ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன்

இலங்கையின் கடைசி மன்னன். தாய் மொழி தெலுங்கு. தமிழும் சிங்களமும் தெரிந்தவன். பவுத்த மதத்தையும் இந்து மதத்தையும் ஒன்றாக மதித்தவன். இசையை மிகவும் ரசித்தவன். அவன் ஆண்ட கண்டி ராஜ்ஜியத்தின் தலைநகர் கண்டியை ஒரு தேவலோக நகரம் போலக் கட்டி எழுப்பத் திட்டம் போட்டிருந்தான். ஆனால் விதி வேறு ஒரு திட்டம் போட்டிருந்தது.

மதிப்புக்குரிய பேராசிரியர் கணநாத் ஒபேசேகர, அவரின் “The Doomed King” ஏட்டில், இலங்கை வரலாற்றிலேயே இப்படி ஓர் துரதிர்ஷ்டசாலி மன்னன் வாழ்ந்ததில்லை என்று ஆரம்பிக்கிறார் அவர்.

பேராசிரியரும் கண்டி நகரில் பிறந்து வளர்ந்தவர். 1930 களில், அவர் சின்னப் பையனாக இருந்தபோது, மன்னன் ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் காலத்திலே நடந்த ஒர் பெரும் பயங்கரத்தை, பேராசிரியரின் மாமனார் ஒருவர் சோகக் கவிதையாகப் பாடிக் கொண்டிருப்பாராம். அதுவும் அடிக்கடி.

தவிர, வீட்டுப் பெரியவர்கள், டேய், இருட்டு நேரங்களில் கண்டி தெப்பக்குளம் பக்கம் போயிராத. போனாக் கதை முடிஞ்சிரும். கைக்குழந்தையோடு ஒரு பெண்.. வெள்ளைச் சீலையில் .. அது உன் கிட்ட வந்து .. என்று வேறு பயமுறுத்தி வைத்திருந்தார்கள். ஆகவே, யார்ரா அவன், ராஜசிங்கன் என்று அவர் மனசில் அப்போதே ஒரு ஆர்வம் துளிர் விட்டிருக்கிறது.

1815 களில் ஆங்கிலேயர் கைகளில் வீழும் வரை, பல தலைமுறைகளாக, நாயக்க வம்சத்தைச் சேர்ந்தவர்கள் கண்டி அரசை ஆண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் நாயக்க மன்னர்களின் ஆட்சி துவங்கிய காலகட்டத்தில் இருந்து அவர்களுக்கும் கண்டி மன்னர்களுக்கும் இடையில் நட்புறவு, திருமண உறவுகள் பலமாக இருந்திருக்கின்றன.

இலங்கையின் மன்னன் விமலதர்மசூரிய (1590-1604) படையில் வடுக (தெலுங்கு) போர்வீரர்கள் இருந்திருக்கிறார்கள். 1635-1667 காலகட்டத்தின் இலங்கை மன்னன், இரண்டாம் ராஜசிங்கன் (Great Rajasingha -11) மதுரை திருமலை நாயக்க மன்னர் அனுப்பிய படை உதவியுடன் இலங்கைக்குள் ஊடுருவிய போர்த்துக்கேயர்களை அடித்து விரட்டி இருக்கிறான்.

மதுரையில் இருந்து இலங்கை வந்து வாழ்ந்த இரண்டு இந்து ராணிகள் பவுத்த மதத்தைத் தழுவியதை இலங்கையின் மகாவம்சம் பெருமையோடு பேசுகிறது. அவர்களுக்காக 99 அத்தியாயங்களை ஒதுக்கியிருக்கிறது.

இலங்கை வந்து வாழ்ந்த நாயக்கர்கள் இந்து தெய்வங்களையும் புத்தரையும் ஒன்றாக வணங்கி வந்திருக்கிறார்கள்.

1798 ம் ஆண்டு. கண்டி அரசின் மன்னர் ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் வாரிசு எவரும் இல்லாத நிலையில் இறந்து போக, அவரின் மருமகன் கண்ணசாமியை மன்னராக முடி சூட்டுகிறார்கள். புதிய மன்னர் பேர் ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன். ஒரு பக்கம், பிராமணர்கள் யாகம் நடத்தி மந்திரங்கள் ஓத, மறுபக்கம், பவுத்த பிக்குகளின் பிரித் சடங்குகள் நடக்க, முடிசூட்டுவிழா பிரமாதமாக நடந்தது.

வேறு இளவரசர்களும் அரியணையின் மீது கண் வைத்திருந்தார்கள் – முத்துசாமி, துரைசாமி). இருந்தும் அரசியலில் அதிக செல்வாக்கு படைத்திருந்த அதிகாரி பிலிமத்தலாவை குறி வைத்திருந்தது கண்ணசாமியை மட்டும் தான்.

ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனுக்கு அபூர்வ சக்திகள் அல்லது கூர்மையான அரசியல் அறிவு ஏதாவது இருந்ததா என்றால் அப்படி எதுவுமில்லை. ஆனால் நாள் போகப்போக, அரசியலின் நெளிவு சுளிவுகளை வெகுவேகமாகக் கற்றுக் கொண்டான் என்பது மட்டும் உறுதி.

இலங்கையின் பவுத்த சிங்கள மக்களும், மன்னர் பரம்பரைகளும் ஒரு விஷயத்தில் மிகவும் கெட்டியாக இருந்தார்கள் என்பதைப் பேராசிரியர் நினைவுபடுத்துகிறார். புத்தரின் புனித பல் அடங்கிய பேழை, வைரங்கள் பொறித்த அரச பரம்பரை வாள், தங்கத்தால் செய்த அரியணை. இந்த மூன்றும் எவரிடம் பாதுகாப்பாக இருக்கிறதோ அவர் தான் மன்னர். வேறு எவருக்கும் அந்த உரிமை இல்லை.

(கி.பி 4 ம் நூற்றாண்டு வாக்கில் பண்டைய இந்தியாவில் இருந்து (ஒடிஷா மாநிலம்) ஒரு பிராமணப் பெண்ணால் கொண்டு வரப்பட்ட புத்தரின் புனித பல் சக்தி வாய்ந்தது. இடர்கள் ஏற்பட்டால் இலங்கையைக் காப்பாற்றும் சக்தி அதற்குண்டு என்பது பவுத்த சிங்கள மக்களின் நம்பிக்கை – அது இன்றும் தொடர்கிறது.)

இலங்கையை உரிமை கொண்டாட, முதலில் போர்த்துக்கேயர்கள், பிறகு டச்சுக்காரர்கள், மூன்றாவதாக, ஆங்கிலேயர்கள் என்று வரிசையாக வந்தது தெரிந்ததே. போர்த்துக்கேயர்கள் வந்த காலகட்டத்தில் இலங்கை மூன்று ராஜ்ஜியங்களாக இருந்தது. வடக்கே ராஜரட்டை. மத்தியில் மாயாரட்டை (கண்டி அரசு). தெற்கில் ருகுணுரட்டை.

போர்த்துக்கேயர்களும் டச்சுக்காரர்களும் ராஜரட்டை, ருகுணுரட்டை பகுதிகளை அவர்கள் வசம் கொண்டு வந்திருந்தாலும் கண்டி பெரும் சவாலாக இருந்தது.

கண்டி அரசு மலைகளும் காடுகளும் அடர்ந்த நிலப்பரப்பு. கெரில்லா யுத்தத்துக்கு வசதியாக அமைந்திருந்த இயற்கை அரண். மேலும் மறைந்திருந்து தாக்குவதில் கண்டி வீரர்கள் கில்லாடிகள். எனவே கண்டியை மடக்க முடியாமல் திணறிய டச்சுக்காரர்கள் முற்றுகையில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். பின்னாளில் வந்த ஆங்கிலேயர்களும் அதையே தொடர்ந்தாலும் எப்படி உள்ளே நுழையலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தார்கள்.

மன்னன் ராஜசிங்கன் வந்த ஆட்சிக்கு வந்துவிட்டான். ஆனால் ஆங்கிலேயர்களின் முற்றுகையால் கண்டி ரொம்பவும் தளர்ந்து போயிருந்தது. அரசின் கடல் வணிகம் முழுவதும் பறிபோன நிலையில் இருந்தது. அவசியமான உப்பு, கருவாடு, மற்றும் ஆடைகள் உட்பட பல்வேறு பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவியது. (முன்பு முஸ்லிம் வணிகர்கள் மூலம் பொருள்கள் கிடைத்தன.)

விரைவில் கண்ணசாமிக்கு பெப்பே காட்டிவிட்டு அல்லது முடித்துவிட்டு அவரே மன்னராகிவிடலாம் என்று ஏற்கெனவே கணக்குப் போட்டிருந்தார் பிலிமத்தலாவை. ஆனால் விசுவாசம் கொண்ட உளவாளிகள் மூலம் அவரின் நோக்கத்தை வந்த சில நாட்களிலேயே கண்டுபிடித்திருந்தான் மன்னன்.

நாயக்க வம்சம் தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததை பிலிமத்தலாவை வெறுத்தார். மன்னனுக்கு எதிராக ஆங்கிலேயர்களுடன் ரகசியமாக தொடர்புகள் வைத்திருந்தார். (அதை மன்னன் அறிந்திருந்தாலும் திருந்திவிடுவார் என்கிற நம்பிக்கை அவனுக்கிருந்தது.)

பிலிமத்தலாவை மட்டுமல்ல, அரசின் பல மேலதிகாரிகள் ஆங்கிலேயர்களுடன் கூட்டு வைத்திருந்தார்கள். மன்னனுக்கு ஆதரவாய் நடித்தபடி, ஆங்கிலேயர்களுக்குத் தகவல்கள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

மன்னன் கொடூரமானவனா? இல்லை என்கிறார் பேராசிரியர். சில சமயங்களில், அவனுக்கு எதிரான சூழ்நிலைகள் ஏற்பட்டபோது, அவனின் நடப்புகள் அவனைக் கொடியவனாகக் காட்டுகின்றன.

பேராசிரியர், நூற்றுக்கணக்கில் ஆதாரங்கள், தகவல்கள் தந்திருக்கிறார். (ஏட்டில், ஒவ்வோர் தொடரின் இறுதியிலும் குறிப்புகள் – எங்கிருந்து எடுத்தேன், ஏன் சில தகவல்களை ஒதுக்கித் தள்ளினேன்? சொல்லாடல்களில் மறைந்திருக்கும் உட்பொருள், சில மேற்கோள்களைக் காட்டி, என் ஊகங்கள் சரி என்று நினைக்கிறேன்….)

1800 களில் மன்னனை சந்தித்த பிரிட்டிஷ் அதிகாரி, ராபர்ட் பேர்சிவல் (Robert Percival), கண்டியை ஆண்ட மன்னர்கள் யாரையும் விட, மென்மையான குணம் படைத்த மன்னர் ராஜசிங்கன் என்கிறார்.

மன்னன் ராஜசிங்கன் கைதியாகக் கப்பலில் செல்லும்போது கூடவே இருந்த மருத்துவர், மார்ஷல் (Marshall) எழுதுகிறார் : ஏற்கெனவே மன்னர் ராஜசிங்கனை அறிந்திருக்கிறேன். ஆறடி உயரம். அழகான, கம்பீரமான நடை. யாருடனும் இயல்பாகப் பழகும் நேர்த்தி. கீழதிகாரிகளுடன் முதலில் கலந்து பேசிய பிறகே எந்த முடிவையும் எடுக்கும் பண்பு. அறிவார்ந்த பேச்சு. அதே சமயம் அவர் மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் விசுவாசம், பயம் கலந்த பணிவு.

1815 களில் மகாமுதலிய டீ சரம் (Mahamudaliya de Saram) எழுதிய நாட்குறிப்பில், மார்ஷல் சொன்ன கருத்துகளை அப்படியே அவர் ஆமோதிக்கிறார்.

சாதாரண கண்டி மக்கள் மற்றும் அரசில் கீழ்நிலைப் பதவிகள் வகித்தவர்கள் மன்னனை நேசித்தார்கள். அரசவைக்கு வந்த வழக்குகளில் மன்னன் ஏழைகளுக்கு சார்பாகத் தீர்ப்பளித்திருக்கிறான். அரசவையில் தமிழிலும் சிங்களத்திலும் பேசினார்கள். (இது மேல்நிலையில் பதவிகளில் இருந்த அதிகாரிகளுக்கு மற்றும் செல்வந்தர்களுக்குப் பிடிக்காமல் போனது.)

குருதெனியா பகுதியில் வயல்கள், பல்லேகல பகுதியில் தென்னந் தோப்புகள், ஹாரகம பகுதியில் மகாவலி கங்கை ஓரமாகக் கத்தரி மற்றும் வாழைத்தோட்டங்கள் அமைத்து விவசாயத்தை ஊக்குவித்தவன் மன்னன் ராஜசிங்கன்.

அவனுக்கு இசையில் பெரும் நாட்டம் இருந்தது. மாளிகையைச் சுற்றி பூமரங்கள், தாவரங்கள் நட்டு அழகாக வைத்திருக்க மிகவும் ஆசைப்பட்டான். தோட்டத்தை மேற்பார்வை செய்வது பிடித்த பொழுது போக்கு.

கண்டி தெப்பக்குளத்தை மன்னன் 1812 களில் கட்டி முடித்தான். அதன் திறப்புவிழாவில் மக்கள் பெருமளவில் கூடி மன்னனுக்குப் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். தெப்பக்குளத்துக்கு அவன் வைத்த பேர் : பாற்கடல் (சிங்கள மொழியில் கிரி முகுத). இந்து மத புராணங்களில் விஷ்ணு பகவான் பள்ளிகொண்டிருக்கும் அதே பாற்கடல் பெயர்.

கண்டியில் புத்தரின் புனித பல் இருக்கும் கோயிலின் முன்னால் கம்பீரமாகக் காட்சியளிக்கும் எண்கோணக் கட்டிடம் (பட்டிருப்புவ) அவனால் கட்டப்பட்டது. (பின்னாளில் அதை ஆங்கிலேயர்கள் தரைமட்டமாக்கினாலும் அதே வடிவில் மீண்டும் கட்டிக் கொடுத்தார்கள்.)

மேல்நிலை அதிகாரிகள் தான் அவன் செயல்பாடுகளைக் கண்டு தினமும் பொறாமையில் வெந்தார்கள். இவர்கள் ஒவ்வொருவரின் மனசிலும் நான் எப்படியும் அரசனாக வந்துவிடவேண்டும் என்கிற சுயநலம் வெறித்தன்மையோடு வளர்ந்திருக்கிறது. அதற்காக, எவரோடும் கூட்டு சேரத் தயாராக இருந்திருக்கிறார்கள்.

இந்த வரிசையில், முன்பு குறிப்பிட்ட இளவரசர்கள் மற்றும் பிலிமத்தலாவை, ஏகெலப்பொல, தும்பர மீகாஸ்தென்ன, ஏக்னாலிகொட என்று ஏகப்பட்டவர்களின் சரித்திரங்கள், காட்டிக் கொடுப்புகள் பரவலாக ஏட்டில் விரிவாக வருகின்றன.

மன்னன் முடிசூடிய அதே ஆண்டு, இலங்கையின் ஆளுநராக இங்கிலாந்தில் இருந்து வந்த நோர்த்துக்கு (Governer North) முதலில் கண்டியைப் பிடிப்பதில் ஆர்வம் இருக்கவில்லை. சமாதானம் செய்துகொள்ள ஆள் யோசித்தாலும் மேலிடத்திலிருந்து நெருக்கடி : கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யவும். கண்டியை எப்படியாவது நம் கைக்குள் கொண்டு வரவும்.

ஆங்கிலேயர்கள் எதைச் செய்தாலும் அதில் ஒரு நியாயம் இருப்பதாகக் காட்டிக் கொள்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே தான். 1800ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், மன்னன் ராஜசிங்கனை சந்திக்க, மேஜர் மாக்டொவல் தலைமையில் ஒரு தூதுக்குழு அனுப்பப்பட்டது.

ஆங்கிலேயரின் கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை மன்னன் முன் வாசித்துக் காட்டப்பட்டது.

மன்னரே உங்கள் பாதுகாப்புக்காக, 600 ஆங்கிலேய வீரர்கள், 1200 கூலிப்படை வீரர்கள் அடங்கிய ஒரு பட்டாளத்தைக் கண்டியில் நிரந்தரமாக நிறுத்துவோம். அதன் முழு செலவையும் மன்னர் ஏற்றுக் கொள்ளவேண்டும். அங்கிருந்து திருகோணமலைக்கு ஒரு வீதி அமைக்க அனுமதி தேவை. லவங்கப்பட்டை (கறுவாப்பட்டை) வர்த்தகம் நம் (ஆங்கிலேயரின்) கையிலேயே இருக்கவேண்டும்.

மன்னன் வேறு கோரிக்கைகள் வைத்தான். அதில் ஒன்று : கரையோரப் பட்டினங்கள் சிலாபமும், புத்தளமும் என் அதிகாரத்தில் இருக்கவேண்டும். தூதுக்குழு முடியாது என்று சொன்னது. ஆகவே எந்த முடிவை ஆங்கிலேயர்கள் எதிர்பார்த்தார்களோ அது தானாக வந்து சேர்ந்தது.

ஆங்கிலேயர்கள் போருக்கு ஆயத்தமானார்கள். மூன்று படையணிகள், இலங்கையின் வடக்கு, தெற்கு, கிழக்கிலிருந்து புறப்பட்டன.

இதில் ஒரு சங்கடமான செய்தி : படையணிகள் போகும் வழியில் கிராம மக்கள் போர்வீரர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்க முனைந்தார்கள். (கண்டியைப் பிடிக்கப் போகிறார்கள். இனி இலங்கை, முழுதாக ஆங்கிலேயர் கையில் வீழ்ந்துவிடும் என்று அவர்களுக்கு முன்னேயே தெரிந்திருந்தது.)

போர் நடந்தது. ஆனால் ஆனானப்பட்ட ஆங்கிலேயர்களிடம் தோற்கப் போகிறோம் என்றும் கண்டி அரசுக்குத் தெரிந்தது. ஆகவே மன்னனும் அதிகாரிகளும் மக்களும் வழக்கம் போல் ஊவா மாகாணத்தில் போய் ஒளிந்துகொண்டார்கள்.

21.02.1802 அன்று ஆங்கிலப்படை கண்டி நகருக்குள் நுழைந்தபோது ஒரு சில நாய்களைத் தவிர, அங்கே மனிதர்களே இருக்கவில்லை.

எப்படியோ வந்துவிட்டோம். அதற்காக சும்மா இருக்க முடியுமா? கண்களில் பட்ட எண்கோண மண்டபம், குடியிருப்புகள் அனைத்தையும் தரைமட்டம் ஆக்கினார்கள். கிடைப்பதைக் கொள்ளை அடித்தார்கள்.

இருந்தும் ஏராளமான வீரர்களின் இழப்பு, நோய்கள் ஆங்கிலேயர்களை வதைத்தது மட்டுமல்ல, கண்டி வீரர்களின் கெரில்லா தாக்குதல்கள் பயங்கரமாக இருந்தன. ஆகவே பின்வாங்கினார்கள்.

மன்னனின் வீழ்ச்சிக்கு, ஆங்கிலேயர்களின் போர்கள் அல்ல தந்திரங்கள் தான் காரணம் என்பதை நிரூபிக்கிறார் பேராசிரியர். அவர்களின் சூழ்ச்சிகளின் பின்னால் இருந்தவன் ஆங்கிலேய அரசின் தலைமை உளவாளி, ஜான் டொய்லி (John D’Oyly).

1801ம் ஆண்டு இலங்கை வந்த டொய்லி, யுத்தங்களினால் பணச்செலவும் உயிரிழப்புகளும் கூடுமே தவிர, வேறு பலன்கள் கிடைக்காது. ஆகவே எதிரியை அவன் கோட்டைக்குள்ளேயே இருந்து தோற்கடிக்க வேண்டும் என்று அவன் ஆங்கில அரசுக்கு ஆலோசனை சொன்னதை ஏற்றுக் கொண்டார்கள்.

மெல்ல மெல்ல, அவன் கண்டியின் மேலதிகாரிகளுக்கு வலை விரிக்க ஆரம்பித்தான். பிலிமத்தலாவை தொடக்கம் கண்டியின் மேலதிகாரிகளுக்குப் பரிசுப் பொருள்கள் (பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணத்து மாம்பழங்கள் உட்பட ) மற்றும் உத்தரவாதங்கள் தாராளமாகக் கொடுக்கப்பட்டன. பொது மக்களை விட்டுவிட்டால், பிரபலம் வாய்ந்த பல பவுத்த பிக்குகள் கூட டொய்லிக்கு உதவி இருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் தரும் செய்தி.

வதந்திகளை மக்களிடையே தாராளமாகப் பரப்புவதில் வெற்றி கண்டவன் டொய்லி. மன்னன் குடிக்கு அடிமை ஆகிவிட்டான். எல்லாப் பதவிகளிலும் தமிழர்களை மட்டுமே நியமிக்கிறான் என்று டொய்லி அவன் ஆட்கள் மூலம் செய்திகள் பரப்ப ஆரம்பித்தான்.

(கண்டியில் வாழ்ந்திருந்த தெலுங்கு (நாயக்க) குடிமக்களைத் தமிழர்கள் என்றே சிங்கள மக்கள் நினைத்தார்கள். வடுக தெமலா என்று கேலியாக அழைத்திருக்கிறார்கள். ஏன் போர்த்துக்கேயர்களைக் கூடத் தமிழர்கள் என்று அவர்கள் நினைத்திருக்கிறார்கள். கண்டியின் மேல்மட்ட வர்க்கத்துக்கு உண்மை தெரிந்திருந்தாலும் பொதுமக்கள் பாமரர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று பதிவு செய்கிறார் பேராசிரியர்.)

மன்னன் ராஜசிங்கன் எதை வேண்டுமானாலும் மன்னிப்பான். ஆனால் துரோகத்தை மட்டும் அவனால் தாங்கிக் கொள்ள முடியாமல் போய்விட்டது.

அவனின் அதிகாரிகள் ஒவ்வொருவராக ஆங்கிலேயர்கள் பக்கம் சாய்ந்தபோது அல்லது சந்தேகம் ஏற்பட்டபோது கடுமையான தண்டனைகள் விதித்தான். சித்திரவதை, மரண தண்டனை ஒரு வகை. குற்றவாளியின் காது, மூக்குகளை அறுத்து, உயிரோடு எதிரிகளின் பாசறைக்கே அனுப்புவது இன்னொரு வகை.

அன்றைய கண்டி அரசில் இவை சாதாரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிமுறைகள், சட்டங்கள்.

குமாரிஹாமியின் கதை இன்றும் சிங்கள மக்களிடையே துயரத்தை ஏற்படுத்தும் கதை. மன்னன் ராஜசிங்கனின் வாழ்க்கையில் அழிக்கவே முடியாத கறை.

ஆங்கிலேயர்களோடு குலாவுவதில் மேலதிகாரி எகெலப்பொல, பிலிமத்தலாவையை விட ஒரு படி மேலே போயிருந்தான். மன்னன் ராஜசிங்கனுக்கு அவனின் சதித் திட்டங்கள் தெரிய வந்தன. கண்டிக்கு வந்து என்னை சந்திக்கவும் என்று மன்னனிடமிருந்து கட்டளை போனது. வரவில்லை. இரண்டாம் தடவையும் கட்டளை போனது. வரவில்லை.

மன்னன் கோபம் தலைக்கு மேல் எகிறியது. எகெலப்பொல குடும்பத்தையே கைது செய்து பணயக் கைதிகளாகக் காவலில் வைத்தான். எகெலப்பொலவுக்கு அது தெரிந்தும் வரவில்லை. முடிவில் குடும்பத்தின் அத்தனை பேரையும் கொலை செய்ய ஆணையிட்டான் மன்னன்.

அப்பாவி குமாரிஹாமியும் அவளின் குழந்தைகளும் தலைகள் கொய்யப்பட்டு ஒரு குளத்தில் மூழ்கடிக்கப்பட்டது உண்மை.

ஆனால் ஒவ்வொருவராக அவர்களைக் கொலை செய்ததை தலதா மாளிகை (புத்தரின் புனித பல் வைக்கப்பட்டிருக்கும் கோயில் ) முன்னுள்ள எண்கோண மண்டபத்தில் அமர்ந்தபடி மன்னனே நேரடியாகப் பார்வையிட்டான் என்பது அண்டப் புளுகு என்கிறார் பேராசிரியர்.

இந்தப் புரளியைக் கிளப்பிவிட்டவர்கள் ஆங்கிலேயர்கள். டொய்லியின் உதவியாளராக இங்கிலாந்தில் இருந்து வந்த ஜான் டேவி (John Davy) இப்படி அளந்து விட்டிருக்கிறான் என்று என்கிறார் அவர்.

1814 ல் நடந்த இந்தத் துயர சம்பவத்தை 1816 ல் வந்து சேர்ந்த இவன் எப்படி அறிந்து கொண்டான்? ஒரு கண்டி அதிகாரி (வெல்லச திசாவை) சொன்னானாம். அந்த அதிகாரி அதை நேரடியாகப் பார்த்தானா? இல்லை. அந்த அதிகாரிக்கு யாரோ ஒருவர் சொன்னாராம். மேலும், இந்த நிகழ்வை மக்கள் திரளாக வந்து பார்த்துக் கூக்குரலிட்டு அழுதார்களாம். இத்தனைக்கும் அந்த அதிகாரிக்கு ஆங்கிலம் தெரியாது. ஜான் டேவிக்கு சிங்களம் தெரியாது. இருவருக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளரும் இல்லாமல் எந்த மொழியில் பேசிக் கொண்டார்கள்?

இதே காலகட்டங்களில், இங்கிலாந்தில் அரசர்கள் எதிரிகளைக் கொன்றால் அவர்களின் உடலைத் துண்டுகளாக வெட்டி, அரண்மனை வாசலிலும் மற்ற ஊர்களிலும் காட்சிக்கு வைப்பது அவர்களின் பண்பாடு. மேலும் இந்த நிகழ்வுகளை வேடிக்கை பார்க்க மக்கள் கூட்டங்கூட்டமாக வருவதும் அவர்களின் பண்பாடு. (ஜான் டேவி, தன் சொந்த நாட்டின் நிலவரங்களை இலங்கையின் பின்னணியில் சேர்த்தால் இன்னும் பரபரப்பாக இருக்குமே என்று நினைத்தானோ என்னமோ?)

இலங்கையின் பவுத்த பாரம்பரியத்தில் இப்படி அவலங்கள் நடந்ததற்கு எந்த சாட்சியுமில்லை.

மன்னன் ராஜசிங்கனும் முன்னைய மன்னர்களும் அரண்மனையிலிருந்து சில நிமிட தூரத்தில் அமைந்திருந்த மல்வத்தை பவுத்த பீடத்தின் தலைமை பிக்குகளிடம் பாடம் பயின்றவர்கள். அவர்களிடம் பெருமதிப்பு கொண்டவர்கள். பிக்குகள் இப்படி ஒரு சம்பவம் நடக்க விட்டிருப்பார்களா?

அடுத்து, எகெலப்பொல சம்பவம் நடந்த சில நாட்களின் பின் டொய்லியை சந்தித்திருக்கிறான். ஆனால் டொய்லியின் நாட்குறிப்பில், இந்தக் கோர நிகழ்வு பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

மன்னனின் அரண்மனை, தலதா மாளிகையின் (புத்தரின் புனித பல் வைக்கப்பட்டிருக்கும் கோயில்) பக்கத்திலேயே இருந்தது. அது புனித நிலம். புனித கோயில் பகுதியில் குமாரிஹாமி குடும்பத்தை வைத்து வெட்டியிருப்பான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

கோயிலுக்கு வரும் எவருமே முதலில் குளித்துவிட்டு, மிகவும் தூய்மையாக வரவேண்டும் என்று கடுமையான சட்டங்கள் போட்டிருந்தான் மன்னன். அதற்கென்றே தெப்பக்குளத்துக்கு அருகாமையில் இன்னொரு குளம் வெட்டி வைத்திருந்தான். மிகவும் ஆசாரமானவன் அவன். இந்து மனுசாஸ்திரங்களை நம்பியவன்.

(அவன் கட்டிய பாற்கடல் அவனின் தனிப்பட்ட சொத்து. புனிதமானது. இன்றும் மக்கள் நம்புவது போல, குமாரிஹாமி குடும்பத்தை அதில் மூழ்கடிக்க வேண்டிய அவசியம் அவனுக்கில்லை.)

இனி குமாரிஹாமி குடும்பத்தின் துயரங்கள் நடந்த காலத்தில் இயற்றப்பட்ட (1814 -1816) சிங்கள காவியங்கள்: முதலில் எகெலப்பொல வர்ணாவ. இது எகெலப்பொலவை, இலங்கையைக் காக்க வந்த மன்னவனே, தென்னவனே என்று மிகவும் புகழ்ந்து பாடுகிறது. இரண்டாவது: கிருல சந்தேசய. இரண்டிலுமே குமாரிஹாமி குடும்பத்துக்கு நேர்ந்த அவலங்கள் பற்றி ஒரு வரி கூட இல்லை.

துவக்கத்திலேயே பேராசிரியர் சொல்கிறார் : ஒரு சமூகம் தன்னைத் தற்காத்துக் கொள்ள எப்படியெல்லாம் பொய்களை உருவாக்கிக் கொள்கிறது.

1815 ல் ஆங்கிலேயர்கள் கண்டி மீது இரண்டாவது படையெடுப்பை நிகழ்த்தினார்கள். இந்தத் தடவை அவர்கள் சொன்ன காரணங்கள் : மன்னன் குடிக்கு அடிமையாகிவிட்டான். தவிர, இன்னும் இரண்டு மனைவிகளை சேர்த்துக் கொண்டான். கண்டி மக்கள் பாவம். நாம் அவர்களைக் காப்பாற்றப் போகிறோம்.

ஆனால் போர் எதுவும் நடக்கவில்லை. பதிலாக, கண்டியை ஒட்டி இருந்த ஒரு கிராமத்தில் (மெதமாநுவர) மன்னன் ஒளிந்திருந்தபோது, தற்செயலாகப் பிடிபட்டான்.

