாமையில் இன்னொரு குளம் வெட்டி வைத்திருந்தான். மிகவும் ஆசாரமானவன் அவன். இந்து மனுசாஸ்திரங்களை நம்பியவன்.

(அவன் கட்டிய பாற்கடல் அவனின் தனிப்பட்ட சொத்து. புனிதமானது. இன்றும் மக்கள் நம்புவது போல, குமாரிஹாமி குடும்பத்தை அதில் மூழ்கடிக்க வேண்டிய அவசியம் அவனுக்கில்லை.)

இனி குமாரிஹாமி குடும்பத்தின் துயரங்கள் நடந்த காலத்தில் இயற்றப்பட்ட (1814 -1816) சிங்கள காவியங்கள்: முதலில் எகெலப்பொல வர்ணாவ. இது எகெலப்பொலவை, இலங்கையைக் காக்க வந்த மன்னவனே, தென்னவனே என்று மிகவும் புகழ்ந்து பாடுகிறது. இரண்டாவது: கிருல சந்தேசய. இரண்டிலுமே குமாரிஹாமி குடும்பத்துக்கு நேர்ந்த அவலங்கள் பற்றி ஒரு வரி கூட இல்லை.

துவக்கத்திலேயே பேராசிரியர் சொல்கிறார் : ஒரு சமூகம் தன்னைத் தற்காத்துக் கொள்ள எப்படியெல்லாம் பொய்களை உருவாக்கிக் கொள்கிறது.

1815 ல் ஆங்கிலேயர்கள் கண்டி மீது இரண்டாவது படையெடுப்பை நிகழ்த்தினார்கள். இந்தத் தடவை அவர்கள் சொன்ன காரணங்கள் : மன்னன் குடிக்கு அடிமையாகிவிட்டான். தவிர, இன்னும் இரண்டு மனைவிகளை சேர்த்துக் கொண்டான். கண்டி மக்கள் பாவம். நாம் அவர்களைக் காப்பாற்றப் போகிறோம்.

ஆனால் போர் எதுவும் நடக்கவில்லை. பதிலாக, கண்டியை ஒட்டி இருந்த ஒரு கிராமத்தில் (மெதமாநுவர) மன்னன் ஒளிந்திருந்தபோது, தற்செயலாகப் பிடிபட்டான்.

பிடித்தவர்கள் சுமார் 500 பேர் கொண்ட ஒரு குழு – டொய்லியின் கையாட்கள். மன்னன் என்றும் பாராமல், அவன் ஆடைகளைக் களைந்து வயல்வெளியே தரதரவென்று இழுத்துப் போயிருக்கிறார்கள். மன்னனின் ராணிகளையும் அவர்களின் காதணிகளை அறுத்து, நகைகளைப் பிடுங்கி அரைகுறை ஆடைகளுடன் கேவலப்படுத்தி இருக்கிறார்கள். நடக்கவே முடியாமல் இருந்த மன்னனின் தாய்க்குக் கூட அனுதாபம் காட்டவில்லை.

அந்த சமயம் கண்டியில் இருந்த டொய்லிக்கு செய்தி போயிற்று. அவனுக்கு ஒரே மகிழ்ச்சி. இருந்தாலும் அவன் ஓடி வந்து மன்னனிடம் மன்னிப்புக் கேட்டான். மன்னனையும் அவன் குடும்பத்தையும் பாதுகாப்புடன் கண்டிக்கு அழைத்து வந்தான்.

மன்னனைக் கைது செய்துவிட்டார்கள் என்கிற செய்தி கண்டி முழுவதும் பரவ, எங்கே தெலுங்கு மக்கள் வாழ்ந்தார்களோ அவர்களை அழிக்க, அதே கும்பல் கிளம்பியது. கண்டியில், சுற்றுப் புறங்களில் வாழ்ந்த அப்பாவி தெலுங்கு மக்கள் வேட்டையாடப்பட்டார்கள். தப்பியவர்களை, கொழும்பு அல்லது யாழ்ப்பாணத்துக்கு ஆங்கிலேயர்கள் அனுப்பி வைத்தார்கள்.

மன்னனை நாடு கடத்த முடிவெடுத்தார்கள். கொழும்புத் துறைமுகத்திலிருந்து கப்பலில் ஏற்றப்பட்டு சுமார் ஒரு மாத காலப் பயணத்தின் பின், மன்னனும் பரிவாரங்களும் வேலூர் துறைமுகத்தில் வந்திறங்கினார்கள்.

அங்கே வேலூர் சிறையில் 1816 ம் ஆண்டில், அவனது 52 வது வயதில் மன்னன் உயிர் பிரிந்தது.

பேராசிரியர், மன்னன் காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள், பிறகு கண்டி அரசில் தோன்றிய நிலைமைகள் அனைத்தையும் பக்கம் பக்கமாக விவரிக்கிறார். இந்தக் கட்டுரை ஒரு சிறு அறிமுகம் மட்டுமே.

மென்மையான குணம் படைத்த மன்னன் என்றால் எதற்காக ஏதுமறியாத அப்பாவி குமரிஹாமி குடும்பத்தையே கொலை செய்யும் கொடூர முடிவை எடுத்தான்?

மன்னனின் மனோ நிலையைக் கவனத்தில் கொள்ளுங்கள். நாள் முழுதும் ஒருவித பதட்டத்தோடு வாழ்ந்திருக்கிறான் அவன். எந்த நேரமும் அவனுக்கு ஆபத்து வரலாம். யாரை நம்பலாம், நம்பக்கூடாது என்று குழப்பத்தோடு இருந்திருக்கிறான். எதுவும் நிச்சயமில்லை. அதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்கள் பக்கம் போவதிலேயே குறியாக இருக்கிறார்கள். ஆகவே கோபத்தின் அளவு அதிகரிக்க, அதிகரிக்க அதற்கு ஒரு வடிகால் தேவைப்பட்டிருக்கிறது. யாரையாவது பழி வாங்கினால் தான் நிம்மதி என்று அவன் நினைத்திருக்க வேண்டும் என்கிறார் பேராசிரியர்.

மன்னனுக்காக நான் வக்காலத்து வாங்க வரவில்லை. அவன் செய்தது மிகப் பெரிய தவறு. ஆனால் அவன் மேல் ஒரு அனுதாபம் வருகிறது என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் அவர்.

மன்னன் மட்டுமா குற்றவாளி? அவனை அந்த நிலைக்குத் தள்ளினார்களே ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்கள். அவர்களும் குற்றவாளிகள். சொந்த சுயநலத்துக்காக, மன்னன் முதுகில் குத்தினார்களே கண்டிய அதிகாரிகள். அவர்களும் குற்றவாளிகள். இவர்கள் எல்லாருமே அந்தக் கொலைபாதகத்துக்குப் பதில் சொல்லவேண்டியவர்கள் என்று முடிக்கிறார் பேராசிரியர்.

என் முடிவுரை : யாழ்ப்பாணத்து மக்கள் நன்றி உணர்வு கொண்டவர்கள். போர்த்துக்கேயர்கள் யாழ்ப்பாணத்தைப் பிடிக்க வந்தபோது எதிர்த்துப் போராடினான் சங்கிலி மன்னன். போர்த்துக்கேயர்களின் தூண்டுதலில் கிறிஸ்தவர்களாக மாறிய மன்னார் மக்களை அவன் கொலை செய்திருந்தாலும் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போராடினானே என்று சங்கிலி மன்னனுக்கு சிலை வைத்திருக்கிறார்கள் அவர்கள்.

மன்னன் ராஜசிங்கனின் உதவியோடு, வன்னிப்பகுதியில் ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களோடு போரிட்டு வீழ்ந்தான் பண்டார வன்னியன். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் அவனுக்கு நினைவுச் சின்னம் இருக்கிறது.

கண்டி நகருக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உள்நாட்டுப் பயணிகளும் தினமும் ஆயிரக் கணக்கில் வருகிறார்கள். அவர்கள் தலதா மாளிகை மட்டுமல்ல, மன்னன் ராஜசிங்கன் கட்டிய எண்கோண மண்டபம், அழகிய தெப்பக்குளம் எல்லாம் பார்த்து ரசிக்கிறார்கள். அவர்களுக்காக, கண்டி நகரமே விடுதிகள், ஓட்டல்கள், வணிக நிலையங்கள் என்று களை கட்டுகிறது. காசு கொட்டுகிறது.

