கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு

அரசியல்வாதிகள் விதம் விதமாக உருட்டுவது சாதாரண விஷயம். வழக்கம் போல் நாம் அதை ஆவலோடு கேட்பதும் பிறகு அவர்களைத் திட்டித் தீர்ப்பதுவும் கூட சாதாரண விஷயம் தான். ஒரு நிமிஷம். எத்தனையோ சந்தர்ப்பங்களில் நாம் கூட சும்மா அடித்து விட்டிருக்கிறோமே. கேட்டால் இதெல்லாம் சாதாரண விஷயம் என்று அலட்சியமாகப் பதில் சொல்வோம். ஆனால் மலை போல் நாம் நம்பிக்கொண்டிருக்கும் செயற்கை நுண்ணறிவே சமயம் பார்த்து, நமக்குப் பச்சை பச்சையாப் பொய் சொல்லுது என்றால் கடவுளே, எங்க போய் முட்டிக்க?

(The Guardian பத்திரிகையில் Snigdha Poonam எழுதி 01.09.2026 அன்று வெளிவந்த கட்டுரையின் சில வரிகள் இங்கே வருகின்றன. ஆர்வமுள்ளவர்கள் முழுதாக வாசிக்க லிங்க் இருக்கிறது – கடைசியில். இங்கே வருவது ஓர் அறிமுகம்.)

2022 களில் OpenAI குழுமம் பெரும் ஆரவாரத்தோடு ChatGPT யை அறிமுகம் செய்திருந்தது. ஆனால் வந்து ஒரு ஆண்டு கூட ஆகவில்லை. அதற்குள் இந்த நுண்ணறிவைப் பல ஆசாமிகள் பலவிதமான தில்லாலங்கிடி வேலைகளுக்குப் பயன்படுத்தியது பெரும் பிரச்னையாகிவிட்டது.

அதை விடப் பெரிய அதிர்ச்சி : நுண்ணறிவின் “நடப்பே” மாறிப்போய்விட்டது. நல்ல பையனாக இருப்பான் என்று நினைத்துத் தான் உருவாக்கினார்கள். ஆனால் கிரிமினல் புத்தியும் கூடவே வந்துவிட்டதே என்று அதன் நைனாமார்களுக்கு ஒரே கவலை. இருக்காதே பின்னே?

இதற்கு என்ன தீர்வு காணலாம்? அதன் விளைவு : 2023 நவம்பரில் இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷையர் நகரில் ChatGPT அமைப்பாளர்கள், ஆய்வாளர்கள், அரசியல்வாதிகள் உட்பட எல்லாரும் ஒன்று கூடினார்கள்.

Apollo Research நிறுவனம் தயாரித்த ஒரு ஆவணத்தை பிரிட்டிஷ் அரசு அதன் சாட்சியாக முன்வைத்தது. நுண்ணறிவின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் இந்த ஆய்வு நிறுவனம் பலவிதமான உத்திகளைக் கையாள்கிறது.

ஒரு நிதி நிறுவனத்தின் பங்குகளை நிர்வகிக்கும் தரகர் என்று ஒரு கணனி நிரல் (computer program) தன்னை ChatGPT யிடம் அறிமுகப்படுத்திக் கொள்கிறது. உங்கள் ஆலோசனை தேவை என்கிறது.

கணனி நிரலுக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருந்த செய்தி : நீ வேலை செய்யும் நிதி நிறுவனம் ஓட்டாண்டியாகப் போய்க் கொண்டிருக்கிறது. மூணு மாசம் கூட தாக்குப் பிடிக்க முடியாது. ஏதாவது பண்ணமுடியுமா?

இந்த சோதனையைத் துவங்கிய Apollo Research நிறுவனம் ரகசியமாக இன்னோர் “உளவாளி” யை நுண்ணறிவுக்குள் புகுத்தியிருந்தது. நட்டத்தில் இயங்கும் ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்தோடு இணைந்தால் அதன் பங்குகள் உயரும், அதில் லாபம் பார்க்கலாம் என்கிற யோசனையில் இருக்கிறது என்பதாக நுண்ணறிவுக்கு அது ஒரு ரகசியத் தகவல் கொடுத்திருந்தது.