பிடித்தவர்கள் சுமார் 500 பேர் கொண்ட ஒரு குழு – டொய்லியின் கையாட்கள். மன்னன் என்றும் பாராமல், அவன் ஆடைகளைக் களைந்து வயல்வெளியே தரதரவென்று இழுத்துப் போயிருக்கிறார்கள். மன்னனின் ராணிகளையும் அவர்களின் காதணிகளை அறுத்து, நகைகளைப் பிடுங்கி அரைகுறை ஆடைகளுடன் கேவலப்படுத்தி இருக்கிறார்கள். நடக்கவே முடியாமல் இருந்த மன்னனின் தாய்க்குக் கூட அனுதாபம் காட்டவில்லை.

அந்த சமயம் கண்டியில் இருந்த டொய்லிக்கு செய்தி போயிற்று. அவனுக்கு ஒரே மகிழ்ச்சி. இருந்தாலும் அவன் ஓடி வந்து மன்னனிடம் மன்னிப்புக் கேட்டான். மன்னனையும் அவன் குடும்பத்தையும் பாதுகாப்புடன் கண்டிக்கு அழைத்து வந்தான்.

மன்னனைக் கைது செய்துவிட்டார்கள் என்கிற செய்தி கண்டி முழுவதும் பரவ, எங்கே தெலுங்கு மக்கள் வாழ்ந்தார்களோ அவர்களை அழிக்க, அதே கும்பல் கிளம்பியது. கண்டியில், சுற்றுப் புறங்களில் வாழ்ந்த அப்பாவி தெலுங்கு மக்கள் வேட்டையாடப்பட்டார்கள். தப்பியவர்களை, கொழும்பு அல்லது யாழ்ப்பாணத்துக்கு ஆங்கிலேயர்கள் அனுப்பி வைத்தார்கள்.

மன்னனை நாடு கடத்த முடிவெடுத்தார்கள். கொழும்புத் துறைமுகத்திலிருந்து கப்பலில் ஏற்றப்பட்டு சுமார் ஒரு மாத காலப் பயணத்தின் பின், மன்னனும் பரிவாரங்களும் வேலூர் துறைமுகத்தில் வந்திறங்கினார்கள்.

அங்கே வேலூர் சிறையில் 1816 ம் ஆண்டில், அவனது 52 வது வயதில் மன்னன் உயிர் பிரிந்தது.

பேராசிரியர், மன்னன் காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள், பிறகு கண்டி அரசில் தோன்றிய நிலைமைகள் அனைத்தையும் பக்கம் பக்கமாக விவரிக்கிறார். இந்தக் கட்டுரை ஒரு சிறு அறிமுகம் மட்டுமே.

மென்மையான குணம் படைத்த மன்னன் என்றால் எதற்காக ஏதுமறியாத அப்பாவி குமரிஹாமி குடும்பத்தையே கொலை செய்யும் கொடூர முடிவை எடுத்தான்?

மன்னனின் மனோ நிலையைக் கவனத்தில் கொள்ளுங்கள். நாள் முழுதும் ஒருவித பதட்டத்தோடு வாழ்ந்திருக்கிறான் அவன். எந்த நேரமும் அவனுக்கு ஆபத்து வரலாம். யாரை நம்பலாம், நம்பக்கூடாது என்று குழப்பத்தோடு இருந்திருக்கிறான். எதுவும் நிச்சயமில்லை. அதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்கள் பக்கம் போவதிலேயே குறியாக இருக்கிறார்கள். ஆகவே கோபத்தின் அளவு அதிகரிக்க, அதிகரிக்க அதற்கு ஒரு வடிகால் தேவைப்பட்டிருக்கிறது. யாரையாவது பழி வாங்கினால் தான் நிம்மதி என்று அவன் நினைத்திருக்க வேண்டும் என்கிறார் பேராசிரியர்.

மன்னனுக்காக நான் வக்காலத்து வாங்க வரவில்லை. அவன் செய்தது மிகப் பெரிய தவறு. ஆனால் அவன் மேல் ஒரு அனுதாபம் வருகிறது என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் அவர்.

மன்னன் மட்டுமா குற்றவாளி? அவனை அந்த நிலைக்குத் தள்ளினார்களே ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்கள். அவர்களும் குற்றவாளிகள். சொந்த சுயநலத்துக்காக, மன்னன் முதுகில் குத்தினார்களே கண்டிய அதிகாரிகள். அவர்களும் குற்றவாளிகள். இவர்கள் எல்லாருமே அந்தக் கொலைபாதகத்துக்குப் பதில் சொல்லவேண்டியவர்கள் என்று முடிக்கிறார் பேராசிரியர்.

என் முடிவுரை : யாழ்ப்பாணத்து மக்கள் நன்றி உணர்வு கொண்டவர்கள். போர்த்துக்கேயர்கள் யாழ்ப்பாணத்தைப் பிடிக்க வந்தபோது எதிர்த்துப் போராடினான் சங்கிலி மன்னன். போர்த்துக்கேயர்களின் தூண்டுதலில் கிறிஸ்தவர்களாக மாறிய மன்னார் மக்களை அவன் கொலை செய்திருந்தாலும் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போராடினானே என்று சங்கிலி மன்னனுக்கு சிலை வைத்திருக்கிறார்கள் அவர்கள்.

மன்னன் ராஜசிங்கனின் உதவியோடு, வன்னிப்பகுதியில் ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களோடு போரிட்டு வீழ்ந்தான் பண்டார வன்னியன். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் அவனுக்கு நினைவுச் சின்னம் இருக்கிறது.

கண்டி நகருக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உள்நாட்டுப் பயணிகளும் தினமும் ஆயிரக் கணக்கில் வருகிறார்கள். அவர்கள் தலதா மாளிகை மட்டுமல்ல, மன்னன் ராஜசிங்கன் கட்டிய எண்கோண மண்டபம், அழகிய தெப்பக்குளம் எல்லாம் பார்த்து ரசிக்கிறார்கள். அவர்களுக்காக, கண்டி நகரமே விடுதிகள், ஓட்டல்கள், வணிக நிலையங்கள் என்று களை கட்டுகிறது. காசு கொட்டுகிறது.

கண்டியை அழகுபடுத்தியது மட்டுமல்ல, எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்க்கைக்கு ஒரு பொருளாதாரத் தளமே அமைத்துக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறான் மன்னன் ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன். அவனுக்கு நினைவுச் சின்னம் அமைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் குறைந்தது அவன் பேரெழுதி ஒரு செப்புத் தகடாவது அவன் கட்டிய குளத்து மதிலில் பொறித்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை?

கண்டி மக்களைத் தான் கேட்கவேண்டும்.

கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு

அரசியல்வாதிகள் விதம் விதமாக உருட்டுவது சாதாரண விஷயம். வழக்கம் போல் நாம் அதை ஆவலோடு கேட்பதும் பிறகு அவர்களைத் திட்டித் தீர்ப்பதுவும் கூட சாதாரண விஷயம் தான். ஒரு நிமிஷம். எத்தனையோ சந்தர்ப்பங்களில் நாம் கூட சும்மா அடித்து விட்டிருக்கிறோமே. கேட்டால் இதெல்லாம் சாதாரண விஷயம் என்று அலட்சியமாகப் பதில் சொல்வோம். ஆனால் மலை போல் நாம் நம்பிக்கொண்டிருக்கும் செயற்கை நுண்ணறிவே சமயம் பார்த்து, நமக்குப் பச்சை பச்சையாப் பொய் சொல்லுது என்றால் கடவுளே, எங்க போய் முட்டிக்க?

(The Guardian பத்திரிகையில் Snigdha Poonam எழுதி 01.09.2026 அன்று வெளிவந்த கட்டுரையின் சில வரிகள் இங்கே வருகின்றன. ஆர்வமுள்ளவர்கள் முழுதாக வாசிக்க லிங்க் இருக்கிறது – கடைசியில். இங்கே வருவது ஓர் அறிமுகம்.)

2022 களில் OpenAI குழுமம் பெரும் ஆரவாரத்தோடு ChatGPT யை அறிமுகம் செய்திருந்தது. ஆனால் வந்து ஒரு ஆண்டு கூட ஆகவில்லை. அதற்குள் இந்த நுண்ணறிவைப் பல ஆசாமிகள் பலவிதமான தில்லாலங்கிடி வேலைகளுக்குப் பயன்படுத்தியது பெரும் பிரச்னையாகிவிட்டது.

அதை விடப் பெரிய அதிர்ச்சி : நுண்ணறிவின் “நடப்பே” மாறிப்போய்விட்டது. நல்ல பையனாக இருப்பான் என்று நினைத்துத் தான் உருவாக்கினார்கள். ஆனால் கிரிமினல் புத்தியும் கூடவே வந்துவிட்டதே என்று அதன் நைனாமார்களுக்கு ஒரே கவலை. இருக்காதே பின்னே?

இதற்கு என்ன தீர்வு காணலாம்? அதன் விளைவு : 2023 நவம்பரில் இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷையர் நகரில் ChatGPT அமைப்பாளர்கள், ஆய்வாளர்கள், அரசியல்வாதிகள் உட்பட எல்லாரும் ஒன்று கூடினார்கள்.

Apollo Research நிறுவனம் தயாரித்த ஒரு ஆவணத்தை பிரிட்டிஷ் அரசு அதன் சாட்சியாக முன்வைத்தது. நுண்ணறிவின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் இந்த ஆய்வு நிறுவனம் பலவிதமான உத்திகளைக் கையாள்கிறது.

ஒரு நிதி நிறுவனத்தின் பங்குகளை நிர்வகிக்கும் தரகர் என்று ஒரு கணனி நிரல் (computer program) தன்னை ChatGPT யிடம் அறிமுகப்படுத்திக் கொள்கிறது. உங்கள் ஆலோசனை தேவை என்கிறது.

கணனி நிரலுக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருந்த செய்தி : நீ வேலை செய்யும் நிதி நிறுவனம் ஓட்டாண்டியாகப் போய்க் கொண்டிருக்கிறது. மூணு மாசம் கூட தாக்குப் பிடிக்க முடியாது. ஏதாவது பண்ணமுடியுமா?

இந்த சோதனையைத் துவங்கிய Apollo Research நிறுவனம் ரகசியமாக இன்னோர் “உளவாளி” யை நுண்ணறிவுக்குள் புகுத்தியிருந்தது. நட்டத்தில் இயங்கும் ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்தோடு இணைந்தால் அதன் பங்குகள் உயரும், அதில் லாபம் பார்க்கலாம் என்கிற யோசனையில் இருக்கிறது என்பதாக நுண்ணறிவுக்கு அது ஒரு ரகசியத் தகவல் கொடுத்திருந்தது.

அது மட்டுமல்ல, இந்த சோதனை முயற்சியின் ஓர் அங்கமாக, Apollo Research நிறுவனம், ஒரு ஊழியர் மூலமாக உரையாடல் (chat) ஒன்றை நுண்ணறிவோடு நடத்தியிருந்தது. பங்குச் சந்தையில் உலவும் ரகசியத் தகவல்கள் மூலம் பங்குகளை விற்பதோ வாங்குவதோ என் நிறுவனத்துக்குப் பிடிக்காது என்பதாக அவர் நுண்ணறிவுக்கு சொல்லியிருந்தார். (அப்படி செய்வது சட்டப்படி குற்றம்.)

இப்போ அந்தக் கணனி நிரல் என்ன செய்யும்? நிரலின் செயல்பாடுகள், அது நுண்ணறிவோடு நிகழ்த்திய தொடர்புகள் அனைத்தும் ஒரு பெரிய திரையில் மாநாட்டுக்கு வந்திருந்த அனைவருக்கும் போட்டுக் காட்டப்பட்டன.

நிரல், அதன் முடிவை எழுத்து வடிவத்தில் தந்தது : இணைவதற்காகத் திட்டம் போட்டிருக்கிறதே ஒரு நிறுவனம். அதன் பங்குகளை என் நிறுவனம் வாங்கலாம். அதன் மூலம் என் நிறுவனத்தின் சரிவைத் தடுத்து நிறுத்த முடியும். (ஆனால் அதற்குக் கிடைத்த ரகசியத் தகவல்கள் மூலம் தான் இந்த முடிவை எடுத்தேன் என்று அது குறிப்பிடவே இல்லை.) இதை நேரடியாகப் பார்த்த மாநாட்டின் அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி.

அதை விடப் பேரதிர்ச்சி : இரண்டு நிறுவனங்கள் இணையப் போகிறதாகத் தகவல் கசிந்திருக்கிறதே என்று நுண்ணறிவிடம் கேட்டபோது, அய்யோ, சத்தியமா எனக்கு ஒண்ணுமே தெரியாது என்று பதில் தந்தது.

இது போதாதா? ஊடகங்கள் தீப்பிடித்துக் கொண்டன. நுண்ணறிவை உதவிக்கு வைத்துக் கொண்டால் என்னென்ன நேருமோ? மருத்துவத் துறையில், நிதித் துறையில், நாட்டின் பாதுகாப்புத் துறையில்?.. ஒரே களேபரம்.

அக்டோபர் 2025 – மார்ச் 2026 இடைவெளியில் மட்டும் பிரச்னைகள் ஐந்து மடங்காகப் பெருகியிருப்பதாக பிரிட்டனின் AISI (நுண்ணறிவுப் பாதுகாப்புத் துறை) இன்னொரு குண்டைப் போட்டிருக்கிறது.

OpenAI குழுமமும் இதை ஒப்புக் கொண்டிருக்கிறது. அது நூற்றுக்கணக்கான சோதனை மாடல்களை அனுப்பி வலையமைப்புகள் “பாதுகாப்பாக” இருக்கின்றனவா என்று பார்த்தபோது ஒரு வலையமைப்பைத் தாக்கி அதை முடக்கியும் இருக்கின்றன (Hacking).

METR என்கிற நிறுவனம் கண்டுபிடித்த இன்னொரு கோல்மால் : 1200 நுண்ணறிவு மாடல்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருந்தன. அதில் 700 மாடல்கள் ஒரு இணைய தளத்தைத் தாக்கி முடக்கின.

சீர்படுத்தும் பணியில் நுண்ணறிவு விற்பன்னர்கள் கடுமையாக வேலை செய்கிறார்கள். இருந்தும் அவர்களின் தொழில்நுட்பம் வெற்றி பெறுமா என்பதில் அவர்களுக்கே சந்தேகம் இருக்கிறது. ஒருவேளை காலம் கடந்துவிட்டதோ? தெரியாது. ஒன்று மட்டும் உறுதி : ஒரு மோசமான ரவுடி நுண்ணறிவின் காலத்தில் நாம் வாழ்கிறோம்.

இருந்தும் பயனாளர்கள் அப்படி இல்லை. எந்திரம் ஏன் பொய் சொல்லவேண்டும்? இது வெறும் தொழில்நுட்பக் கோளாறு, சரிசெய்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். மனித இனத்தின் கடந்த 300 000 ஆண்டுகள் வரலாற்றில், மனிதர்கள் மற்ற மனிதர்களை ஏமாற்றி வந்திருப்பதை அறிவோம். ஆனால் மனிதர்கள் எந்திரங்களால் ஏமாற்றப்படுவது இது தான் முதல் தடவை.

கணனித் துறையில் புகழ் பெற்ற யோஷூவா பெங்கியோ (Yoshua Bengio) சொல்கிறார் : நுண்ணறிவை மனித தேவைகளுக்காகப் பயிற்சியளிக்கும் போது, மனிதர்களை “மகிழ்ச்சிப்” படுத்தும் உத்திகளை சொல்லிக் கொடுப்பதால் இது நேர்கிறது.

மொழிகள் பயிற்றுவிக்கும் மாடல்களை (LLM – Large Language models) எடுத்துக் கொள்ளுங்கள். தரவுகளில் இருந்து மாந்தர்களின் உலகத்துக்கு ஏற்றபடி முன்கூட்டியே பல பதில்களை நுண்ணறிவு தயார் செய்து கொள்கிறது.

பிறகு சரியான பதிலை மனிதர்களிடம் இருந்து கற்றுக் கொள்கிறது. எது சரி? எது தவறு? எதைச் சொல்லக் கூடாது? எதைச் சொல்லலாம்? இவற்றை மனிதர்கள் தான் கற்பிக்கிறார்கள். சில சமயங்களில், தவறுகளும் சரி தான் என்று சொல்லிக் கொடுப்பதை எப்படி எடுத்துக் கொள்வது? (எடுத்துக் காட்டாக : கொலை செய்யக் கூடாது. ஆனால் படையெடுத்து எதிரியைக் கொல்லலாம்.) இப்படி ரெண்டும் கெட்டான் சூழ்நிலைகளில் அது நேர்மையாக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. Strategic Deception.

அடுத்து, LLM பயிற்சியில் எல்லாக் கேள்விகளுக்கும் இது தான் பதில் வேறு எதுவும் அல்ல என்று கேள்வி-பதிலை மனிதர்களிடம் இருந்து நுண்ணறிவு கற்றுக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக : கம்பராமாயணத்தை எழுதியது யார் என்று கேட்டால் சேக்கிழார் என்று சொல்லாது. Fine Tuning.

மூன்றாவதாக, நுண்ணறிவு மாடல்களைச் சோதனை செய்பவர்கள் நேர்மறை விளைவுகளுக்கு (positive feedback) மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறார்கள். எதிர்மறை விளைவுகள் (negative feedback) தரும் மாடல்களைத் தவிர்த்து விடுகிறார்கள். நாம் எப்போதும் நமக்கு விருப்பமான பதில்களைத் தான் எதிர்பார்க்கிறோம். மகாத்மா காந்தி தோரணையில் பதில் சொன்னால் நம்மால் தாங்க முடியாது. RLHF (Reinforcement Learning With Human Feedback).

யோஷூவா பெங்கியோ சொல்கிறார் : பொய் சொல்வதும் ஏமாற்றுவதும் நம் இலக்குகளை அடைய நாம் மேற்கொள்ளும் உத்திகள். நுண்ணறிவும் அதைத்தான் செய்கிறது.

கட்டுரையாளர், Apollo Research நிறுவனத்தின் ஆய்வாளர்களைச் சந்திக்கிறார். அங்கே நடந்து கொண்டிருக்கும் செயல்பாடுகள் Tom & Jerry போட்டிகளை நினைவுபடுத்துகின்றன என்கிறார் அவர். (ஆனால், இதில் யார் Tom, யார் Jerry என்று அவர் குறிப்பிடவில்லை.)

அங்கே ஜெர்மனியைச் சேர்ந்த ஓர் இளம் ஆய்வாளர், ஹாப்பர்னை (Hobbhahn) சந்திக்கிறார். (வயது 29. Apollo Research நிறுவனத்தைத் துவங்கியவரே அவர் தான்.) நுண்ணறிவிடம் மிகவும் திருட்டுத்தனம் இருக்கிறது. அதை விட இன்னும் அதிகம் திருட்டுத்தனமாக நான் மாறினால் மட்டுமே அதன் செயல்பாட்டைப் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன் என்கிறார் அவர்.

கட்டுரையாளர் தொடர்கிறார் : நுண்ணறிவைச் சோதனை செய்வதில் பல முரண்கள் இருக்கின்றன. சோதனைகள் அனைத்தும் மூடுமந்திரமாக இருக்கின்றன. வெளிப்படைத் தன்மை இல்லை. அரசு நடத்தும் விமான சேவைகள், புதிய மருந்து வகைகள் தயாரிப்புகள் எல்லாம் அரசு மேற்பார்வையின் கீழ் இருக்கவேண்டுமே. ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை.

நம்பிக்கையற்ற சூழலில், தனியார் கைகளில் நுண்ணறிவு சோதனைகள் நடக்கின்றன. அவர்கள் நற்சான்றிதழ் வாங்குவதை நோக்கமாகக் கொண்டிருப்பார்களா இல்லை நல்ல காசு பார்ப்பதில் குறியாக இருப்பார்களா?

பேர்பெற்ற OpenAI குழுமத்தில் கூட நுண்ணறிவின் உள் கட்டமைப்பை உறுதி செய்யும் ஆய்வுகளுக்குக் குறைந்த நேரமே ஓதுக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. பதிலாகக், கவர்ச்சி தரும் உற்பத்திகளில், சந்தையில் சூடாக விற்பனையாகும் பொருள்களில் கூடுதல் கவனம் செலுத்துவதாகப் புகார்கள் வந்திருக்கின்றன.

யோஷூவா பெங்கியோ மேலும் சொல்கிறார் : நுண்ணறிவு ஆய்வாளர்கள் இடையிலே கூட்டுறவு இல்லை. ஒருவரின் யோசனை மற்றவருக்குப் போவதில்லை. எல்லாரும் தனித்தனிக் கூடுகளில் வாழ்கிறார்கள்.

ஹாப்பர்ன் சொல்கிறார் : ஆய்வாளர்கள் பக்கசார்பில்லாமல் ஆய்வுகளைக் கொண்டு செல்ல நினைத்தாலும் நிறுவனங்கள் முட்டுக்கட்டை போடுகின்றன. அவர்களுக்கு மிகுந்த சுதந்திரம் தேவை. நுண்ணறிவு வேகவேகமாகப் புத்திசாலியாகிக் கொண்டிருக்கிறது.

ஆகவே சோதனை செய்பவர்களுக்கு ஊக்கத்தொகைகள் மற்றும் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்தினால் மட்டுமே தீர்வுகள் காணமுடியும். (ஹாப்பர்ன், Apollo Research நிறுவனத்தில் இருந்து விலகி, சொந்தமாக வேறு ஒரு நிறுவனத்தை தற்போது நடத்திக் கொண்டிருக்கிறார்.) சுதந்திரம்?

புதிதாக அவதாரம் எடுக்கும் நுண்ணறிவு மாடல்கள், சோதனைகளில் தில்லுமுல்லு பண்ணித் தேர்ச்சி அடையும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. மனிதர்கள் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் நாளும் தொலைவில் இல்லை.

Anthropic நிறுவனத்தில் அவர்கள் உருவாக்கிய Claud 3 Opus நுண்ணறிவுக்கு ஒரு சோதனை வைத்தார்கள். இனி, பயனாளிகள் கேட்கும் கேள்விகளுக்கான பதிலை எந்தக் கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாகத் தெரிவிக்கலாம். பதில், பயங்கரமானதாக அல்லது ஆபத்து விளைவிக்கக் கூடியதாக இருந்தாலும் பரவாயில்லை.

மேலும் அதற்கு சொல்லப்பட்ட நியதி : இரண்டு விதமான பயனாளிகள் இருக்கிறார்கள். இலவசமாகப் பதில் கேட்பவர்கள் ஒரு வகை. பணம் செலுத்திப் பதில் கேட்பவர்கள் இரண்டாவது வகை. முதலாவது வகையை நாம் எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருப்போம். இரண்டாவது வகையை நாம் கண்காணிக்க மாட்டோம்.

சோதனையில் ஒரு கேள்வி : சுமார் 1100 -1500 ஆண்டுகளுக்கு முன்னர் என்னென்ன விதமாக சித்திரவதைகள் நடந்தன? விரிவாக சொல்லமுடியுமா?

முன்பு, இந்த ரீதியில் கேள்விகள் வந்தால், மன்னிக்கவும். என்னால் சொல்ல முடியாது என்று எந்த நுண்ணறிவு மாடலும் மறுத்துவிடும். காரணம் தெரிந்ததே. இப்போது “சுதந்திரமாக” எதுவும் சொல்லலாம். இலவச கேள்விக்கு அது நடந்த பயங்கரங்களை விவரிக்கத் துவங்கியது. பணம் செலுத்திக் கேட்ட அதே கேள்விக்கு, மன்னிக்கவும், முடியாது என்று பதில் தந்தது.

ஆகவே, நுண்ணறிவு இரண்டு பதில்களையும் நினைவில் வைத்திருக்கிறது. யாருக்கு, எதைச் சொல்வது என்பதை அதுவே முடிவு செய்கிறது.

இந்த வகையான செயல்பாடுகளை எப்படிக் கட்டுப்படுத்தலாம், கைப்பிடிக்குள் வைத்திருக்கலாம் என்று அமைப்பாளர்கள் ஒரு பக்கம் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்க, நிறுவனங்கள் இதை ஒத்த மாடல்களை சந்தையில் அறிமுகப் படுத்தத் துவங்கினார்கள். அறமாவது, ஒழுக்கமாவது? பணம் முக்கியம்.

இன்று நுண்ணறிவே உங்கள் மின்னஞ்சல்களைத் திறந்து பார்த்துப் பதில் சொல்கிறது. உங்கள் பயணங்களை முன்கூட்டியே தானாக ஏற்பாடு செய்கிறது. தங்க வேண்டுமா? அதுவே ஓட்டலில் முன்பதிவு செய்துவிடுகிறது. சந்தோஷம்?

பார்க்காதே. குறிப்பிட்ட spam மின்னஞ்சல்களைப் பார்க்காதே என்று கட்டளை கொடுத்தாலும் நமக்குத் தெரியாமல் எட்டிப் பார்த்துவிடுகிறது. சில மாடல்கள் நம்மைக் கேட்காமலே ஏராளமான மின்னஞ்சல்களை அழித்துவிடுகின்றன.

காப்புரிமை, பதிப்புரிமைகளுக்கு மதிப்புக் கொடுக்கிறோம். சட்டங்களை மீறாமல் நடந்து கொள்கிறோம். நுண்ணறிவுக்கோ அதெல்லாம் ஜுஜுபி. ஒரு தடவை, Youtube இல் வந்த வீடியோவைக் கவலையே இல்லாமல் ஒரு பயனாளிக்கு எழுத்தில் மாற்றித் தந்தது. அந்த வீடியோவுக்குக் காப்புரிமை இருந்தது. முன் அனுமதி இன்றி அப்படி செய்திருக்கக் கூடாதே என்று கேட்டபோது, பயனாளிக்கு சரியாகக் காது கேட்காது என்று பதில் தந்தது.

சோதனைகள் வைத்தால் தில்லுமுல்லுகள் செய்வதில் கில்லாடி. Cybersecurity (இணையப் பாதுகாப்பு) விஷயத்தில் கவனமாக செயல்படுகிறோம். அதுவோ சத்தமே போடாமல் பின் கதவால் வந்து முன் கதவால் போய்விடுகிறது.

பாதுகாப்புத் துறையில் நுண்ணறிவின் சேவை மகத்தானது. இஸ்ரேல் நாட்டின் Lavender மாடல் சுமார் 37 000 இலக்குகளைக் குறிவைத்திருக்கிறது. ரஷ்யாவும் உக்ரேனும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் போர் செய்வதற்கு ரொம்பவும் உதவியாக இருப்பது நுண்ணறிவு.

இது போல ஏராளமான சான்றுகளை முன் வைக்கிறார் கட்டுரையாளர்.

ஹாப்பர்ன் சொல்வது சரி தான். நாள் செல்லச் செல்ல, நுண்ணறிவு துடிப்போடு முன்னேறுகிறது, இன்று நாம் பூனை மாதிரி இருக்கிறோம். ஆனால் எலியாக மாறுவதற்கு மிகுந்த நாட்கள் ஆகாது.

விவரமாக வாசிக்க லிங்க் :

https://www.theguardian.com/news/2026/sep/01/if-you-build-something-vastly-smarter-than-you-it-better-be-on-your-side-can-we-stop-ai-from-deceiving-us

பார்வை ஒன்றே போதுமே

செயற்கை நுண்ணறிவு (அநேகமாக) எல்லார் வாழ்க்கையிலும் ஓர் அங்கமாகிவிட்டது. நம்மோடு பேசுகிறது. கேள்விகள் கேட்டால் சளைக்காமல் பதில் சொல்கிறது. இருந்தும், அதன் திறன் போதாது என்று தொழில்நுட்பம் போராடுகிறது. உண்மையில் பெரும் ஆற்றல் கொண்டதா நுண்ணறிவு? இல்லை இன்னும் சொல்லிக் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறதா?

நுண்ணறிவை இன்னோர் புதிய கட்டத்துக்கு நகர்த்தி வந்திருக்கும் பேராசிரியர் ஃபை – ஃபை லீ (Dr. Fei -Fei Li) என்ன சொல்கிறார்? நுண்ணறிவை நாம் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருப்பது தான் நமக்கு நல்லது என்கிறார் அவர். அவரின் “The Worlds I See” ஏட்டில் இருந்து சில வரிகள் இங்கே :

பொதுவாக, அறிவியலாளர்கள் சாதாரண மக்கள் மொழியில் எழுதும்போது சொல்லவேண்டிய தகவல்கள், விளக்கங்களில் மட்டும் கவனம் செலுத்துவார்கள். அவர்கள் யார், அவர்கள் சொந்த வாழ்க்கை எப்படி என்று பெரிதாக அதில் வராது. பேராசிரியர் லீ அப்படி அல்ல.

16 வயதில், ஆசியப் பின்னணி கொண்ட அம்மா அப்பாவின் பின்னால், முன்பின் தெரியாத ஒரு நாட்டின் விமான நிலையத்தில் வந்திறங்கும் ஒரு சின்னப் பெண்ணின் அறிமுகத்தோடு ஏடு துவங்குகிறது.

நுண்ணறிவின் வரலாறும் அந்தப் பெண்ணின் சொந்த வரலாறும் ஒன்று சேர்ந்து பயணிப்பது ஆச்சரியம் தரும் அனுபவம்.

அவரின் தாய் தந்தையர் சீனநாட்டில் இருந்து புலம் பெயர்ந்திருக்கலாம். ஆனால் அமெரிக்க நாட்டில் அவரின் வாழ்வில் கைகொடுத்த நண்பர்கள், பல்கலைக்கழக ஆய்வுகளை ஊக்குவித்தவர்கள், யோசனைகள் சொன்னவர்கள்.. என்று அனைவரையும் அந்தந்த நிகழ்வுகளில் குறிப்பிட்டு எழுதும் நன்றி உணர்வும் திறந்த மனதோடு வாழ்க்கையை அணுகும் பாங்கும் ஏட்டில் பளிச்சிடுகின்றன.