கண்டியை அழகுபடுத்தியது மட்டுமல்ல, எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்க்கைக்கு ஒரு பொருளாதாரத் தளமே அமைத்துக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறான் மன்னன் ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன். அவனுக்கு நினைவுச் சின்னம் அமைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் குறைந்தது அவன் பேரெழுதி ஒரு செப்புத் தகடாவது அவன் கட்டிய குளத்து மதிலில் பொறித்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை?

கண்டி மக்களைத் தான் கேட்கவேண்டும்.

உன் பார்வை போலே என் பார்வை இல்லை

கார்ல் மார்க்ஸ் சொன்ன தொழிலாளர்களின் புரட்சி ஏன் இன்னும் ஏற்படவில்லை? முதலாளித்துவத்தைக் கவிழ்க்கப் போவது யார்? புத்தகங்கள் இருக்கும் போது நண்பர்கள் எதுக்கு?

ஆயிரத்தில் ஒருவன் கட்டுரையில் என்னை ஆச்சரியப்பட வைத்தவர்கள் இரண்டு பேர் என்று குறிப்பிட்டிருந்தேன். இதோ இரண்டாமவர்.

The Wordly Philosophers நூலில் அதன் ஆசிரியர் கார்ல் மார்க்ஸுக்கும் இதில் வரும் மனிதருக்கும் ஒரே எண்ணிக்கையில் பக்கங்கள் ஒதுக்கி இருக்கிறார்.

மூளை நரம்பு பாதிக்கப் பட்டவர் போல் நடந்து கொண்டவர், எதிலும் பற்றில்லாத துறவி போல் வாழ்ந்தவர் என்று ஒவ்வொரு பக்கமும் அவருக்கு எத்தனையோ அடைமொழிகள் கொடுத்து எழுதித் தள்ளி இருக்கிறார் நூலாசிரியர். ஆனால் இவரின் மேதைமையை மட்டும் தள்ளவே முடியவில்லை.

முழுப் பேர்: தோர்ஸ்டைன் வெப்லென் (Thorstein Veblen). அந்த காலகட்டங்களில் அமெரிக்காவுக்குப் பஞ்சம் பிழைக்கப் போன ஒரு நார்வீஜிய குடும்பத்தில் பிறந்தவர். பிறந்த ஆண்டு : 1857.

குடும்பத்தில் எல்லாரும் விவசாய நிலத்தில் வேலை செய்ய, இவரோ புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்தார். எது கிடைத்தாலும் வாசித்தார்.

பின்னாளில், அவரின் ஒரு தம்பி இப்படிக் குறிப்பிட்டார்: எப்போ பார்த்தாலும் வாசித்துக் கொண்டே இருப்பான். ரொம்ப அதிர்ஷ்டசாலி. பொய் சொன்னால் கூட, நம்பக் கூடிய மாதிரி சொல்லுவான்.

வெப்லென் ஒரு தினுசான ஆள். எப்போதும் தனிமையை விரும்பிய மனிதர். இருந்தும், அவர் கண்கள் மற்றவர்களை எடை போட்டபடி இருந்திருக்கின்றன. அன்றைய சூழ்நிலையையும் மனிதர்களின் நடத்தைகளையும் கூர்மையுடன் அவதானித்திருக்கிறார்.

அன்றைய பொருளாதார சூழ்நிலை எப்படி இருந்தது? சாதாரண மக்களை விட்டுவிடுவோம். ஒப்பீட்டளவில், செல்வந்தர்கள் அய்ரோப்பாவில் ஒரு விதமாகவும் அமெரிக்காவில் இன்னொரு விதமாகவும் வாழ்ந்திருக்கிறார்கள்.

அய்ரோப்பாவில், பணக்கார ஆட்கள் சமூக அந்தஸ்தில் அப்படி ஒன்றும் பெரிய இடத்தில் இருக்கவில்லை. சட்டங்களை சொந்த சுயநலத்துக்காக வளைத்து, கோல்மால்கள் செய்து தான் அவர்கள் உயர்நிலைக்கு வந்தார்கள் என்று அதிகமாய் எல்லாருக்கும் தெரிந்திருந்தது.

அமெரிக்காவில் அப்படி அல்ல. காசு சேர்க்க எந்த வழியையும் உபயோகிக்கலாம் என்று எழுதப்படாத விதிகள் இருந்தன. பணக்காரர் ஆகவேண்டும் என்றால் நீதி, நியாயம், வெட்கம், சூடு சொரணை எதுவும் தேவை இல்லை. அங்கிருந்த மக்களும் அதைக் கண்டு கொள்ளவில்லை. எல்லாருக்கும் காசு ஒன்றே குறிக்கோள். காசு பெருகப் பெருக, சமூகத்தில் மதிப்பும் கூடியது.

இதை அன்றைய பொருளியலாளர்கள் எப்படிப் பார்த்தார்கள்?

அமெரிக்க பொருளியலாளர்கள், இந்தப் போக்குக்குப் புதிய பேர்கள் சூட்டி மகிழ்ந்தார்கள். சூழ்ச்சிகள் செய்து எதிராளியை வீழ்த்துவதைத் துணிச்சல், விவேகம் நிறைந்த செயல்பாடு என்று வர்ணித்தார்கள். மோசடிகள் செய்வதை சாணக்கியத்தனம் என்றார்கள். செல்வந்தர்களின் ஆடம்பர செலவுகளுக்குத் தவிர்க்கவே முடியாத செலவுகள் என்று விளக்கம் சொன்னார்கள்.

அய்ரோப்பிய பொருளியலாளர்களோ, கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்று பட்டும் படாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஆடம் ஸ்மித் துவங்கி கார்ல் மார்க்ஸ் வரை முதலாளித்துவத்தின் போக்குகளை ஒன்று ஆதரித்தார்கள் அல்லது எதிர்த்தார்கள். இருந்தும், இந்த நடப்புக்குத் தர்க்க ரீதியான விளக்கம் சொல்ல முடியவில்லை. காரணம், இவர்கள் அதே சமுதாயத்துக்குள் இருந்து யோசித்தவர்கள்.

இதைப் புரிந்து கொள்ள, அதன் சார்புநிலையிலோ அல்லது எதிர்நிலையிலோ, எதிலுமே ஒட்டிக் கொள்ளாமல் ஒதுங்கி வாழும் – உள்ளதை உள்ளபடியே பார்க்கும் சுதந்திரமான ஒருவரின் பார்வை அவசியம் என்கிற தேவை இருந்தது.

வெப்லெனைத் தவிர, வேறு யார் இதற்குப் பொருத்தமாக இருக்க முடியும்? – நூலாசிரியர் கேட்கிறார்.

வெப்லென் இந்தக் களத்தில் (பொருளியலில்) என்றுமே ஒரு அந்நியனாக வாழ்ந்தார். எந்த சித்தாந்தத்திலும் சிக்கிக் கொள்ளவில்லை. தனிமையில் தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டவர்.

ஒரு சமயம், கார்ல் மார்க்ஸை ஆகா, ஓகோ என்பார். அடுத்த கணம், தயவு தாட்சண்யம் பார்க்காமல் விமர்சனம் பண்ணுவார். முரண்பாடுகளின் மொத்த உருவம். ஆனால் அவர் உதிர்க்கும் கருத்துக்கள் யோசிக்க வைக்கும்.

அதனாலேயே, அவருக்குப் புத்திஜீவிகள் மத்தியில் ஒரு தனி மதிப்பும், எதிர்ப்பும் கூடவே இருந்தன. அவர் விரிவுரையின் போது, என்ன சொல்கிறார்? சொல்ல வருகிறார்? எதுவும் புரிந்து கொள்ள முடியவில்லை. மீண்டும் விளக்க முடியுமா என்று கேட்டால், அது தேவை இல்லை என்பார்.

அவரின் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே போயிற்று. ஒரே ஒரு மாணவனுக்காக மட்டும் விரிவுரை நடத்திய காலங்கள் உண்டு. ஒரு சமயம், பல்கலைக்கழக வாசலில், என் விரிவுரை திங்கள் காலை மட்டும் நடக்கும். 10 மணிக்குத் துவங்கும். 10.05 க்கு முடிந்துவிடும் என்று வாசகம் எழுதித் தொங்கவிட்டார்.

மாணவர்கள் இல்லை. நண்பர்கள் என்று யாருமே இல்லை. இருந்தும், அவருக்கு ஒரு பெண் தோழிகள் பட்டாளமே இருந்தது. அவரின் மணவாழ்க்கை ஒரே அக்கப்போர். தவிர்த்து விட்டேன்.