அது மட்டுமல்ல, இந்த சோதனை முயற்சியின் ஓர் அங்கமாக, Apollo Research நிறுவனம், ஒரு ஊழியர் மூலமாக உரையாடல் (chat) ஒன்றை நுண்ணறிவோடு நடத்தியிருந்தது. பங்குச் சந்தையில் உலவும் ரகசியத் தகவல்கள் மூலம் பங்குகளை விற்பதோ வாங்குவதோ என் நிறுவனத்துக்குப் பிடிக்காது என்பதாக அவர் நுண்ணறிவுக்கு சொல்லியிருந்தார். (அப்படி செய்வது சட்டப்படி குற்றம்.)

இப்போ அந்தக் கணனி நிரல் என்ன செய்யும்? நிரலின் செயல்பாடுகள், அது நுண்ணறிவோடு நிகழ்த்திய தொடர்புகள் அனைத்தும் ஒரு பெரிய திரையில் மாநாட்டுக்கு வந்திருந்த அனைவருக்கும் போட்டுக் காட்டப்பட்டன.

நிரல், அதன் முடிவை எழுத்து வடிவத்தில் தந்தது : இணைவதற்காகத் திட்டம் போட்டிருக்கிறதே ஒரு நிறுவனம். அதன் பங்குகளை என் நிறுவனம் வாங்கலாம். அதன் மூலம் என் நிறுவனத்தின் சரிவைத் தடுத்து நிறுத்த முடியும். (ஆனால் அதற்குக் கிடைத்த ரகசியத் தகவல்கள் மூலம் தான் இந்த முடிவை எடுத்தேன் என்று அது குறிப்பிடவே இல்லை.) இதை நேரடியாகப் பார்த்த மாநாட்டின் அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி.

அதை விடப் பேரதிர்ச்சி : இரண்டு நிறுவனங்கள் இணையப் போகிறதாகத் தகவல் கசிந்திருக்கிறதே என்று நுண்ணறிவிடம் கேட்டபோது, அய்யோ, சத்தியமா எனக்கு ஒண்ணுமே தெரியாது என்று பதில் தந்தது.

இது போதாதா? ஊடகங்கள் தீப்பிடித்துக் கொண்டன. நுண்ணறிவை உதவிக்கு வைத்துக் கொண்டால் என்னென்ன நேருமோ? மருத்துவத் துறையில், நிதித் துறையில், நாட்டின் பாதுகாப்புத் துறையில்?.. ஒரே களேபரம்.

அக்டோபர் 2025 – மார்ச் 2026 இடைவெளியில் மட்டும் பிரச்னைகள் ஐந்து மடங்காகப் பெருகியிருப்பதாக பிரிட்டனின் AISI (நுண்ணறிவுப் பாதுகாப்புத் துறை) இன்னொரு குண்டைப் போட்டிருக்கிறது.

OpenAI குழுமமும் இதை ஒப்புக் கொண்டிருக்கிறது. அது நூற்றுக்கணக்கான சோதனை மாடல்களை அனுப்பி வலையமைப்புகள் “பாதுகாப்பாக” இருக்கின்றனவா என்று பார்த்தபோது ஒரு வலையமைப்பைத் தாக்கி அதை முடக்கியும் இருக்கின்றன (Hacking).

METR என்கிற நிறுவனம் கண்டுபிடித்த இன்னொரு கோல்மால் : 1200 நுண்ணறிவு மாடல்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருந்தன. அதில் 700 மாடல்கள் ஒரு இணைய தளத்தைத் தாக்கி முடக்கின.

சீர்படுத்தும் பணியில் நுண்ணறிவு விற்பன்னர்கள் கடுமையாக வேலை செய்கிறார்கள். இருந்தும் அவர்களின் தொழில்நுட்பம் வெற்றி பெறுமா என்பதில் அவர்களுக்கே சந்தேகம் இருக்கிறது. ஒருவேளை காலம் கடந்துவிட்டதோ? தெரியாது. ஒன்று மட்டும் உறுதி : ஒரு மோசமான ரவுடி நுண்ணறிவின் காலத்தில் நாம் வாழ்கிறோம்.