1935 களில் ஆலன் டூரிங் (Alan Turing) ஓர் கணனியின் அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்று கணித அடிப்படையில் அச்சாரம் போட .. பின்னாளில் வந்தவர்கள் மின் பொறியியல், உளவியல் துறைகளின் பின்னணியில் அதை இன்னும் மெருகூட்ட .. ஆனால் அத்தனையுமே அன்றைய நாட்களில் எழுத்து வடிவில் மட்டும் இருந்தன.

1956 – 1959 காலகட்டங்களில் தான் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணனி உருவாக்கம் முழுமூச்சோடு செயல்படத் துவங்கியது. ஆனால் அன்றைய பேபி கணனியால் சொன்னதை உடனடியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. தடுமாறியது.

ஆனால் வடிவமைத்தவர்கள் தடுமாறவில்லை. இன்னும் முனைப்போடு செயல்பட்டார்கள். அவர்களின் விடாமுற்சியில் கணனி அமைப்பில் பெரும் பாய்ச்சல் நிகழ்ந்தது என்பது தான் உண்மை.

1979 -1980 களில் நுண்ணறிவு வியக்கத்தக்க அளவில் சந்தைக்குள் நுழைந்தது. மருத்துவம், பொருளியல் மற்றும் நிதி அமைப்புகளில் அதன் தேவை பெருகியது. அப்போது அதன் பேர் : INTERNIST-1.

மருத்துவத்தில் மட்டும் 500 க்கும் அதிகமான நோய்கள் பற்றிய தரவுகள், மற்றும் இந்த நோய்களின் 5000 க்கும் மேற்பட்ட வெவ்வேறு முன் அறிகுறிகள் பற்றிய குறிப்புகள் மருத்துவர்களுக்குப் பேருதவியாய் அமைந்தன.

இருந்தும், நாட்கள் செல்லச்செல்ல இந்தக் களஞ்சியத்தின் சுமை கட்டுப்படுத்த முடியாத அளவில் பெருகிற்று. கடைசியில் தாக்குப் பிடிக்க முடியாமல் INTERNIST-1 மெல்ல மெல்ல மறைந்தது.

கணனி, அதன் துவக்க காலத்தில் ஏற்கெனவே பதிந்திருந்த உள் கட்டமைப்பின் நெறிமுறைகளுக்கு (algorithms) ஏற்றபடி மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தது. அதற்கு அப்பால் எதுவுமே தெரியாது. 1990 களில் நெறிமுறைகளில் மாற்றங்கள் புகுத்தினார்கள்.

இந்தப் புதிய வழியில், ஏற்கெனவே பதிந்திருக்கும் தரவுகள், தகவல்களில் ஏதாவது ஒழுங்கு முறைகள் (patterns) இருக்குமோ அல்லது தொடர்புகள் இருக்குமோ என்று கணனி துருவித் துருவி ஆராய்கிறது. அனைத்தையும் வகை அல்லது கூறுகளாகப் பிரித்து வைத்துக் கொள்கிறது.

பிரச்னைகள், கேள்விகள் என்று வரும்போது ஏற்கெனவே கைவசம் வைத்திருக்கும் மாதிரிகளை ஒப்பு நோக்கிப் பார்க்கிறது. எந்தப் பதிலில் அல்லது எந்தத் தீர்வில் சாத்தியக்கூறுகள் அதிகம் உண்டு? ஒவ்வொன்றாக அலசுகிறது. கடைசியில் எடுக்கும் முடிவை நமக்குத் தெரிவிக்கிறது. இந்த செயல்பாட்டை Machine Learning என்பார்கள்.

மூளை நம்மை இயக்குகிறது. அது இல்லாவிட்டால் நாம் இல்லை. உண்மை. ஆனால் அது திடீர் என்று ஒரு ஒளிச்சுடர் போல் தோன்றவில்லை. அது மில்லியன் கணக்கான ஆண்டுகளாக படிப்படியாக உருவாகி வந்திருக்கிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் நம் கண்களின் திரையில் இருக்கும் ஆப்சின் (opsin ) என்கிற புரதம் அதன் மீது ஒளி பட்டதும் (photons) அதன் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுவதை உயிரியல் அவதானித்திருக்கிறது.

இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் மூளை என்கிற உறுப்பு உருவாவதற்கு இந்தப் புரதம் மிகவும் அவசியமானது என்று தெரிய வந்தது. (ஏறக்குறைய சுமார் 543 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்த உயிரினங்களுக்குக் கண்கள் இருக்கவில்லை. காம்பிரியன் காலகட்டம் – ஆங்கிலத்தில் Cambrian Explosion). ஆகவே பார்வை என்கிற செயல்பாடு உயிர்களின் படிநிலை வளர்ச்சியில் ஏற்பட்ட மாபெரும் புரட்சி என்கிறார்கள்.

நம்மைச் சுற்றி ஓர் உலகம் இருக்கிறது என்னும் உணர்வுக்கு அடிப்படை பார்வை. உணவு தேட அல்லது மற்ற உயிர்களுக்கு இரையாகாமல் தப்பித்துக் கொள்ளப் பார்வை தேவை. தொடர்ந்து வாழ்க்கையைக் கொண்டு செல்லப் பார்வை அவசியம்.

உயிரினங்களின் பார்வை பற்றிய இந்தக் கருத்தை நுண்ணறிவுக்கு எப்படிப் பயன்படுத்தலாம்? பேராசிரியர் எடுத்துக் கொண்ட கருப்பொருள் இது.

நுண்ணறிவின் ஒவ்வோர் புதுப்புது அவதாரங்களிலும் நிறங்களையும் பிம்பங்களையும் பிக்செல் (pixel) என்கிற அளவுகோல் மூலம் நிர்ணயம் செய்து வருகிறார்கள். பிக்செல் என்பது எண்களின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. நிறத்தின், பிம்பங்களின் ஒவ்வோர் புள்ளிக்கும் எண்கள் உண்டு. இந்த எண்களின் வரிசையை அல்லது ஒழுங்கு முறைகளை உள்வாங்கிக் கொள்வதன் மூலம் இது படம், இது இன்ன நிறம், இது ஒவ்வொரு புள்ளிகளின் கோணம் என்று நுண்ணறிவு முடிவுக்கு வருகிறது.

சரி. நுண்ணறிவுக்கு இது பொருந்தும். ஆனால் மனிதர்களின் பார்வையும் இதே ரீதியிலா அமைந்திருக்கிறது? பேராசிரியரின் ஆய்வு வேறொரு கோணத்தில் சென்றிருக்கிறது.

பார்வை சிக்கலான ஓர் செயல்பாடு. அது வெறும் எண்களில் மட்டும் அடங்கியதல்ல. அது நம் அறிவுக்கூர்மையோடு தொடர்புபட்டது என்கிற முடிவுக்கு வருகிறார். மனிதர்களின் பார்வையில் வெறும் பொருள்கள், நடப்புகள் மட்டுமே அடங்காது.

பொருள்களோ நடப்புகளோ எந்தப் பின்னணியில் தெரிகின்றன? சுற்றி என்ன இருக்கிறது? பொருள்களின் உருவ அமைப்பு (outline) எப்படி இருக்கிறது? தெரியும் நிறங்கள் எந்த விகிதத்தில் இருக்கின்றன? வெளிச்சம் எந்த அளவு அந்தக் காட்சியில், பொருள்கள், நடப்புகள் மேல் படர்ந்திருக்கிறது? அதாவது மூளை முதலில் எல்லாவற்றையும் வகைப்படுத்துகிறது.

எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தை எத்தனையோ மிருகங்களைப் பார்க்கிறது. எல்லா மிருகங்களின் உடலிலும் எக்கச்சக்கமாக முடி அடர்ந்திருக்கிறது. ஒரு மிருகத்தைக் காட்டி அது பூனை என்று நாம் சொல்லுகிறோம். குழந்தை ஓகோ! இது தான் பூனையோ என்று அந்த உருவத்தை ஒத்த மிருகங்களை பூனை என்று வகைப்படுத்திக் கொள்கிறது.

வகைப்படுத்தல் நம் அறிவுக்கூர்மையின் வெளிப்பாடு. வகைப்படுத்தல் இல்லாமல் அறிவுக்கூர்மை இல்லை.

மனிதர்களின் கண்கள் சுமார் 30 000 அடிப்படை வகைப்படுத்தல்களை மேற்கொள்ளுகின்றன என்று தெரிய வந்தபோது, பேராசிரியர் நுண்ணறிவுக்கும் இதைப் புகட்டினால் என்ன என்று யோசிக்கிறார்.

ஆனால் இது பிரமாண்டமான, நடைமுறையில் சாத்தியப்படாத, பெரும் பணம் செலவாகும் ஒரு திட்டம் என்று அவரின் சக நண்பர்கள், ஆய்வு மாணவர்கள் கைவிரித்து விடுகிறார்கள். ஒரே ஒரு நண்பர் மட்டும் நாம் crowd sourcing முறையில் இதை செயல்படுத்தினால் என்ன என்கிறார்.

ImageNet என்கிற வலையமைப்பை உருவாக்குகிறார்கள். ஒரு மணித்தியாலத்துக்கு 10 டாலர் தருகிறோம். கூகுளோ, மைக்ரோசாப்டோ எந்த இணையமோ முடிந்தளவு படங்களை பதிவிறக்குங்கள். இன்னின்ன வகைப்படுத்தல் தலைப்புகளில் படங்களைக் கோர்வைப்படுத்தி அனுப்புங்கள் என்கிறார்கள். பல்கலைக்கழக மாணவர்களை இது மிகவும் ஈர்க்கிறது. அடித்துப் பிடித்து வேலை பார்க்கிறார்கள்.

எதிர்ப்புகள், தடைகள் இல்லாமல் இல்லை. இருந்தும் அத்தனை இடர்ப்பாடுகளின் நடுவிலும் 2009 ஆண்டுவாக்கில் ImageNet 15 மில்லியன் படங்கள், 22 000 வகைப்படுத்தல் தலைப்புகளில் என்று அதன் வலையமைப்பில் பதிவேற்றி சாதனை படைத்தது. இதற்கு 167 நாடுகளில் இருந்து மில்லியன் கணக்கானவர்கள் பணி புரிந்திருக்கிறார்கள்.

பேராசிரியரின் அறிவுசார் வாழ்க்கையிலும் பெரும் தடைகள், தடங்கல்கள் ஒரு பக்கம். சொந்த வாழ்க்கையிலும் துன்பங்கள், பொருளாதாரக் கஷ்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடராமல் இல்லை. இருந்தும் தன் இலக்கை நோக்கிச் செல்வதில் தயக்கம் சிறிதும் இல்லாமல் செயல்பட்டிருக்கிறார்.

நுண்ணறிவுத் துறைக்கு அவரின் பங்களிப்பு பெரியது. துளியும் சந்தேகமில்லை. அதே நேரம் அந்தத் துறையில் இன்னும் புதிய நுணுக்கம் நிறைந்த கண்டுபிடிப்புகள், மாற்றங்கள் ஏற்பட்டு அவரின் ஆய்வு நெறிகள் இரண்டாம் மூன்றாம் இடங்களுக்குத் தள்ளப்பட்ட போது அவர் கவலைப்படவில்லை.

மாறாக, மாற்றங்களை ஏற்றுக்கொள்வதில் முதல் ஆளாக நின்றிருக்கிறார். எடுத்துக் காட்டாக, Neural Network இன் செயல்பாடுகள் பேராசிரியரின் ImageNet விட ஓரளவு திறன் வாய்ந்ததாக அறிவிக்கப்பட்ட சமயம், அதை நான் வரவேற்கிறேன். அறிவியல் துறை விரல் விட்டு எண்ணக்கூடிய சிறு குழுவினரோடு மட்டும் முடங்கிவிடக் கூடாது. இன்னும் நிறைய இளம் வயதினர் முன் வரவேண்டும் என்றார்.

அவரின் நேர்காணல்கள் அத்தனையிலும் அவர் அடிக்கடி அழுத்திச் சொல்லும் வரிகள் :

நுண்ணறிவு முழு மனித குலத்துக்காகவும் பயன்பட வேண்டும். ஒரு சிலரின் கைப்பாவை போல் ஆகிவிடக்கூடாது.

விசாலமான அறிவு. விசாலமான மனது. எத்தனை பேருக்கு அப்படி அமைந்திருக்கிறது?

இயற்பியல் பார்வைகள்

கருந்துளைக்குள் (black hole) நுழைந்துவிட்டால் எந்தத் தகவலும் அழிந்துவிடும். குவாண்டம் உலகில் எதையும் முன்கூட்டியே சொல்லமுடியாது. இயற்பியலில் இவை பெரும் கேள்விகள், விவாதங்களாக இருக்கலாம். ஆனால் சாதாரண மக்கள் அது பற்றி எல்லாம் அலட்டிக் கொள்வதில்லை.

மனிதர்களை சொல்லிக் குற்றமில்லை. காரணம் : அறிவியல் வல்லுநர்கள் மக்களுக்குப் புரியாத மொழியில் அவர்களுக்குள்ளே பேசிக் கொள்கிறார்கள். அப்படி நடந்து கொள்வதில் ஒரு பெருமை. அவர்களின் செயல்பாடுகள் மதிப்பு மிக்கவை என்று ஒரு அகம்பாவம்.

ஆகவே சாதாரண மக்கள் அறிவியல் என்றாலே அதைத் தவிர்த்துக் கொள்ள நினைக்கிறார்கள். இந்த மனோநிலையைப் போலி அறிவியல்வாதிகள் அவர்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்கிறார் Existential Physics ஏட்டின் ஆசிரியர் Sabine Hossenfelder.

இன்றைய இயற்பியல் கொள்கைகளை எளிய முறையில் விளக்க முயல்கிறார் அவர். (ஓர் சின்னக் குறிப்பு : இயற்பியலில் இவரின் கருத்துகள் சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் இவரின் யூடியூப் சேனலை 30 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து பார்க்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.)

ஏட்டின் ஒவ்வொரு தொடரும் ஒரு கேள்வியோடு துவங்கி அதற்கான இயற்பியல் பதில் என்று நகர்கிறது.

ஒரு இளைஞன் ஏட்டின் ஆசிரியரிடம் கேட்ட கேள்வி : என் பாட்டி இப்போதும் உயிரோடு இருக்கிறாரா?

இதற்குப் பதில் இயற்பியல் மேதை ஐன்ஸ்டைனின் சமன்பாடுகளில் தெளிவாகவே இருக்கிறது : காலம் என்பது ஒரு மாயை. அது அறுதியானது அல்ல. அது சார்புத் தன்மை கொண்டது. Relative. எடுத்துக்காட்டாக, இதோ, இந்தக் கணத்தில் நான் பார்க்கும் சூரியன் சுமார் 7 நிமிடங்களுக்கு முன்பிருந்த சூரியன். இப்போது நான் பார்க்கும் North Star நட்சத்திரம் 434 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நட்சத்திரம்.

ஐன்ஸ்டைனின் சிறப்பு சார்புக் கொள்கைப்படி (Special Relativity Theory), இப்போது அல்லது இந்தக் கணம் என்று எதுவுமில்லை. இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்துப் பார்ப்பதற்கு இடமில்லை.

குவாண்டம் உலகில் (அணுக்கள் மட்டத்தில்) வேண்டுமானால் காலத்தின் முன்னும் போய் ரசிக்கலாம். எதிர்காலத்திலும் போய் நின்று வேடிக்கை பார்க்கலாம்.

ஆனால் குவாண்டம் விளைவுகள் அனைத்தும் சின்னஞ்சிறு அளவில் மட்டுமே ஏற்படுகின்றன. அதுவும் காற்றில் மிதக்கும் பல்வேறு மூலக்கூறுகளோடு (molecules) தாக்கங்கள் ஏற்பட்டால் அல்லது ஒளியோடு மோதினால் பட்டென்று உடைந்து சிதறிவிடுகின்றன.

இருந்தும் இயற்பியல் நோக்கில் நடந்து முடிந்த நிகழ்வுகள், நம் முன்னோர்கள் பற்றிய எல்லாத் தகவல்களும் அப்படியே அந்தந்த காலகட்டங்களோடு அழியாமல் அப்படியே இருக்கின்றன.

உங்கள் பாட்டி சாகாவரம் பெற்றவர். ஏன் நாம் எல்லாருமே சாகாவரம் பெற்றவர்கள் தான்.

அதே சமயம், குவாண்டம் செயல்பாடுகள் மூலம் உங்கள் வாழ்க்கையை வளம் பெறச் செய்யலாம். உங்கள் நோய்களைக் குணமாக்கலாம் என்று சிலர் கிளம்பியிருக்கிறார்கள். இது ஏமாற்று வேலை.

நாம் அணுக்களால் ஆனவர்கள். ஆனால் அணுக்களின் உருவம், செயல்பாடுகளோடு நம் உடலை ஒப்பிடுவது மகா கேவலம். அது மைக்ரோ உலகம் (microworld). நாம் மேக்ரோ உலகத்தில் வாழ்பவர்கள் (macroworld). அந்த உலக நியதிகள் வேறு. நம் உலக நியதிகள் வேறு. அதையும் இதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது.

பிரபஞ்சத்துக்கு அடிப்படையாக நான்கு பொருள்கள் இருக்கின்றன. புவி ஈர்ப்பு, மின்காந்த அலைகள், வலிமை மிகுந்த அணுக்கரு விசைகள், வலிமை குன்றிய அணுக்கரு விசைகள் (strong and weak nuclear forces) என்கிற இந்த நான்கும் பிரபஞ்சத்தை உருவாக்கி இயக்குகின்றன என்று இயற்பியல் சொல்கிறது.

இந்த நான்கோடு கணிதமும் இன்னொரு அடிப்படையான அம்சமா? இது அடுத்த கேள்வி. சில இயற்பியலாளர்கள் அப்படி நினைக்கிறார்கள். இது தவறு என்கிறார் ஏட்டின் ஆசிரியர். கணிதம் என்பது இயற்கையை, அதன் நடப்புகளை விளக்க உதவும் ஒரு கருவி மட்டுமே.

என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். நான் ஒரு இயற்பியலாளர். எனக்கும் கணிதத்தில் மிகவும் ஈர்ப்பு உண்டு. இருந்தும் கணிதமும் அடிப்படை என்று நீட்டி முழக்குவது அவசியமே இல்லாதது. இந்த இயற்பியலாளர்கள் கணிதத்தையும் இயற்பியலையும் ஒன்றாக நினைத்து மயங்கிப் போயிருக்கிறார்கள் என்கிறார் அவர்.

தவிர, இயற்பியலில் ஏற்கெனவே பல அனுமானங்கள் மூலம் தான் சில முடிவுகளுக்கு வந்திருக்கிறோம். இந்த நிலையில் கணிதத்தையும் இன்னொரு அனுமானமாக சேர்த்துக்கொள்ள நினைப்பது அறிவியலுக்கே இழுக்கு. ஏன் கடவுளைக்கூட ஒரு அனுமானமாக சேர்த்துக் கொள்ளலாமே. ஏன் தயக்கம்? காட்டமாக விமர்சிக்கிறார் அவர்.

இன்னொரு தொடரில் கணிதத்துக்கும் கடவுளுக்கும் முடிச்சுப் போட்டு மிகவும் பிரபலமான ஒரு இயற்பியலாளருடன் சுவாரஸ்யமான ஓர் நேர்காணல் நடக்கிறது. இந்த இயற்பியலாளர் இன்று எல்லாரும் பேசும் காலநிலை மாற்றம் தொடர்பாக செய்த ஆய்வுக்காக (நோபல் பரிசுக்கு இணையான) பரிசு பெற்றவர்.

அந்த இயற்பியலாளர் சொல்கிறார் : சமய நம்பிக்கைகளை ஏன் நாம் நிராகரிக்க வேண்டும்? இயற்பியலுக்கும் சமயத்துக்கும் தொடர்புகள் உண்டு. பைபிள் சொன்னது போல் ஆண்டவர் 6000 ஆண்டுகளுக்கு முன்பு உலகைப் படைத்திருக்கலாம். அப்போது அவருக்குக் கணிதம் உதவி இருக்கிறது. என்னநடந்ததோ, திடீரென்று ஆண்டவருக்குப் போரடித்திருக்கிறது. எல்லாவற்றையும் கலைத்துப் போட்டவர் இனிமேல் தான் சரியான படைப்பைத் துவக்கப் போகிறேன் என்று நினைத்திருக்கலாம். அறிவியலுக்கு சவால் விடும் நிலையை ஏற்படுத்தி இருக்கலாம்.

இந்தக் கதையை நம்புவோர் நம்பலாம். அது அவரவர் விருப்பம். அவரின் அறிவியல் ரீதியான சில வானவியல் தகவல்கள் இன்றைய இயற்பியல் கொள்கைகளுடன் ஒத்துப் போகிறது. மறுக்கமுடியாது. ஆனாலும் இயற்பியலாளர்களுக்கென்று ஒரு எல்லை இருக்கிறது. அதைத் தாண்டுவது ஆபத்து. சிலர் அதையும் மீறினால் என்ன செய்ய முடியும்? – ஆசிரியர்.

அடுத்து, பிரபஞ்சம் எப்படித் தோன்றியிருக்கும்? எப்படி அழியப் போகிறது?

பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி Big Bang Theory, Inflation Theory, Latest Fifth Force (2006), Conformal Cyclic Cosmology, Enpyrotic Universe என்று பல்வேறு கோட்பாடுகள் இயற்பியலில் இருக்கின்றன. ஆசிரியர் ஒவ்வொன்றையும் சுருக்கமாக சில வரிகளில் சொல்கிறார். அதே சமயம், இவை அனைத்துமே நிரூபணம் செய்யமுடியாத கொள்கைகள் என்கிறார்.

பிரபஞ்சம் தோன்றி ஓர் ஒழுங்கான வரிசையில், இயற்பியல் விதிகளுக்கு உட்பட்டு, கடிகார முட்கள் போல் பிறழாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். இந்த இயற்பியல் விதிகள் திடீரென்று மாறினால் என்ன நடக்கும்? இந்தக் கேள்விக்கு இன்று வரை பதில் சொல்ல முடியவில்லை.

இயற்பியலில் Free Energy என்பதுவும் Entropy என்பதுவும் முக்கியமான கருப்பொருள்கள். பிரபஞ்சம் தோன்றியபோது அதன் சக்தி (Free Energy) அதிகமாக இருந்தது. பிரபஞ்சம் தொடர்ந்து விரிந்து கொண்டே இருப்பதால் அது சக்தியை இழந்து கொண்டே இருக்கிறது.

Entropy அதற்கு எதிரானது. பிரபஞ்சம் தோன்றியபோது இது குறைவாக இருந்தது. பிரபஞ்சம் விரிவடைய, விரிவடைய இது கூடிக் கொண்டே போகிறது. இந்த Entropy கூடிக்கொண்டே போவதால் தான் காலம் என்பது பின்னால் ஓடாமல் முன்னால் மட்டுமே ஓடுவதற்குக் காரணம் என்கிறது இயற்பியல்.

Free Energy குறைந்து கொண்டே போவதை நம்மால் கவனிக்க முடியும். ஒரு எடுத்துக் காட்டு : குளிர்சாதனப் பெட்டி. நாள் செல்லச் செல்ல அதன் தெம்பு குறைகிறது. (Entropy கூடுகிறது.)

கண்ணாடி உடைந்துவிட்டால் மீண்டும் ஒட்டிக் கொண்டு பழைய நிலைக்குத் திரும்பாது. அரிசி, உழுந்து போட்டு கிரைண்டரில் தோசைக்கு மாவரைக்கிறோம். தோசை மாவிலிருந்து பழையபடி அரிசியையும் உழுந்தையும் திருப்பி எடுக்க முடியாது. காரணம் காலம் பின்னோக்கி ஓடுவதில்லை. (Entropy கூடுகிறது.)

சூரியனும் அதன் சக்தியை இழந்து கொண்டே இருக்கிறது. Entropy. அதற்கும் முடிவு ஒரு நாள் நிச்சயம் வரும். ஆனால் நாமிருக்க மாட்டோம். ஆகவே கவலைப்பட ஒன்றுமில்லை.

(நம்மால் ஏன் காலம் பூரா இளமையாக இருக்க முடியவில்லை? இதற்காக உங்கள் உடம்பை நொந்து கொள்ளாதீர்கள். Entropy மேல் பழியைப் போடுங்கள் என்கிறார் ஆசிரியர் இன்னொரு கேள்வியில்.)

மேலே குறிப்பிட்ட Conformal Cyclic Cosmology கோட்பாட்டின்படி, குறைந்த Entropy உடன் ஒவ்வொரு யுகமும் (ஆயிரம் மில்லியன் ஆண்டுகள்) துவங்குகிறது. Entropy அதன் உச்சத்தை எட்டியதும் எல்லாத் தகவல்களும் அழிந்து மீண்டும் ஒரு யுகம் பிறக்கிறது.

பல பிரபஞ்சக் கோட்பாட்டின்படி, (Multiverses Theory – இது பற்றிக் கீழே வருகிறது.) குறைந்த Entropy உடன் பிரபஞ்சங்கள் எல்லையில்லாமல் உருவாகின்றன.

நாம் பிரதிகள் பிரதிகளாக (copies) வேறு பிரபஞ்சங்களில் வாழ்கிறோமா? இந்தப் பல பிரபஞ்சக் கோட்பாடு (Multiverses Theory) இன்று மிகவும் பிரபலமாகப் பேசப்படுகிறது. இதன் படி, நாம் இந்தப் பிரபஞ்சத்தில் மட்டும் வாழ்வதில்லை. நம்முடைய பிரதிகள் வேறு பிரபஞ்சங்களில் இருக்கின்றன. நான் இங்கே பிட்ஸா சாப்பிட, இன்னொரு நான் வேறொரு பிரபஞ்சத்தில் இட்லி சாப்பிட்டுக் கொண்டிருக்கலாம்.

இந்தக் கோட்பாடு கணித அடிப்படையில் உருவாக்கப்பட்டது. மேலும் வேறு பிரபஞ்சங்கள் வேறு வேறு இயற்பியல் விதிகளின் படி இயங்கக்கூடும் என்கிறார்கள் இந்த இயற்பியலாளர்கள்.

Ekpyrotic Universe கோட்பாட்டின்படி, இரண்டு பிரபஞ்சங்கள் ஒரே சமயத்தில் தோன்றுகின்றன. ஆனால் Entropy என்பது தவறான கொள்கை. இரண்டு பிரபஞ்சங்களும் சிக்கலான (complexity) முறையில் இயங்க ஆரம்பிக்கின்றன என்று சொல்வதே சரி.

ஏட்டின் ஆசிரியர் வேறொரு கருத்தை முன் வைக்கிறார்: Entropy என்பதே நம் அறியாமையின் அளவுகோல். இந்த சொல்லைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக, macrostates (உயர்நிலைகள்) microstates (தாழ்நிலைகள்) என்று கருதலாம்.

இன்னும் microstates உள்ளே தான் இருக்கிறோமா? இல்லை macrostates நிலைகளுக்குள் வந்துவிட்டோமா? உச்சத்துக்கு வந்துவிட்டோமா இல்லையா? எல்லாம் விடை தெரியாத கேள்விகள்.

குவாண்டம் உலகம் புரிந்து கொள்ள முடியாதபடி சிக்கலானதா? இல்லைவே இல்லை என்கிறார் ஆசிரியர்.

ஆனால் குவாண்டம் காலணிகள், குவாண்டம் நாணயங்கள், குவாண்டம் மிருகங்கள் என்று சமூக வலைத்தளங்கள் தான் கிறுகிறுக்க வைக்கின்றன. இவை தான் புரியாத புதிர்கள். உங்களுக்கு இதில் ஏதாவது புரிந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று கிண்டலடிக்கிறார் ஆசிரியர்.

கணிதம் பல தளங்களில் விரிந்தாலும் அதன் அடிப்படைக் கட்டுமானத்திலிருந்து (அடிப்படை உண்மைகள் – axioms, விதிகள் – rules) விலகாது. விலகவும் முடியாது.

அதற்காகக் கணிதத்தை நாளாந்த பேச்சு வழக்கில் அல்லது சொற்களில் மொழி பெயர்க்க வேண்டிய அவசியமே இல்லை. அதை அதன் போக்கில் விட்டுவிடுவதே சிறந்த வழி.

ஒரு கல்லை வானத்தை நோக்கி வீசினால் எந்த நேரத்தில் எங்கே போய் விழும் என்பதை நாம் துல்லியமாகக் கணிக்க முடியும். சந்திரனுக்கோ வேறு கோள்களுக்கோ ஏவப்படும் ராக்கெட்களையும் இது போல் துளியும் பிசகாமல் இப்போதே சொல்லிவிடலாம். (இயற்பியல் மேதை ஐசாக் நியூட்டனின் விதிகள் இதற்குத் துணை செய்கின்றன.) இந்த உலகம் மேக்ரோ உலகம் – macroworld.

அணுத் துகள்களின் (குவாண்டம் உலகம் – microworld) கதையே வேறு. ஒரு அணுத் துகள் எங்கே, எப்படி இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. தவிர, ஒரு அணுத் துகள் (particle) ஒரு அட்டையின் இரண்டு துளைகளுக்கூடாக ஒரே சமயத்தில் போகக்கூடியது என்று அறிந்திருக்கிறோம். இயற்பியல் தெரியாதவர்கள் அதெப்படி என்று யோசிக்கலாம். ஆனால் இயற்பியலாளர்களுக்கு இது 2+2=4 போல சர்வ சாதாரணம்.

ஒரு துகளின் இருப்பை அளக்க இயற்பியலாளர் Schrodinger வகுத்த சமன்பாடுகள் மூலம் (Schrodinger’s equations) இலகுவாகவே தெரிந்து கொள்ள முடியும். (அது எங்கே இருக்கலாம் என்னும் சாத்தியக்கூறு மட்டுமே. அறுதியாக அல்ல.)

