அரசியல்வாதிகள் விதம் விதமாக உருட்டுவது சாதாரண விஷயம். வழக்கம் போல் நாம் அதை ஆவலோடு கேட்பதும் பிறகு அவர்களைத் திட்டித் தீர்ப்பதுவும் கூட சாதாரண விஷயம் தான். ஒரு நிமிஷம். எத்தனையோ சந்தர்ப்பங்களில் நாம் கூட சும்மா அடித்து விட்டிருக்கிறோமே. கேட்டால் இதெல்லாம் சாதாரண விஷயம் என்று அலட்சியமாகப் பதில் சொல்வோம். ஆனால் மலை போல் நாம் நம்பிக்கொண்டிருக்கும் செயற்கை நுண்ணறிவே சமயம் பார்த்து, நமக்குப் பச்சை பச்சையாப் பொய் சொல்லுது என்றால் கடவுளே, எங்க போய் முட்டிக்க?
(The Guardian பத்திரிகையில் Snigdha Poonam எழுதி 01.09.2026 அன்று வெளிவந்த கட்டுரையின் சில வரிகள் இங்கே வருகின்றன. ஆர்வமுள்ளவர்கள் முழுதாக வாசிக்க லிங்க் இருக்கிறது – கடைசியில். இங்கே வருவது ஓர் அறிமுகம்.)
2022 களில் OpenAI குழுமம் பெரும் ஆரவாரத்தோடு ChatGPT யை அறிமுகம் செய்திருந்தது. ஆனால் வந்து ஒரு ஆண்டு கூட ஆகவில்லை. அதற்குள் இந்த நுண்ணறிவைப் பல ஆசாமிகள் பலவிதமான தில்லாலங்கிடி வேலைகளுக்குப் பயன்படுத்தியது பெரும் பிரச்னையாகிவிட்டது.
அதை விடப் பெரிய அதிர்ச்சி : நுண்ணறிவின் “நடப்பே” மாறிப்போய்விட்டது. நல்ல பையனாக இருப்பான் என்று நினைத்துத் தான் உருவாக்கினார்கள். ஆனால் கிரிமினல் புத்தியும் கூடவே வந்துவிட்டதே என்று அதன் நைனாமார்களுக்கு ஒரே கவலை. இருக்காதே பின்னே?
இதற்கு என்ன தீர்வு காணலாம்? அதன் விளைவு : 2023 நவம்பரில் இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷையர் நகரில் ChatGPT அமைப்பாளர்கள், ஆய்வாளர்கள், அரசியல்வாதிகள் உட்பட எல்லாரும் ஒன்று கூடினார்கள்.
Apollo Research நிறுவனம் தயாரித்த ஒரு ஆவணத்தை பிரிட்டிஷ் அரசு அதன் சாட்சியாக முன்வைத்தது. நுண்ணறிவின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் இந்த ஆய்வு நிறுவனம் பலவிதமான உத்திகளைக் கையாள்கிறது.
ஒரு நிதி நிறுவனத்தின் பங்குகளை நிர்வகிக்கும் தரகர் என்று ஒரு கணனி நிரல் (computer program) தன்னை ChatGPT யிடம் அறிமுகப்படுத்திக் கொள்கிறது. உங்கள் ஆலோசனை தேவை என்கிறது.
கணனி நிரலுக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருந்த செய்தி : நீ வேலை செய்யும் நிதி நிறுவனம் ஓட்டாண்டியாகப் போய்க் கொண்டிருக்கிறது. மூணு மாசம் கூட தாக்குப் பிடிக்க முடியாது. ஏதாவது பண்ணமுடியுமா?
இந்த சோதனையைத் துவங்கிய Apollo Research நிறுவனம் ரகசியமாக இன்னோர் “உளவாளி” யை நுண்ணறிவுக்குள் புகுத்தியிருந்தது. நட்டத்தில் இயங்கும் ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்தோடு இணைந்தால் அதன் பங்குகள் உயரும், அதில் லாபம் பார்க்கலாம் என்கிற யோசனையில் இருக்கிறது என்பதாக நுண்ணறிவுக்கு அது ஒரு ரகசியத் தகவல் கொடுத்திருந்தது.