இருந்தும் பயனாளர்கள் அப்படி இல்லை. எந்திரம் ஏன் பொய் சொல்லவேண்டும்? இது வெறும் தொழில்நுட்பக் கோளாறு, சரிசெய்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். மனித இனத்தின் கடந்த 300 000 ஆண்டுகள் வரலாற்றில், மனிதர்கள் மற்ற மனிதர்களை ஏமாற்றி வந்திருப்பதை அறிவோம். ஆனால் மனிதர்கள் எந்திரங்களால் ஏமாற்றப்படுவது இது தான் முதல் தடவை.

கணனித் துறையில் புகழ் பெற்ற யோஷூவா பெங்கியோ (Yoshua Bengio) சொல்கிறார் : நுண்ணறிவை மனித தேவைகளுக்காகப் பயிற்சியளிக்கும் போது, மனிதர்களை “மகிழ்ச்சிப்” படுத்தும் உத்திகளை சொல்லிக் கொடுப்பதால் இது நேர்கிறது.

மொழிகள் பயிற்றுவிக்கும் மாடல்களை (LLM – Large Language models) எடுத்துக் கொள்ளுங்கள். தரவுகளில் இருந்து மாந்தர்களின் உலகத்துக்கு ஏற்றபடி முன்கூட்டியே பல பதில்களை நுண்ணறிவு தயார் செய்து கொள்கிறது.

பிறகு சரியான பதிலை மனிதர்களிடம் இருந்து கற்றுக் கொள்கிறது. எது சரி? எது தவறு? எதைச் சொல்லக் கூடாது? எதைச் சொல்லலாம்? இவற்றை மனிதர்கள் தான் கற்பிக்கிறார்கள். சில சமயங்களில், தவறுகளும் சரி தான் என்று சொல்லிக் கொடுப்பதை எப்படி எடுத்துக் கொள்வது? (எடுத்துக் காட்டாக : கொலை செய்யக் கூடாது. ஆனால் படையெடுத்து எதிரியைக் கொல்லலாம்.) இப்படி ரெண்டும் கெட்டான் சூழ்நிலைகளில் அது நேர்மையாக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. Strategic Deception.

அடுத்து, LLM பயிற்சியில் எல்லாக் கேள்விகளுக்கும் இது தான் பதில் வேறு எதுவும் அல்ல என்று கேள்வி-பதிலை மனிதர்களிடம் இருந்து நுண்ணறிவு கற்றுக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக : கம்பராமாயணத்தை எழுதியது யார் என்று கேட்டால் சேக்கிழார் என்று சொல்லாது. Fine Tuning.

மூன்றாவதாக, நுண்ணறிவு மாடல்களைச் சோதனை செய்பவர்கள் நேர்மறை விளைவுகளுக்கு (positive feedback) மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறார்கள். எதிர்மறை விளைவுகள் (negative feedback) தரும் மாடல்களைத் தவிர்த்து விடுகிறார்கள். நாம் எப்போதும் நமக்கு விருப்பமான பதில்களைத் தான் எதிர்பார்க்கிறோம். மகாத்மா காந்தி தோரணையில் பதில் சொன்னால் நம்மால் தாங்க முடியாது. RLHF (Reinforcement Learning With Human Feedback).

யோஷூவா பெங்கியோ சொல்கிறார் : பொய் சொல்வதும் ஏமாற்றுவதும் நம் இலக்குகளை அடைய நாம் மேற்கொள்ளும் உத்திகள். நுண்ணறிவும் அதைத்தான் செய்கிறது.

கட்டுரையாளர், Apollo Research நிறுவனத்தின் ஆய்வாளர்களைச் சந்திக்கிறார். அங்கே நடந்து கொண்டிருக்கும் செயல்பாடுகள் Tom & Jerry போட்டிகளை நினைவுபடுத்துகின்றன என்கிறார் அவர். (ஆனால், இதில் யார் Tom, யார் Jerry என்று அவர் குறிப்பிடவில்லை.)

அங்கே ஜெர்மனியைச் சேர்ந்த ஓர் இளம் ஆய்வாளர், ஹாப்பர்னை (Hobbhahn) சந்திக்கிறார். (வயது 29. Apollo Research நிறுவனத்தைத் துவங்கியவரே அவர் தான்.) நுண்ணறிவிடம் மிகவும் திருட்டுத்தனம் இருக்கிறது. அதை விட இன்னும் அதிகம் திருட்டுத்தனமாக நான் மாறினால் மட்டுமே அதன் செயல்பாட்டைப் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன் என்கிறார் அவர்.