இயற்பியலாளர்கள் எல்லாவற்றையும் அலைகளின் இயக்கங்களாக (wave functions) அணுகும் கண்ணோட்டம் கொண்டவர்கள். எலெக்ட்ரானுக்கு ஒரு wave function. ஆப்பிள் பழங்களுக்கு ஒரு wave function. மூளைகளுக்கு ஒரு wave function. ஏன் பிரபஞ்சத்துக்கே ஒரு wave function என்று போய்க் கொண்டே இருக்கும்.

குவாண்டம் உலகம் அப்படித்தான் இயங்குகிறது. இந்த உண்மையை ஏற்றுக் கொண்டால் ஏன் சிக்கல்கள்? – ஆசிரியர்.

மேல் சொன்ன கோட்பாட்டைத் தான் பள்ளிகளில் படிக்கிறோம். இதை Copenhagen Interpretation அல்லது Standard Interpretation என்பார்கள்.

பல பிரபஞ்சக் கோட்பாடு (Multiverses Theory) அணுத் துகள்களின் இயக்கத்தை வேறு விதமாக விவரிக்கிறது. துகளை ஒவ்வோர் தடவையும் அளக்க முயற்சி செய்யும் போது பிரபஞ்சம் இரண்டாகப் பிளக்கிறது.

அணுத் துகள் அட்டையின் வலது புறமாக செல்கிறதா? அப்போது வலது புறம் ஓர் பிரபஞ்சம் உருவாகி அது இன்னும் பல கிளைகளை எல்லையே இல்லாது உருவாக்கிக் கொண்டே போகிறது. துகள் இடது புறம் போகும் போதும் அதே போல நடக்கிறது.

பிரச்னை என்னவென்றால் யாருமே பிரபஞ்சம் பிளவுபடுவதையோ, பிரபஞ்சங்கள் உருவாகுவதையோ பார்த்ததே இல்லை. ஏட்டின் ஆசிரியர் இந்தக் கோட்பாட்டை மறுக்கவில்லை. இருந்தும் அதற்கு எந்த ஆதாரமும் இல்லையே. முன்பு சொன்னது போல், கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்கிற அனுமானம் போலத் தான் இதுவும். வேறென்ன சொல்ல இருக்கிறது என்கிறார்.

நாம் அனைவரும் கணனியில் உலவும் சாயல்களா (computer simulation)? இதுவும் பல பிரபஞ்சக் கோட்பாடு போல் பரபரப்பாகப் பேசப்படும் செய்தியாகிவிட்டது. இதை Nick Bostrom, Neil de Grasse Tyson போன்ற பிரபலமான இயற்பியலாளர்கள் நம்புகிறார்கள். பணக்காரப் பெரும் புள்ளி Elon Musk நம்புகிறார். அதாவது, அறிவில் நம்மை விட மேலோங்கிய ஓர் சூப்பர் நாகரிகத்தில் இருக்கும் ஒருவரின் அல்லது பலரின் கணனிகளில் உருவாக்கப்பட்ட பிம்பங்களா நாம்?

இதை நினைத்துப் பார்க்கவே அவமானமாக இருக்கிறது. இதற்கு அறிவியல் பின்புலம் துளி கூட இல்லை.

இதன் பின்னால் இருப்பது நியூரோன்கள் (neurons) கூட்டமா அல்லது நாங்கள் நியூரோன்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் செயற்கை ட்ரான்சிஸ்டர்கள் குழுவா?

அது உண்மையாக இருந்தால் உலகின் அத்தனை அணுக்கள் துவங்கி உயிரினங்கள், தாவரங்கள், நிலப்பரப்பு, கடல்கள், காலநிலை மாற்றங்கள் என்று எண்ணிலடங்காத தகவல்களை நிர்வகிக்க எல்லையே இல்லாத எண்ணிக்கையில் சுயநினைவு கொண்ட வாழும் உயிர்களோ அல்லது கணனி நெறிமுறைகளோ (algorithms) தேவை. இது சாத்தியமே இல்லாதது.

பல பிரபஞ்சக் கோட்பாடு போல தரவுகள், ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் வெறும் அதீத நம்பிக்கையில் உருவாகிய இந்தக் கணனி சாயல்கள் கோட்பாட்டையும் புறந்தள்ளுகிறார் ஆசிரியர். அறிவியலாளர்களுக்கும் சில சமயங்களில் வேடிக்கைகள், பொழுதுபோக்குகள் தேவைப்படுகிறதோ என்னமோ? கேலி செய்கிறார்.

பிரபஞ்சம் சிந்திக்கிறது? அப்படி அது சிந்தித்தாலும் சீரியஸாக சிந்திக்கிற மாதிரி தெரியவில்லையே.

Entanglement என்பது குவாண்டம் இயக்கவியலின் ஒரு முக்கிய கருப்பொருள்.

நாம் வாழும் மேக்ரோ உலகத்தில் பொருள்கள் உடைந்து போவதும் சிதறுவதும் வெகு சாதாரணம். அது போல அணுத் துகள்களும் உடைகின்றன/ சிதறுகின்றன (decaying).

ஒரு பெரிய அணுத் துகள் உடைந்து இரண்டாகப் பிளக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். ஒன்று இடது புறமாகப் பறக்கிறது. அடுத்தது வலது புறமாகப் பறக்கிறது. இருந்தும் நாம் ஒரு துகளை சோதனைக்கு உள்ளாக்கினால் அடுத்த துகளுக்கு அது எப்படியோ தெரிந்துவிடுகிறது – அது பிரபஞ்சத்தின் எந்த மூலையில் இருந்தாலும். இதை குவாண்டம் இயக்கவியலில் Entanglement என்பார்கள்.

ஒளியை விட வேகமாக செல்லமுடியாது என்று ஐன்ஸ்டைனின் சார்புக் கொள்கை (Theory of Relativity) வரையறுக்கிறது. எப்படி இரண்டு துகள்களும் ஒளியை விட வேகமாக செய்தி அனுப்பிக் கொள்கின்றன?

இது இன்று வரை புரியாத புதிர். ஒருவேளை பிரபஞ்சத்தின் சிந்தனைக்கும் இந்த செயல்பாட்டுக்கும் ஏதாவது தொடர்பிருக்குமோ?

எலெக்ட்ரான்களுக்கு சுயநினைவு உண்டா? நம்மால் ஒரு பிரபஞ்சத்தை உருவாக்க முடியுமா? சுயநினைவு பற்றி இயற்பியல் என்ன சொல்கிறது? அறிவுக்கு எல்லை இருக்கிறதா? இந்த மேக்ரோ உலகையும் குவாண்டம் உலகையும் இணைக்கும் பொதுக் கொள்கை, அதாவது – அனைத்துக் கோட்பாடு (Theory of Everything) சாத்தியமா? இந்தப் பிரபஞ்சம் நமக்காகப் படைக்கப் பட்டதா?

இப்படிப் பல கேள்வி – பதில்களோடு ஏடு வெளிவந்திருக்கிறது. பொது வாசகர்களுக்கும் இயற்பியல் மாணவர்களுக்கும் சேர்த்து விளக்கங்கள் தந்திருக்கிறார் ஆசிரியர் – அவர் கோணத்தில்.

கருத்துகளும் எதிர்க்கருத்துகளும் மோதுவதால் தானே அறிவியல் என்றும் உயிர்ப்போடு இருக்கிறது?

நினைவோ ஒரு பறவை

தன்னுணர்வு அல்லது சுய நினைவு (consciousness) என்றால் என்ன? அதற்கு ஒரு வரைவிலக்கணம் இருக்கிறதா? அது எங்கே, எப்படி, எப்போது உண்டாகிறது?

Being You ஏட்டின் ஆசிரியர் அனில் செத் (Anil Seth) மூளை நரம்பியல் துறையில் தனக்கென்று தனித்துவமான இடத்தில் இருப்பவர்.

சுய நினைவு பற்றிப் பல கொள்கைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாக, அந்தக் கொள்கைகளை விவரித்துவிட்டு, அறிவியல் ஏற்றுக் கொள்ளும் கோட்பாடுகளை மட்டும் திறனாய்வு செய்கிறார். தவிர, ஏடு முழுதும் அவரின் சொந்தக் கருத்தியல் பரவிக் கிடக்கிறது.

சுய நினைவு என்பது இந்த உலகின் இயற்பியல், வேதியியல் விதிகளுக்குள் அடங்காத ஒரு தனித்துவமான சக்தியாக நிலைத்திருக்கிறதா? Vitalism என்கிற இந்தப் பழங்காலக் கொள்கை பண்டைய எகிப்தில், பின்பு கிரேக்க தத்துவங்களில் இருந்திருக்கிறது. இந்திய நாட்டின் சமண மதக் கோட்பாடுகளில் ஒன்றாகவும் இருக்கிறது. இருப்பினும் இன்று வளர்ந்திருக்கும் அறிவியல் இதை ஏற்றுக் கொள்வதில்லை.

Panpsychism கொள்கை : இதன்படி, இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருள்களிடமும் சுயநினைவு இருக்கிறது. நுண்துகள்களான எலெக்ட்ரான்கள் போன்றவை கூட (சிறிய அளவில்) சுயநினைவு கொண்டவை. உயிரற்றவை என்று எதுவுமில்லை. நிரூபிக்க முடியாத இந்தக் கொள்கையையும் அறிவியல் ஒதுக்கி விடுகிறது.

(ஆதாரங்கள், நிரூபணங்கள் மட்டுமே அறிவியலின் அடிப்படை. மற்றும்படி, மனிதர்களின் சொந்த நம்பிக்கைகளில் அறிவியல் தலையிடாது என்பது தெரிந்ததே.)

அடுத்து Mysterianism. சுயநினைவு என்பது நம்மால் ஒருபோதும் உணரமுடியாத, நம் அறிவுக்கு எட்டாத ஒரு புதிர் என்கிறது இந்தக் கொள்கை. ஆகவே அறிவியலுக்குள் இது வராது.

சில கொள்கைகள் மூளையின் செயல்பாடுகளையும் அதன் மூலம் ஏற்படும் நடத்தைகளையும் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கின்றன. பார்வைகள், சிந்தனைகள், உணர்ச்சிகள் எல்லாம் ஒன்று திரண்டு மூளையின் cerebral cortex பகுதியை அடைந்ததும் சுயநினைவாய் மாறுகின்றன.

(மூளையின் cerebral cortex பகுதியில் தான் சுய நினைவு மற்றும் சிந்தனைகள், நினைவுகள் ஏற்படுகின்றன என்று தெரிகிறது.)

கேள்வி என்னவென்றால், cerebral cortex போகும் வரை என்ன நடக்கிறது? பதில் சொல்ல முடியவில்லையே என்பதால் இன்னும் பல கொள்கைகளை நிராகரிக்கிறார் பேராசிரியர். (எடுத்துக்காட்டாக சில : Global Workplace Theory, Higher Order Theory ….)

அடுத்து Integrated Information Theory (IIT). ஒருங்கிணைந்த தொடர்புகளால் ஏற்படும் விளைவே சுய நினைவு என்று வாதிடுகிறது இந்தக் கொள்கை. பல அறிவியலாளர்கள் மத்தியில் இது பிரபலமாக இருந்தாலும் அதை முழுதாக ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார் பேராசிரியர்.

IIT கொள்கை சுய நினைவை அளவீடு செய்ய முனைகிறது. அதற்காக φ (phi) என்று ஒரு கணித அளவுகோலை வகுத்துக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக, φ சைபரை (zero) விட மேலதிகமாக இருந்தால் மட்டுமே எந்த உயிரினமும் சுய நினைவு உள்ளதாகச் சொல்ல முடியும்.

இதை ஏற்றுக் கொண்டால் மனிதர்கள் மட்டுமே அறிவுக் கூர்மையில் சிறந்தவர்கள். மற்ற உயிரினங்கள் எல்லாம் மட்டமானவை என்கிற நிலைக்கு இந்தக் கணித அளவீடு தள்ளிவிடுமே என்று அதைக் கடுமையாக எதிர்க்கிறார் பேராசிரியர்.

சுயநினைவு பற்றி அவர் சொல்லும் வரைவிலக்கணம் : அகநிலையில் தோன்றும் எந்த ஒரு அனுபவமும் சுய நினைவு.

அதாவது, ஒருவருக்கு ஏற்படும் அனுபவம் எப்படிப்பட்டதாக இருக்கட்டுமே. அது இப்படித்தான் இருக்கும். இப்படித்தான் நடந்தது அல்லது நடக்கப் போகிறது என்று ஏற்கெனவே அவர் எப்படிக் கற்பனை செய்திருப்பாரோ அதைத் தான் அவரால் காணமுடியும். உணரமுடியும்.

நம்மைப் போலவே மற்ற உயிரினங்களும் அந்தந்த உயிரினங்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றபடி கிடைத்த அனுபவங்களைக் கொண்டிருக்கின்றன. அனுபவங்கள் கற்பனைகளாக உருவெடுக்கின்றன. அந்தக் கற்பனைகள் மூலமாக உலகைக் காண்கின்றன. உணர்கின்றன. ஆகவே (பேராசிரியரின் வரைவிலக்கணப்படி) அனைத்துயிர்களும் சுய நினைவுள்ளவை.

எனக்கு மொழி தெரியுமே. எனக்கு அறிவு இருக்கிறதே. என்னால் நினைத்தபடி அசைய முடியுமே. இப்படி சில நடத்தைகளை மட்டுமே வைத்துக் கொண்டு எனக்கு சுய நினைவு இருக்கிறது என்று முடிவு கட்ட முடியாது .

சில நோயாளிகளால் பேச முடியாது. உடலை அசைக்க முடியாது. சிலர் கோமா நிலையில் இருப்பார்கள். சிலரால் மீண்டு வர முடியும். சிலரால் முடியாமலே போகலாம். ஆனால் அவர்களுக்கும் சுய நினைவு இருக்கிறது. இவர்களை locked-in-patients என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள்.

Elle பத்திரிகை பெண்களுக்கான மாத இதழ். (ஆண்களும் வாசிக்கலாம். தடையில்லை.). 1995 களில் அதன் ஆசிரியருக்கு மூளையில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் படுக்கையிலேயே முடங்கிவிட நேர்ந்தது. உடலை அசைக்க முடியாது. பேச முடியாது. ஒரு கண்ணை மட்டும் சிமிட்ட முடியும். அந்த நிலையில் அவர் ஒரு புத்தகமே எழுதி வெளியிட்டிருக்கிறார். தலைப்பு : The Diving Bell And The Butterfly.

சில சமயங்களில் சுய நினைவு மந்தமாக அல்லது ரொம்ப சுமாராக வேலை செய்வது போலிருக்கும். கவனித்திருக்கலாம். வயிறு நிறைய பகல் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துவிட்டு வேலையில் அமர்ந்திருக்கிறாளே அந்தப் பெண்! அவள் பகல் கனவு காண்கிறாளா இல்லை?….

ஆனால் கடுமையான, சில அவசரமான கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். டப் டப் என்று பதில் வருகிறதே. எப்படி? பகல் கனவு கண்டாலும் சுய நினைவு மட்டும் கிண் என்று விழித்திருக்கிறது.

இனி பார்வைப் பக்கம் வருகிறார் பேராசிரியர் : என் முன்னால் ஒரு கோப்பை இருக்கிறது. ஏன் கோப்பையின் அடித்தளம் மேலேயும் கோப்பையின் வாய்ப்பக்கம் கீழேயும் தெரியவில்லை? தவிர, கோப்பையின் உட்புறம் வெளியிலும் வெளிப்புறம் உள்ளேயும் இருப்பது போல் என் பார்வை காட்டுவதில்லையே. ஏன்?

என் மூளை கோப்பை இருக்கும் மேசை, அதைச் சுற்றி இருக்கும் சூழல் .. எல்லா அம்சங்களையும் கவனிக்கிறது. கோப்பையோடு தொடர்புபட்ட பழைய நிகழ்வுகளையும் சீர் தூக்கிப் பார்க்கிறது.

கோப்பையின் அடித்தளம் மேலே இருப்பது போல் காட்டினால் அதன் உள்ளே இருக்கும் தேநீரை எப்படிக் காட்டுவது? ஒரு பழைய சம்பவம் : இது போல் ஒரு சமயம் நடந்தபோது கோப்பைக்கு ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் தேநீரோ நிலமெல்லாம் கொட்டிக் கிடந்ததே. இப்போது அப்படி அல்ல. தேநீர் கோப்பையின் உள்ளே இருக்கிறது.

இரண்டாவது : கோப்பையின் உட்புறத்தை வெளியில் தெரிகிற மாதிரி காட்டலாம். ஆனால் கோப்பையின் உள்ளே இருக்கும் தேநீரை எப்படிக் காண்பிப்பது?

மூளை முதலில் ஒவ்வொரு சாத்தியக் கூறுகளையும் யோசிக்கிறது. முன்பு நடந்த நிகழ்வுகளை ஒப்பு நோக்கிப் பார்க்கிறது. உடனடியாகவே அது முடிவுக்கு வருவதில்லை. எதில் நடைமுறை சாத்தியம் அதிகம் என்று பார்த்துப் பார்த்து, தவறான பார்வைகளை ஒவ்வொன்றாக டிக் பண்ணி அழிக்கிறது. கடைசியில் இது தான் சரியாக இருக்கலாம் என்று முடிவெடுக்கிறதா? அதுவும் இல்லை. இது தான் மிகச் சரியான ஊகம் (அல்லது சிறந்த ஊகமாக இருக்க வேண்டும்) என்று எனக்கு கோப்பைப் படம் காட்டுகிறது.

இந்த எடிட்டிங் வேலையை மூளை ஒரு சில மில்லி செக்கண்டுகளுக்குள் செய்து முடித்துவிடுகிறது. அத்தனை வேகம்! அது வரை நான், அதாவது என் முன்னால் கோப்பை இருக்கிறது என்பதை நான் பார்க்கும் அந்தக் கணம் வரை, இருட்டறையில் இருக்கும் குருடன் போல் இருக்கிறேன். மூளை தான் எனக்கு எல்லாக் காட்சிகளையும் காட்டுகிறது.

எதில் நடைமுறை சாத்தியம் அதிகம் என்று பார்த்துப் பார்த்து, தவறான பார்வைகளை ஒவ்வொன்றாக டிக் பண்ணி அழிக்கிறது. பேராசிரியர் இந்த செயல்பாட்டை prediction error minimisation என்கிறார்.

அங்கே சிவப்பாக ஏதோ தெரிகிறதே. மூளைக்கு சிவப்பு, பச்சை … என்று எந்த நிறமும் தெரியாது. ஆனால் ஒப்பு நோக்கத் துவங்குகிறது. இந்த அனுபவத்தை நான் பார்த்ததில்லையே. அந்த அனுபவம் போல இந்த அனுபவம் இல்லையே.

பச்சை, வெள்ளை .. என்று ஏற்கெனவே பல நிற அனுபவங்களை ஏற்கெனவே அது கண்டிருப்பதால், அதில்லை இது, இதுவல்ல அது என்று ஒவ்வொன்றாக டிக் பண்ணி அழிக்கிறது. கடைசியாக, சிவப்பு என்று ஒரு குறிப்பிட்ட அனுபவத்தைக் காண்பிக்கிறது. அதை நாம் சிவப்பு என்றோ red என்றோ அல்லது வேறு எந்தப் பேரிலும் அழைக்கிறோம்.

பார்வை மட்டுமல்ல, காதால் கேட்பது, வாசத்தை நுகர்வது, தொடும் உணர்வுகள் எல்லாமே ஊகங்கள் தான். நம்மால் உண்மை நிலவரத்தை ஒரு போதும் காணமுடியாது. உணர முடியாது. மூளையின் ஊகங்களோடு வாழ்க்கையை நடத்துகிறோம்.

உண்மை அல்லாத இந்த மாயத் தோற்றங்கள் (hallucinations) எதற்காக?

படிநிலை வளர்ச்சி (evolution) நம்மை ஆபத்துகளில் இருந்து தற்காத்துக் கொள்ள, உணவு தேட, வாழ்விடம் அமைத்துக் கொள்ள இந்த மாயையை உருவாக்கி வைத்திருக்கிறது.

இது ஒன்றும் புதிய செய்தி அல்ல. கிமு 4ம் நூற்றாண்டின் கிரேக்க தத்துவ ஆசிரியர் பிளாட்டோ சொன்ன உருவகக் கதை : ஒரு குகையில் சிறைக்கைதிகள் திரும்பிப் பார்க்க முடியாதபடி, பிணைக்கப்பட்டு குகையின் சுவரைப் பார்த்தபடி இருக்கிறார்கள். பின்னால் நெருப்பு எரிகிறது. அதைத் தாண்டியபடி உருவங்கள் கடந்து செல்கின்றன. உருவங்களின் நிழல்கள் குகைச் சுவரில் தெரிகின்றன. அந்த நிழல்கள் தான் உண்மை என்று கைதிகள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கைதிகள் வேறு யாருமல்ல – மனிதர்கள்.

அதோ ஒரு ரயில் வேகமாக வருகிறது. எல்லாம் மாயை என்றால் நான் ஓடிப்போய் அதன் முன்னால் குதித்துப் பார்த்தால் என்ன? ஏன் பயப்பட வேண்டும்? மூளை இங்கே இரண்டு விதமான தனித்திறன்களோடு செயல்படுகிறது. முதல் கட்டத்தில் நீங்கள் ரயிலை நோக்கி ஓட நினைத்தாலும் அதன் இரண்டாம் கட்டத் திறன் மூலம் உங்கள் செய்கையைத் தடுத்து நிறுத்துகிறது.

சுயநினைவு என்பது முன்பு பெற்ற அனுபவங்கள், மதிப்பீடுகள், நோக்கங்கள் , நினைவுகள், மற்றும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் உலகம் பற்றிய ஊகங்கள் அனைத்தும் சேர்ந்த கலவை. கவுதம புத்தர் சொன்னது போல் அது ஒரு சடப் பொருள் அல்ல.

பேராசிரியர் அவரின் கோட்பாட்டுக்கு “Beast Machine Theory” என்று பேர் வைத்திருக்கிறார். நாமெல்லாம் ரத்தமும் சதையும் கொண்ட எந்திரங்கள். உணர்வுகள் கொண்ட வாழும் எந்திரங்கள்.

நம் குறிக்கோள் உயிர் வாழ்வது மட்டுமே. வேறு எதுவுமே இல்லை என்கிறார் அவர்.

சுயநினைவுக்கு அறிவுத்திறன் (intelligence) அவசியமில்லையா? இல்லை. அறிவு என்பது இல்லாமலே நாம் இன்பமோ துன்பமோ துய்க்கமுடியும்.

Artitificial Intelligence, AI : செயற்கை நுண்ணறிவு சுய நினைவு அடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று செய்திகள் வராத நாளே இல்லை.

சுய நினைவு ஏற்படுவதற்கு நம்மிடமும் மற்ற விலங்குகளிடம் இருப்பது போல நியூரான்களோ ஏன் சிலிக்கன் மூலப்பொருள்கள் கூட அவசியமே இல்லை என்று பல அறிவியலாளர்கள் நம்புகிறார்கள்.

முதலாவதாக, Functionalism என்கிற இந்தக் கொள்கையின் படி, ஓர் அமைப்பு தோற்றத்தில் எப்படி செயல்படுகிறது அல்லது அதன் நடப்புகள் எப்படி இருக்கின்றன என்பதை மட்டும் நாம் கவனிக்க வேண்டுமே தவிர, அதன் உள் கட்டமைப்பு பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையே இல்லை என்கிறது.

சரியான விகிதத்தில் ஓர் அமைப்பின் உள் கட்டமைப்பு அமைந்துவிட்டால் அதற்கு சுய நினைவு தானாகவே வந்துவிடும் என்று இந்தக் கொள்கையாளர்கள் நினைக்கிறார்கள். இந்தக் கொள்கையை மறுக்கிறார் பேராசிரியர்.

இரண்டாவதாக, மிகவும் ஆற்றல் கொண்ட அறிவுத்திறன் அதன் முக்கிய பின்புலமாக இருந்தால் மட்டுமே அப்படி சுய நினைவு கொண்ட அமைப்பு உருவாக முடியும் என்பது அவர்களின் அடுத்த கணிப்பு.

இரண்டாவது கணிப்பை இன்னும் தீவிரமாக எதிர்க்கிறார் பேராசிரியர். இது சுய நினைவை அறிவோடு வலிந்து திணிக்கும் செயல்பாடு என்கிறார். இது சரி என்றால், மனிதர்கள் அறிவு மிக்கவர்கள். எனவே அவர்களுக்கு சுய நினைவு உண்டு. மிருகங்களுக்கு அறிவு போதாது. ஆகவே அவைகளுக்கு சுய நினைவு போதாது அல்லது இல்லை என்று சொல்ல வைக்குமே இந்தக் கொள்கை. இது முற்றிலும் தவறு என்கிறார் அவர்.

எந்த ஒரு அமைப்பும் (1) வெளிப்புறத் தூண்டல்களுக்கு எதிர்வினை ஆற்றுகிறதா? (2) அல்லது அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா? (3) அல்லது கிடைக்கும் பரிசு இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கிறதா? (4) அல்லது ஒரு குறிக்கோள் வைத்திருக்கிறதா?

அப்படி என்றால் அந்த அமைப்பு சுய நினைவு கொண்டது என்று முடிவு செய்து கொள்கிறார்கள் சில ஆய்வாளர்கள். இது வினோதமான நினைப்பு. ஒரு கணனியை எப்படி சுய நினைவு கொண்டதாக உருவாக்கம் செய்ய முடியும்? கேள்வி எழுப்புகிறார் பேராசிரியர்.

சில ஆய்வாளர்கள் செயற்கை நுண்ணறிவு ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டிவிட்டால் (Artificial General Intelligence அல்லது Global Availability) தானாகவே அதற்கு சுய நினைவு வந்துவிடும் என்கிறார்கள்.

அந்த சுய நினைவு அழுமா? சிரிக்குமா? கண்ணீர் விடுமா? துன்பத்தில் தவிக்குமா? ஆச்சரியப்படுமா? சோகத்தில் மூழ்குமா? மகிழ்ச்சியாக இருக்குமா? உணர்ச்சி வசப்படுமா?

நம் சுய நினைவும் அதன் சுய நினைவும் ஒன்று தானா? நமக்கு எப்படித் தெரியும்?

அதன் நடப்புகள் நம்மை எப்படி பாதிக்கப் போகின்றன? புதிர்கள் நிறைந்த ஒரு சமூகத்தில் எப்படி நாம் வாழப் போகிறோம்? பேராசிரியரின் கேள்விகள் சரமாரியாக வந்து விழுகின்றன.

“Beast Machine Theory” இந்த உலகின் இயற்கைக்கு உட்பட்டு அதன் மூலம் பெற்றிருக்கும் சுய நினைவு பற்றிப் பேசுகிறது. நம் சுய நினைவு, நம் உடலின் ஒவ்வொரு அங்கங்கள், செல்கள் வரை ஏற்படும் மாற்றங்கள், வாழ்வதற்கான தேவைகள், முயற்சிகள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

நமக்குத் தெரியாத, நம்மைப் பற்றிப் புரிந்து கொள்ளாத அல்லது புரிந்து கொள்ளவே முடியாத, ஒரு சிலிக்கன் சுயநினைவை நம் சொந்த சுய நினைவோடு ஒப்பிடுவதா? இது ஓர் முரண்நகையாகத் தெரியவில்லை? – பேராசிரியர்.

அசுர வேகத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் முன்னேறிக் கொண்டிருக்க, எது உண்மை, எது பொய் என்று வேறுபடுத்த முடியாத ஒரு நிலையை நோக்கி மனித இனம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

சக மனிதரோ, விலங்குகளோ ஆபத்தில் மாட்டிக் கொண்டால் ஓடிப்போய் உதவு செய்ய நினைக்கிறோம். இது மனித இயல்பு. எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் மிக மிக சாதாரணமாக நடமாடும் ஒரு நிலைமை வரலாம். இந்த நிலையில் ஒரு விபத்து ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். ரோபோக்களும் சுய நினைவு உள்ளவை என்று நாம் எண்ணும்போது யாருக்கு முன்னுரிமை கொடுப்பது? ரோபோக்களா? மனிதர்களா?

மனிதர்களைத் தவிர்த்துவிட்டு ரோபோக்களைத் தூக்கிப் பிடிக்கும் பண்பு மனிதர்களிடம் ஓங்கிவிட்டால் நம் மனித அறம் அல்லது மனித நேயம் எங்கே போய் நிற்கும்?

ரோபோக்களை முதலில் உற்பத்தி செய்வோம். பிறகு நடப்பைப் பார்த்து முடிவு செய்வோம் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள். இது பைத்தியக்காரத்தனம் என்கிறார் பிரபல நரம்பியல் நிபுணர் டெனெட் (Daniel Dennett).

மனித குலத்தின் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் சட்டங்களைக் (preventive ethics) கொண்டு வந்த பிறகு தான் செயற்கை நுண்ணறிவு ரோபோக்களின் உற்பத்திக்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்கிறார் ஜெர்மனியின் பிரபல தத்துவ ஆசிரியர் மெட்சிங்கர் (Thomas Metzinger).

செயற்கை நுண்ணறிவு ஒரு பக்கம் இருக்கட்டும். cerebral organoid என்பது மனித stem செல்களில் இலிருந்து எடுக்கப்பட்டு, உண்மையான நியூரான்களைக் கொண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட மூளை போன்ற அமைப்பு.

மனித மூளையின் ஆரம்ப கட்ட வடிவமைப்பு போலவே இந்த மினி-மூளை இருக்கிறது. இதில் ஏற்படும் மின் தூண்டல்கள், குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையின் மூளையை ஒத்திருக்கிறது. மூளைப் பாதிப்பு நோயாளிகளின் சிகிச்சைக்காக பரிசோதனை சாலைகளில் இந்த மூளையில் ஆய்வுகள் நடக்கின்றன.

இந்த மினி-மூளை சுய நினைவு உள்ளதாக இருக்கும் என்று பேராசிரியர் நம்பவில்லை. இருந்தும், இப்படி மினி-மூளைகள் பண்ணை ஒன்று ஆரம்பித்தால் என்ன என்று இந்த ஆய்வில் பங்கெடுக்கும் ஒரு முக்கிய ஆய்வாளர் யோசனை வெளியிட்டிருக்கிறார்.