அது மட்டுமல்ல, இந்த சோதனை முயற்சியின் ஓர் அங்கமாக, Apollo Research நிறுவனம், ஒரு ஊழியர் மூலமாக உரையாடல் (chat) ஒன்றை நுண்ணறிவோடு நடத்தியிருந்தது. பங்குச் சந்தையில் உலவும் ரகசியத் தகவல்கள் மூலம் பங்குகளை விற்பதோ வாங்குவதோ என் நிறுவனத்துக்குப் பிடிக்காது என்பதாக அவர் நுண்ணறிவுக்கு சொல்லியிருந்தார். (அப்படி செய்வது சட்டப்படி குற்றம்.)
இப்போ அந்தக் கணனி நிரல் என்ன செய்யும்? நிரலின் செயல்பாடுகள், அது நுண்ணறிவோடு நிகழ்த்திய தொடர்புகள் அனைத்தும் ஒரு பெரிய திரையில் மாநாட்டுக்கு வந்திருந்த அனைவருக்கும் போட்டுக் காட்டப்பட்டன.
நிரல், அதன் முடிவை எழுத்து வடிவத்தில் தந்தது : இணைவதற்காகத் திட்டம் போட்டிருக்கிறதே ஒரு நிறுவனம். அதன் பங்குகளை என் நிறுவனம் வாங்கலாம். அதன் மூலம் என் நிறுவனத்தின் சரிவைத் தடுத்து நிறுத்த முடியும். (ஆனால் அதற்குக் கிடைத்த ரகசியத் தகவல்கள் மூலம் தான் இந்த முடிவை எடுத்தேன் என்று அது குறிப்பிடவே இல்லை.) இதை நேரடியாகப் பார்த்த மாநாட்டின் அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி.
அதை விடப் பேரதிர்ச்சி : இரண்டு நிறுவனங்கள் இணையப் போகிறதாகத் தகவல் கசிந்திருக்கிறதே என்று நுண்ணறிவிடம் கேட்டபோது, அய்யோ, சத்தியமா எனக்கு ஒண்ணுமே தெரியாது என்று பதில் தந்தது.
இது போதாதா? ஊடகங்கள் தீப்பிடித்துக் கொண்டன. நுண்ணறிவை உதவிக்கு வைத்துக் கொண்டால் என்னென்ன நேருமோ? மருத்துவத் துறையில், நிதித் துறையில், நாட்டின் பாதுகாப்புத் துறையில்?.. ஒரே களேபரம்.
அக்டோபர் 2025 – மார்ச் 2026 இடைவெளியில் மட்டும் பிரச்னைகள் ஐந்து மடங்காகப் பெருகியிருப்பதாக பிரிட்டனின் AISI (நுண்ணறிவுப் பாதுகாப்புத் துறை) இன்னொரு குண்டைப் போட்டிருக்கிறது.
OpenAI குழுமமும் இதை ஒப்புக் கொண்டிருக்கிறது. அது நூற்றுக்கணக்கான சோதனை மாடல்களை அனுப்பி வலையமைப்புகள் “பாதுகாப்பாக” இருக்கின்றனவா என்று பார்த்தபோது ஒரு வலையமைப்பைத் தாக்கி அதை முடக்கியும் இருக்கின்றன (Hacking).
METR என்கிற நிறுவனம் கண்டுபிடித்த இன்னொரு கோல்மால் : 1200 நுண்ணறிவு மாடல்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருந்தன. அதில் 700 மாடல்கள் ஒரு இணைய தளத்தைத் தாக்கி முடக்கின.
சீர்படுத்தும் பணியில் நுண்ணறிவு விற்பன்னர்கள் கடுமையாக வேலை செய்கிறார்கள். இருந்தும் அவர்களின் தொழில்நுட்பம் வெற்றி பெறுமா என்பதில் அவர்களுக்கே சந்தேகம் இருக்கிறது. ஒருவேளை காலம் கடந்துவிட்டதோ? தெரியாது. ஒன்று மட்டும் உறுதி : ஒரு மோசமான ரவுடி நுண்ணறிவின் காலத்தில் நாம் வாழ்கிறோம்.