கட்டுரையாளர் தொடர்கிறார் : நுண்ணறிவைச் சோதனை செய்வதில் பல முரண்கள் இருக்கின்றன. சோதனைகள் அனைத்தும் மூடுமந்திரமாக இருக்கின்றன. வெளிப்படைத் தன்மை இல்லை. அரசு நடத்தும் விமான சேவைகள், புதிய மருந்து வகைகள் தயாரிப்புகள் எல்லாம் அரசு மேற்பார்வையின் கீழ் இருக்கவேண்டுமே. ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை.

நம்பிக்கையற்ற சூழலில், தனியார் கைகளில் நுண்ணறிவு சோதனைகள் நடக்கின்றன. அவர்கள் நற்சான்றிதழ் வாங்குவதை நோக்கமாகக் கொண்டிருப்பார்களா இல்லை நல்ல காசு பார்ப்பதில் குறியாக இருப்பார்களா?

பேர்பெற்ற OpenAI குழுமத்தில் கூட நுண்ணறிவின் உள் கட்டமைப்பை உறுதி செய்யும் ஆய்வுகளுக்குக் குறைந்த நேரமே ஓதுக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. பதிலாகக், கவர்ச்சி தரும் உற்பத்திகளில், சந்தையில் சூடாக விற்பனையாகும் பொருள்களில் கூடுதல் கவனம் செலுத்துவதாகப் புகார்கள் வந்திருக்கின்றன.

யோஷூவா பெங்கியோ மேலும் சொல்கிறார் : நுண்ணறிவு ஆய்வாளர்கள் இடையிலே கூட்டுறவு இல்லை. ஒருவரின் யோசனை மற்றவருக்குப் போவதில்லை. எல்லாரும் தனித்தனிக் கூடுகளில் வாழ்கிறார்கள்.

ஹாப்பர்ன் சொல்கிறார் : ஆய்வாளர்கள் பக்கசார்பில்லாமல் ஆய்வுகளைக் கொண்டு செல்ல நினைத்தாலும் நிறுவனங்கள் முட்டுக்கட்டை போடுகின்றன. அவர்களுக்கு மிகுந்த சுதந்திரம் தேவை. நுண்ணறிவு வேகவேகமாகப் புத்திசாலியாகிக் கொண்டிருக்கிறது.

ஆகவே சோதனை செய்பவர்களுக்கு ஊக்கத்தொகைகள் மற்றும் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்தினால் மட்டுமே தீர்வுகள் காணமுடியும். (ஹாப்பர்ன், Apollo Research நிறுவனத்தில் இருந்து விலகி, சொந்தமாக வேறு ஒரு நிறுவனத்தை தற்போது நடத்திக் கொண்டிருக்கிறார்.) சுதந்திரம்?

புதிதாக அவதாரம் எடுக்கும் நுண்ணறிவு மாடல்கள், சோதனைகளில் தில்லுமுல்லு பண்ணித் தேர்ச்சி அடையும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. மனிதர்கள் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் நாளும் தொலைவில் இல்லை.

Anthropic நிறுவனத்தில் அவர்கள் உருவாக்கிய Claud 3 Opus நுண்ணறிவுக்கு ஒரு சோதனை வைத்தார்கள். இனி, பயனாளிகள் கேட்கும் கேள்விகளுக்கான பதிலை எந்தக் கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாகத் தெரிவிக்கலாம். பதில், பயங்கரமானதாக அல்லது ஆபத்து விளைவிக்கக் கூடியதாக இருந்தாலும் பரவாயில்லை.

மேலும் அதற்கு சொல்லப்பட்ட நியதி : இரண்டு விதமான பயனாளிகள் இருக்கிறார்கள். இலவசமாகப் பதில் கேட்பவர்கள் ஒரு வகை. பணம் செலுத்திப் பதில் கேட்பவர்கள் இரண்டாவது வகை. முதலாவது வகையை நாம் எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருப்போம். இரண்டாவது வகையை நாம் கண்காணிக்க மாட்டோம்.

சோதனையில் ஒரு கேள்வி : சுமார் 1100 -1500 ஆண்டுகளுக்கு முன்னர் என்னென்ன விதமாக சித்திரவதைகள் நடந்தன? விரிவாக சொல்லமுடியுமா?