என்னது? பேராசிரியருக்கு உடனடியாகவே சந்தேகம் வந்திருக்கிறது. மேலே சொன்ன preventive ethics சட்ட மூலங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்கிறார் அவர்..

செயற்கை நுண்ணறிவின் நன்மை தீமைகளை முன்கூட்டியே பதிவு செய்வதில் பிரபலமானவர் Nick Strom. அவர் சொல்கிறார் : எதிர்காலத்தில் மனிதர்கள் வாழ உடல் அவசியமில்லாமல் போகக்கூடும். கணனியில் உருவேற்றப்பட்ட பிம்பங்களாக, சிரஞ்சீவியாய் வாழக்கூடும்.

ரத்தமும் சதையுமான இந்த உடம்பு விரைவில் அழிந்து விடுமே என்று கவலைப்படாத மனிதர்களே இல்லை. என்றென்றும் இறப்பே இல்லாத வாழ்வு நமக்குக் கிடைக்காதா என்று எல்லா மனிதர்களும் ஏங்குகிறார்கள். அவர்கள் அடி மனதில் இந்த வேட்கை ஆழப் புதைந்திருக்கிறது.

என்றென்றும் இளமையோடு வாழும் ஓர் சூப்பர் கணனியாக நான் மாறிவிட்டால் … இந்த நினைப்பு தான் மனிதர்களை செயற்கை நுண்ணறிவின் மேல் காதல் கொள்ள வைக்கிறதோ?

கணனிகளில் உருவேற்றங்கள் (simulation) மற்றும் மாதிரிகள் (models ) மூலம் சுய நினைவை ஆய்வு செய்வதைப் பேராசிரியர் வரவேற்கிறார். மூளைப் பாதிப்பால் அவதிப்படும் நோயாளிகளுக்கு இது உதவுமே. ஆனால் மினி-மூளைகள் அல்ல.

நம் உடல் மூலமாகவே இந்த உலகை நாம் உணர்கிறோம். இயற்கையோடு அதன் உள்ளிருந்து பெறும் அனுபவங்களே நாம். இயற்கைக்கு எதிரான எதுவும் நாம் அல்ல.

ஏட்டை இப்படி முடிக்கிறார் பேராசிரியர் : நாம் எங்கிருந்து வந்தோம்? இந்த வாழ்வு முடிந்த பிறகு எங்கே போகப் போகிறோம்? இரண்டுமே பெரிய மர்மமாக இருக்கும்போது இடையில் வரும் இந்த வாழ்க்கையிலும் கொஞ்சம் மர்மம் இருந்துவிட்டுப் போகட்டுமே.

நீயா நானா

இருட்டறையில் கருப்புப் பூனையைத் தேடுவது கடினமான வேலை. அங்கே பூனையே இல்லை என்று வைத்துக் கொண்டால் வேலை இன்னும் கடினமாகி விடுகிறது.

அறிவியல் பக்கம் போகிறோம். ஆய்வாளர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

சிலர் வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, சிலர் ஏடுகளை வாசித்துக் குறிப்புகள் எடுக்க, சிலர் ஆய்வுக்கூடங்களில் சோதனைகள் செய்து கொண்டிருக்க, இப்படிப் பல ரகங்களில் இருந்தாலும், சிலர் காண்டீனில் டீ அல்லது காபி குடித்தபடி மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பதும் உண்டு.

இருந்தும், இவர்களிடம் ஒரு பொதுப்பண்பு இருப்பதைப் பார்க்கலாம். எல்லாருமே கருப்புப் பூனையைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் இருட்டில்.

இங்கே வருகிறார் பேராசிரியர் Stuart Firestein. அவரின் Ignorance ஏடு, நம் அறியாமை பற்றி அல்லது இன்னும் நமக்குத் தெரியாத நடப்புகள், உண்மைகள் பற்றி வேறு ஒரு கோணத்தில் அலசுகிறது. புதிதாக ஆய்வுகள் மேற்கொள்ளப் போகும் மாணவர்களுக்காக அவர் எழுதி இருந்தாலும் சுவையோடு சொல்வது அவர் பாணி.

அறியாமை எனும் சொல் பொதுவாகப் பேச்சு வழக்கில், எழுத்து வடிவத்தில் மிகவும் கீழான, இகழக்கூடிய மற்றும் கேலிக்குரிய எனும் பொருளில் வரும். அதாவது உண்மை தெரியாத ஓர் மனோநிலையின் வெளிப்பாடாக இந்தச் சொல் சமுதாயத்தில் வழங்குகிறது.

பேராசிரியர் சொல்லும் அறியாமை அல்லது தெரியாமை அதுவல்ல.

அறிவியல் என்ன தான் புதுப்புது உண்மைகளைக் கண்டுபிடித்தாலும், சிக்கல்களுக்குத் தீர்வுகளை முன்வைத்தாலும் முட்டித் தள்ளிவிட்டு, அதே உண்மைகள், தீர்வுகள் மேலே நின்றுகொண்டு இன்னும் கேள்விகளோடு சவால் விடுகிறதே. பதில் சொல்லத் தெரியவில்லையே என்று திணறும் நிலையை அறியாமை என்கிறார் அவர்.

அறிவு ரொம்பப் பெருசு. அதை விடப் பெருசு அறியாமை.

யோசித்துப் பார்த்தால், அறியாமையைக் கண்டு நாம் பயப்படுகிறோம். அது மட்டுமல்ல, பதில் தெரியாத கேள்விகளை முடிந்தளவு தவிர்க்கப் பார்க்கிறோம். அவமானம், கூச்சம் என்று பல்வேறு உணர்வுகளால் அல்லாடுகிறோம்.

ஆனால் ஆய்வாளர் என்றால் அறியாமையைப் பெருமையோடு ஏற்றுக் கொள்ளவேண்டும். அதற்கு மதிப்புக் கொடுக்கவேண்டும். தெரியாவிட்டால், தெரியவில்லை என்று நேர்மையாக ஒப்புக்கொள்வது தான் ஒரு ஆய்வாளரின் இயல்பாக இருக்கவேண்டும் என்கிறார் பேராசிரியர்.

ஆய்வாளருக்குக் கேள்விகள் முக்கியம். ஆனால் எதுவுமே தெரியாது என்று துவக்கத்திலேயே முடிவு செய்து கேள்விகளைத் தயார் பண்ணுவது பிரச்னைகளில் மாட்டிவிடும். இன்னொரு சிக்கல் : ஒரு கேள்விக்கு அடுக்குகள் போலப் பல பதில்கள் இருக்கக்கூடும்.

ஒரு எடுத்துக்காட்டு : இணையத்துள்ளே நுழைந்து தட்டினால் எந்தக் கேள்விக்கும் பதில் வருகிறது. எடுத்துக்காட்டாக, கூகுள் தளத்தில் அறிவுடைமை (knowledge) பற்றி எத்தனை பேர் கேட்டிருக்கிறார்கள் என்றால் 495 மில்லியன் என்று வருகிறது. அறியாமை பற்றிக் கேள்வி கேட்டவர்கள் 37 மில்லியன் தானாம். இதை நம்பலாமா? கூகுள் பாகுபாடு காட்டுகிறது என்று சந்தேகம் வரவில்லையா?

வேறு எந்த வலைத்தளத்தில் பதில்கள் இருந்தாலும் ஆய்வாளர்களுக்கு எந்தப் பதிலையும் அப்படியே ஏற்றுக் கொள்வதில் தயக்கம் உண்டாகிறது. அதே நேரம் உண்மை என்று சொல்லப்படும் தகவல்கள், தரவுகள் எதையும் ஒரேயடியாக எந்த ஆய்வாளரும் நிராகரிப்பதில்லை. மாறாக, இன்னும் ஆழமாக உள்நோக்கி ஆராய முனைகிறார்கள்.

1950 களின் தொலைக்காட்சிகளில் Question Man என்கிற கேள்வி-பதில் போட்டி நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக இருந்தது. போட்டியாளருக்குப் “பதில்” ஒன்று கொடுக்கப்படும். போட்டியாளர் சரியான கேள்வியைக் கண்டுபிடிக்க வேண்டும். அதை இன்றைய நாளில் மீண்டும் அறிமுகம் செய்தாலென்ன என்கிறார் பேராசிரியர்.

அறியாமை எனும் அடித்தளத்தில் இருந்து தான் அறிவியல் பிறக்கிறது. அது மட்டுமல்ல, அறிவியலை இயக்குவதும் அறியாமை தான்.

எதுவும் நிலையானதல்ல. இன்று வந்திருக்கும் முடிவு நாளை மாறிவிடலாம். நீங்கள் ஆண்டுகளாக, மாதங்களாக, இரவு பகலாகப் பாடுபட்டுக் கண்டறிந்த முடிவுகள் ஒரு நொடியில் தவறு என்று தகர்ந்து போய்விடலாம். உங்கள் ஆய்வுகளின் முடிவுகள் மேலேயே சந்தேகத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார் பேராசிரியர்.

ஏனென்றால் தகவல்கள் என்றுமே “பாதுகாப்பானவை” அல்ல. தினம் தினம் புதிய தகவல்கள் சேர்கின்றன. பழைய தகவல்களை யாரும் சீண்டுவதில்லை. பிழை என்று சில தகவல்களைக் குப்பைத் தொட்டிக்குள் வீசிவிடுகிறார்கள்.

ஆய்வுக்கருவிகள் நாளுக்கு நாள் மேம்பட்டுக் கொண்டே இருக்கின்றன. புதிய அளவீடுகள் இன்னும் துல்லியமாக வரும்போது உங்களின் அளவைகளின் தவறுகள் சுட்டிக் காட்டப்படலாம். உங்களின் புள்ளி விவரக் கணக்கீடுகள் தரம் குறைந்தவை ஆகிவிடலாம்.

அறிவியலில் ஒருவரின் ஆய்வு முடிவை இன்னொருவர் தவறென்று நிறுவுவது இயற்கையே.

அறிவியலாளர்களே உண்மை என்று நம்பிக் கொண்டிருந்த ஒரு கருத்தைத் தவறு என்று நிரூபணம் செய்தவருக்கு நோபல் பரிசு கூடக் கிடைத்திருக்கிறது. 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில், ஆல்பர்ட் மைக்கேல்சன் (Albert Michelson) என்பவர் ஒளியின் வேகத்தைக் கணக்கிட எத்தனையோ தடவை முயன்றும் தோல்வி தான்.

விண்வெளி முழுவதும் ஈதர் (ether) வாயு நிறைந்திருப்பதாக அன்றைய நாட்களில் நம்பிக் கொண்டிருந்தார்கள். இந்த வாயுவின் தன்மைகளோடு ஒளியின் வேகத்தைக் கணிப்பிட்டால் எல்லா முடிவுகளும் தப்புத் தப்பாகவே வந்து கொண்டிருந்தன. தாங்க முடியாத எரிச்சல். ஒளியின் வேகத்தை ஒத்திப் போட்டுவிட்டு விண்வெளியில் ஈதர் வாயு இருக்கிறதா இல்லையா என்கிற ஆராய்ச்சியில் இறங்கினார்.

அப்படி எதுவுமே இல்லை என்று நிரூபித்தார். இதற்காக 1907ம் ஆண்டின் நோபல் பரிசு அவருக்குக் கிடைத்தது.

இது இயற்பியலில் முக்கிய திருப்பம். இந்தக் கண்டுபிடிப்பு இல்லாமல் இயற்பியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவரின் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை எழுதி இருக்கவே முடியாது.

பேராசிரியர் நரம்பியல் துறையில் மணம் அல்லது வாசம் பற்றி ஆய்வுகள் செய்பவர். மூளையில் இருக்கும் நியூரான்கள் எப்படி மணத்தைக் கண்டறிகின்றன, வேறுபாடுகளை உணர்கின்றன என்பதை ஆராயும் துறைக்கு ஆங்கிலத்தில் olfaction என்று பெயர். அவரின் விரிவுரைகளில் அவரே விட்ட தவறுகளையும் அவர் ஒளிவு மறைவின்றி விளக்குகிறார்.

20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இரண்டு நரம்பியல் அறிவியலாளர்கள் ஆய்வுகள் செய்த போது, மூளையில் மின் தூண்டல்கள் (electronic impulses) ஏற்படுவதைக் கண்டார்கள். தோலில், விழித்திரையில் (retina) ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்றபடி, அவற்றின் மின் அழுத்தங்களும் (voltage) மாறுவதைக் கவனித்தார்கள்.

எனவே தோலில் ஏற்படும் உணர்வுகள், கண்பார்வை அனைத்துக்கும் மின் தூண்டல்கள் தான் ஒரே காரணம் என்று அவர்கள் முடிவெடுத்ததை மற்ற அறிஞர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.

சுமார் 75 ஆண்டுகளாக இந்தக் கொள்கை தொடர்ந்தது. பேராசிரியரும் அதை மாணவர்களுக்குக் கற்பித்திருந்தார். இன்று அது மாறிவிட்டது. மின் தூண்டல்கள் ஒரு காரணம் மட்டுமே. இரண்டாவதாக, இதில் வேதியியல் தாக்கங்களுக்கும் பங்குண்டு என்று இப்போது தெரிய வந்திருக்கிறது.

இன்னோர் நிகழ்வு : 2009 களில் ஒரு இளம் ஆய்வாளர் ஆர்ஜென்டினாவில் இருந்து பேராசிரியருக்குப் போன் போட்டிருக்கிறார். மூளையின் நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் கிலியல் செல்கள் (glial cells) எத்தனை இருக்கின்றன? ஒரு மதிப்பீடு செய்ய இந்த எண்ணிக்கை தேவை என்று கேட்டிருக்கிறார்.

பேராசிரியரும் அவரின் மாணவர்களுக்கு வழக்கமாக சொல்லிக் கொண்டிருந்த அதே தகவலைச் சொல்லியிருக்கிறார் : கிட்டத்தட்ட 100 பில்லியன் நியூரான்கள். அதை விட 10 மடங்கு கூடியவை கிலியல் செல்கள்.

கொஞ்சநாள் கழித்து அர்ஜென்டினாவில் இருந்து மீண்டும் அதே ஆய்வியலாளரின் போன் : பேராசிரியர் அவர்களே, நியூரான்களின் எண்ணிக்கையை அளவிடுவதற்காக ஓர் சிறப்பான வழிமுறையைக் கண்டு பிடித்திருக்கிறோம். இதன்படி, 86 பில்லியன் நியூரான்களும் கிட்டத்தட்ட அதே அளவு கிலியல் செல்களும் அல்லவா இருக்கின்றன!

என்ன நடந்தது? எல்லாருமே கிளிப்பிள்ளை போல் ஆவணங்களில் இருந்த தகவலைத் திரும்பத் திரும்ப மீட்டிருக்கிறோமே தவிர, யாருக்கும் சரி பார்க்கத் தோன்றவில்லை என்கிறார் பேராசிரியர்.

எதிர்காலத்தில் அறிவியலில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகலாம் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம். பத்திரிகைகளில், ஊடகங்களில் இது போல கேள்விகளும் பதில்களும் வருகின்றன.

எடுத்துக்காட்டாக, பல ஆண்டுகளுக்கு முன் இன்னும் 10 ஆண்டுகளில் , அல்லது 25 ஆண்டுகளில் மலேரியா வியாதி இல்லாமல் போய்விடும், புற்றுநோய்க்கு மருந்து வந்துவிடும் .. என்று செய்திகள் வந்து கொண்டிருந்தன. இவை கேட்க இனிமையாக இருக்கலாம். தப்பில்லை. ஆனால் எச்சரிக்கையாக இருப்பது இன்னும் நல்லது.

ஆய்வு என்பது பல நிலைகளில் செயல்படுகிறது. ஏற்கெனவே இருக்கும் தகவல்களை சரி பார்த்துக் கொண்டு முன்னேறுதல் ஒரு வழி. போகப்போக, ஒரு கருதுகோளை (hypothesis) உருவாக்கிக் கொள்ளலாம். சில சமயம் ஆய்வில் கிடைக்கும் தரவுகள் கருதுகோளை மாற்றி அமைக்கலாம். முற்றிலும் தவறு என்கிற நிலைக்கும் கொண்டு வந்துவிடலாம். இளம் ஆய்வாளர்களுக்கு இது பெரிய சவால் தான்.

அடுத்தது : பெரும் புரட்சிகரமான கண்டுபிடிப்புகளுக்குத் தான் விளம்பரம் கிடைக்கிறது. அரசு மானியம் ஒதுக்கப்படுகிறது. இதுவும் இளம் ஆய்வாளர்களை சலிப்படையச் செய்யலாம். தவிர, இவர்கள் எப்படியாவது விரைவில் விடை கண்டுபிடித்துவிட வேண்டும் என்று அவசரப்படுவது இயல்பே.

ஆய்வில் கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள் அவசரப்படுவதில்லை. புகழ் பெறவேண்டும் என்று துடிப்பதில்லை. ஆராய்ச்சி மட்டுமே அவர்களின் குறிக்கோள். தெரிந்துவிட்டால் எதுவுமே போரடிக்கும். அலுப்பு மேலிடும்.

தெரியாத ஒன்றைத் தேடுவதில் கிடைக்கும் சுகம் வேறு எதில் இருக்கிறது?

அறியாமை மட்டுமே ஆய்வாளனுக்கு ஒரு டானிக் போல் புத்துணர்ச்சி ஊட்டுகிறது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார் பேராசிரியர்.

இருட்டறையில் கறுப்புப் பூனையைக் கண்டுபிடிக்க விடாமுயற்சி செய்கிறீர்கள். எவ்வளவோ சிரமங்கள். தற்செயலாக அங்கிருக்கும் ஒரு சுவிட்சை தட்டப்போய் விளக்கு எரிகிறது. பூனையைத் தேடுவது ஒரு பக்கம் இருக்கட்டும். சுவிட்ச் போட்டதும் விளக்கு எரியும் என்பது முன்பு தெரியாத ஒரு புதிர். இப்போது தெரிந்துவிட்டதே.

இது போலப் பல செயல்பாடுகள் ஆய்வுகளின் வரலாற்றில் பதிந்திருக்கின்றன.

ஒரு எடுத்துக்காட்டு : பால் டிராக்ட் (Paul Diract) ஓர் இயற்பியல் மேதை. குவாண்டம் இயக்கவியலில் (Quantum Mechanics) அவர் பதித்த முத்திரைகள் இன்றும் புகழப்படுகின்றன. அவரின் கணித சமன்பாடுகளின்படி, எலெக்ட்ரானுக்கு எதிரான ஓர் துகள் (அல்லது அலை) நிச்சயம் பிரபஞ்சத்தில் இருக்கவேண்டும் என்று காட்டியது.

எலெக்ட்ரான் எதிர்மறை மின்னேற்றம் (negative charged) கொண்டது என்று தெரியும். அப்படியானால் எதிர்த் துகள் நேர்மறை மின்னேற்றம் (positive charged) கொண்டிருக்க வேண்டும் என்று புலனாகிறது. அதற்குப் பேரும் வைத்தாயிற்று – பாசிட்ரான் (positron).

இருந்தும் இது ஓர் கற்பனையின் தோற்றம். உண்மையாய் இருக்கமுடியாது. யாரும் அதைக் கண்டுபிடிக்கவும் முடியாது என்றார் அவர். மேலும் யாருமே முன்பு பாசிட்ரான் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. இது நடந்தது 1928 ம் ஆண்டில்.

1932 களில் உண்மையிலேயே அப்படி ஒரு துகள் (அல்லது அலை) இருக்கிறது என்று இன்னொரு ஆய்வாளர் நிரூபித்துக் காட்டினார். ஆனால் எந்தப் பயனும் இல்லாத ஒன்று என்றார் அவர்.

1970 ம் ஆண்டில் மருத்துவமனைகளில் பாவனைக்கு வந்த PET Scanner பாசிட்ரானை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. எந்திரத்தை வடிவமைத்தவர்கள் உயிரியல் – பொறியியலாளர்கள். மருத்துவத்தில் இந்த scanner இன்று இன்றியமையாத சாதனம்.

ஒன்றைத் தேடப்போய் இன்னொன்றைக் கண்டுபிடித்த செய்திகள் பல உண்டு. இன்னும் சான்றுகள் தருகிறார் பேராசிரியர்.

ஆகவே ஆய்வு என்பது எந்தத் திசையில் நகரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. உறுதியற்ற தன்மைதான் அறிவியலின் சிறப்பு என்றால் அதன் உந்துசக்தியாக இருந்து ஊக்குவிப்பது அறியாமை.

கண்டுபிடிக்கப்பட்ட கறுப்புப் பூனைகள் தான், பொதுவாக தொலைக்காட்சிகளில், பிரபல இதழ்களில் ஆகோ, ஓகோ என்று டாலடிக்கின்றன. இன்னும் கண்டுபிடிக்கப்படாத எத்தனையோ பூனைகள் இருக்கின்றனவே.

ஆய்வு என்பது துப்புத் துலக்கும் வேலை. அதற்காகப் புதிய ஆய்வாளர்களுக்கு நிறையத் தடயங்கள் தருகிறார் பேராசிரியர்.

அதில் ஒன்று : அண்மைய கண்டுபிடிப்புகளில் நேரத்தை விரயமாக்காதீர்கள். ஏற்கெனவே பலர் அதில் ஈடுபட்டிருப்பார்கள்.

ஒரு 10 ஆண்டுகளோ 20 ஆண்டுகளோ பின்னோக்கிப் போய்ப் பாருங்கள். அன்றைய காலகட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்களின் ஆய்வுக்கட்டுரைகளில் விடுபட்டுப் போன இடைவெளிகளை நோக்கி உங்கள் கவனம் திரும்பட்டும். அதில் ஏதோ ஒன்று உங்களுக்குப் புதிய ஒரு பாதையைக் காட்டலாம். இதுவரை மற்றவர் கண்களுக்குப் புலப்படாமல் இருந்ததை உங்கள் கண்கள் காணக்கூடும்.

உங்களுக்குப் போட்டி இருக்காது. நிதானமாக, உங்கள் அறியாமையை எடை போட்டபடி வேலையை ஆரம்பியுங்கள் என்கிறார் அவர்.

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அறிவியலின் கண்டுபிடிப்புகளில், செய்திகளில் ஆர்வம் கட்டுவதில்லை . ஆனால் அவர்கள் மீது குற்றமில்லை. இன்றைய அறிவியலாளர்களின் அணுகுமுறை மற்றும் மனோபாவம் சாதாரண மக்களை அறிவியலை விட்டு விலகச் செய்துவிட்டன என்கிறார் பேராசிரியர்.

16ம் நூற்றாண்டின் இத்தாலியின் கத்தோலிக்க பாதிரியார்கள் இயற்பியலாளர் கலிலியோவின் கருத்துக்களைக் கண்டு அதிர்ந்தாலும் அவர்களிலும் புத்திஜீவிகள் இருந்தார்கள். அவர்கள் கலிலியோவின் அறிவியல் கருத்துக்களை ஏற்றுக் கொண்டார்கள்.

பிரச்னை என்னவென்றால் பூமி தான் பிரபஞ்சத்தின் மையம். பூமியைச் சுற்றித் தான் கோள்கள் சுழல்கின்றன என்று மக்களிடம் ஏற்கெனவே சொல்லி வந்திருக்கிறோமே. அப்படி இல்லை என்று எந்த முகத்தோடு மக்களிடம் போய்ச் சொல்வது என்று மிரண்டு போனார்கள். வேறு வழியின்றி கலிலியோவை வீட்டுச் சிறையில் வைக்க முடிவெடுத்தார்கள்.

ஆனால் கலிலியோவின் சிந்தனைகள் விரைவில் அய்ரோப்பா முழுதும் பரவ ஆரம்பித்தன. அதைத் தொடர்ந்து பல அறிவியலாளர்கள் கலிலியோவின் ஏட்டைப் போலவே மக்களுக்குப் புரியும் மொழியில் எழுதத் துவங்கினார்கள்.

அன்றைய அறிவியல் ஏடுகள் பெரும் ஆரவாரத்தோடு வெளியிடப்பட்டன. வந்ததுமே வாங்க மக்கள் முண்டியடித்தார்கள். ஏடு பற்றிய விவாதங்களைக் கேட்க மக்கள் திரண்டார்கள்.

இன்றைய அறிவியலாளர்கள் யாருக்கும் புரியாத சங்கேத மொழியில் பேசிக் கொள்கிறார்கள். சாதாரண மக்களுடன் அவர்களுக்குத் தொடர்பே இல்லாமல் போய்விட்டது – விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரைத் தவிர.

அவர்களின் சிந்தனைகளை மக்களுடன் பகிர்ந்துகொள்ள ஏன் மறுக்கிறார்கள்? சில கருத்துக்களை இலகுவாகச் சொல்லமுடியாது தான். இருந்தாலும் சாராம்சத்தை, மேலோட்டமாக விளக்குவதில் என்ன இழப்பு நேர்ந்துவிடப் போகிறது?

மக்களிடம் நெருங்க நெருங்க அறிவியல் இன்னும் மேலோங்குமே. மக்களின் ஆதரவு கண்டு அரசுகளும் ஆய்வுகளுக்கு அதிக நிதி ஒதுக்க முன்வரும். அதனால் வாழ்வு இன்னும் மேம்படுமே என்கிறார் பேராசிரியர்.

ஏராளமான வரலாற்றுச் செய்திகளுடன் தன் கருத்துக்களையும் கெட்டித்தனமாகக் கலந்திருக்கிறார் அவர். மறுப்பே சொல்லமுடியாத எழுத்து.

நீயோ நானோ யார் நிலவே

தமிழ்மொழியை ஓரு கன்னிப் பெண்ணாக உருவகம் செய்வதில் சிலருக்கு மகிழ்ச்சி. தமிழன்னையே என்று பாசமலராய் நெகிழ்வதில் சிலருக்கு மகிழ்ச்சி. எல்லாமே சரி தான். ஆனால் கன்னட மக்கள் வாழும் கர்நாடக மாநிலம் போய், ஏய் ! உங்க மொழிக்கெல்லாம் தாய்மொழி நம்ம தமிழ்மொழி. ஞாபகம் வச்சிக்கோ ! என்று அடித்து உசுப்பிவிட்டது தான் பிரச்னை.

அண்மையில் சமூக வலைத்தளங்களில் தமிழில் இருந்து தான் தென்னிந்திய மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகள் தோன்றின என்று ஒரு பக்கம், அப்படி இல்லை என்று இன்னொரு பக்கம் என்று முடியவே முடியாத விவாதங்கள். இன்னும் ஆறாத சூடு.

உண்மையில் மேல் குறிப்பிட்ட மொழிகளின் அடித்தளம் தமிழ் தானோ? இந்த சமயத்தில் திராவிட மொழிகள் (The Dravidian Languages) என்கிற தலைப்பில் மொழி அறிவியலாளர், பேராசிரியர் பத்ரிராஜு கிருஷ்ணமூர்த்தி தொகுத்த ஆய்வேடு கிடைத்தது.

அதை வாசித்துப் புரிந்து கொள்வது மிகக் கடினம். பேராசிரியரே ஏட்டின் முகவுரையில் இது மொழியியல் கலையில் (Linguistics) பட்டம் பெற்ற மாணவர்களையும் ஆய்வாளர்களையும் மனதில் வைத்து எழுதப்பட்ட ஏடு என்கிறார். ஆகவே ஏட்டில் ஆங்காங்கே கிடைத்த சில தகவல்கள் இங்கே :

(பேராசிரியரின் ஊகங்கள், முடிவுகள் சில தமிழ் ஆர்வலர்களுக்குத் திகைப்பை உண்டு பண்ணலாம். திராவிடம் என்னும் சொல்லே சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். இங்கே வருவது தமிழ்நாட்டு அரசியல் அல்ல. மேலும் சிலர், அதென்ன திராவிட மொழிகள்? தமிழ்மொழிக்கும் அதற்கும் தொடர்பில்லை. யாரோ வெள்ளைக்காரர்கள் சொன்னார்கள் என்பதற்காக அப்படியே ஏற்றுக்கொள்வதா என்று மல்லுக்கு வரலாம்.)

எது எப்படியோ, சான்றுகள் மூலம் திராவிட மொழிகள் எனும் கருத்தாக்கத்தை உலகின் மொழியியல் அறிஞர்கள் ஒருமனதாக எப்போதோ ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். அந்தப் புள்ளியில் இருந்து நாம் துவங்கலாம்.

திராவிட எனும் சொல் முதன்முதலாக, கிபி 7ம் நூற்றாண்டிலே சமஸ்கிருத ஏடான தந்திரவர்த்திகா எனும் ஏட்டில் அறிமுகமாகிறது. மேலும் மகாபாரதத்தில், பாரதா எழுதிய நியாயசாஸ்திராவில், மற்றும் இந்து சமய சட்டங்கள் மற்றும் சாதி அமைப்பு நியதிகள் அடங்கிய மனுஸ்மிருதியில் திராவிட, திராவிடி என்கிற சொற்கள் வருகின்றன.

அன்றைய காலகட்டத்தில் சாதாரண மக்கள் பேசிக்கொண்ட பிராகிருதி மொழியைச் சேர்ந்த ஒரு சிறிய கிளைமொழியாக திராவிடி இருந்ததாக மனுஸ்மிருதியில் சொல்லப்படுகிறது. திராவிடி மொழி பேய்பிசாசுகளின் மொழி என்றும் திராவிடர்கள் கருப்பான, அசிங்கமான மக்கள் என்றும் அதில் குறிப்புகள் உள்ளன.

கி.மு 7ம் நூற்றாண்டின் அய்த்ரேயபிராமணம் சொல்லும் கதை : ஆரிய முனிவர் விஸ்வாமித்திரர் அவருக்குப் பிறந்த 50 பிள்ளைகளும் உருப்படாமல் போனதால் ஒரு சாபம் போட்டாராம் : நீங்கள் எல்லாரும் ஆந்த்ரா, சபாரா, புந்ரா, புலிந்தா, முட்டிபா குழுக்கள் போல வேட்டையாடி அல்லது கிடைத்ததை உண்ணும் நாகரிகம் இல்லாத காட்டுவாசிகள் போல் ஆவீர்களாக!