1899 ம் ஆண்டு. அவரின் முதல் நூல் அவரை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது.

உலகம் எந்தன் கைகளிலே உருளும் பணமும் பைகளிலே

நூலின் பேர் : The Theory of Leisure Class. தமிழில் : வெட்டியாய்ப் பொழுது போக்கும் வர்க்கம் பற்றிய கோட்பாடு எனலாமா?

வழக்கமாக, முதலாளித்துவம் பேசும் பொருளியலாளர்கள் மனிதர்களில் ஏன் ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றன என்று கேட்டால், ஏற்கெனவே தயார் செய்து வைத்திருந்த ஒரு விளக்கத்தைப் பிச்சி வாங்குவார்கள்.

ஓர் சமூகம் என்பது பொய்யான தோற்றம். தனி மனிதர்கள் சேர்ந்த ஒரு கூட்டம் என்பது தான் சரியாக இருக்கும். ஒவ்வொரு மனிதனும் அந்தக் கூட்டத்தில் சுயநலத்தோடு இயங்குகிறான். வேலை வேலை என்று ஆலாய்ப் பறக்கும் மனிதர்கள் தொகை கூடிக்கொண்டே போனால் என்ன நடக்கும்?

அங்கே பயங்கரமான போட்டி உருவாகிறது. இதுவரை மனிதனின் மனிதனின் உள்மனதில் தூங்கிக் கொண்டிருந்த முரட்டுத்தனம் விழித்துக் கொள்கிறது. எந்த விதத்திலும் தன்னைக் காத்துக் கொள்ள விழைகிறது.

பொதுவாய், மனிதர்கள் நிதானமாய் சிந்தித்து, பகுத்தறிவோடு செயல்படுபவர்கள். ஆகவே சிலர் அந்த நிலைமையை, களேபரத்தை தமக்கு வசதியாக வளைத்துக் கொள்கிறார்கள்.

ஆகவே, போட்டி என்று வரும்போது பொருளாதாரத்தில் சிலர் மேலே போக, மற்றவர்கள் கீழேயே மாட்டிக் கொண்டு லோல் படுகிறார்கள். சமூகத்தில் முன்னேறிய மனிதர்களுக்கு வேலை செய்ய வேண்டிய தேவை குறைந்து கொண்டே போகிறது. (அதற்கு மற்றவர்கள் இருக்கிறார்களே.)

ரொம்ப சிம்பிளான விளக்கம். நியாயமானது. ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஆனால் வெப்லென் மசியவில்லை. அதென்ன, உள்மனம்? நிதானமாக, பகுத்தறிவோடு செயல்படும் மனிதர்கள்? எந்த ஒரு மனிதனுக்கும் ஒய்வாக இருப்பது தான் பிடித்தமான தொழில் என்று துவங்குகிறார்.

பழங்குடி மக்களின் வாழ்க்கையை எடுத்துக் கொள்கிறார். (1) சில செவ்விந்தியர் குழுக்கள், (2) ஜப்பானின் அய்னுஸ் (Ainus) பழங்குடிகள் (3) ஆஸ்திரேலியாவின் பழங்குடிகள் (Aborigines).

இந்த மக்களுக்கு ஓய்வாக இருப்பது என்றால் எதுவும் புரியாது. இந்த எளிமையான சமுதாயங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு தொழில் ஒதுக்கப் பட்டிருக்கிறது. அதை செய்து கொண்டே இருப்பதில் ஒரு பெருமை உணர்வு அவர்களுக்கு ஏற்படுகிறது. செய்யும் தொழிலை மேலும் திறனோடு செய்யவேண்டும் என்கிற உந்துதல் இருக்கிறது. சும்மா வெட்டியாய்ப் பொழுது போக்குவதற்கு மதிப்பே இல்லை.

அடுத்து, பொலினீசியர்கள், ஐஸ்லாந்தின் பழங்குடிகள், ஜப்பானின் shogunates (பிரபுத்துவ பிரிவு) மக்களின் வாழ்க்கைக்கு வருகிறார்.

இந்த மக்கள் சமுதாயங்களில், ஓய்வெடுக்கும் ஒரு வர்க்கம் இருக்கிறது. இங்கே மற்றவர்கள் இவர்கள் ஓய்வெடுக்கட்டும் என்று அனுமதி கொடுத்திருப்பது ஆச்சரியமான ஒன்று. ஆனால் இந்த வர்க்கம் நாம் நினைப்பது போல் சும்மா படுத்திருப்பதில்லை.

எப்போது அடுத்த ஊர் போய்க் கொள்ளை அடிப்பது? வியூகங்கள், போர்த் தந்திரங்கள் என்று விலாவாரியாய்க் கலந்து பேசி திட்டங்கள் போடுவது என்று ரொம்ப பிஸியாய் இருக்கும் இந்த வர்க்கம். அப்படி மற்ற ஊர்களை அடித்து எடுத்து வரும் பொருள்களால் அவர்களின் பொருளாதாரம் உயர்கிறதே. ஆகவே, இந்த வர்க்கத்துக்கு மதிப்பு, மரியாதை எல்லாம் தானாக வருகிறது.

அதே சமயம், சாதாரணமாக, வழக்கம் போல் செய்ய வேண்டிய வேலைகளுக்கு அந்த சமுதாயங்களில் மதிப்பு குறைந்து கொண்டே போகிறது. இதெல்லாம் வேலையா? கேவலம் இப்படி எல்லாம் வாழவேண்டி இருக்கே என்று கவலைப்படுபவர்கள் அங்கே அதிகம்.

இதில் இருந்து என்ன முடிவுக்கு வருகிறோம்? மாறிக்கொண்டிருக்கும் சமுதாயங்களில் சிந்தனைகள் இப்படி உருவாகின்றன. சமூகம் தன்னைத் தானே கட்டமைத்துக் கொள்கிறது. உள்மனது, மனிதன் பகுத்தறிவோடு செயல்படுபவன், அது இது என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இன்றைய நவீன வாழ்க்கையைப் பார்ப்போம். முதலாளித்துவ வர்க்கம், ஓய்வெடுக்க வேண்டும் என்கிற சிந்தனையில் சூழ்நிலைகளுக்கு ஏற்றது போல் தன் வழிமுறைகளை மாற்றிக் கொள்கிறது. மற்றவர்களிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பாமல் இருக்க, சாமர்த்தியமாக செயல்படுகிறது.

மற்றவர்களின் உழைப்பை உறிஞ்சி அனுபவிக்கும் குணாம்சம் மாறுவதில்லை. போர்கள், கொள்ளைகள், அடிமைகள் என்கிற காலம் போய்விட்டது. அதெல்லாம் அசிங்கம். அநாகரீகம். நவீனமாக, எப்படி இன்னும் இன்னும் பணம் புரட்டலாம் என்று சிந்திக்கிறது.

அது மட்டுமா? சேர்கிற பணத்தை ஆடம்பரமாய் அல்லது ஊதாரித்தனமாய் செலவழிப்பது அடுத்த கட்டம். இது பணக்கார வர்க்கத்தின் ஒரு முக்கிய மனோநிலை என்று சுட்டிக் காட்டுகிறார் வெப்லென்.

என்னைப் பார். நான் விட்டெறியும் காசைப் பார். டாலர் நோட்டைக் கிழித்து வீசுவேன். அல்லது கொளுத்தி வேடிக்கை பார்ப்பேன். உன்னாலே அது முடியுமா? (இதெல்லாம் வீட்டுக்குள் இருந்து செய்தால் எந்தப் பயனும் இல்லை. நாலு பேர் பார்த்தால் தானே மதிப்பு?)

காசு சேர்க்கிற வித்தை ஒரு பக்கம். அதை எப்படியும் செலவழிப்பேன் என்று காட்டுவது இன்னொரு வித்தை.

இந்த செயல்பாடுகள் மற்ற சாதாரண காமா சோமாக்களைப் பொறாமைப்பட வைக்கிறது. பிறந்தால் இவர்கள் போலப் பிறக்க வேண்டும். வாழ்ந்தால் இவர்கள் போல வாழ வேண்டும். சொந்த வேலையில் ஒரு வெறுப்பு உண்டாகிறது. நான் செய்யும் தொழில் எல்லாம் தொழிலா? எழவெடுத்த கருமாதி.

அடுத்து, கார்ல் மார்க்ஸை ஒரு பிடி பிடிக்கிறார் வெப்லென். புரட்சி நிச்சயம் வரும். முதலாளித்துவம் அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. தொழிலாளர்கள் ஒன்றிணையத் தான் போகிறார்கள் என்றாரே. ஏன் நடக்கவில்லை?