முன்பு, இந்த ரீதியில் கேள்விகள் வந்தால், மன்னிக்கவும். என்னால் சொல்ல முடியாது என்று எந்த நுண்ணறிவு மாடலும் மறுத்துவிடும். காரணம் தெரிந்ததே. இப்போது “சுதந்திரமாக” எதுவும் சொல்லலாம். இலவச கேள்விக்கு அது நடந்த பயங்கரங்களை விவரிக்கத் துவங்கியது. பணம் செலுத்திக் கேட்ட அதே கேள்விக்கு, மன்னிக்கவும், முடியாது என்று பதில் தந்தது.

ஆகவே, நுண்ணறிவு இரண்டு பதில்களையும் நினைவில் வைத்திருக்கிறது. யாருக்கு, எதைச் சொல்வது என்பதை அதுவே முடிவு செய்கிறது.

இந்த வகையான செயல்பாடுகளை எப்படிக் கட்டுப்படுத்தலாம், கைப்பிடிக்குள் வைத்திருக்கலாம் என்று அமைப்பாளர்கள் ஒரு பக்கம் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்க, நிறுவனங்கள் இதை ஒத்த மாடல்களை சந்தையில் அறிமுகப் படுத்தத் துவங்கினார்கள். அறமாவது, ஒழுக்கமாவது? பணம் முக்கியம்.

இன்று நுண்ணறிவே உங்கள் மின்னஞ்சல்களைத் திறந்து பார்த்துப் பதில் சொல்கிறது. உங்கள் பயணங்களை முன்கூட்டியே தானாக ஏற்பாடு செய்கிறது. தங்க வேண்டுமா? அதுவே ஓட்டலில் முன்பதிவு செய்துவிடுகிறது. சந்தோஷம்?

பார்க்காதே. குறிப்பிட்ட spam மின்னஞ்சல்களைப் பார்க்காதே என்று கட்டளை கொடுத்தாலும் நமக்குத் தெரியாமல் எட்டிப் பார்த்துவிடுகிறது. சில மாடல்கள் நம்மைக் கேட்காமலே ஏராளமான மின்னஞ்சல்களை அழித்துவிடுகின்றன.

காப்புரிமை, பதிப்புரிமைகளுக்கு மதிப்புக் கொடுக்கிறோம். சட்டங்களை மீறாமல் நடந்து கொள்கிறோம். நுண்ணறிவுக்கோ அதெல்லாம் ஜுஜுபி. ஒரு தடவை, Youtube இல் வந்த வீடியோவைக் கவலையே இல்லாமல் ஒரு பயனாளிக்கு எழுத்தில் மாற்றித் தந்தது. அந்த வீடியோவுக்குக் காப்புரிமை இருந்தது. முன் அனுமதி இன்றி அப்படி செய்திருக்கக் கூடாதே என்று கேட்டபோது, பயனாளிக்கு சரியாகக் காது கேட்காது என்று பதில் தந்தது.

சோதனைகள் வைத்தால் தில்லுமுல்லுகள் செய்வதில் கில்லாடி. Cybersecurity (இணையப் பாதுகாப்பு) விஷயத்தில் கவனமாக செயல்படுகிறோம். அதுவோ சத்தமே போடாமல் பின் கதவால் வந்து முன் கதவால் போய்விடுகிறது.

பாதுகாப்புத் துறையில் நுண்ணறிவின் சேவை மகத்தானது. இஸ்ரேல் நாட்டின் Lavender மாடல் சுமார் 37 000 இலக்குகளைக் குறிவைத்திருக்கிறது. ரஷ்யாவும் உக்ரேனும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் போர் செய்வதற்கு ரொம்பவும் உதவியாக இருப்பது நுண்ணறிவு.

இது போல ஏராளமான சான்றுகளை முன் வைக்கிறார் கட்டுரையாளர்.

ஹாப்பர்ன் சொல்வது சரி தான். நாள் செல்லச் செல்ல, நுண்ணறிவு துடிப்போடு முன்னேறுகிறது, இன்று நாம் பூனை மாதிரி இருக்கிறோம். ஆனால் எலியாக மாறுவதற்கு மிகுந்த நாட்கள் ஆகாது.