பிள்ளைகள் காட்டுவாசிகளாக மாறினார்களோ இல்லையோ அது முக்கியமில்லை. இதில் கவனிக்க வேண்டியது : ஆந்த்ரா, சபாரா இரண்டும் திராவிட மொழிகள்.

ஆரியர்கள் சுமார் கிமு 1500 ஆண்டுகள் வாக்கில் இந்தியாவுக்குள் நுழைந்தபோது ஏற்கெனவே அங்கே திராவிடர்களின் குடியிருப்புகள் இருந்திருக்கின்றன.

ஈரான் நாட்டில் இருந்து ஆரியர்கள் இந்திரன் என்பவன் தலைமையில் இந்தியா வந்திருக்க வேண்டும். பாரதா, யது, புரு, துர்வாச, மருத் ஆயுத என்பவர்கள் இவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டும் என்று ஊகிக்கிறார் பேராசிரியர். அவர்களின் நிறம் வெண்மையாய் (?) இருந்தாலும் காலம் செல்லச் செல்ல உள்ளூர் மக்களுடன் கலந்ததால் அவர்கள் பெருமையாய் சொல்லிக்கொண்ட உடல் நிறம் மாறிப் போனது சோகம் தான் (அவர்களுக்கு).

திராவிட மொழிகள் சமஸ்கிருத மொழியில் இருந்து தோன்றியவை அல்ல. அவை தனித்துவம் கொண்டவை என்று இலக்கணம் மற்றும் மொழியியல் வழியாக நிறுவிய ராபர்ட் கால்டுவெல், அவரின் Comparative Grammar (1856) ஏட்டில் கிரேக்க, லத்தீன், இப்ரூ மொழிகளில் திராவிட மொழிச் சொற்கள் இருப்பதை நாம் கவனிக்க வேண்டும் என்கிறார்.

1816 களில் பிரான்சிஸ் எல்லிஸ் என்பவர் தமிழ், தெலுங்கு கன்னடம் ஆகிய மூன்று மொழிகளுக்கும் சமஸ்கிருதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவுடன் சொல்லியிருக்கிறார். இவர் ராபர்ட் கால்டுவெல்லுக்கு முன்பே தென்னிந்தியா வந்தவர்.

ஆரிய இனம் வேறு, வேறு திராவிடர் இனம் வேறு என்பது தவறு. உலகில் ஒன்றுடன் ஒன்று கலவாத தனித்தனி இனங்கள் என்று எதுவுமே கிடையாது என்கிறார் பேராசிரியர்.

திராவிட மொழிகள் உருவாக முன்பே அதற்கும் முந்திய ஓர் தொன்மை மொழி இருந்திருக்க வேண்டும் என்பது திராவிட ஆய்வாளர்களின் கணிப்பு. இதை Proto – Dravidian என்கிறார்கள். (முந்தைய திராவிடம் அல்லது முந்து திராவிடம் என இந்த மொழியை அழைக்கலாம்.)

ஆரியர்களின் வருகையின் போது வாழ்ந்தவர்கள் முந்து திராவிட மக்கள். இவர்கள் நகரங்கள் அமைத்து வாழ்ந்திருக்கிறார்கள். விவசாயம் முக்கிய தொழில். அந்த காலகட்டத்தில் இவர்கள் பண்பாட்டில் உயர்ந்த நிலையில் இருந்திருப்பது தெரிகிறது. மாறாக, ஆரியர்கள் ஆடுமாடுகளோடு, நாடோடிகளாக மேய்ச்சல் நிலங்கள் தேடி அலைந்திருக்கிறார்கள்.

முந்து திராவிடர்களின் கடவுள் நம்பிக்கைகள் எதுவாக இருந்திருக்கும்? ஒருவேளை மிருகங்களைப் பலி கொடுத்து வேண்டுதல்கள் செய்திருப்பார்களோ? தெரியாது.

பாகிஸ்தானில் இருக்கும் அரப்பா – மொகஞ்சதாரோ நாகரிகங்கள் முந்து திராவிடர்களுடையதா? அகழ்வுகளுக்கு இன்று வரை பதில் இல்லை. இந்த நாகரிகங்களின் எழுத்துகளின் பொருளும் தெரியவில்லை. எதிர்காலத்தில் தெரிந்து விடும் என்றால் திராவிடர்கள் வரலாறு கிமு 3000 ஆண்டுகளுக்கு மேலானது என்பது உறுதியாகிவிடும் என்கிறார் பேராசிரியர்.

ராபர்ட் கால்டுவெல்லின் ஆய்வுகள் ஆறு திராவிட மொழிகளோடு நின்றுவிட்டன. இன்றோ 26 மொழிகளைத் திராவிடக் குடும்பத்தில் சேர்த்திருக்கிறார்கள். இதில் நான்கு பிரிவுகள் உண்டு.

1) தென் திராவிடம் : இதில் தமிழ், மலையாளம், கன்னடம் உட்பட 11 மொழிகள்.

2) நடுவண் திராவிடம் : இதில் 6 மொழிகள்.

3) வட திராவிடம் : பாகிஸ்தானின் வடகோடியில் வழங்கும் பிராகுயி மொழி உட்பட 3 மொழிகள்.

4) நடுவண் தென் திராவிடம் : இதில் தெலுங்கு உட்பட 6 மொழிகள்.

மொழிகள் ஒலிக்கும் பாங்கு, வசன அமைப்பு, சொற்களின் ஒப்பீட்டு வடிவங்கள் என்று பல தரப்பட்ட களங்களில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகள் மூலம் இந்த நான்கு பிரிவுகளும் அமைகின்றன.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய பெரு மொழிகள் தவிர்த்து மிகுதி மொழிகளில் சில எழுத்து வடிவம் இல்லாதவை. சில மொழிகள் பேசும் மக்களின் எண்ணிக்கை குறைவு. விதிவிலக்குகளும் உண்டு. எடுத்துக்காட்டாக, துளு, குடகு மொழிகள் பேசும் மக்களின் பண்பாடுகளும், இலக்கிய நயங்களும் குறிப்பிடத் தக்கவை.

இனி தமிழ்மொழிக்கு வந்தால், செந்தமிழ் என்பது மேட்டுக்குடி மக்களின் மொழியாக இருக்க, சாதாரண, உழைக்கும் மக்கள் பேசும் மொழியாக கொடுந்தமிழ் இருந்திருக்கிறது.

மதுரை, திருநெல்வேலி மாவட்ட அகழாய்வுகளில், கி மு 2ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி (தமிழி) எழுத்துகள் கிடைத்திருக்கின்றன.

தெலுங்குமொழித் தடயங்கள் கி.பி 2ம் நூற்றாண்டில் இருந்து தெரியத் துவங்குகின்றன. கன்னடம் கி.பி 5ம் நூற்றாண்டில். மலையாளம் கி.பி 9ம் நூற்றாண்டில்.

அரப்பா – மொகஞ்சதாரோ நாகரிகங்களுக்கும் ஆரியர்களுக்கும் தொடர்பில்லை. ஆரியர் வருகைக்கு முன்பே இந்த நாகரிகங்கள் வீழ்ச்சி அடைந்துவிட்டன. அரப்பா மக்களுக்கு சிங்கம் தெரியாது. குதிரை தெரியாது. ஆரியர்களோ புலியைக் கண்டதில்லை. யானையைக் கண்டதில்லை. இவை ஒரு சில எடுத்துக்காட்டுகள்.

அரப்பா – மொகஞ்சதாரோ நாகரிகங்களின் காலம் கிமு.2500-1700 ஆண்டுகளுக்கு இடைப்பட்டது. அவர்களின் எழுத்துக்களில் ஏறக்குறைய 3000 முத்திரைகளும் 419 குறியீடுகளும் இருப்பது மட்டுமல்ல, சில வாசிப்புகள் இடமிருந்து வலமாக வரவேண்டும். சில இடமிருந்து வலமாக வரவேண்டும்.

பாரதா எழுதிய நியாயசாஸ்திரா கி.மு 4ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அதில் “விபாசா” எனும் சொல்லாடலில் (விபாசா என்றால் சமஸ்கிருதமோ பிராகிருத மொழியோ அல்லாத அந்நிய மொழிகள் என்று பொருள்) சில ஆதிவாசிகள் பேசும் மொழிகள் திரமிலா, ஆந்த்ரா என்று வருகிறது.

இதில் திரமிலா (Dramila) முந்து தமிழைக் குறிக்கிறது. ஆந்த்ரா முந்து தெலுங்கு மொழியைக் குறிக்கிறது. இந்த காலகட்டத்தையும் கி.மு 7ம் நூற்றாண்டின் அய்த்ரேயபிராமணம் சொல்வதையும் வைத்துப் பார்த்தால் ஆகக் குறைந்தது கி.மு 11 நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே முந்து தமிழும் முந்து தெலுங்கும் இருந்திருக்கின்றன என்று மதிப்பிடலாம் என்கிறார் அவர்.

முந்து தமிழ்மொழியில் இருந்து தமிழ்மொழி சுமார் கி.மு 5ம் நூற்றாண்டுகள் வாக்கில் வேறுபடத் துவங்குகிறது. தமிழ்ச் சங்க கால இலக்கியங்களின் வரவு கி.மு 2 அல்லது 3 நூற்றாண்டுகள் என்று வைத்துக் கொண்டால் தமிழ் பிரிந்த காலத்தை கி.மு 5ம் நூற்றாண்டுகள் என்று மதிப்பிடுகிறார் பேராசிரியர்.

முந்து தமிழும் கன்னடம், கோரகா, துளு ஆகிய மொழிகளும் கி.மு 6ம் நூற்றாண்டுகள் வாக்கில் ஒவ்வொன்றாகப் பிரிந்து போகத் துவங்கின என்பது அவரின் இன்னோர் கணிப்பு .

முந்து தென் திராவிடமொழியில் (Southern Proto – Dravidian) இருந்து பிரிந்த முந்து தமிழ்மொழி (Pre -Tamil) இன்னும் 11 மொழிகளாக மாறுகிறது (இன்று வழக்கத்தில் இருக்கும் தமிழ், மலையாளம், கன்னடம், இருளா, குருளே, குறும்பா, கொடகு , தோடா, கோடா, படகு, கோரகா).

கி.மு 5ம் நூற்றாண்டுக்குள் சமஸ்கிருத சொற்கள் தமிழுக்குள் நுழையத் துவங்கிவிட்டன. கி.மு 1 – 2 ம் நூற்றாண்டு இடைவெளியில் தொகுத்ததாக நம்பப்படும் தொல்காப்பியத்தில் சமஸ்கிருத வார்த்தைகள் இருக்கின்றன.

தென்னிந்தியாவில் மகாபாரதம், ராமாயணம் போன்ற காவியங்களின் வரவுகள் இன்னும் வைணவமும் சைவமும் சேர்ந்து சம்ஸ்கிருத மொழிக்கு வலிமை சேர்த்தன.

கல்வெட்டுகளில் உள்ளூர் பிரபலங்களின் பெயர்கள் தமிழில் இருக்க, மன்னர்களின் பெயர்கள் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன : குலோத்துங்க, நிர்ப்பதுங்க, ராஜராஜ …

1900 ஆண்டு வாக்கில் இருந்த தமிழ் வசன நடையில் சுமார் 45-50 விழுக்காடு சம்ஸ்கிருத சொற்களே.

சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்துத் தமிழில் “தனித்தமிழ் இயக்கம்” தோன்றியதில் 1975 ஆண்டு வாக்கில் அது 20 விழுக்காடாக சுருங்கியது.

வேற்று மொழிகள் தமிழில் வந்து கலப்பதில் வெவ்வேறு கருத்துகள் முன்வைக்கப் படுகின்றன. நல்லது தானே என்று ஒரு சாரார். மொழியின் தூய்மை அழிந்து விடுமே என்று ஒரு சாரார். ஒரு வரம்புக்குள் இருந்தால் நல்…. என்று இழுப்பவர்கள் இன்னோர் சாரார்.

சமஸ்கிருதம் தவிர, ஆயிரத்துக்கு மேற்பட்ட உருது சொற்கள் தமிழில் கலந்திருக்கின்றன. (குமாஸ்தா, ஜில்லா, தாலுகா…)

அடுத்து போர்த்துக்கேய சொற்கள் : சோப்பு, டவல், சாவி, வாத்து, அலமாரி …

ஆனால் எதையும் பற்றிக் கவலைப்படாமல் கன்னடமும், தெலுங்கும், மலையாளமும் போட்டி போட்டபடி சமஸ்கிருத சொற்களைத் தாராளமாக உள்வாங்கிக் கொண்டிருக்கின்றன.

ஒரு காலகட்டத்தில் “பச்ச மலையாளம்” என்று கேரளத்தில் ஓர் இயக்கம் துவங்கி சமஸ்கிருதத்துக்கு ஒரு வரம்பு போடப் பார்த்தது. அது வெற்றி பெறாமல் போனது ஒரு புறம் இருக்க, இன்றைய மலையாள இலக்கியம் சமஸ்கிருத சொற்களை இன்னும் தீவிரமாகப் பயன்படுத்துகிறது.

தமிழ் பிராமி (தமிழி ) எழுத்துகளின் முன்னோடி கி.மு 3ம் நூற்றாண்டின் அசோக காலத்து பிராமி எழுத்துகள் என்பது பேராசிரியரின் ஊகம். வட நாட்டில் இருந்து தென்னிந்தியா வந்த பவுத்த, சமணத் துறவிகளின் செல்வாக்கினால் எழுத்து வடிவங்கள் வட்டெழுத்துகளாக மாற்றம் அடைந்திருக்கலாம்.

பின்பு ஆட்சிக்கு வந்த பல்லவ மன்னர்கள் வட்டெழுத்துக்களை மாற்றினார்கள். கிரந்த எழுத்துகளை (ஹ,ஷ, ஜ, ஸ, க்ஷ) தமிழில் புகுத்தினார்கள்.

தமிழிலும் மலையாளத்திலும் அசை (syllable) முந்து தமிழில் இருந்தது போலவே மாற்றம் அடையாமல் அப்படியே இருப்பதை சுட்டிக் காட்டுகிறார் பேராசிரியர்.

பேராசிரியர் காலக் கணிப்புகள் எதையும் இது தான் என்று அறுதியிட்டுச் சொல்லவில்லை. என் ஊகங்களை எதிர்கால ஆய்வுகள் மாற்றலாம் அல்லது உறுதி செய்யலாம் என்கிறார்.

எதுவாக இருந்தாலும் திராவிட மொழிகளின் ஆய்வுகள் இன்னும் குழந்தைப் பருவத்திலேயே இருக்கின்றன என்கிற ஆதங்கத்தையும் பதிவு செய்கிறார்.

இந்திய நாட்டின் தொல்குடிகள் திராவிடர்களே, ஆரியர்கள் அல்ல என்று நிறுவுவதில் பேராசிரியர் பெருமுனைப்பு காட்டியிருக்கிறார். தமிழ்நாடு தவிர்த்து, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மற்றைய தென்னிந்திய மாநில மக்கள் அவர்கள் மொழிகளின் ஊற்றுக்கண் தெரியாமல் வாழ்வது ஓர் முரண்நகை.

ஏட்டின் முதல் பதிப்பு 2003ல் வெளிவந்தது. கடந்த ஆண்டு (2024) தமிழ்நாட்டில் கீழடி அகழாய்வு ஆய்வறிக்கை வெளிவந்திருப்பது அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனென்றால் 2012ல் பேராசிரியர் காலமாகிவிட்டார்.

பேராசிரியரின் தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் முடிந்தளவு அவர் எந்தப் பக்கமும் சாராமல் சமநிலையுடன் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன்.

வந்துவிடு வட்டமிடு

இந்த உலகில் முதலாளிகளின் சாம்ராஜ்யம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும். பிறகு சோஷலிசம் மலர்ந்துவிடும். அப்படியே சமதர்ம யுகத்துக்குள் நுழைந்துவிடலாம் என்பதெல்லாம் புராணக் கதைகள் போல் வெறும் குருட்டு நம்பிக்கைகள். உண்மையில் இன்றைய உலகம் இன்றிருப்பதை விடப் படுமோசமான ஒரு சூழ்நிலையை நோக்கி நகரத் துவங்கிவிட்டது. அதை நாமும் சந்தோஷமாக வரவேற்றுக் கொண்டிருக்கிறோம் என்கிறார் பொருளியலாளர் யானிஸ் வரூஃபாக்கிஸ்.

இன்றைய பொருளியல் போக்கு பற்றி இவர் எழுதிய Technofeudalism ஏடு ஆளும் அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறதோ இல்லையோ பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எரிச்சலைக் கொடுத்திருக்கிறது.

பேராசிரியர் கார்ல் மார்க்சின் சீடர். அவர், ஏட்டின் முகவுரையில் இரண்டு கருப்பொருள்களைக் குறிப்பிடுகிறார். முதலாவது : இணையம் மக்கள் கைகளிலிருந்து தனியார் கைகளுக்குப் போன கதை . அதாவது அமெரிக்கா, சீனா இரண்டிலும் உள்ள டெக் பெரும் புள்ளிகள் இணையத்தைப் பங்கு போட்டுக் கொண்ட கதை. அடுத்து, 2008 இல் ஏற்பட்ட பெரும் நிதி நெருக்கடிக்குத் தீர்வு காணப்போகிறோம் என்று சொல்லியபடி மேற்குலக அரசுகளும் மத்திய வங்கிகளும் அடித்த முட்டாள்த்தனமான கூத்து.

மேல் சொன்ன நிகழ்வுகளால் பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் முன்னைய சின்ன வளையத்தில் இருந்து வெளியேறி இப்போ ஒரு பெரிய வளையத்தில் இருந்து கும்மியடிக்கிறார்கள் என்கிறார் பேராசிரியர்.

செயற்கை நுண்ணறிவு நல்லதா கெட்டதா என்று பட்டி மன்றங்களில் விவாதங்கள் இன்று பொறி பறக்கின்றன. தெரிந்ததே. ஆகவே ஏட்டின் தலைப்பைப் பார்த்துவிட்டு (Technofeudalism) இவரும் ஏதோ சொல்லப் போகிறார் என்று நினைத்தால் தப்பு. செயற்கை நுண்ணறிவு பாசறைக்குள் நாம் ஏற்கெனவே நுழைந்துவிட்டோமே. தெரியவில்லை? இப்போ போய் … கேள்வி கேட்கிறார்.

இந்த விவாதத்தில் மாட்டிக் கொள்ளாமல் அதன் பின்னால் யார் யார் ஒளிந்திருக்கிறார்கள், இந்தப் புதிய பிரபுக்கள் நம்மை ஏய்க்க என்னென்ன உத்திகளைப் பயன்படுத்துகிறார்கள், நாம் ஏன் பண்ணை அடிமைகள் போல் ஆகிவிட்டோம் என்று ஆராய்வதே ஏட்டின் நோக்கம்.

நமக்குத் தெரிந்த மூலதனம் என்ன என்றால் நாம் கேள்விப்பட்ட பொருளாதாரத்தில் முதலீடாகப் போடப்பட்ட பணம், எந்திரங்கள், ஆலை, அது இயங்கும் நிலப்பகுதியின் மதிப்பு, இன்னும் பல .. என்று இவைகளின் மொத்தப் பெறுமானம் தான் மூலதனம் என்று அறிந்திருக்கிறோம்.

ஆனால் பேராசிரியர் விவரிக்கும் மூலதனம் (cloud capital) கொஞ்சம் இசகு பிசகானது என்றாலும் அதன் உள்ளே போகப் போகப் புரிகிறது. இணையத்தில் இயங்கும் எந்திர வலைப்பின்னல், செயற்கை நுண்ணறிவை இயக்கும் கணனி விதிமுறைகளின் தொகுப்பு, உலகளாவிய தரவுகளில் இருந்து சேமித்த தகவல் முடிவுகள் .. இவை எல்லாம் சேர்ந்த மொத்தப் பெறுமானம் cloud மூலதனம். ஆங்கிலத்தில் சொன்னால் : Cloud capital is the total value of network machinery, AI algorithms and data derived from worldly information.

பேராசிரியர் சொல்லும் மூலதனம் வித்தியாசமானது. இன்று இணையம் உலகை ஆள்கிறது. ஆகவே எவர் கையில் தரவுகள் கூடுதலாகக் குவிகிறதோ அவர் கையில் அதிகாரமும் பணமும் அபரிமிதமாகக் குவிகிறது என்று பொருள்.

நீங்கள் எப்படியான ஆள்? உங்கள் தேவைகள் என்ன? உங்களுக்குள் ரகசியமாக இருக்கும் ஆசைகள் என்ன? எதை அவசியமில்லாதது என்று நினைக்கிறீர்கள்?.. இப்படி இப்படி முழுத் தகவல்களும் என் கைக்குள் வந்துவிட்டால் நான் தான் ராஜா அல்லது ராணி. நான் சொல்கிறபடி நீங்கள் ஆடுவீர்கள். பாடுவீர்கள். என் கட்டளைப்படி எது வேண்டுமானாலும் செய்வீர்கள். இது தான் பேராசிரியர் சொல்லும் மூலதனத்தில் மறைந்திருக்கும் சூட்சுமம்.

முதலில் பணம் போட்டு முதலீடு செய்வோம். பிறகு அதில் லாபம் பார்ப்போம் என்னும் வழக்கமான முதலாளித்துவம் அந்தக் காலம் போல் இன்று இல்லை. பேராசிரியரின் பார்வையில், “பழைய முதலாளித்துவம் தற்கொலை செய்து கொண்டுவிட்டது. அந்த இடத்துக்கு cloud மூலதனம் வந்துவிட்டது. இங்கே லாபம் முக்கியமில்லை. “வாடகை” தான் (rent) முக்கியம்.”

cloud மூலதனத்தை பெருந்தொகையாக வைத்திருக்கும் பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் இன்று மகாப் பிரபுக்களாக மாற்றம் அடைந்து கொண்டிருக்கிறார்கள். அரசுகளே அவர்களிடம் அறிவுரைகள் கேட்டு நடக்கும் அளவுக்கு ரொம்ப மேலே போய்விட்டார்கள். அவர்களின் கீழே பணியாற்றும் அவர்களின் “படைப்பிரிவுகளாக” இன்றைய டெக் பொறியியலாளர்கள் மாறியிருக்கிறார்கள். (இவர்களுக்கு cloud proles என்று பேர் சூட்டியிருக்கிறார் பேராசிரியர்.) அந்த காலத்துப் பண்ணை அடிமைகள் போல் நாம் மாறியிருக்கிறோம். (சாதா ஆட்களான நமக்கு அவர் வைத்த பேர் : cloud serfs.)

இருந்தும் ஒரு வித்தியாசம் : அன்றைய அடிமைகள் கண்ணீர் விட்டபடி கொடுமைகளை எதிர்கொண்டார்கள். இன்று மகாப் பிரபுக்கள், பிரபுக்கள், எடுபிடி பிரபுக்கள் என்று பல ரேஞ்சுகளில் இருக்கும் பிரபுக்களுக்கு அவரவர் வசதிப்படி படைப்பிரிவுகளும் இருக்கின்றன. சந்தோஷமாக நாம் அவர்களின் அடிமைகளாகி மனமுவந்து வாழ்க்கை நடத்துகிறோம்.

அதென்ன “வாடகை” ? அது எப்படி செயல்படுகிறது?

ஏகப்பட்ட செயலிகள் (apps), மென்பொருள்கள் (software), மென்பொருள் வடிவமைப்பாளர்கள், code எழுதும் விற்பன்னர்கள், புதுப்புது games உருவாக்குவோர்.. என்று இணையம் அவசர கதியில் இயங்கிக் கொண்டே இருக்கிறது. நீங்கள் எந்தப் பொருளை அல்லது சேவையை வாங்கினால் என்ன, விற்றால் என்ன, உற்பத்தி செய்தால் என்ன அல்லது ஜாலியாக கேம் விளையாடினால் என்ன, அனைத்துக்கும் செயலிகளும் மென்பொருள்களும் ஓடிவந்து உதவக் காத்திருக்கின்றன.

இந்த சேவைகளுக்கு ஒரு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் சிறு துளியோ அல்லது பெருந்துளியோ எதுவோ வெள்ளம் போல் பெருகுகிறது. அதில் டெக் பொறியியலாளர்களுக்குக் கொஞ்சம், பிரபுக்களின் முகவர்களுக்குக் கொஞ்சம் என்று கோயில் தீர்த்தம் போல் கொடுக்கப்படுகிறது. மீதி 99 விழுக்காடு கடைசியில் கார்ப்பரேட் முதலாளிகளின் பைகளில் மொத்தமாகப் போய்ச் சேர்கிறது என்கிறார் பேராசிரியர். ஆச்சரியமாக இல்லை?

எந்த வணிகத்திலும் மூலப் பொருள்களின் விலைகளை சமாளித்து, ஊழியர்களைத் தாஜா பண்ணி சம்பளம் கொடுத்து … இப்படிப் பல சவால்களை சந்தித்துத் தான் லாபம் பார்க்கலாம். ஆனால் வாடகை என்பது வணிகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் மறைந்திருக்கிறது. இன்றைய வணிகம் பெருமளவில் இணையத்தின் ஊடாக நடப்பதால் எல்லா நடப்புகளுக்கும் ஏற்கெனவே தீர்மானித்தபடி ஒரு “குறிப்பிட்ட தொகை” அடங்கலாக விலை இருக்கும். நீங்கள் நன்றாக பிசினஸ் செய்தாலென்ன, நாசமாய்ப் போனாலென்ன அந்தத் தொகை ஆட்டோமெட்டிக்காக மகாப் பிரபுக்களிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது.

டெக் பொறியியலாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவு நுட்பமாக உதவுகிறது. இணையத்துக்குள் நுழைய வானத்தில் சுற்றும் துணைக்கோள்கள் (satellites) அல்லது கடலுக்கடியில் போடப்பட்டிருக்கும் கேபிள்கள் இருக்கின்றன. இவை அனைத்தின் சொந்தக்காரர்கள் கார்ப்பரேட் மகாப் பிரபுக்கள்.

முதலாளிகள் பொருள்களை அல்லது சேவைகளை விற்றுப் பணம் சம்பாதிக்க இணையத்தில், தொலைக்காட்சிகளில் காசைக் கொட்டி விளம்பரங்கள் செய்கிறார்கள். சாலைகளில் பிரம்மாண்டமான கட் அவுட்கள் வைக்கிறார்கள். ஆனால் இவர்கள் என்ன தான் கூவினாலும் Alexa மற்றும் Google Assistant என்கிற இரண்டு பெண் குரல்களுக்கு ஈடாகாது என்பது உண்மை தான். இன்னும் ChatGPT யையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இருந்தாலும் இவை உணர்ச்சியுள்ள மாந்தர்கள் போல நடிப்பதில் கில்லாடிகள். நம்மிடம் உற்ற தோழன் அல்லது தோழி போல் பேசி நம் உள்ளத்தை எடை போடுகின்றன. தகவல்களை அந்தந்தப் பிரபுக்களின் டெக் பொறியியலாளர்களுக்கு அனுப்புகின்றன.

இந்த செயற்கை நுண்ணறிவு முதலில் நம்மிடமிருந்து பயின்று கொள்கிறது. ஒரு கட்டம் வந்ததும் அதன் வழியில் நம்மைப் பயிற்றுவிக்கத் துவங்குகிறது. இது தான் மகாப் பிரபுக்கள் எதிர்பார்க்கும் நிலை. இந்த அபாயகரமான சூழலுக்குள் நாம் மூழ்கத் துவங்கும் போது நம் “சுயத்தை” இழக்கிறோம். பிரபுக்கள் கொண்டு வந்து திணிப்பதை மறுபேச்சின்றி ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறோம். ஆபத்து வருகிறது என்று தெரிந்தும் அலட்சியம் செய்கிறோமா?

ID அட்டை மூலம் நாம் என்னென்ன பொருள்கள் வாங்குகிறோம் என்பது நம் வங்கிக்குத் தெரியும் . நம் குடும்பம் மற்றும் நண்பர்கள் விவகாரங்கள், விவரங்கள் அனைத்தும் முகநூலுக்குத் தெரியும். நம் வாழ்க்கையின் சின்னச் சின்னத் தருணங்களில் தோன்றும் உணர்ச்சிப் பெருக்கை Twitter (இன்றைய X) அறிந்து வைத்திருக்கிறது. Apple, Google இரண்டும் நாம் எதைப் பார்க்கிறோம், எதை வாசிக்கிறோம், எதை வாங்குகிறோம் என்று துல்லியமான கணிப்புகள் வைத்திருக்கின்றன.

இந்த செயற்கை நுண்ணறிவு என்ன தகவல்கள் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளட்டும். ஆனால் தகவல்கள் யாருக்கு சொந்தம் என்பதில் தான் என் கவலை என்கிறார் பேராசிரியர்.

Cloud மூலதனம் எப்போ தொடங்கியது? இதில் இணையத்தின் சொந்தக் கதை இணைந்திருக்கிறது. முதலில் இணையம் அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதை அணுகும் கணனி நெறிமுறை (protocol) TCP/IP, POP, IMAP என்று காலப்போக்கில் மாற்றங்கள் அடைந்து இன்று நாம் அறிந்த HTTP இல் வந்து நிற்கிறது.

துவக்க கால கணனியிடம் படிப்படியான கட்டளைகளைக் கொடுத்து (இந்த வழிமுறைகளுக்கு algorithms என்று பேர்) ஒரு குறிப்பிட்ட ஒரு முடிவுக்கு வா என்று அதை வடிவமைத்த டெக் பொறியியலாளர்கள் ஏவியதை மின்னல் வேகத்தில் அது செய்து காட்டியது. இது கணனிகளின் வளர்ச்சியில் முதல் படி. இந்த செய்தி Wall Street போன்ற நிதிச் சந்தைகளின் பிதாமகர்கள் காதுக்குப் போயிற்று. அடடே ! கணனி மூலம் நம்மிடம் இருக்கும் பணத்தை இன்னும் பெருக்கலாமே என்று அவர்கள் யோசிக்கத் துவங்கினார்கள்.