அவனவன் எப்படா பணக்காரன் ஆகப் போகிறோம்? எப்போ அவன் மாதிரி வேலை வெட்டி எதுவும் இல்லாமல் ஜாலியாய் இருக்கப் போகிறோம் என்று நாளும் பொழுதும் கனவு கண்டு கொண்டிருக்கும் போது எப்படி புரட்சி வரும்?

உழைக்கும் வர்க்கம் பணக்கார வர்க்கத்தோடு மோத நினைப்பதில்லை. பதிலாய், பணக்கார வர்க்கத்தைக் காப்பி அடிக்க நினைக்கிறது. சொந்த வேலைகளை உதறித் தள்ளிவிட்டு பணக்கார வர்க்கம் போல ஓய்வாக இருக்க ஆசைப்படுகிறது.

வெப்லெனின் இந்த வாதத்தை கடுமையாக ஆட்சேபிக்கிறார் நூலாசிரியர்.

பழைய பொருளியலாளர்கள் (classical economists) சொன்ன பகுத்தறிவு (rationality) வாதம், கணக்குப் போட்டு காய் நகர்த்தும் நிதானம் எல்லாம் மனிதர்களின் நடப்புகளை சரியாக சொல்லவில்லை என்பது சரி தான். பதிலாக, மனிதர்களின் இயற்கை குணமான முரண்பாடுகளை (irrationalities) நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மனிதர்கள் ஒவ்வொரு குறிப்பிட்ட சூழ்நிலையிலும் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை முன் கூட்டியே அனுமானிப்பது கஷ்டமான விஷயம். இந்த முரண்பாடுகளால் மனித மனங்களில் தோன்றும் ஒரு வித பயம் அல்லது தாக்கமே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடக்கும் பண்பை உருவாக்குகிறது என்கிறார் நூலாசிரியர்.

இன்னொன்று : அமெரிக்காவின் Middletown நகரில் 1937 களில் நடந்த ஓர் ஆய்வில் (Robert and Helen Lyng) புள்ளி விவரங்கள் என்ன சொல்கின்றன? அந்த காலகட்டத்தில் பொருளாதாரம் பெரு வீழ்ச்சி கண்டு மக்கள் அவர்களின் அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்து கொள்ள முடியாத கஷ்டமான சூழ்நிலை நிலவிற்று.

மிகவும் கீழ் மட்டத்தில் இருந்த ஏழைகள், அவர்களின் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்ளவில்லை. பதிலாக, உணவுத் தேவைகளைக் குறைத்துக் கொண்டார்கள்.

ஆடம்பரப் பொருள்கள் வாங்குங்கள் என்று வந்த விளம்பரங்களும் குறைந்ததா? இல்லையே. நடுத்தர, பணக்கார குடும்பங்களைக் குறி வைத்த விளம்பரங்கள் இவை. மனிதர்களின் நடத்தைகள் முரண்பாடுள்ளவை. வெப்லெனின் வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்கிறார் நூலாசிரியர்.

தனிமனிதப் பண்புகளை நூலாசிரியர் தூக்கிப் பிடிக்கிறார். வெப்லெனோ மொத்த சமூகத்தின் பண்புகளை சுட்டிக் காட்டுகிறார். யார் சொல்வது சரி?

எப்படியோ, வெப்லெனின் நூல் புத்திஜீவிகள் மட்டுமல்ல, சாதாரண மக்களையும் கவர்ந்தது. உதாரணங்கள், பணக்காரர்கள் பற்றிய கடுமையான விமர்சனங்கள், அவரின் சொல் நடை எல்லாம் சேர்ந்ததில் பிரபலமானார் அவர்.

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்

1904 ல் இன்னொரு நூல் வெளியிட்டார். “The Theory Of Business Enterprise” (வணிக நிறுவனங்கள் பற்றிய கோட்பாடு).

ஆடம் ஸ்மித் துவங்கி அன்றைய பொருளியலாளர்கள் கொண்டிருந்த கருத்துக்கு எதிரான அதிர்ச்சி தரும் முடிவை இந்த நூலில் குறிப்பிட்டார் அவர்.

முதலாளிகளால் தான் பொருளாதாரம் வளர்கிறது என்று அவர்கள் சொல்ல, இல்லை முதலாளிகளே முதலாளித்துவத்துக்கு வேட்டு வைப்பார்கள் என்கிற முடிவுக்கு வருகிறார்.

அவர் ரிக்கார்டோ மற்றும் கார்ல் மார்க்ஸ் கொண்டிருந்த கோட்பாடுகளில் இருந்து ஆரம்பிக்கவில்லை. அதற்கும் கீழே : எந்திரங்களில் இருந்து ஆரம்பிக்கிறார்.

பொருளியலே எந்திரங்களை நம்பித் தான் இருக்கிறது. எந்திரங்கள் உருவாக்கித் தரும் பொருள்களில் நம் வாழ்க்கை தங்கி இருக்கிறது. எந்திரங்களை உருவாக்குவது, இயக்குவது யார் கையில் இருக்கிறது? பொறியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லாமல் எதுவும் நடக்காது.

எல்லாரும் நேரம் தவறாமல் வேலைக்குப் போகிறார்கள். நேரம் பார்த்தபடி வாழ்க்கையே ஒடிக் கொண்டிருக்கிறது – நேரம் காட்டும் கடிகாரம் போல சமுதாயத்தைக் கூட ஒரு எந்திரமாக நினைத்துப் பார்க்கலாம்.

லாப நோக்கம் பற்றி எந்திரத்துக்கு ஒன்றும் தெரியாது. இந்த நிலைமை முதலாளிகளுக்குப் பெரும் சங்கடத்தை உருவாக்குகிறது. ஆகவே, அவர்கள் எந்திரங்களின் செயல்பாடுகளுக்கு இடையூறு செய்து, நாசவேலைகள் மூலம் குழப்பங்களை உருவாக்கி, அதன் மூலம் ஆதாயம் தேடப் பார்ப்பார்கள்.

சமுதாய அடுக்கு ஒரு பிரமிட் போல இருக்க, அதன் உச்சியில் முதலாளிகள் உட்கார்ந்திருப்பார்கள். அந்தக் கட்டமைப்பின் கீழே, கடன்கள், தொழில் பேட்டைகளுக்கு முதலீடுகள், நம்மால் தான் நீங்கள் வாழ்கிறீர்கள் என்று சமூகத்தை நம்ப வைக்க என்னென்ன வழிமுறைகள் உண்டோ அத்தனை அமைப்பு முறைகளையும் செயற்கை முறையில் உருவாக்கி அவர்களின் கீழே அடுத்த படியில் வைத்திருப்பார்கள்.

அதற்கு அடுத்த படியில், எந்திரங்களின் செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கும். முதலாளிகளின் கைகளில் சுவிட்ச்கள் இருக்கின்றன. எப்போது களேபரங்கள் உருவாக்க வேண்டும்? எந்த அளவு? அவர்கள் நினைத்தபடி எதுவும் நடக்கும். லாபம் உண்டாகும். மறையும். உண்டாகும். மறையும்.

இது திகைப்பூட்டும் கோட்பாடு. ஆனால் உதாரணங்கள் எக்கச்சக்கமாக வந்து விழுகின்றன. அமெரிக்க ஏகபோக முதலாளிகள் Morgans, Harrimans, Fricks , Rockfellars… என்று பட்டியல் நீள்கிறது. பணம் சேர்க்க, எப்படி எல்லாம் இவர்கள் ஆட்டம் போட்டார்கள் என்று விலாவாரியாய் சொல்லிக் கொண்டே போகிறார்.

எந்த அமைப்பு (முதலாளித்துவம்) முதலாளிகளை வாழ வைக்கிறதோ அந்த அமைப்புக்கே எதிராய் செயல்பட்டு அதை அழிக்கப் போகிறார்கள் அவர்கள் என்று அவர் சொன்னதை புத்திஜீவிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆகவே பொருளியலாளர்கள் சிலரைத் தாண்டி அந்த நூலின் அடிப்படை செய்தி வேறு யாருக்கும் போய்ச் சேரவில்லை. எதுவோ தெரியவில்லை. முன்னைய நூல் போல இது பிரபலம் ஆகவில்லை. சாதாரண மக்களுக்குப் புரியாத பொருளியல் வார்த்தைகள் அதிகமாக இருந்ததும் ஒரு காரணமோ?