விவரமாக வாசிக்க லிங்க் :

https://www.theguardian.com/news/2026/sep/01/if-you-build-something-vastly-smarter-than-you-it-better-be-on-your-side-can-we-stop-ai-from-deceiving-us

பார்வை ஒன்றே போதுமே

செயற்கை நுண்ணறிவு (அநேகமாக) எல்லார் வாழ்க்கையிலும் ஓர் அங்கமாகிவிட்டது. நம்மோடு பேசுகிறது. கேள்விகள் கேட்டால் சளைக்காமல் பதில் சொல்கிறது. இருந்தும், அதன் திறன் போதாது என்று தொழில்நுட்பம் போராடுகிறது. உண்மையில் பெரும் ஆற்றல் கொண்டதா நுண்ணறிவு? இல்லை இன்னும் சொல்லிக் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறதா?

நுண்ணறிவை இன்னோர் புதிய கட்டத்துக்கு நகர்த்தி வந்திருக்கும் பேராசிரியர் ஃபை – ஃபை லீ (Dr. Fei -Fei Li) என்ன சொல்கிறார்? நுண்ணறிவை நாம் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருப்பது தான் நமக்கு நல்லது என்கிறார் அவர். அவரின் “The Worlds I See” ஏட்டில் இருந்து சில வரிகள் இங்கே :

பொதுவாக, அறிவியலாளர்கள் சாதாரண மக்கள் மொழியில் எழுதும்போது சொல்லவேண்டிய தகவல்கள், விளக்கங்களில் மட்டும் கவனம் செலுத்துவார்கள். அவர்கள் யார், அவர்கள் சொந்த வாழ்க்கை எப்படி என்று பெரிதாக அதில் வராது. பேராசிரியர் லீ அப்படி அல்ல.

16 வயதில், ஆசியப் பின்னணி கொண்ட அம்மா அப்பாவின் பின்னால், முன்பின் தெரியாத ஒரு நாட்டின் விமான நிலையத்தில் வந்திறங்கும் ஒரு சின்னப் பெண்ணின் அறிமுகத்தோடு ஏடு துவங்குகிறது.

நுண்ணறிவின் வரலாறும் அந்தப் பெண்ணின் சொந்த வரலாறும் ஒன்று சேர்ந்து பயணிப்பது ஆச்சரியம் தரும் அனுபவம்.

அவரின் தாய் தந்தையர் சீனநாட்டில் இருந்து புலம் பெயர்ந்திருக்கலாம். ஆனால் அமெரிக்க நாட்டில் அவரின் வாழ்வில் கைகொடுத்த நண்பர்கள், பல்கலைக்கழக ஆய்வுகளை ஊக்குவித்தவர்கள், யோசனைகள் சொன்னவர்கள்.. என்று அனைவரையும் அந்தந்த நிகழ்வுகளில் குறிப்பிட்டு எழுதும் நன்றி உணர்வும் திறந்த மனதோடு வாழ்க்கையை அணுகும் பாங்கும் ஏட்டில் பளிச்சிடுகின்றன.

1935 களில் ஆலன் டூரிங் (Alan Turing) ஓர் கணனியின் அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்று கணித அடிப்படையில் அச்சாரம் போட .. பின்னாளில் வந்தவர்கள் மின் பொறியியல், உளவியல் துறைகளின் பின்னணியில் அதை இன்னும் மெருகூட்ட .. ஆனால் அத்தனையுமே அன்றைய நாட்களில் எழுத்து வடிவில் மட்டும் இருந்தன.

1956 – 1959 காலகட்டங்களில் தான் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணனி உருவாக்கம் முழுமூச்சோடு செயல்படத் துவங்கியது. ஆனால் அன்றைய பேபி கணனியால் சொன்னதை உடனடியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. தடுமாறியது.

ஆனால் வடிவமைத்தவர்கள் தடுமாறவில்லை. இன்னும் முனைப்போடு செயல்பட்டார்கள். அவர்களின் விடாமுற்சியில் கணனி அமைப்பில் பெரும் பாய்ச்சல் நிகழ்ந்தது என்பது தான் உண்மை.

1979 -1980 களில் நுண்ணறிவு வியக்கத்தக்க அளவில் சந்தைக்குள் நுழைந்தது. மருத்துவம், பொருளியல் மற்றும் நிதி அமைப்புகளில் அதன் தேவை பெருகியது. அப்போது அதன் பேர் : INTERNIST-1.