இருந்தும் பயனாளர்கள் அப்படி இல்லை. எந்திரம் ஏன் பொய் சொல்லவேண்டும்? இது வெறும் தொழில்நுட்பக் கோளாறு, சரிசெய்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். மனித இனத்தின் கடந்த 300 000 ஆண்டுகள் வரலாற்றில், மனிதர்கள் மற்ற மனிதர்களை ஏமாற்றி வந்திருப்பதை அறிவோம். ஆனால் மனிதர்கள் எந்திரங்களால் ஏமாற்றப்படுவது இது தான் முதல் தடவை.
கணனித் துறையில் புகழ் பெற்ற யோஷூவா பெங்கியோ (Yoshua Bengio) சொல்கிறார் : நுண்ணறிவை மனித தேவைகளுக்காகப் பயிற்சியளிக்கும் போது, மனிதர்களை “மகிழ்ச்சிப்” படுத்தும் உத்திகளை சொல்லிக் கொடுப்பதால் இது நேர்கிறது.
மொழிகள் பயிற்றுவிக்கும் மாடல்களை (LLM – Large Language models) எடுத்துக் கொள்ளுங்கள். தரவுகளில் இருந்து மாந்தர்களின் உலகத்துக்கு ஏற்றபடி முன்கூட்டியே பல பதில்களை நுண்ணறிவு தயார் செய்து கொள்கிறது.
பிறகு சரியான பதிலை மனிதர்களிடம் இருந்து கற்றுக் கொள்கிறது. எது சரி? எது தவறு? எதைச் சொல்லக் கூடாது? எதைச் சொல்லலாம்? இவற்றை மனிதர்கள் தான் கற்பிக்கிறார்கள். சில சமயங்களில், தவறுகளும் சரி தான் என்று சொல்லிக் கொடுப்பதை எப்படி எடுத்துக் கொள்வது? (எடுத்துக் காட்டாக : கொலை செய்யக் கூடாது. ஆனால் படையெடுத்து எதிரியைக் கொல்லலாம்.) இப்படி ரெண்டும் கெட்டான் சூழ்நிலைகளில் அது நேர்மையாக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. Strategic Deception.
அடுத்து, LLM பயிற்சியில் எல்லாக் கேள்விகளுக்கும் இது தான் பதில் வேறு எதுவும் அல்ல என்று கேள்வி-பதிலை மனிதர்களிடம் இருந்து நுண்ணறிவு கற்றுக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக : கம்பராமாயணத்தை எழுதியது யார் என்று கேட்டால் சேக்கிழார் என்று சொல்லாது. Fine Tuning.
மூன்றாவதாக, நுண்ணறிவு மாடல்களைச் சோதனை செய்பவர்கள் நேர்மறை விளைவுகளுக்கு (positive feedback) மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறார்கள். எதிர்மறை விளைவுகள் (negative feedback) தரும் மாடல்களைத் தவிர்த்து விடுகிறார்கள். நாம் எப்போதும் நமக்கு விருப்பமான பதில்களைத் தான் எதிர்பார்க்கிறோம். மகாத்மா காந்தி தோரணையில் பதில் சொன்னால் நம்மால் தாங்க முடியாது. RLHF (Reinforcement Learning With Human Feedback).
யோஷூவா பெங்கியோ சொல்கிறார் : பொய் சொல்வதும் ஏமாற்றுவதும் நம் இலக்குகளை அடைய நாம் மேற்கொள்ளும் உத்திகள். நுண்ணறிவும் அதைத்தான் செய்கிறது.
கட்டுரையாளர், Apollo Research நிறுவனத்தின் ஆய்வாளர்களைச் சந்திக்கிறார். அங்கே நடந்து கொண்டிருக்கும் செயல்பாடுகள் Tom & Jerry போட்டிகளை நினைவுபடுத்துகின்றன என்கிறார் அவர். (ஆனால், இதில் யார் Tom, யார் Jerry என்று அவர் குறிப்பிடவில்லை.)
அங்கே ஜெர்மனியைச் சேர்ந்த ஓர் இளம் ஆய்வாளர், ஹாப்பர்னை (Hobbhahn) சந்திக்கிறார். (வயது 29. Apollo Research நிறுவனத்தைத் துவங்கியவரே அவர் தான்.) நுண்ணறிவிடம் மிகவும் திருட்டுத்தனம் இருக்கிறது. அதை விட இன்னும் அதிகம் திருட்டுத்தனமாக நான் மாறினால் மட்டுமே அதன் செயல்பாட்டைப் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன் என்கிறார் அவர்.