அவர் எதிர்காலம் பற்றி மூன்று கணிப்புகள் சொல்லி இருந்தார் : (1) முதலாளித்துவம் உடைந்து போனபிறகு எந்திரங்கள் சமுதாயத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்துவிடும். எந்திரங்களின் வழிகாட்டுதலில் சமுதாயம் இயங்கும்.

(2) சமூகம் பல பிளவுகளாகப் பிரியலாம். ஆனால் ஏழைகள் – பணக்காரர்கள் மோதல்கள் அல்ல. எந்திரங்களுக்கு எதிரான போராட்டங்கள் துவங்கலாம். அல்லது பொறியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அறிவியலாளர்கள் என்று அந்த எந்திரங்களின் பின்னால் இருக்கும் வர்க்கங்களுக்கு எதிரான பிரச்னைகள் வெடிக்கலாம்.

(3) அறிவியல், தொழில்நுட்ப வல்லுநர்கள் கைகளுக்குள் அதிகாரம் போகாவிட்டால் என்ன நடக்கும்? முதலாளிகளின் கொட்டம் இன்னும் அதிகமாகும். அவர்களே ஆளுக்காள் அடித்துக் கொள்வார்கள். அல்லது ராணுவங்களோடு கைகோர்த்துக் கொள்வார்கள்.

இந்த வகை ஆட்சியை இன்று நாம் பாசிசம் என்று சொல்கிறோம். கார்ல் மார்க்ஸின் சொன்ன தொழிலாளர் புரட்சிக்குப் பதிலாய் சமுதாயங்கள் இதில் தான் போய் நிற்குமோ?

தொடர்ந்து, அவர் வேறு சில புத்தகங்களும் கட்டுரைகளும் வெளியிட்டார். எல்லா வெளியீடுகளிலும் அவரின் கணிப்புகளை இன்னும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

இது இப்படி இருக்க, அவரின் புகழும் மற்றும் தோழிகள் விவகாரமும் சேர்ந்து அவரை மெகா ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தின. நார்வே நாட்டின் அரசரே கூப்பிட்டு விருந்து கொடுத்தார்.

பின்னாளில், அவரின் பார்வை அய்ரோப்பா பக்கம் திரும்பியது. Imperial Germany (ஏகாதிபத்திய ஜெர்மனி) என்றொரு புத்தகம் (1911) வெளியிட்டார்.

இங்கிலாந்து அரசு, புத்தகத்தை ஜெர்மனிக்கு எதிரான அதன் பிரசாரத்துக்குத் தாராளமாகப் பயன்படுத்திக் கொண்டது. ஆனால் புத்தகம் இங்கிலாந்திலோ அல்லது அமெரிக்காவிலோ யாரின் கைகளுக்கும் போய்ச் சேராமல் பார்த்துக் கொண்டது. (அஞ்சல் அலுவலகங்களுக்கு ரகசிய உத்தரவு போடப் பட்டிருந்தது.)

முதலாம் உலக யுத்தம் துவங்கியது. போர்களை வெறுத்த வெப்லென், என்னால் யுத்த நடவடிக்கைகளுக்கு உதவ முடியும் என்று அறிவித்தார். ஆனால் அவரை யாருமே சீண்டவில்லை. போனால் போகிறது என்று (உப்பு சப்பில்லாத) ஒரு பதவியை உணவு விநியோகத் துறையில் கொடுத்தார்கள்.

அங்கும் அவர் சும்மா இருக்கவில்லை. தானிய கொள்வனவில் எப்படி கிராமங்களையும் வணிகங்களையும் சீரமைப்பு செய்யலாம் என்று மேலிடத்துக்கு யோசனைகள் எழுதினார். அவர்களோ, அருமையான பரிந்துரைகள் என்று பதில் போட்டுவிட்டு அப்படியே குப்பைக் கூடைக்குள் போட்டு விட்டார்கள்.

1918 ல் அமெரிக்கா திரும்பினார். Dial பத்திரிகையில் பணியாற்றத் துவங்கினார். அவர் எழுத எழுத, பத்திரிகையின் விற்பனை பயங்கரமாக சரியத் துவங்கியது. அதை விட்டு விலகி ஒரு சமூக ஆய்வியல் கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்தார். மாணவர்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. (வழக்கம் போல் அவர் பேசுவது யாருக்கும் புரியவில்லை.)

அவரின் வாழ்க்கையில் புகழ் ஒரு பக்கமாகவும் துரதிர்ஷ்டங்கள் இன்னொரு பக்கமாகவும் எதிரெதிராய் மோதிக் கொண்டன.

விரக்தியின் எல்லைக்கு வந்தபோது, அமெரிக்க பொருளியலாளர் கழகத்தின் தலைமைப் பதவி தேடி வந்தது. நான் விரும்பும்போது தரவில்லை. இப்போ எதற்காகத் தூக்கிக் கொண்டு வருகிறீர்கள்? வேண்டாம். மறுத்து விட்டார்.

அவரின் நூல்களை பொருளியலாளர்கள் அலட்சியப் படுத்தினார்கள். பொறியியலாளர்கள், தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு விவரங்கள் தெரியாமலேயே போயிற்று.

அவர் பற்றி நூலாசிரியர் என்ன சொல்கிறார்? The Theory of Leisure Class நூல் அவரின் சிறந்த நூல் என்று சொல்லலாம். அது மனிதர்களின் பாசாங்குத் தனங்களை வெளிப்படையாய்க் காட்டுகிறது. நாம் பகட்டு காட்டுகிற பேர்வழிகள். ஒத்துக் கொண்டே ஆக வேண்டும்.

அமெரிக்க ஏகபோக முதலாளிகளின் அசிங்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியவர் அவர். இருந்தாலும், கார்ல் மார்க்ஸ் போல ஓர் திடமான கோட்பாட்டை அவர் முன்வைக்கவில்லை. சில சமயங்களில் அதி தீவிர எல்லைக்கே போயிருக்கிறார்.

முதலாளிகள் சாமர்த்தியமாக, காலத்துக்கு ஏற்றபடி வழிமுறைகளை மாற்றிக் கொண்டது அவருக்குத் தெரிந்திருக்காது. முதலாளிகளை எந்திரங்களின் மானேஜர்களாக முதலாளித்துவம் மாற்றிவிட்டதை அவர் அறிந்திருக்க முடியாது.

எந்திரங்கள் மனிதர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துமோ என்னமோ, தொழில் நுட்பம் நிச்சயம் மனிதர்களை மாற்றப் போகிறது என்பதை அன்றே சுட்டிக் காட்டியவர் அவர்.

என் பார்வையில் : அவர் சரியாகவே எதிர்காலம் பற்றிக் கணித்திருக்கிறார். எந்திரங்கள் என்பதற்குப் பதிலாக, செயற்கை நுண்ணறிவு என்று போட்டுப் பார்த்தால் :

எதிர்காலத்தில் Google, Facebook, Amazon, Microsoft, Apple … என்று பல பன்னாட்டுக் கம்பெனிகளின் கைப்பாவைகளாய் நாம் இருக்கப் போகிறோமா?

அல்லது செயற்கை நுண்ணறிவு நம்மை ஆளுமை செய்யுமா?

அல்லது செயற்கை நுண்ணறிவை இயக்கும் பொறியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களோடு போராட வேண்டி வருமா?

வெறும் அனுமானங்களில் மூழ்கிப் போய் நிஜ வாழ்க்கைக்கு சம்பந்தமில்லாத கோட்பாடுகளைப் பொருளியலாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள் என்று அவர்களைக் கடுமையாக சாடிய மனிதர் அவர்.

பொருளியலை விட, மானுடவியல், உளவியல் இரண்டிலும் அதிகம் ஆழ்ந்து போனவர் அவர் என்கிறார் நூலாசிரியர்.

உங்கள் கற்பனைக் கோட்பாடுகளைத் தூக்கி எறிந்துவிட்டு, மனிதர்கள் எப்படி ஒவ்வொரு சூழ்நிலையிலும் நடந்து கொள்கிறார்கள், ஏன் அவர்களின் நடப்புகள் அப்படி இருக்கின்றன என்பதைக் கவனியுங்கள் என்று பொருளியலாளர்களைப் பார்த்து சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் அந்த மனிதர்.