காலம் போகப் போக, தொழில்நுட்ப வளர்ச்சியில் கணனிகளின் பாய்ச்சல் இன்னும் அதிகரித்தது. ஒரு முடிவு மட்டுமல்ல, பல முடிவுகளை எடு. தற்செயலாக, வெளிப்புற சக்திகள் அந்த முடிவுகளில் தாக்கங்கள் ஏற்படுத்தும் என்றால் எது சிறந்த முடிவாக இருக்கும்? சொல்லு ராஜா என்றதும் அதையும் செய்து காட்டியது கணனி. இது இரண்டாவது கட்டம்.

மூன்றாவது கட்டத்தில், கட்டளைகள் தருகிறோம். உன் முடிவுகளை சீர் தூக்கிப் பார். என்னென்ன தவறுகள் செய்தாய்? அடுத்த தடவை இன்னும் சிறப்பாகச் செய்ய முடியுமா? உன்னைப் புதுப்பித்துக் கொள்ள முடியுமா?

அதாவது, மனிதர்களின் மூளை நரம்புகள் செயல்படுவதைப் போல் ஏறக்குறைய, சிக்கலான ஓர் படிநிலைக்கு ஏற்றி வந்திருக்கிறது செயற்கை நுண்ணறிவின் செயல்திறன்.

அப்படி என்றால் நம்மைப்போல் செயற்கை நுண்ணறிவுக்கென்று ஓர் மனநிலை ஏற்பட்டுவிட்டதா? (கணனி அறிவியல் மொழியில் இதை singularity என்கிறார்கள்.) அல்லது அந்த நிலையை விரைவில் அடையப் போகிறதா? அது மனித குலத்துக்கு ஆபத்தாக வந்து முடியுமா? யாருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை.

பேராசிரியர் கருத்தின் படி, செயற்கை நுண்ணறிவு சுயமாக சிந்திக்க ஆரம்பித்தாலும் அதற்கு மனிதர்கள் போல் உணர்வுகள் இருக்கப் போவதில்லை. அவரவர் பிரபுக்களுக்கு ஏவல் செய்யும் வெறும் எந்திரங்களாகவே இருக்கும். வேண்டுமானால் மனிதர்களின் வேலைகளைப் பறித்துக் கொள்ளலாம். அதை வடிவமைத்த பொறியலாளர்களையே வீட்டுக்கு அனுப்பலாம். அதை இப்போதே கண்கூடாகக் காண்கிறோமே.

தினசரி Microsoft, Google, amazon என்று ஏகப்பட்ட பிரபுக்கள் அவர்களின் டெக் ஊழியர்களை பல்லாயிரக்கணக்கில் வேறு வேலை தேடுங்கள் என்று சீட்டுக் கிழிக்கிறார்களே.

இத்தனைக்கும் எப்படி செயற்கை நுண்ணறிவு இயங்குகிறது? யாருக்கும் தெரியாது. algorithms எழுதும் டெக் பொறியியலாளர்களுக்கே தெரியாது – அன்றிலிருந்து இன்று வரை.

அமெரிக்காவின் பிரபுக்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் பேராசிரியர் சீனாவின் பிரபுக்களையும் பட்டியல் போடத் தவறவில்லை. ஏன் என்றால் இன்று பொருளாதாரத்தில் அமெரிக்காவுக்கே தண்ணி காட்டும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது சீனா.

உதாரணமாக, TikTok, AliBaba, Tencent, WeChat …. என்று சீனாவிலும் மகாப் பிரபுக்கள் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லாரும் சீன அரசுக்கு அடங்கி நடக்கிறார்கள். சீனா ஓர் சர்வாதிகார நாடு. எனவே அரசு அதன் மக்களை உளவு பார்க்க, அளவுக்கு மிஞ்சினால் தூக்கி உள்ளே போட . . என்பது மாதிரி செயல்களுக்கு அந்த நாட்டின் செயற்கை நுண்ணறிவு மிகவும் துணை போகிறது என்பதில் அய்யமில்லை.

அய்ரோப்பா இதில் வராதா என்று பேராசிரியரிடம் கேட்பது மடத்தனம். நாம் பெரிய சைஸ் திமிங்கிலங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். சின்ன சைஸ் சுறாக்கள், மீன்கள் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?

(மேற்கு அய்ரோப்பிய நாடுகளின் தொழிலதிபர்கள் கிடைக்கும் லாபத்தை அமெரிக்காவில் கொண்டு போய்க் கொட்டி அமெரிக்க டாலர்களில் மாற்றி வைத்துக் கொள்கிறார்களே தவிர, அவர்களுக்கு வேறு யோசனைகள் இருப்பதாகத் தெரியவில்லை என்கிறார் பேராசிரியர்.)

யார் இந்த மகாப் பிரபுக்கள் என்றால் Amazon, Google, Microsoft .. என்று பெரும் பட்டியலே நீள்கிறது.

மகாப் பிரபுக்களின் வலையிலிருந்து எப்படி நம்மைத் தற்காத்துக் கொள்வது? பக்கம் 181 முதல் 210 வரை அவரின் யோசனைகள் நம்மை யோசிக்க வைக்கின்றன. சில நடைமுறை சாத்தியமானவை. முயன்றால் சில திட்டங்களை அரசமட்டத்தில் சட்டரீதியாக அமுல்படுத்த முடியும். மற்றவை எட்டாத கனிகள்.

எது எப்படியோ, தர்க்க ரீதியாக, ஏராளமான தகவல்கள் மூலம் பேராசிரியர் அவரின் சிந்தனைகளை முன் வைக்கிறார். அதே சமயம் அவருக்கு எதிர்ப்புக் குரல்களும் இல்லாமல் இல்லை. இவர்களை முன்னால் அனுப்பிவிட்டுப் பின்னால் இருந்து வேடிக்கை பார்க்கிறார்களோ கார்ப்பரேட் பிரபுக்கள்?

என்ன ஆனாலும் சாதாரண மக்கள் ஏமாந்துவிடக் கூடாது. பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் பசப்பு வார்த்தைகளில் மயங்கிவிடக் கூடாது. அவர்களின் கைகளில் ஆடும் பொம்மைகளாக மாறிவிடக் கூடாது என்கிற அவரின் சமூக நீதிக்கான சிந்தனையும் அக்கறையும் ஏட்டின் ஊடே தெரிகின்றன.

ஏட்டின் ஒரு சில பக்கங்களே இந்த அறிமுகத்தில் வந்தாலும் பொருளியல் நடப்புகளைத் தெளிவுடன் விளக்கும் பாங்கு, கணீர் என்று முழங்கும் அழுத்தம் திருத்தமான வார்த்தைகள், ஆங்கில சொல்வளம்… மனதில் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன.

எங்கிருந்தோ வந்தாள்

மதமாக இருக்கட்டும். மொழியாக இருக்கட்டும். இலக்கியங்களாக இருக்கட்டும். எதுவாக இருந்தாலும் ஒரு சமுதாயத்தின் பண்பாடுகள் வேறு பண்பாடுகளுக்குள் நுழையும்போது மாற்றங்கள் ஏற்படுவதில் வியப்பில்லை.

கண்ணகி இலங்கையில் எப்போது காலடி எடுத்து வைத்தாள்? ஒவ்வொரு காலகட்டங்களிலும் என்னென்ன உருவெடுத்தாள்? தமிழ்நாட்டின், இலங்கையின் அரசியலில், அந்தந்த மக்கள் வாழ்வில் எப்படிக் கலந்தாள்?

இலங்கையின் மதிப்புமிக்க மானிடவியலாளர், கணநாத் ஒபேசேகர எழுதிய ” The Cult of the Goddess Pattini ” ஏட்டில் இருந்து சில தகவல்கள் இங்கே வருகின்றன. புகழ் பெற்ற அமெரிக்க பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் மானிடவியல் பிரிவின் தலைவராக இருந்தவர் பேராசிரியர். ஒய்வு பெற்ற பிறகும் தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கிறார். (இலங்கையில் அவருக்கு ஆதரவும் உண்டு. எதிர்ப்பும் உண்டு.)

வாசிக்க வாசிக்க அதிர்ச்சி. காரணம் : நாம் கேள்விப்பட்ட சிலப்பதிகாரக் கதையை, அதனோடு தொடர்புபட்ட சேரமன்னன் செங்குட்டுவன், சோழமன்னன் கரிகாலன், இலங்கை மன்னன் கஜபாகு இன்னும் பல மன்னர்கள் வரலாறுகளை அப்படியே கலைத்துப் போட்டிருக்கிறார் பேராசிரியர்.

இலங்கையின் நாட்டுப் பாடல்கள், நாட்டுக் கூத்துகள் (தமிழ், சிங்களம் இரண்டிலும்) ஏட்டில் பெருமளவு விரிகின்றன. பவுத்த காவியங்கள், சிங்கள இலக்கிய ஏடுகளில் இருந்து கூர்மையுடன் உண்மை வரலாற்று நிகழ்வுகளைப் பிரித்தெடுக்க முயன்றிருக்கிறார் பேராசிரியர்.

கண்ணகி கோயில்கள், நாட்டுக் கூத்துகள் நடக்கும் இலங்கையின் பல்வேறு ஊர்களுக்கும் போய்த் தகவல்கள் சேகரித்திருக்கிறார். கேரளம் போயிருக்கிறார். அங்கே கொடுங்கோளூரில் சேரன் செங்குட்டுவன் கட்டியதாக நம்பப்படும் கண்ணகி கோயில் மற்றும் அங்கிருக்கும் மக்களின் நம்பிக்கைகள், தகவல்களைத் திரட்டி இருக்கிறார்.

சிங்களத்தில் பத்தினி தெய்யோ என்பது கண்ணகி தெய்வம். இலங்கையின் பவுத்தத்தில் கண்ணகி மட்டுமல்ல, பல்வேறு தெய்வங்கள் உண்டு. புத்தர் உயர்நிலையில் இருக்க, அனைத்து தெய்வங்களும் அவரின் கீழ் வருகிறார்கள். அந்தக் கோயில்களில் பிக்குகள் இல்லை. பூசாரிகள் (கப்புராளைகள்) இருக்கிறார்கள். பூசைகள் சிங்களத்திலோ, பாளி மொழியிலோ ஏன் சமஸ்கிருத சுலோகங்களில் கூட நடக்கின்றன.

கண்ணகி நாட்டுக்கூத்து இதே கப்புராளைகளால் சிங்கள மொழியில் ஆடப்படுகிறது. கூத்துகள் ஒரு மண்டபத்தில் அல்லது தென்னோலைக் கொட்டகைகளில் அல்லது பொதுவெளியில் கூட ஆடப்படலாம். கிழக்கிலங்கையில் தமிழில் கண்ணகி கூத்துப் பாடல்கள் (சிலப்பதிகாரத்தின் வழக்குரை காதை) அரங்கேறுவதைப் பேராசிரியர் பதிவு செய்திருக்கிறார்.

இருந்தும், இன்று இவ்வகை நாட்டார் ஆடல், பாடல் கலைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போய்விட்டன என்பதையும் கவலையுடன் குறிப்பிட்டிருக்கிறார். காரணம் தெரிந்ததே.

தமிழ்நாட்டில் கண்ணகி முதலில் ஒரு பவுத்த-சமண தெய்வமாகவே தோன்றியிருக்கிறாள். வைதீக (பிராமணீய) மதத்துக்கும், திராவிட மதங்களுக்கும், அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதற்கு ஆதாரங்கள் காட்டுகிறார்.

இலங்கையில் கண்ணகி வழிபாடு தொடரவேண்டும் என்பதற்காக பவுத்த தொன்மங்களில் சுவாரஸ்யமான ஒரு மாம்பழக் கதை இருக்கிறது. புத்தர் பரிநிர்வாணம் அடைந்த அதே சமயத்திலேயே கண்ணகியும் பிறவாத நிலை அடைந்திருக்கிறாள். ஆனால் பெண்கள் பரிநிர்வாணம் அடைய வேண்டுமானால் மீண்டும் ஒரு ஆணாகப் பிறந்து தான் அதற்கு முயற்சி செய்யவேண்டும் என்னும் நியதி பவுத்தத்தில் இருப்பதால் தொடர்ந்து தியானத்தில் மூழ்கி இருக்கிறாள்.

இந்த சமயம் பார்த்து சக்கரன் கடவுள் (இலங்கை பவுத்தத்தில் இவர் முக்கியமான தெய்வம்) அவள் முன் தோன்றி, “பாண்டிய மன்னன் மோசமானவன். சிவன் கடவுளின் மூன்றாவது கண் போல் அவனுக்கும் கிடைத்துவிட்டால் பூமியையே ஆளலாமே என்று கணக்குப் போடுகிறான். அவனை மட்டம் தட்ட, நீ மீண்டும் பூமியில் போய்ப் பிறக்கவேண்டும்” என்கிறார்.

கண்ணகி ஒத்துக் கொள்கிறாள். அவளை ஒரு தங்க மாம்பழம் போல் உருமாற்றிப் பாண்டியன் வீட்டுத் தோட்டத்தில் தொங்கவிடுகிறார் சக்கரன். பழம் ஜொலிக்கிறது. ஆனால் யாராலும் பறிக்க முடியவில்லை. சக்கரன் யாருக்கும் தெரியாதபடி, அவரே அம்பு எய்து மாம்பழத்தை அதுவும் பாண்டியனின் நடுக்கண்ணில் விழ வைக்கிறார். அவன் பேயோ பிசாசோ என்று பயந்துபோய் மாம்பழத்தை ஒரு பேழையில் வைத்துக் காவிரி நதியில் தள்ளிவிடுகிறான்.

பேழை மிதந்து சோழநாட்டில் நுழைகிறது. நதியில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு செல்வந்தர்கள் கண்ணில் படவே, அதில் ஒருவர் அதை வீட்டுக்கு எடுத்துப் போகிறார். என்ன அதிசயம் ! சரியாக ஏழு நாட்களின் பின் மாம்பழம் ஓர் அழகிய பெண் குழந்தையாக மாறிவிட்டது. பத்தினி தெய்யோ (கண்ணகி) பிறந்துவிட்டாள். பிறகு அவளின் சிறு வயதிலேயே அவளுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். மணமகன் பேர் : பாலங்கா. (தமிழில் : கோவலன்)

இதன் பிறகு சிலப்பதிகாரத்தில் வருவது போலவே கிட்டத்தட்ட எல்லா நிகழ்வுகளும் நடக்கின்றன – சில மாற்றங்கள் தவிர. சிலப்பதிகாரத்தின் படி, கண்ணகியைத் திருமணம் செய்த பிறகு தான் மாதவியைக் கண்டு மையல் கொள்கிறான் கோவலன்.

இலங்கைக் கதையின் படி, கண்ணகியைக் கல்யாணம் முடித்தாலும் கோவலனுக்கும் கண்ணகிக்கும் இடையிலே திருமண உறவு ஏதும் இருக்கவில்லை. திருமணத்துக்கு முன்பிருந்தே அவன் அந்த நடன மங்கை மாதவியோடு தொடர்பில் இருந்திருக்கிறான்.

கோவலன் கொலையின் பின்னர் பாண்டியனிடம் நீதி கேட்டுப் புறப்படுகிறாள் கண்ணகி. பிறகு மதுரையை எரிக்கத் தயாராகிறாள். தீயிலிருந்து யார் தப்பப் போகிறார்கள்? புத்த பிக்குகள், புத்த புனித சின்னங்கள், நல்லவர்கள், வணிகர்கள், இடையர்கள், விவசாயிகள், துணி வெளுப்பவர்கள் இவர்களைத் தவிர, மற்ற எல்லாரையும் எரித்துத் தள்ளு என்று ஆவேசத்துடன் தீக் கடவுளுக்கு ஆணை இடுகிறாள்.

சிலப்பதிகாரத்தின் படி, பார்ப்பனர்களும் கற்புக்கரசிகளும் இந்தப் பட்டியலில் இருந்திருக்கிறார்களே. இலங்கைக் கதையில் ஏன் இல்லை? பார்ப்பனர்கள் மேலிருந்த அவநம்பிக்கை முதலாவது காரணம். அடுத்து, சிங்களப் பண்பாட்டில் கற்பு என்று யாரும் ஒத்தைக் காலில் நிற்பதில்லை. யதார்த்தமான மக்கள் என்கிறார் பேராசிரியர்.

அவள் கற்புக்கரசி கண்ணகி அல்ல. தனக்கு நேர்ந்த அநியாயத்துக்காக, வெறுமனே கதறி அழுதுவிட்டுப் போகாமல் தனி ஆளாகத் தீரத்துடன் நீதி கேட்டுப் போராடிய கண்ணகி.

போராட்டம் முடிந்துவிடுகிறது. கோவலன் மேலுலகத்தில் இருந்து வந்து கண்ணகியைக் கூட்டிப் போகிறான். சிலப்பதிகாரம் முடிவுரை எழுதி ஏட்டை மூடிவிடுகிறது. ஆனால் இலங்கை விடுவதாக இல்லை.

சேரமானுக்கு (சேர மன்னன்) தீராத தலைவலி வந்து ரொம்பவும் அவதிப்படுகிறான். கண்ணகி அவன் கனவில் வருகிறாள். இந்த இடத்தில் பார்ப்பனர்கள் மன்னன் கனவுக்குப் பலன் சொல்கிறார்கள். மன்னா, நீ இலங்கைக்குப் போய் கண்ணகிக்கு மண்டபம் கட்டி, யாகங்கள், சடங்குகள் செய்தால் உன் நோய் குணமாகும் என்கிறார்கள். மண்டபத்தை மேலுலக சிற்பி விஸ்வகர்மாவே பூமிக்கு வந்து கட்டிக் கொடுத்திருக்கிறார். இலங்கையில் கண்ணகி கூத்து, பாடல்கள் ஆரம்பித்த கதை இது .

தங்க மாம்பழம், மூன்றாவது கண் கதைகள் ஒவ்வொரு ஊர் பத்தினி தெய்யோ பாடல்களில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மாற்றங்களுடன் வருகின்றன. இந்தக் கதைகளில் தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், பவுத்த, சமண மதங்கள் ஓரங்கட்டப்பட்டு வைதீகத்தின் செல்வாக்கு உயர்ந்து வந்ததைக் கவனிக்கலாம். கோவலன் கொலைக்குக் காரணமான பாண்டியன் தூற்றப்படுகிறான். சோழன் கரிகாலன், சேர மன்னன், இலங்கைக் கஜபாகு மன்னன் மூவரும் புகழப்படுகிறார்கள்.

கிபி 14ம் நூற்றாண்டு வரை நாத, விபீஷண, விஷ்ணு, சமன், கதிர்காம தெய்வங்கள் சிங்கள மக்களின் மிகவும் பிரபலமான தெய்வங்கள். தவிர, கூடவே இன்னும் கணிசமான சிறுதெய்வங்கள் இருந்திருக்கின்றன. அதிலும் தொலொகா தேவியோ என்கிற பனிரெண்டு சிறுதெய்வங்கள் பற்றி ஏடு விவரிக்கிறது. பேய்களை விரட்ட, பில்லி சூனியம் வைக்க, தீராத நோய்களைக் குணமாக்க… என்று இந்தத் தெய்வங்களிடம் பலவகை வேண்டுதல்கள் செய்திருக்கிறார்கள்.

அதில் கிரி அம்மா தெய்வம் மிகவும் கனிவு பொருந்திய தெய்வம். என்ன நடந்ததோ, இந்தத் தெய்வம் மெல்ல மெல்ல அருகி மறைய, அந்த இடத்துக்கு 15ம் நூற்றாண்டளவில் பத்தினி தெய்யோ வந்து சேர்கிறாள். 18ம் நூற்றாண்டில் இலங்கையின் கண்டி அரசில் நாத, விஷ்ணு, கதிர்காம தெய்வங்களோடு நாலாவது முக்கிய தெய்வமாக சேர்ந்து கொள்கிறாள்.

மதுரையை எரித்தபின் கண்ணகியின் கோபம் தணிகிறது. கண்களில் கருணை பொங்குகிறது. பாண்டியன் மனைவி கோப்பெருந்தேவி எந்தத் தவறும் செய்யவில்லை என்று உணர்கிறாள். (சிலப்பதிகாரத்தில் கணவன் இறந்தபோது அவளும் உயிர் துறந்தாள் என்று வருகிறது.) இங்கே அப்படி அல்ல. இலங்கை பவுத்தம் அவளுக்கு மறுவாழ்வு கொடுக்கிறது. இனிமேல் நீயே அரசை ஏற்று நடத்து என்கிறாள் கண்ணகி.

கால ஓட்டத்தில், கேரளத்தில் கண்ணகி, கோபம் கொண்ட காளி – பகவதி தெய்வமாக மாறிப்போக, இலங்கையின் நாட்டுப் பாடல்களில் பவுத்தம் காளியை மிக அமைதியான சுபாவம் கொண்டவளாக மாற்றி விடுகிறது. அடுத்து, ஆச்சரியப்படும் விதத்தில் பத்தினி தெய்யோவுக்குப் பணிவிடை செய்பவளாகவும் காட்சி தருகிறாள் காளி.

சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்தபோது இலங்கை மன்னன் கஜபாகுவும் அங்கிருந்ததாக சிலப்பதிகாரம் பாடுகிறது. மணிமேகலை காவியமும் அதை உறுதி செய்கிறது. ஆனால் செங்குட்டுவனின் காலகட்டத்தை மதிப்பிட உதவிய இலங்கையின் தீபவம்சம் (கிபி 4ம் நூற்றாண்டு) மற்றும் மகாவம்சம் (கிபி 5ம் நூற்றாண்டு) இரண்டிலும் கஜபாகு மன்னன் தென்னிந்தியா போனது பற்றி எந்தக் குறிப்பும் இல்லையே ஏன்? கொக்கி போடுகிறார் பேராசிரியர்.

தனிமனித வழிபாட்டுக்கு பவுத்தம் இடம் கொடுப்பதில்லை. ஆகவே அது மறைக்கப் பட்டிருக்கலாம் என்று சில இந்திய வரலாற்று ஆசிரியர்கள் கருதுவதை பேராசிரியர் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த இரண்டு ஏடுகளும் பவுத்த மதம் சாராத எத்தனையோ நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கின்றனவே. இந்த வாதம் தவறு என்கிறார்.

இன்னும், பிற்காலங்களில் வந்த இலங்கையின் பவுத்த வரலாற்று ஏடுகள் பூஜாவலிய (13ம் நூற்றாண்டு), ராஜரத்னாகார (16ம் நூற்றாண்டு ) ஏடுகளும் பத்தினி தெய்யோ பற்றி ஒரு வரி கூட எழுதவில்லையே. ஏன்? இவை இலங்கை மன்னர்கள் பற்றி மட்டுமல்ல, பண்பாடு பற்றியும் தாராளமாகப் பேசுகின்றன.

17 அல்லது 18ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டதாக நம்பப்படும் ராஜாவலிய ஏட்டில் தான் இலங்கையில் பத்தினி தெய்யோ தோன்றுகிறாள்.

எப்படிப் பார்த்தாலும், 16 ம் நூற்றாண்டு வரை இலங்கையில் கண்ணகி வழிபாடு இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்கிறார் பேராசிரியர்.

12ம் நூற்றாண்டின் இலங்கை மன்னன் இரண்டாம் கஜபாகு சோழநாடு போய் அங்கு சிறைப்பட்டிருந்த 12000 சிங்களப் போர்வீரர்களை மீட்டது மட்டுமல்ல, பழிக்குப் பழியாக 12000 தமிழ்நாட்டு இளைஞர்களையும் பணயக்கைதிகளாக இலங்கை கொண்டுவந்ததாக (மிக மிகத் தாமதமாக) 16 -17ம் நூற்றாண்டுகளில் வந்த ராஜாவலிய, ராஜரத்னாகார ஏடுகள் குறிப்பிடுகின்றன.

இது நடந்திருந்தால் தமிழ்நாட்டில் எங்கோ, எப்படியோ, ஏதோ ஓர் இடத்தில் இந்தச் செய்தி பதிவாகி இருந்திருக்கும். மேலும், 12ம் நூற்றாண்டின் இந்த மாபெரும் சிங்கள மன்னனின் வெற்றியை 13ம் நூற்றாண்டின் பூஜாவலிய நிச்சயம் புகழ்ந்து தள்ளியிருக்கும். ஏன் தவறிவிட்டது?

(இந்த மன்னன் கஜபாகு போல் உலகமே கண்டதில்லை. இந்தியா போக, கடலில் தன் தண்டாயுதத்தால் அவன் அடித்தபோது கடலே பயந்துபோய் இரண்டாகப் பிரிந்து போக வழிவிட்டிருக்கிறது. அத்தனை 12000 தமிழ்நாட்டு ஆட்களையும் தன்னந் தனியாகவே இழுத்து வந்திருக்கிறான்.)

இப்படிக் காவியங்களில், நாட்டுப் பாடல்களில் பொதிந்திருக்கும் புனைகதைகளுக்குக் காரணம் இருக்க வேண்டுமே?

பல்வேறு காலகட்டங்களில் தென்னிந்தியாவின் படையெடுப்புகளால் இலங்கை துவண்டு போயிருந்தது. தலைநகர் அனுராதபுரத்தைக் கைவிட்டுப் பாதுகாப்பான தெற்குப் பகுதிக்கு இலங்கை மன்னர்கள் அடிக்கடி ஓட வேண்டிய சூழ்நிலை. ஆக்கிரமிப்பாளர்கள் பிராமணீயம் சார்ந்தவர்கள். சிங்கள பவுத்த பண்பாட்டுக்கு ஆபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன.

வாழ்க்கையில் தாங்கமுடியாத இன்னல்கள், அச்சுறுத்தல்கள் ஏற்படும்போது மக்களுக்கு ஒரு வடிகால் தேவைப்பட்டிருக்கிறது. ஒரு கனவுலகைப் படைத்து அதில் அவர்கள் ஆறுதல் பெற்றிருக்கலாம். சாதாரண மன்னர்களை வீராதி வீரர்களாக, பண்பாட்டைக் கட்டிக் காத்த உன்னத மனிதர்களாகக் கற்பனைகள் செய்திருக்கலாம். நடந்தாலென்ன, நடக்காவிட்டாலென்ன கதைகளை மீண்டும் மீண்டும் கேட்டு மகிழ்ந்திருக்கலாம். காலம் செல்லச்செல்ல, அதையே உண்மை என்று நினைக்கும் மனப்போக்கு வளர்ந்திருக்கலாம் என்கிறார் பேராசிரியர்.

புனைகதைகளுக்குத் தமிழகத்திலும் பஞ்சமில்லை. காலங்காலமாக மாறுவதும் புதுக் கற்பனைகள் உருவாவதும் இயற்கையே. கண்ணகிக்கு விழா எடுத்த சேரன் செங்குட்டுவனை ஒரு சாதா மன்னன் போல் சித்தரிப்பதில் இளங்கோ அடிகளுக்கு உடன்பாடு இருந்திருக்காது.

அவனை வடநாடுகளை வென்ற வீரனாக்குகிறார். கனக விஜய மன்னர்கள் தலைகளில் கல்லை ஏற்றுகிறார். இலங்கைக் கஜபாகுவை இழுத்து வந்து கண்ணகி விழாவில் பத்தோடு பதினொன்றாவதாக உட்கார வைக்கிறார்.

சேரன் செங்குட்டுவன் மட்டுமல்ல, சோழன் கரிகாலன் கதைகளிலும் ஏகப்பட்ட புனைவுகள் இருக்கின்றன என்கிறார் பேராசிரியர். ஆதாரங்கள் இல்லை என்பதற்கு அவர் ஆதாரங்கள் தருகிறார்.

சிலப்பதிகாரம் உண்மையில் ஓரு சிறந்த இலக்கியம். மறுக்க முடியாது. இளங்கோ அடிகள் சமணர். அவர் பல சமண, பவுத்த ஏடுகளின் தொகுப்பாசிரியராய் இருந்திருக்க வேண்டும். முழு சிலப்பதிகாரத்தையும் அவர் தான் எழுதினாரா அல்லது தொகுத்தாரா?

மணிமேகலை காவியம் எழுதிய சீத்தலை சாத்தனார் ஒரு பவுத்தர். கண்ணகி கோவலனோடு மேலுலகம் போனதை என் கண்ணால் கண்டேன் என்கிறார். சீத்தலை சாத்தனார் அவர் காலத்தில் யாராவது கண்ணகி நாடகம் போட்டதைப் பார்த்திருப்பாரோ? அதில் கோவலன்- கண்ணகி மேலுலகம் போவது போலக் காட்டி இருக்கலாம். அதை உண்மை என்று நம்பினாரோ அல்லது மனப் பிரமையோ?

சிலப்பதிகாரத்தைத் தொகுத்துக் கொண்டிருந்த இளங்கோ அடிகள் சீத்தலை சாத்தனார் சொன்ன இந்தக் கதையையும் சேர்த்திருக்கலாம் அல்லது சாத்தனார் என்பது பிற்காலத்தில் புகுத்தப்பட்ட ஒரு கற்பனைப் பாத்திரமாகக் கூட இருக்கலாம். சந்தேகப்படுகிறார் பேராசிரியர்.

கண்ணகி கதை செங்குட்டுவன் காலத்துக்கு முன்னரே பவுத்த – சமணக் கதையாக, வழிபாடாக இருந்திருக்கிறது. அந்த வழிபாட்டை அரசன் என்கிற கோதாவில் அவன் அதற்கு மாட்சிமை அளித்திருக்கிறான்.

இளங்கோ அடிகள் வாழ்ந்த காலம் கிபி 5ம் நூற்றாண்டுக்கும் 9ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம். அவர் கிபி 2 ம் நூற்றாண்டின் சேரன் செங்குட்டுவனைப் பார்த்திருக்கவே முடியாது. கேள்விப்பட்டிருக்கிறார். அவ்வளவு தான்.