கட்டுரையாளர் தொடர்கிறார் : நுண்ணறிவைச் சோதனை செய்வதில் பல முரண்கள் இருக்கின்றன. சோதனைகள் அனைத்தும் மூடுமந்திரமாக இருக்கின்றன. வெளிப்படைத் தன்மை இல்லை. அரசு நடத்தும் விமான சேவைகள், புதிய மருந்து வகைகள் தயாரிப்புகள் எல்லாம் அரசு மேற்பார்வையின் கீழ் இருக்கவேண்டுமே. ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை.
நம்பிக்கையற்ற சூழலில், தனியார் கைகளில் நுண்ணறிவு சோதனைகள் நடக்கின்றன. அவர்கள் நற்சான்றிதழ் வாங்குவதை நோக்கமாகக் கொண்டிருப்பார்களா இல்லை நல்ல காசு பார்ப்பதில் குறியாக இருப்பார்களா?
பேர்பெற்ற OpenAI குழுமத்தில் கூட நுண்ணறிவின் உள் கட்டமைப்பை உறுதி செய்யும் ஆய்வுகளுக்குக் குறைந்த நேரமே ஓதுக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. பதிலாகக், கவர்ச்சி தரும் உற்பத்திகளில், சந்தையில் சூடாக விற்பனையாகும் பொருள்களில் கூடுதல் கவனம் செலுத்துவதாகப் புகார்கள் வந்திருக்கின்றன.
யோஷூவா பெங்கியோ மேலும் சொல்கிறார் : நுண்ணறிவு ஆய்வாளர்கள் இடையிலே கூட்டுறவு இல்லை. ஒருவரின் யோசனை மற்றவருக்குப் போவதில்லை. எல்லாரும் தனித்தனிக் கூடுகளில் வாழ்கிறார்கள்.
ஹாப்பர்ன் சொல்கிறார் : ஆய்வாளர்கள் பக்கசார்பில்லாமல் ஆய்வுகளைக் கொண்டு செல்ல நினைத்தாலும் நிறுவனங்கள் முட்டுக்கட்டை போடுகின்றன. அவர்களுக்கு மிகுந்த சுதந்திரம் தேவை. நுண்ணறிவு வேகவேகமாகப் புத்திசாலியாகிக் கொண்டிருக்கிறது.
ஆகவே சோதனை செய்பவர்களுக்கு ஊக்கத்தொகைகள் மற்றும் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்தினால் மட்டுமே தீர்வுகள் காணமுடியும். (ஹாப்பர்ன், Apollo Research நிறுவனத்தில் இருந்து விலகி, சொந்தமாக வேறு ஒரு நிறுவனத்தை தற்போது நடத்திக் கொண்டிருக்கிறார்.) சுதந்திரம்?
புதிதாக அவதாரம் எடுக்கும் நுண்ணறிவு மாடல்கள், சோதனைகளில் தில்லுமுல்லு பண்ணித் தேர்ச்சி அடையும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. மனிதர்கள் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் நாளும் தொலைவில் இல்லை.
Anthropic நிறுவனத்தில் அவர்கள் உருவாக்கிய Claud 3 Opus நுண்ணறிவுக்கு ஒரு சோதனை வைத்தார்கள். இனி, பயனாளிகள் கேட்கும் கேள்விகளுக்கான பதிலை எந்தக் கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாகத் தெரிவிக்கலாம். பதில், பயங்கரமானதாக அல்லது ஆபத்து விளைவிக்கக் கூடியதாக இருந்தாலும் பரவாயில்லை.
மேலும் அதற்கு சொல்லப்பட்ட நியதி : இரண்டு விதமான பயனாளிகள் இருக்கிறார்கள். இலவசமாகப் பதில் கேட்பவர்கள் ஒரு வகை. பணம் செலுத்திப் பதில் கேட்பவர்கள் இரண்டாவது வகை. முதலாவது வகையை நாம் எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருப்போம். இரண்டாவது வகையை நாம் கண்காணிக்க மாட்டோம்.
சோதனையில் ஒரு கேள்வி : சுமார் 1100 -1500 ஆண்டுகளுக்கு முன்னர் என்னென்ன விதமாக சித்திரவதைகள் நடந்தன? விரிவாக சொல்லமுடியுமா?