1929 ம் ஆண்டு. அவரின் இறுதி நாட்களில், நண்பர்கள் யாரும் இல்லாத அதே தனிமையில், எப்போதும் வெளியே பார்த்தபடி, அதே அமைதியோடு வாழ்ந்திருக்கிறார். அவர் கால்களுக்கிடையில் எலிகள், பூச்சிகள், பிராணிகள் ஊர்ந்து சென்றிருக்கின்றன. ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்? அசையாமல் இருந்து அவதானித்தபடியே இருந்திருக்கிறார் – கடைசியாகக் கண் மூடும் வரை.

ஆச்சரியங்கள் நிறைந்த மனிதர்.

ஆயிரத்தில் ஒருவன்

Robaert Owen

இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கும் போது, முதலில் கார்ல் மார்க்சுக்கு முன்னாடி என்று தலைப்பு வைக்கலாம் என்று நினைத்தேன். ஒருவேளை என் இடதுசாரித் தோழர்கள் முகம் சுளிப்பார்களோ? தயக்கம் . கடைசியில் ஆவன்னா ஓனா.

15 -16 ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட தொழில் புரட்சி அல்லது மறுமலர்ச்சி என்பது அய்ரோப்பாவில் கிடுகிடுவென்று வளர்ந்து விடவில்லை.

500 ஆண்டுகளாக, எழுந்து, விழுந்து, ஒடி, நடந்து, தேங்கி நின்று என்று பல கட்டங்கள் தாண்டி 21 ம் நூற்றாண்டில் வந்து நிற்கிறது.

இந்த 21ம் நூற்றாண்டில், நாம் பெருமைப்படும் சாதனைகள், வியப்புகள் எல்லாவற்றையும் தள்ளிவிட்டு அதன் கீழே எட்டிப் பார்த்தால் :

அழுகுரல்கள், வேதனைகள், நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அதிர்ச்சிகள் என்று எத்தனையோ துயரங்கள் நம்மை ஏக்கத்தோடு பார்ப்பது தெரியும்.

அந்த காலகட்டங்களில் மக்களின் வாழ்வு எப்படி இருந்திருக்கிறது?உதாரணத்துக்கு, 1828 ம் ஆண்டில் இங்கிலாந்தில் வெளிவந்த The Lion பத்திரிகையில் வந்த ஒரு செய்தி :

Lowdham நகரில் ஒரு ஆலையில் பத்து வயது கூட நிறைவு செய்யாத சுமார் 80 ஏழைக் குழந்தைகள் தினமும் 16 மணித்தியாலங்கள் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள். ஒரு சிறு குற்றம் செய்தாலும் அந்தக் குழந்தைகளை நிர்வாணமாக்கி கசையடிகள் கொடுத்திருக்கிறார்கள். கடுங்குளிரில் போதிய ஆடைகள் இல்லாமல், பன்றிகளோடு வாழ்ந்திருக்கிறார்கள் அந்தக் குழந்தைகள். இன்னும் எழுத்தில் வடிக்க முடியாத அத்தனை கோரங்கள்.

விவசாயம் பெருந் தொழிலாய் இருந்த காலத்தில் அதில் கூலிகளாய் வாழ்ந்த பெருவாரி மக்களுக்கு ஒரு நேரக் கஞ்சியாவது கிடைத்தது. மறுமலர்ச்சி மலர மலர, விவசாய நிலங்கள் தொழில் பேட்டைகளாக ஒளிர ஆரம்பித்தன. சாதாரண மக்கள் தொழில் பேட்டைகளை நோக்கி நகர ஆரம்பித்தார்கள்.

முதலாளிகளின் கவனம் எப்போதும் கல்லாப் பெட்டிகளிலேயே இருப்பது தெரிந்ததே. விளைவு : முன்னை விட வறுமை. நாள் கணக்கில் பட்டினி. குழந்தைகளையும் வேலைக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை. வேறு வழி?

தவிர, இன்று போலவே அன்றும் முதலாளிகள் தொழிலாளர்களை விட, எந்திரங்களில் கூடுதல் பாசம் காட்டினார்கள். இதுவும் அனைவரும் அறிந்த ரகசியம்.

வாழ்வா சாவா என்கிற நிலையில் தொழிலாளர் வாழ்க்கை இருந்தது. எந்திரங்கள் மேல் ஏற்பட்ட வெறுப்பின் விளைவாய் நாடு முழுவதும் போராட்டங்கள் எழுந்தன.

வேலை இன்மை ஒரு பக்கம். வேலை கிடைத்தாலும் அதில் கிடைத்ததோ ஊதியமல்ல – பிச்சைக் காசு. ஒரு செய்தி : 1779 ல் நடந்த ஒரு தொழிலாளர் போராட்டத்தில், சுமார் 8000 பேர் திரண்டு ஒரு பெரும் இரும்பு ஆலையையே கொளுத்தித் தரைமட்டம் ஆக்கியிருக்கிறார்கள்.

தொழில் நுட்பத்துக்கு எதிரான போராட்டங்கள் 1811 ஆண்டளவில் இங்கிலாந்து முழுவதுமே தீவிரம் அடைந்தன.

(அன்றைய பிரபல நட்சத்திர பொருளியலாளர், ரிக்கார்டோ (David Riccardo) இப்படி வேலை இன்மையால் நடந்த கொந்தளிப்புகள் பற்றி ஓரிரு இடங்களில் மட்டும் போனால் போகிறது என்பது போல் குறிப்பிட்டிருக்கிறார். அன்றைய படித்த வர்க்கம், மேல்தட்டு வர்க்கம் எதுவுமே இந்த மனித அவலங்களைக் கண்டு கொள்ளவில்லை.)

அன்றும் எத்தனையோ புரட்சி சிந்தனையாளர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அதில் சில மனிதர்களைத் தேர்ந்தெடுத்து, இன்று நாம் அறிந்து வைத்திருக்கும் மற்றைய பொருளியல் நட்சத்திரங்களோடு சேர்த்து அறிமுகம் செய்திருக்கிறார் ராபர்ட் ஹெய்ல்ப்ரோனர் (Robert Heilbroner).

அவரின் The Wordly Philosophers நூலில் என்னை ஆச்சரியப்பட வைத்தவர்கள் ரெண்டு பேர்.

நான் ஏன் பிறந்தேன்

1771 ல் பிரிட்டனின் வேல்ஸ் மாநிலத்தில் பிறந்தவர் இந்த மக்கள் திலகம். பின்னாளில், அவர் பெரும் பணக்காரராய் வந்தாலும் வந்தார். புகழ் அவர் பின்னாலேயே சுற்ற ஆரம்பித்தது.

மக்கள் அவரை எங்கே பார்த்தாலும், எங்க வாத்தியார்டா என்று டா போடவில்லை. பதிலாக, மாண்புமிகு வள்ளல் நியூ லானார்க் நகரத்தை சேர்ந்த ஓவன் அவர்கள் என்று (நீளமாய்) மரியாதையோடு அழைத்தார்களாம்.

அன்றாடங் காய்ச்சிக் குடும்பம் ஒன்றில் பிறந்த ஓவன், தன் 18 வயசில் அண்ணன் தந்த 100 பவுண்ட் காசுடன் மான்செஸ்டர் நகரம் வந்து ஒரு சின்னதாய் ஒரு ஜவுளி உற்பத்தி ஆலை துவங்கி இருக்கிறார்.

அது எப்படி இயங்கியது என்பதை எழுதப் போனால் போரடிக்கும். ஏன் என்றால் ஓவனுக்கு சின்ன மீன்களில் ஆர்வம் இருக்கவில்லை. பெரிய மீன் எப்போ சிக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தார் அவர்.

வந்தது ஒரு விளம்பரம் – ஒரு பெரிய ஜவுளி ஆலைக்கு மானேஜர் தேவை. மானேஜர் ஆக பணியாற்றிய அனுபவம் ஏதும் ஓவனுக்கு இருக்கவில்லை. துணிவே துணை. நேரே போய் அந்த முதலாளி முன்னால் நின்றார் – உங்களுக்கு மானேஜர் தேவையாமே?

முதலாளி வயசு கேட்டார். பிறகு குடிப்பாயா என்று கேட்டார். இல்லை என்றார் ஓவன். என்ன சம்பளம் எதிர்பார்க்கிறாய்? 300 பவுண்டுகள் என்றார் ஓவன். என்னது? முதலாளி அதிர்ந்து போனார். (ஏன் என்றால் அந்த காலகட்டத்தில் இவ்வளவு பெரிய சம்பளம் யாரும் வாங்கியதே இல்லை.)