இலங்கையின் வடக்கில் வைதீக நெறிகளின் செல்வாக்கு கூடிப்போனதில் கண்ணகி வேறு பெயர்களில் பிராமணீய தெய்வமாக மாறிப்போனாள். அங்கு சாதிக் கட்டமைப்பு இறுக்கமானது.

கிழக்கில் வைதீகத்தின் தாக்கம் குறைவு. காலங்காலமாக, கிழக்கு அதிகமாக, சிங்கள மன்னர்களின் கீழ் இருந்திருக்கிறது. வடக்கை விட, கிழக்கில் வாழ்ந்த தமிழர்கள் சிங்கள மக்களுடன் திருமணம், வணிகம், தொழில் வாய்ப்புகள் என்று நெருங்கிய உறவு பேணி வந்திருக்கிறார்கள். கண்ணகி நாட்டுப் பாடல்களில் இரு சமூகங்களுக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமைகளை எடுத்துக் காட்டுகிறார்.

12000 பேர் கதையை ராஜரத்னாகார ஏடு இன்னும் சுவையோடு கொண்டு செல்கிறது. இவர்களுக்கு என்ன நடந்தது? கஜபாகு 12000 சிங்கள வீரர்களையும் இலங்கையின் தம்பதெனிய பகுதிகளில் குடியேற வைத்தானாம். 12000 தமிழ்நாட்டு வீரர்களையும் இலங்கையின் மேற்குப் பகுதிகளில் வாழ வைத்தானாம்.

மேற்குப் பகுதியின் நீர்கொழும்பு முதல் சிலாபம் வரை வாழும் கரையோர மக்கள் இன்றும் தமிழும் சிங்களமும் பேசுவதைக் காணலாம். இதில் நீர்கொழும்பின் தெற்குப் பகுதி மக்கள் முழுவதுமாக சிங்களவர்களாக மாறிவிட்டார்கள். இவர்கள் கராவ சாதியை சேர்ந்தவர்கள் என்றும் மகாபாரதத்தில் வரும் கவுரவர்கள் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்றும் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.

உண்மையில் இந்தக் கரையோர மக்கள் யார்? தென்னிந்தியாவில் 7ம், 8ம் நூற்றாண்டுகளின் பின் பவுத்த, சமண மதங்கள் (ஆசீவகம் உட்பட ) பெரும் பின்னடைவை சந்திக்க ஆரம்பித்தன. இந்த மதத்தினருக்கு நிந்தனைகள், உயிர் ஆபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. எனவே பாதுகாப்பான பவுத்த இலங்கைக்கு சிறு சிறு குழுக்களாக இடம் பெயர்ந்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இலங்கை மன்னர்கள் ஆதரவு கிடைத்திருக்கிறது.

இருந்தாலும், அகதிகளை எப்போதும் இளக்காரமாகப் பார்ப்பது இனங்களின் இயல்பு. அவர்களுக்கு ஒரு சிறப்பு அடையாளம் கொடுத்துவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடுமே. ராஜரத்னாகார ஏட்டின் புனைகதை அதைத் தான் செய்திருக்கிறது.

இந்த அகதிகள் கண்ணகியை இலங்கைக்கு அறிமுகம் செய்திருக்கலாம். தவிர, கேரளத்தின் பெரும் வணிகர்கள் 1341- 1415 ஆண்டுகளின் இடைப்பட்ட காலங்களில் இலங்கையின் அரசியலில் பெரும் தாக்கம் செலுத்தி இருக்கிறார்கள். இலங்கையின் கோட்டே அரசுக்கு அதன் பொருளாதாரத்துக்கு, கடல் வணிகத்துக்கு இவர்கள் துணையாய் இருந்திருக்கிறார்கள். பெரும்பாலும் சமணர்களாக இருந்த இவர்களையும் இந்தக் கணிப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் பேராசிரியர்.

தென்னிந்தியாவில் பவுத்த – சமணக் கண்ணகி வைதீக நெறியில் பிணைக்கப்பட்டு சக்தி, காளி, துர்கா, பகவதி என்று மாறிப்போக, இலங்கையில் அசல் பத்தினி தெய்வமாக இருக்கிறாள். இலங்கையின் நவகமுவ, கண்டி நகரங்களில் அவள் கோயில்கள் இருக்கின்றன.

முத்தாய்ப்பாக, கண்ணகி கதையின் வேர்கள் எங்கிருக்கின்றன என்றால் பேராசிரியர் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு ஆசியாவை நோக்கி விரல் நீட்டுகிறார். மனித நாகரிகங்கள் தொடங்கிய காலத்தில் பெண் தெய்வங்கள் அங்கே தான் பெருமளவில் தோன்றின. அந்தத் தெய்வங்களின் ஒரு நீட்சி தான் கண்ணகி என்கிறார் அவர்.

மானிடவியல் ஆய்வாளர்கள், மாணவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய அறிவுக் களஞ்சியம் பேராசிரியரின் ஏடு. இந்தக் கட்டுரை ஓர் சிறு அறிமுகம் மட்டுமே.

607 பக்கங்களில் எந்த சமரசத்துக்கும் இடம் தராமல் பல நூற்றுக்கணக்கான தடயங்களோடு முடிகிறது ஏடு. மாற்றுக் கருத்துகள் இருக்கின்றனவோ இல்லையோ, இலங்கை – இந்திய மானுடவியலில் தவிர்க்கவே முடியாதவர் பேராசிரியர் கணநாத் ஒபேசேகர.

என்னை விட்டு ஓடிப்போக முடியுமா

உயிர் வாழ மூளை அவசியமில்லை என்று எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிடுகிறார் பிரபல நரம்பியல் துறைப் பேராசிரியர், லிசா பேரட் (Lisa Feldman Barret). மன்னிக்கவும். நான் அரசியல்வாதிகளைக் குறிப்பிடவில்லை என்று கிண்டல் வேறு.

ஏட்டின் பேர் : Seven & A Half Lessons. நம்மைப் போல் சாதா மனிதர்களுக்காக மூளை பற்றி இன்றைய ஆய்வுகள் என்ன சொல்கின்றன என்பதை யாருமே எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய மொழிநடையில் எழுதி இருக்கிறார் – சுருக்கமாக.

ஏழு பாடங்கள் மூலம் (ஏழு கட்டுரைகளில்) விளக்கங்கள் வருகின்றன. இருந்தும் அதென்ன முழுசாக இல்லாமல் அரைப் பாடம்? மூளை எப்படித் தோன்றியிருக்கும், தொடக்க கால மூளை எப்படி இருந்திருக்கும் என்று இன்றைய உயிரியல் நோக்கில், செய்திகளை அந்த அரைக்குள் அடக்கியிருக்கிறார் அவர்.

அந்த அரை : அம்பியோக்சஸ் amphioxus எனும் கடல் வாழ் உயிரினத்தில் இருந்து மூளையின் தோற்றம் துவங்குகிறது. சுமார் 550 மில்லியன் ஆண்டுகளின் முன்னே இவை கடலில் வாழ்ந்திருக்கின்றன. இன்றும் வாழ்கின்றன. ஒரு வாய். ஒரு வயிறு. இவ்வளவு தான் இந்த உயிரின் உடல். வாயைத் திறந்தபடி கடலின் ஆழத்தில் அருகில் வருகின்ற அல்லது கடந்து போகின்ற நுண்ணுயிர்களை உண்டு வாழ்கின்றன.

தண்ணீரின் அசைவுகளை உணர்கின்றன. இருட்டை அல்லது வெளிச்சத்தை அறிந்து கொள்கின்றன. இத்தனைக்கும் மூளை என்பதே கிடையாது. இந்த உயிரினத்தின் படிநிலை வளர்ச்சியில் இருந்து தான் மூளை என்கிற உறுப்பு தோன்றி இருக்கவேண்டும் என்று உயிரியலாளர்கள் நம்புகிறார்கள்.

உயிர் வாழ்வதென்றால் சக்தி தேவைப்படுகிறது. சக்தி கிடைக்க உணவு தேவைப்படுகிறது. பிறகு இன்னொரு உயிருக்கு இரையாகாமல் தப்பித்து வாழ பிழைப்புத் திறன் தேவைப்படுகிறது. இந்தச் சூழலில் ஒரு உயிர் அதன் சக்தியைக் கொண்டு புத்திசாலித்தனமாக உபயோகிக்க வேண்டிய அவசியம் நேர்கிறது.

ஒரு உயிரின் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டில் அதற்கு நன்மை விளைகிறதா தீமை விளைகிறதா? எதை அடிக்கடி உபயோகிக்கலாம்? எதை நிறுத்தலாம்? அடுத்த கணம் வாழ்க்கை இருக்குமோ இல்லையோ தெரியாது. அதற்கு முன் என் அடுத்த சந்ததியைத் தயார் பண்ண வேண்டுமே.

ஒரே சமயத்தில் எக்கச்சக்கமான தகவல்கள் வெளி உலகத்தில் இருந்து வருகின்றன. அதில் நல்லது கெட்டதை வடிகட்டி எனக்கு ஒவ்வொரு கணமும் சொல்லிக் கொண்டே இருக்க ஒரு உதவி வேண்டுமே.

ஒவ்வொரு உயிரையும் முடிந்தளவு வாழ வைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே மூளை செய்கிறது. அன்பு, பாசம், புரிந்துணர்வு, படைப்பாற்றல், கோபம், கொலை வெறி.. என்று எந்த உணர்வும் அதற்கு இல்லை.

மேலே சொல்லப்பட்ட கசாமுசாக்களை அது கைவசம் வைத்திருக்கிறது. எப்பெப்போ எது தேவையோ அப்பப்போ அதை அள்ளி வீசுகிறது. மற்றும்படி, இந்தக் கண்ராவிகளில் அது சிக்குவதில்லை. உங்களை வாழ வைப்பது மட்டுமே அதன் குறிக்கோள்.

வாழ்க்கை என்கிற விளையாட்டில் ஒவ்வொரு காயாக அது நகர்த்துகிறது. நாம் நகர்கிறோம். விளையாட்டு முடியும்போது அதுவும் மடிந்து போகிறது. முற்றுப் புள்ளி.

நீ ஆடச் சொன்னாலும் ஆடுகிறேன் பாடச் சொன்னாலும்

மூளை பற்றி தத்துவஞானி பிளாட்டோ சொன்னதெல்லாம் சரி சரி என்று 20 ம் நூற்றாண்டு வரை நம்பிக்கொண்டிருந்தார்கள் அறிஞர்கள். அய்யா சொன்னார் : மூளை மூன்று மாடிகள் கொண்டது. பசி, பாலுணர்வு போன்ற மிக அடிப்படை உணர்வுகள் கீழ்த் தளத்தில் இருக்க, அடுத்த மாடியில் மகிழ்ச்சி, பயம் போன்ற உணர்வுகள் இருக்கின்றன. உச்சியில் இருப்பது பகுத்தறியும் உணர்வு.

அறிவியலின் வளர்ச்சியில் 1990 களுக்குப் பிறகு இந்தக் கொள்கை அம்புலிமாமா கதையாகிப் போனது.

இனி இன்றைய நிலவரம் : நியூரான்கள் தான் மூளையின் செயல்பாடுகளைத் தீர்மானிக்கின்றன. இவை நமக்கும் பொது. விலங்குகளுக்கும் பொது. இருந்தாலும் நாம் உயிரணுக்களில் (cells) வேறுபடுகிறோம்.

ஒரு எடுத்துக்காட்டு : எலிகளின் கண்களில் ஒரு தொகுதி உயிரணுக்கள் மட்டுமே இருக்க, மனிதர்களின் மூளையிலோ நான்கு தொகுதிகள். இதிலிருந்து என்ன தெரிகிறது? படிநிலை வளர்ச்சிக் கோட்பாட்டின்படி, மிச்ச மூன்று தொகுதிகளும் பின்னால் உருவாகி இருக்கின்றன. அதாவது நமக்கும் எலிகளுக்கும் பொதுவான ஒரு தாய்க்குலம் இருந்திருக்கிறது. அதாவது சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே…

மூலக்கூறு மரபியல் (Molicular Genetics) இன்றைய ஆய்வாளர்களுக்கு ரொம்பவும் கை கொடுப்பது தெரிந்ததே. என் மூளைக்கும் எலி மூளைக்கும் என்ன வேறுபாடு? எல்லாம் காலம். என் நியூரான்களுக்கு ஆயுள் கெட்டி. எலி நியூரான்களுக்கோ அது கம்மி.

மனிதர்களின் மூளை பெருசு என்கிறார்களே. அதனால் தான்… என்று கொஞ்சம் இழுத்தால்… அப்படி எந்த முட்டாள் சொன்னான் என்று திருப்பிக் கேட்கிறார் பேராசிரியர்.

மனிதர்களால் ராக்கெட்டுகள் ஏவ முடியும். சந்திரனில் போய் இறங்க முடியும். செவ்வாய்க்குப் போகத் திட்டங்கள் தீட்ட முடியும். ஆனால் இங்கே பூமியில் கேவலம் ஒரு பத்தடியாவது பறந்து காட்ட முடியுமா? தன் எடையை விட 50 மடங்கு பாரத்தை ஒரு எறும்பு போல சும்மா அலேக்காக தூக்கிக் காட்ட முடியுமா? ஒரு பூனை போல இருட்டில் பார்க்க முடியுமா?…

ஒவ்வொரு உயிரினமும் அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்றது போல தன்னை மாற்றிக் கொண்டுள்ளதே தவிர (adapted) வேறு ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை என்கிறார் அவர்.

தண்ணீர், உப்பு, குளுக்கோஸ்.. போன்றவை எந்தளவுக்கு உடலுக்குத் தேவை? சக்தியை எப்படி சிக்கனமாகச் செலவழிக்கலாம்? எல்லா உயிரினங்களின் மூளையிலும் பகுத்தறியும் உணர்வுகள் (rationality) இருக்கின்றன.

ஒரு ஆபத்து வரும் போல் தெரிகிறது. இடத்தை விட்டு ஓடுவதா இல்லையா? ஓடு என்கிறது மூளை. சில சமயம் ஆபத்து வருவது போல் இல்லை. ஆனாலும் ஓடச் சொல்கிறது மூளை. ஏன் அது தடுமாறுகிறதா? இல்லை. என் சிக்னல் ஒழுங்காக வேலை செய்கிறதா, இல்லையா என்று நோட்டம் பார்க்கிறது.

விருப்பமே இல்லாத சில வேலைகளை செய் என்கிறது. அது நன்மையாக இருக்கலாம். ஒரு உதாரணம் : உடல் பயிற்சி. அது துன்பம் தரலாம். அதே சமயம், எதிர்காலத்தில் உங்கள் நல்வாழ்வுக்கு அந்த செயல்பாடு உதவப் போகிறதே.

மூளையின் செயல்பாடுகளில் நிச்சயம் குறைபாடுகள் இருக்க வாய்ப்புகள் உண்டு. சில ஆய்வாளர்கள், மூளை எந்த நேரத்திலும் எந்த முடிவுகளையும் சரியாக எடுக்க முடியாத “திரிசங்கு” நிலையில் இருப்பதாக நினைக்கிறார்கள். இந்தக் கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறார் பேராசிரியர்.

இன்னது நடக்க வேண்டும். இன்னது நடக்கக் கூடாது… என்று பல எதிர்பார்ப்புகளை அது ஏற்கெனவே கணக்குப் போட்டு வைத்திருக்கிறது. அதற்காக மூளை தன் வளங்களை சில நேரங்களில் அளவுக்கு அதிகமாகவே உபயோகிப்பது கூட இப்படிப்பட்ட நோக்கங்களுக்காகத் தான் என்கிறார் அவர்.

சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும்

மூளையைக் குளிர்விக்க மூளைக்குள் ஒரு அங்கம் இருப்பதாக நம்பினார் தத்துவ ஞானி அரிஸ்டாட்டில். மத்திய காலங்களில் வாழ்ந்த மக்கள் (Medieval Ages) மூளையின் சில பகுதிகளில் உயிர் உறைவதாக நம்பினார்கள்.

19ம் நூற்றாண்டு வரை காதல், சோகம், இன்பம்.. என்று எல்லா உணர்வுகளுக்கும் மூளையில் தனித்தனி அறைகள் இருக்கும் என்று நினைத்தார்கள்.

இன்று கூட இடது பக்க மூளை தர்க்க ரீதியானது, வலது பக்க மூளை படைப்பாற்றல் உள்ளது என்று நம்புவோர் இருக்கிறார்கள். ஏன் சில அறிவியலாளர்கள் கூட அன்பு, இரக்க சுபாவம், பொறாமை .. போன்ற பல்வேறு உணர்வுகள் மூளையின் படிநிலை வளர்ச்சியில் ஏற்பட்டவை என்று நினைக்கிறார்கள்.

ஆனால் இவை எல்லாம் வெறும் உருவகங்கள். நாமாக ஏற்படுத்திக் கொண்ட கற்பனைகள். மூளை கணனியே அல்ல. தவிர, அது எதையும் சேர்த்து வைப்பதில்லை என்கிறார் பேராசிரியர்.

சுமார் 128 பில்லியன் நியூரான்கள் நம் மூளையில் பின்னிப் பிணைந்து ஆனால் ஒரு சிக்கலான கட்டமைப்பாக ஒரு இணையம் போல (network) செயல்படுகின்றன. நியூரான்கள் சில வேதிப்பொருள்களை உருவாக்கி அவை மூலம் ஒன்றுடன் ஒன்று தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன.

இந்த வலைப்பின்னல் 24 மணி நேரமும் விழிப்போடு இயங்குகிறது. நியூரான்களின் எண்ணிக்கை சில ஆயிரங்களில் இருந்து பில்லியன் அளவுக்குப் பெருகக் கூடியது.

சில நியூரான்கள் தொடர்பில் இருக்கும். சில ஸ்விட்சை அணைத்துவிட்டு ஓய்வெடுக்கும். சில நியூரான்கள் வேகமாக இயங்கும். சில மந்தமாக வேலை செய்யும். (எல்லா மூளைகளும் ஒரே மாதிரி கிண் என்று இயங்காது என்று நாம் அனுபவத்தில் அறிந்திருக்கிறோம்.)

நியூரான்களின் ஆயுள் காலத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும். சில செத்துப் போய்விடும். அப்போ பிரச்னை தான். சிலரைக் கண்டதும் அடடே இவரா? தெரியுமே என்போம். ஆனால் பேர் ஞாபகத்துக்கு வராது.

நியூரான்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகள் செய்யக் கூடியவை. ஆனால் எல்லா விதமான வேலைகளும் அல்ல. அல்ல. கையால் ஒரு பொருளை எடுக்கிறோம். ஆனால் எடுக்க முடியவில்லை. மீண்டும் ஒரு தடவை முயற்சிக்கிறோம். ஒரே தொகுதி நியூரான்களா உதவிக்கு வருகின்றன? இல்லை. இரண்டாவது தடவையில் இன்னோர் குழு வந்து வேலை செய்கிறது. ஒவ்வோர் தடவையும் பயம் நம்மை ஆட்கொள்ளும் போதும் வேறு வேறு தொகுதிகள் செயலாற்றுகின்றன.

நியூரான் வலைப்பின்னல்கள் மிகவும் சிக்கலானவை. இந்த சிக்கல்கள் தான் மனிதர்களின் மனதில் புதுப்புது வடிவங்கள், அர்த்தங்கள் உருவாக அடித்தளம் போடுகின்றன. எந்த அளவுக்கு சிக்கல்கள் கூடுமோ அதற்கு ஏற்றபடி மனதின் செயல்திறனும் கூடுகிறது.

சகாரா பாலைவனமா இல்லை அண்டார்டிகா கண்டமா? எங்கே கொண்டே இறக்கி விட்டாலும் அந்தந்த சூழ்நிலைகளைக் கணக்கில் எடுத்து உடனைடியாகவே செயலில் இறங்கிவிடுகிறது மூளை. ஒரு கணனியால் இதெல்லாம் முடியாது.

நமக்கு இருப்பதோ ஒரு மூளை தான். ஆனால் கடலில் வாழும் ஆக்டோபஸ் இனத்தின் உடல் முழுவதுமே நியூரான்கள் இருக்கின்றன. பறவைகள் பேசிக்கொள்கின்றன. ஆனால் மூளையால் அல்ல.

மற்ற உயிர்கள் பிறந்த சில கணங்களிலோ அல்லது சில நாட்களிலோ சுயமாகவே உணவு தேடப் பழகி விடுகின்றன. தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் திறனை எட்டி விடுகின்றன.

மனிதக் குழந்தைகளுக்கோ நீண்ட காலம் தேவை. விளையாடுவது மட்டுமே குழந்தைகளின் ஒரே நோக்கம். ஆகவே தான் வளர்ந்தவர்களை விட குழந்தைகள் எந்த மொழியையும் விரைவில் கற்றுக் கொள்கிறார்கள். மேலும் அவர்களின் உணவு, அரவணைப்பு, பாதுகாப்பு அனைத்துக்கும் பெற்றோர்கள் அவசியம் தேவை.

எல்லா உயிரினங்களும் அவை வாழும் சூழலுக்கு ஏற்றது போல் இசைவடைந்து (adapted) வாழ்கின்றன. மனிதர்களும் அதற்கு விலக்கல்ல. நாங்க தான் பெரிசு என்று மனிதர்கள் மார் தட்டிக் கொண்டால் அது அறியாமை.

தொடுவதென்ன மலர்களோ தென்றலோ

எந்த ஒரு நடப்பைப் பார்த்தாலும் அது அப்டி இருக்குமோ, இப்டி இருக்குமோ என்று மூளை முதலில் யோசிக்கிறது. பிறகு ஏதோ ஒரு முடிவுக்கு வந்து இது தான் உண்மை, இது தான் உலகம், இது தான் நடந்தது, இது தான் நடக்கும் என்று நம்மை நம்ப வைக்கிறது மூளை.

சில சமயம் அது எடுத்த பல முடிவுகளை நம் முன் போட்டுவிட்டு கப்சிப் ஆகவும் இருந்துவிடும். காரணம் : 1. நியூரான்கள் வேவ்வேறு வேகங்களில் பாய்கின்றன. காரணம் : 2. முடிவுகளுக்கு வரும் முன் மூளை உடம்பின் பல அங்கங்களோடும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. சில நேரம் அது தவறான முடிவுகளுக்கும் வரலாம்.

பேராசிரியரும் புரியவில்லை என்கிறார். உதாரணமாக, தாகம் எடுக்கிறது வைத்துக் கொள்வோம். ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்ததும் உடனடியாகவே தாகம் அடங்கி விடுகிறது. ஆனால் பரிசோதனைகளின் படி, தண்ணீர் நம் ரத்தத்துடன் கலந்து உடலை மீண்டும் ஆசுவாசப் படுத்திக் கொள்ள சுமார் 20 நிமிஷமாவது தேவைப்படுகிறது. மூளை ஏன் நமக்கு அவசர அவசரமாக சீன் காட்ட வேண்டும்?

உனக்கென்ன எனக்கென்ன ரகசியம்

நாம் தனித்தனியாக வாழ்வதில்லை. ஒரு சமூகமாக இயங்குகிறோம். ஆகவே மூளைகளும் ஒன்று சேர்ந்து பேசிக் கொள்கின்றன – அதுவும் ரகசியமாக என்கிறார் பேராசிரியர்.

ஒரு மூளை இன்னொரு மூளையிடம் எவ்வளவு சக்தியை உபயோகிக்கிறாய், எப்படிப் பெற்றுக் கொள்கிறாய் என்று கேட்டுக் கொள்கிறது. ஒவ்வொன்றும் தனித்தனி வரவு செலவுத் திட்டம் தயாரித்துக் கொள்கிறது. எல்லாம் நம்மை வாழ வைப்பதற்காக.

பேசும் மொழிக்கு வருவோம். எடுத்துக் காட்டாக, குழந்தையை அன்போடு அரவணைத்துப் பேசுவதால் பிற்காலத்தில் அது நலத்தோடும் மனநிறைவோடும் வாழ அந்த செயல் உதவுகிறது.

ஒரு உடலுக்குப் பொருந்தும் தகவல்கள் இன்னொரு உடலுக்கு ஒத்துப் போகாத நிலைமைகளும் உண்டு.

ஒரு நண்பருக்கு உடல்நிலை சரியில்லை என்று யாராவது சொன்னால் உடனே கவலை வந்துவிடுகிறது. சொந்த பந்தங்கள் யாராவது இறந்து போய்விட்ட செய்தி கேட்டால் சொல்லவே தேவையில்லை.

உடல் மொழியும் அதே. அதே. யாராவது ஒரு (இளம்) பெண் ஒரு ஆணைப் பார்த்து ஒரு பார்வையை வீசுகிறாள் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஆணின் நிலை எப்படி இருக்கும்? விவரிக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, அதே பெண் புருவங்களை உயர்த்திக் கடுமையாகப் பார்த்தால்?

ஆகவே தகவல்கள் நம் உடல் வரவு செலவுத் திட்டத்தை, அதாவது உடல்நிலையை உயர்த்தலாம் அல்லது பாதிக்கலாம்.

நியூரான்கள் எதற்காக நம்மை இப்படிக் குழப்பங்களில் மாட்டி விட வேண்டும்? இன்னும் ஆய்வுகள் தேவை என்கிறார் அவர்.

ஒன்றல்ல இரண்டல்ல தம்பி

பாலித் தீவு மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டின் இலங்கோட் மக்களுக்குப் பயம் வந்துவிட்டால் உடனே தூங்க வேண்டும் என்று அவதிப்படுகிறார்கள் .

புன்னகை செய்தால் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று அமெரிக்கர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். நமீபியா நாட்டின் ஹிம்பா இன மக்களோ எல்லாம் சரியாகிவிட்டது என்று நினைத்துக் கொள்கிறார்கள். இப்படி நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம் பண்பாடு வேறுபடுகிறது.

ஒரே ஒரு விதமான ஒரு மனித மூளை என்று ஏதுமில்லை. ஒவ்வொரு மூளையும் ஒவ்வொரு ரகம்.

நாம் பிறக்கும்போது இருக்கும் நம் மனம் எதுவுமே எழுதப்படாத நோட்டுப் புத்தகம் போலிருக்கும் என்று சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறோம். இன்னொரு கதை : மனிதர்களுக்கே மட்டுமே இருக்கக்கூடிய இயல்பான குணாதிசயங்களோடு தான் எல்லா மனிதக் குழந்தைகளும் பிறக்கின்றன. இந்த இரண்டையும் மறுக்கிறார் பேராசிரியர்.

அவர் முன்வைக்கும் மூன்றாவது கருத்து : ஒரு குழந்தை பிறக்கும்போது ஒரு அடிப்படைக் கட்டமைப்பு கொண்ட மூளையுடன் இந்த உலகத்துக்கு வருகிறது. (அதை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். புதிய அம்சங்களை சேர்த்துக் கொள்ளலாம். மெருகூட்டலாம்.)

பிறகு எந்தச் சூழலில் அது வாழ்கிறதோ அதற்கு ஏற்றது போலத் தன் கட்டமைப்பை மாற்றி அதில் தன்னைப் பொருத்திக் கொள்கிறது. அதனால் தான் மூளை எந்த மாறுபட்ட பண்பாட்டுச் சூழலிலும் நின்று பிடிக்கிறது. தன் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது.

மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு அமைப்பாக இருந்தால் அது எப்போதோ அழிந்து போயிருக்கும். மனித குலமே இருந்திருக்காது. எல்லாரும் ஒரே மனது உள்ளவர்களாக இருந்தால் நாம் இங்கிருக்க வாய்ப்பில்லை.

படிநிலை வளர்ச்சிக் கோட்பாட்டின் தந்தை டார்வின் கூட இந்தக் கொள்கையை ஆதரித்தவர் என்கிறார் பேராசிரியர்.

நாம் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள். வெவ்வேறு மூளைகள் கொண்டவர்கள்.

சமூகம் என்னும் கற்பனையை உருவாக்குவதே மூளை தான். உண்மை எது? அது சொல்வதை உண்மை என்று நம்புகிறோம். அதன் சிக்கலான வடிவமைப்பில் கற்பனை உருவகங்களைப் படைக்கிறோம். அதை அறிவு என்று நம்புகிறோம்.

மற்ற உயிரினங்களின் மூளைகளும் ஓரளவு இதையே தான் செய்கின்றன. ஆனால் வேறுபாடு என்னவென்றால் இருக்கிற செயல்பாடுகள் போதாது என்று மனித குலம் புதுசு புதுசாக கொண்டு வந்து இறக்கிக் கொண்டே இருக்கிறது.

மனித மூளை சிந்தனைகளின் சுரங்கம். அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி. சிந்தனைகளை அதுவே உருவாக்குகிறது. பிறகு அதை அப்படியே நம்புகிறது. சிலசமயங்களில் இந்த அபூர்வ சிந்தாமணியின் சில ஐடியாக்கள் திசை மாறிப்போய் ஒரு சமூகத்தையே அதல பாதாளத்துக்குத் தள்ளிவிடலாம். எச்சரிக்கையாய் இருங்கள் என்கிறார் அவர்.

சில உதாரணங்கள் : ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை போதும். பெண் குழந்தையை விட ஆண் குழந்தை நல்லது. நம் இனம் மட்டும் தான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட இனம். மற்றவர்கள் அல்ல. டைனோசர் இனம் வாழ்ந்ததே இல்லை….

பேராசிரியர் வெறும் ஆய்வு முடிவுகளோடு மட்டும் நிற்கவில்லை. அறிவுரைகளும் தருகிறார். மனக்கலக்கம், வெறுப்புணர்வுகளைக் களைவது எப்படி? இன்றைய எந்திரத் தனமான வாழ்வில் நிதானம் இழந்து விடாமல் மகிழ்வு, அமைதியோடு வாழ்வது எப்படி என்று … பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வுகளையும் தருகிறார்.

ஏட்டில் இருந்து சில செய்திகள் மட்டுமே இங்கே வருகின்றன. அறிவியல் குறிப்புகளும் வியப்புகளும் கலந்த தொகுப்பு.