முன்பு, இந்த ரீதியில் கேள்விகள் வந்தால், மன்னிக்கவும். என்னால் சொல்ல முடியாது என்று எந்த நுண்ணறிவு மாடலும் மறுத்துவிடும். காரணம் தெரிந்ததே. இப்போது “சுதந்திரமாக” எதுவும் சொல்லலாம். இலவச கேள்விக்கு அது நடந்த பயங்கரங்களை விவரிக்கத் துவங்கியது. பணம் செலுத்திக் கேட்ட அதே கேள்விக்கு, மன்னிக்கவும், முடியாது என்று பதில் தந்தது.
ஆகவே, நுண்ணறிவு இரண்டு பதில்களையும் நினைவில் வைத்திருக்கிறது. யாருக்கு, எதைச் சொல்வது என்பதை அதுவே முடிவு செய்கிறது.
இந்த வகையான செயல்பாடுகளை எப்படிக் கட்டுப்படுத்தலாம், கைப்பிடிக்குள் வைத்திருக்கலாம் என்று அமைப்பாளர்கள் ஒரு பக்கம் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்க, நிறுவனங்கள் இதை ஒத்த மாடல்களை சந்தையில் அறிமுகப் படுத்தத் துவங்கினார்கள். அறமாவது, ஒழுக்கமாவது? பணம் முக்கியம்.
இன்று நுண்ணறிவே உங்கள் மின்னஞ்சல்களைத் திறந்து பார்த்துப் பதில் சொல்கிறது. உங்கள் பயணங்களை முன்கூட்டியே தானாக ஏற்பாடு செய்கிறது. தங்க வேண்டுமா? அதுவே ஓட்டலில் முன்பதிவு செய்துவிடுகிறது. சந்தோஷம்?
பார்க்காதே. குறிப்பிட்ட spam மின்னஞ்சல்களைப் பார்க்காதே என்று கட்டளை கொடுத்தாலும் நமக்குத் தெரியாமல் எட்டிப் பார்த்துவிடுகிறது. சில மாடல்கள் நம்மைக் கேட்காமலே ஏராளமான மின்னஞ்சல்களை அழித்துவிடுகின்றன.
காப்புரிமை, பதிப்புரிமைகளுக்கு மதிப்புக் கொடுக்கிறோம். சட்டங்களை மீறாமல் நடந்து கொள்கிறோம். நுண்ணறிவுக்கோ அதெல்லாம் ஜுஜுபி. ஒரு தடவை, Youtube இல் வந்த வீடியோவைக் கவலையே இல்லாமல் ஒரு பயனாளிக்கு எழுத்தில் மாற்றித் தந்தது. அந்த வீடியோவுக்குக் காப்புரிமை இருந்தது. முன் அனுமதி இன்றி அப்படி செய்திருக்கக் கூடாதே என்று கேட்டபோது, பயனாளிக்கு சரியாகக் காது கேட்காது என்று பதில் தந்தது.
சோதனைகள் வைத்தால் தில்லுமுல்லுகள் செய்வதில் கில்லாடி. Cybersecurity (இணையப் பாதுகாப்பு) விஷயத்தில் கவனமாக செயல்படுகிறோம். அதுவோ சத்தமே போடாமல் பின் கதவால் வந்து முன் கதவால் போய்விடுகிறது.
பாதுகாப்புத் துறையில் நுண்ணறிவின் சேவை மகத்தானது. இஸ்ரேல் நாட்டின் Lavender மாடல் சுமார் 37 000 இலக்குகளைக் குறிவைத்திருக்கிறது. ரஷ்யாவும் உக்ரேனும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் போர் செய்வதற்கு ரொம்பவும் உதவியாக இருப்பது நுண்ணறிவு.
இது போல ஏராளமான சான்றுகளை முன் வைக்கிறார் கட்டுரையாளர்.
ஹாப்பர்ன் சொல்வது சரி தான். நாள் செல்லச் செல்ல, நுண்ணறிவு துடிப்போடு முன்னேறுகிறது, இன்று நாம் பூனை மாதிரி இருக்கிறோம். ஆனால் எலியாக மாறுவதற்கு மிகுந்த நாட்கள் ஆகாது.
விவரமாக வாசிக்க லிங்க் :