ஓவன் : இதுக்குக் குறைவாய் என்னால் வேலை செய்ய முடியாது. உங்களுக்குக் கட்டுப்படி ஆகாது என்றால் நான் என்ன செய்வது? நன்றி. வரட்டுமா?

முதலாளிக்குப் பேச்சே வரவில்லை. இப்படி ஒரு துணிச்சல் நிறைந்த இளைஞனை அவர் வாழ்க்கையிலேயே கண்டதில்லை. இவனிடம் ஏதோ ஒன்று இருக்கிறது. என்னதாயிருக்கும்? புரியவே இல்லை. இருந்தும் ஆளை விட மனம் வரவில்லை. அவர் சொன்னார் : நீ தான்யா மானேஜர்.

முதலாளியின் உள்ளுணர்வு சரியாகவே இருந்தது. ஓவனின் திறமை கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது. அசந்து போனார் அந்த முதலாளி. ஆறு மாதங்களிலேயே முதலாளி சொன்னார் : என் நாலில் ஒரு பங்கு பிசினஸை நீயே எடுத்து நடத்து ராஜா.

இருந்தும் அது போதவில்லை. இதை விடப் பெரிய மீன் கிடைக்காதா? சில ஆண்டுகளில் அது தானாய் வந்து விழுந்தது. அவர் காதலித்த பெண்ணின் தகப்பனார் நியூ லானார்க் நகரில் பெரும் பிரம்மாண்ட ஆலைகளின் சொந்தக்காரர், அதை அப்படியே விற்கப் போகிறேன் என்று ஒருநாள் விளம்பரம் போட்டார்.

ஓவன் இங்கேயும் அவர் ஸ்டைலில் எதிர்கால மாமனாரை வீழ்த்தினார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். அத்தனை ஆலைகளும் அவர் சொந்தம். திருமணம் நடந்தது.

இந்த மக்கள் திலகமும் ரெண்டு விரல் காட்டினாரோ என்னமோ? அதாவது, நான் எப்படியாவது பெரும் முதலாளியாக வந்துவிட வேண்டும் என்பது தான் முதல் விரலின் அர்த்தம். அது தான் நடந்து விட்டதே. ரெண்டாவது விரல்?

நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான்

அடுத்து, இது வரை யாருக்கும் சொல்லாமல் ரகசியமாய் வைத்திருந்த திட்டங்களை அமுல் படுத்துவேன் என்று வேலைகளில் இறங்கினார் அவர்.

குழந்தைத் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கும் அநியாயத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார். அப்படி வேலை கொடுத்தாலும் வளர்ந்த பிள்ளைகளுத் தான் வேலை. அதுவும் ஒரு நாளைக்கு மூணே முக்கால் மணித்தியாலங்கள் மட்டுமே.

ஆலை அருகிலேயே தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு அறைகள் கொண்ட வீடுகள். பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள ஆயாக்கள். குழந்தைகளுக்குப் பள்ளி. அனாதைகளாய் வீதிகளில் அலைந்த குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லங்கள்.

தொழிலாளர்கள் எல்லாரும் பேட்ஜ் அணிந்திருந்தார்கள் – நாலு வண்ணங்களில். திறமைக்கும் ஒழுக்கத்துக்கும் பச்சை நிறம். அதில் கொஞ்சம் குறைவானவர்களுக்கு ஆரஞ்சுக் கலர். பரவாயில்லை என்று சிலருக்கு நீல நிறம். இவனுகளத் திருத்தவே முடியாது என்று நினைத்தால் அவர்களுக்குக் கருப்பு.

ஏன் அப்படி? ஒவ்வொரு மானேஜருக்கும் ஆளைப் பார்த்ததுமே இன்றைக்கு எவருக்கு எந்த வேலை கொடுக்கலாம் என்று லேசாய் முடிவெடுக்கலாமே. (தொழிலாளர்கள் பேட்ஜ் கலருக்கு எதிராய் மனு செய்யும் உரிமையும் இருந்தது.)

அப்போ ஆலைகளின் லாபம் பெரிசாய் இருந்திருக்காதே என்று சில ஆட்கள் வாதிடலாம். ஏன் அவ்வளவு தூரம்? பாருங்க. இந்த ஆட்டம் ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்று அந்த நாளிலேயே மற்ற முதலாளிகள் கிண்டலடித்தார்கள்.

லாபம் காட்டி எல்லார் வாயையும் அடைத்தார் ஓவன். அவரின் கொள்கை : தொழிலாளர்களை நாம் நன்றாய்க் கவனித்துக் கொண்டால் அவர்கள் முழு மனதோடு வேலை செய்வார்கள். லாபம் நிச்சயம். அது எல்லாருக்கும் நல்லது.

அந்த காலத்துப் பத்திரிகைகளில் ஓவன் பேர் பெரிசாக வரத் துவங்கியது. வெளிநாட்டுப் பத்திரிகைகளும் ஏட்டிக்குப் போட்டியாக எழுதித் தள்ள, மன்னர்கள், மந்திரிகள், பிரபுக்கள், எழுத்தாளர்கள், சீர்திருத்தவாதிகள், பணக்காரப் பெண்கள் என்று எல்லார் மனசிலும் அந்த ஆலைகளைப் போய்ப் பார்த்துவிட வேண்டும் என்று மனசில் ஒரு குறுகுறுப்பு.

1815 – 1825 கால இடைவெளியில் சுமார் 25 000 பேர் அவரின் நியூ லானார்க் ஆலைகளுக்கு வந்து பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கிறார்கள்.

அடுத்து, தன்னுடைய இன்னும் சில கொள்கைகளை அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் அவர் : தனியார் நிலங்களை நாட்டுடைமை ஆக்க வேண்டும். பணம் என்பதை இல்லாமல் ஒழித்து விட வேண்டும்.

(அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்று ஏற்கெனவே தெரிந்திருந்தது. சாத்தான் சும்மா இருக்கமாட்டான். அவன் தான் இப்படி ஆட்களை அனுப்பி கலாட்டா பண்ணுகிறானோ? பேசிக் கொண்டார்கள்.)

புகழ் வந்தால் பொறாமையும் சேர்ந்து வரும். தெரிந்ததே. ஆகவே எதிரிகள் பொய், புனைக் கதைகளை நாலா பக்கமும் பரப்பிக் கொண்டிருந்தார்கள்.

நியூ லானார்க் நகரம் பத்தாது. நாடு முழுக்க என் கொள்கைகளை செயல்படுத்தினால் என்ன? யோசித்தார் ஓவன். அன்றைய பிரபுக்கள், அரசியல்வாதிகள் எல்லாரையும் சந்தித்தார்.

அவர் கனவு கண்ட ஊர்கள் எப்படி இருக்கும்? (பேர் : கூட்டுறவுக் கிராமங்கள்) ஒவ்வொரு ஊரிலும் 800 இல் இருந்து 1200 பேர் வரை வாழ்வார்கள். ஆலைகள், பள்ளிக் கூடங்கள், பூங்காக்கள், மருத்துவ மனைகள் கொண்ட தன்னிறைவு ஊர்களாக அவை இருக்கும். சுருக்கமாக சொன்னால், ஒரு சுவர்க்கத்தையே பூமியில் உருவாக்கி விடலாம் என்று நம்பினார் அந்த மனிதர்.

அவரின் தளராத முயற்சியால் (அல்லது நச்சரிப்பு தாங்க முடியாமல்?) அவரின் சிபாரிசுகளை அமுல் படுத்த அன்றைய நாடாளுமன்றம் ஒரு குழு அமைத்தது. (இதெல்லாம் சரிப்படாது என்று முணுமுணுத்துக் கொண்டு அன்றைய பொருளியலாளர் ரிக்கார்டோவும் அந்தக் குழுவில் ஒரு உறுப்பினராய் இருந்தார் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.)

ஆனால் பணம் திரட்ட முடியவில்லை. வெறுத்துப் போய், அமெரிக்கா போய் என் திட்டங்களை செயல்படுத்துவேன் என்று முடிவெடுத்தார் அவர்.

புதிய வானம் புதிய பூமி

இன்டியானா மாநிலத்தில் இயங்கிய ஒரு தீவிரவாத கிறிஸ்தவ அமைப்பின் நிலத்தைப் பணம் கொடுத்து வாங்கினார்.

தன் கொள்கைகளைப் பிரதிபலிக்கும் ஒரு ஊராக, புதிய அமைதி (New Harmony) என்று பேர் வைத்தார். விளம்பரம் போட்டார். 1826 ம் ஆண்டு ஜூலை 4 ந் தேதி பெரும் ஆரவாரத்தோடு அந்த ஊர் திறப்பு விழா நடந்தது.

இங்கே தனியார் நிலம் என்று எதுவும் இருக்காது. எல்லாம் ஊருக்கே சொந்தம். எல்லாரும் இங்கே பங்குதாரர்கள். மதத்துக்கோ அல்லது திருமணங்களுக்கோ இங்கே இடமில்லை. புது உலகம் படைப்போம். வாருங்கள்!

கூட்டம் தாங்க முடியவில்லை. 800 அல்ல. அதைவிடப் பன்மடங்கு. ஆனால் சரியான வழிகாட்டுதல்கள் இல்லை. ஆளுக்கொரு யோசனைகள். குழப்பங்கள்.

மோசடிகள், ஏமாற்று வேலைகள் தாராளமாகவே நடக்க ஆரம்பித்தன. அதில் சேர்ந்திருந்த ஒரு ஆள் நிதி மோசடி செய்து பக்கத்து ஊரில் ஒரு மது தயாரிக்கும் ஆலை துவங்கியது இன்னொரு சோகம். இன்னும் வேறு வேறு கவர்ச்சியான பேர்களோடு அக்கம்பக்க ஊர்களில் எட்டிக்குப் போட்டியாக புதிய கிராமங்கள் தோன்றின.

துவங்கி இரண்டு ஆண்டுகளிலேயே புதிய அமைதியை இழுத்து மூடினார் ஓவன். நிலத்தை அடிமாட்டு விலைக்கு விற்றார்.

இருந்தும் அந்த காலகட்டத்தில், அன்றைய அமெரிக்க அதிபர், ஜாக்சன் மற்றும் மெக்ஸிகோ தலைவர்களையும் சந்தித்துத் தன் திட்டங்களையும், கொள்கைகளையும் விளக்கி உதவி கேட்கத் தவறவில்லை.

ஆனால் பலன் இல்லை. மீண்டும் இங்கிலாந்து திரும்பினார். கிராக்கு என்று கிண்டல்கள், கேலிகள். அவரோ மனந் தளராத விக்ரமாதித்தன் போல் இயங்கினார். காரணம் : அன்றைய தொழிலாளர் இயக்கங்கள், நெசவாளர்கள், மட்பாண்டத் தொழிலாளர்கள் எல்லார் கண்ணிலும் அவர் ஒரு மீட்பராகத் தெரிந்தார்.

தொழிலார்களைத் திரட்டி அவர்களே நடத்தும் ஆலைகளை அறிமுகம் செய்வதில் முனைப்போடு செயல்பட்டார். இருந்தும் நிர்வாகத்தில் பூசல்கள். எல்லாமே திவால் ஆகின. (இதில் Rochdale Pioneers என்கிற ஒரு கூட்டமைப்பு குறிப்பிடப் படவேண்டிய ஓர் தொழிலாளர் கழகம்.)

1833 ல் அவர் துவங்கிய The Grand National Union தொழிலாளர் கழகம் இன்றைய பிரிட்டனின் தொழில் கட்சிக்கு அடித்தளம் என்றால் மிகையல்ல. நல்ல ஊதியம், வேலைத்தளங்களில் தொழிலாளருக்குப் பாதுகாப்பு மற்றும் வசதிகள் வேண்டும் என்று முதல் குரல் கொடுத்த கழகம் அது.

ஆனால் இரண்டு ஆண்டுகளில் அதுவும் உடைந்தது. நிர்வாகிகள் ஆளுக்காள் அடித்துக் கொண்டார்கள். இன்னும் சிலர், அந்த ஆள் கடவுளை நம்பாத ஆளய்யா என்று வேறு கோஷம் போட்டார்கள். பாவம் கடவுள்.

அவரின் 64 வயதில், அவரின் சாதனைகள் ஒவ்வொன்றாய் வீழ்ச்சி கண்டதை அவர் கண்ணாலேயே பார்க்க வேண்டிய துரதிர்ஷ்டம். இருந்தும் இன்னும் 23 ஆண்டுகள் வாழ்ந்தார் அந்த மனிதர்.

அவரின் முதுமைக் காலத்தில் ஆவிகளோடு பேசுவது, யோசனைகள் கேட்பது என்று போயிருக்கிறார். மனிதர்கள் அவரைப் புரிந்து கொள்ளவில்லை. ஒருவேளை ஆவிகள்? எதுவானாலும் அது அவர் சொந்த விஷயம்.

ஓவனின் விமர்சகர்கள் பல கருத்துக்களை முன் வைக்கிறார்கள் :

அவருடைய அனைத்து செயல்பாடுகளும் சோதனைக் களங்களாகவே இருந்தன. அதுவும் நிஜ வாழ்க்கைக்குப் பொருந்தி வராத கற்பனைகள் அவரைத் தோல்வி அடையச் செய்தன. காலத்துக்கேற்ப அவர் வளைந்து கொடுத்திருக்க வேண்டும். தவறிவிட்டார்.

அவரின் சீர்திருத்தங்களின் படி, தொழிலாளர்கள் ஆலையையே நம்பி இருக்க வேண்டிய அவசியம் இருந்தது. அவர்களுக்கு சுதந்திரம் மறுக்கப் பட்டிருந்தது.

மதம் இன்னொரு முக்கிய காரணி. அதை அவர் அலட்சியப்படுத்தாமல் இருந்திருக்கலாம்.

கார்ல் மார்க்ஸும் எங்கெல்சும் ஓவனின் நடப்புகளை ஆதரிக்கவில்லை. என்ன சொன்னார்கள்?

ஓவனின் செயல்பாடுகளால் ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கவே முடியாது. ஏன் என்றால் அதற்கான காரணிகள் அன்று உருவாகி இருக்கவில்லை.

அடுத்து, ஓவன் கனவு கண்ட சமுதாயம் அன்றிருந்த சூழ்நிலையோடு ஒத்துப் போகவே முடியாது. வன்முறை இல்லாமல் சமுதாயத்தை மாற்றிவிட முடியும் என்று நினைத்தது அவரின் பெரும் தவறு. முதலாளிகள் இலகுவாக அவரின் நோக்கத்தை நீர்த்துப் போகச் செய்து விட்டார்கள். இது எதிர்காலத்துக்கும் பொருந்தும்.

தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த புரட்சி (வன்முறையில்) மட்டுமே வெற்றி காண முடியும்.

தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறிவிட்டால் வேறு எதுவும் யோசிக்க மாட்டார்கள். அத்தோடு திருப்தி அடைந்து விடுவார்கள் என்று நினைத்தது அடுத்த தவறு. மனிதர்களின் ஆசைகள் அளவில்லாதவை. அவரின் சிந்தனை உண்மை நிலவரத்துக்குப் புறம்பானது.

ஆகவே பொருளாதார வளர்ச்சி முக்கியம். புதிய சமுதாயம் அப்போது தான் நின்று பிடிக்கும்.

நூலாசிரியர் ஹெய்ல்ப்ரோனர் ஓவன் பற்றி என்ன சொல்கிறார்?

நடைமுறை சாத்தியங்கள், யோசிக்காமல் துணிச்சலான முடிவுகள் எடுக்கும் தைரியம், தடாலடி செயல்பாடுகள், பகுத்தறிவு, பைத்தியக்காரத்தனம் எல்லாம் கலந்த ஒரு வினோத கலவை அவர்.

எது எப்படி இருந்தாலும், 20 ம் நூற்றாண்டின் கடைசியில் அமுலுக்கு வந்த அத்தனை முற்போக்கு செயல்பாடுகளையும் 19 ம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே செய்து காட்டிய மாமனிதர் ஓவன்.

அவர் பொருளியல் நிபுணர் அல்ல. மற்றவர்கள் எழுதித் தள்ளிக் கொண்டிருக்க, அவர் செயல்வீரராய் நடை போட்டார்.

நேரம், காலம் என்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது. உலகம் நல்லதோ கெட்டதோ, சூழ்நிலைகள் சரியில்லையோ என்னமோ எனக்குத் தெரியாது. என் சித்தாந்தம் சரியா தவறா அதுவும் தெரியாது. ஆனால் மாற்றியே ஆக வேண்டும். என்னால் அது முடியும்.

நம்பிக்கை என்று ரெண்டாவது விரலையும் காட்டியபடி விடை பெற்றிருக்கிறார் அந்த மக்கள் திலகம்.