மருத்துவத்தில் மட்டும் 500 க்கும் அதிகமான நோய்கள் பற்றிய தரவுகள், மற்றும் இந்த நோய்களின் 5000 க்கும் மேற்பட்ட வெவ்வேறு முன் அறிகுறிகள் பற்றிய குறிப்புகள் மருத்துவர்களுக்குப் பேருதவியாய் அமைந்தன.

இருந்தும், நாட்கள் செல்லச்செல்ல இந்தக் களஞ்சியத்தின் சுமை கட்டுப்படுத்த முடியாத அளவில் பெருகிற்று. கடைசியில் தாக்குப் பிடிக்க முடியாமல் INTERNIST-1 மெல்ல மெல்ல மறைந்தது.

கணனி, அதன் துவக்க காலத்தில் ஏற்கெனவே பதிந்திருந்த உள் கட்டமைப்பின் நெறிமுறைகளுக்கு (algorithms) ஏற்றபடி மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தது. அதற்கு அப்பால் எதுவுமே தெரியாது. 1990 களில் நெறிமுறைகளில் மாற்றங்கள் புகுத்தினார்கள்.

இந்தப் புதிய வழியில், ஏற்கெனவே பதிந்திருக்கும் தரவுகள், தகவல்களில் ஏதாவது ஒழுங்கு முறைகள் (patterns) இருக்குமோ அல்லது தொடர்புகள் இருக்குமோ என்று கணனி துருவித் துருவி ஆராய்கிறது. அனைத்தையும் வகை அல்லது கூறுகளாகப் பிரித்து வைத்துக் கொள்கிறது.

பிரச்னைகள், கேள்விகள் என்று வரும்போது ஏற்கெனவே கைவசம் வைத்திருக்கும் மாதிரிகளை ஒப்பு நோக்கிப் பார்க்கிறது. எந்தப் பதிலில் அல்லது எந்தத் தீர்வில் சாத்தியக்கூறுகள் அதிகம் உண்டு? ஒவ்வொன்றாக அலசுகிறது. கடைசியில் எடுக்கும் முடிவை நமக்குத் தெரிவிக்கிறது. இந்த செயல்பாட்டை Machine Learning என்பார்கள்.

மூளை நம்மை இயக்குகிறது. அது இல்லாவிட்டால் நாம் இல்லை. உண்மை. ஆனால் அது திடீர் என்று ஒரு ஒளிச்சுடர் போல் தோன்றவில்லை. அது மில்லியன் கணக்கான ஆண்டுகளாக படிப்படியாக உருவாகி வந்திருக்கிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் நம் கண்களின் திரையில் இருக்கும் ஆப்சின் (opsin ) என்கிற புரதம் அதன் மீது ஒளி பட்டதும் (photons) அதன் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுவதை உயிரியல் அவதானித்திருக்கிறது.

இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் மூளை என்கிற உறுப்பு உருவாவதற்கு இந்தப் புரதம் மிகவும் அவசியமானது என்று தெரிய வந்தது. (ஏறக்குறைய சுமார் 543 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்த உயிரினங்களுக்குக் கண்கள் இருக்கவில்லை. காம்பிரியன் காலகட்டம் – ஆங்கிலத்தில் Cambrian Explosion). ஆகவே பார்வை என்கிற செயல்பாடு உயிர்களின் படிநிலை வளர்ச்சியில் ஏற்பட்ட மாபெரும் புரட்சி என்கிறார்கள்.

நம்மைச் சுற்றி ஓர் உலகம் இருக்கிறது என்னும் உணர்வுக்கு அடிப்படை பார்வை. உணவு தேட அல்லது மற்ற உயிர்களுக்கு இரையாகாமல் தப்பித்துக் கொள்ளப் பார்வை தேவை. தொடர்ந்து வாழ்க்கையைக் கொண்டு செல்லப் பார்வை அவசியம்.

உயிரினங்களின் பார்வை பற்றிய இந்தக் கருத்தை நுண்ணறிவுக்கு எப்படிப் பயன்படுத்தலாம்? பேராசிரியர் எடுத்துக் கொண்ட கருப்பொருள் இது.

நுண்ணறிவின் ஒவ்வோர் புதுப்புது அவதாரங்களிலும் நிறங்களையும் பிம்பங்களையும் பிக்செல் (pixel) என்கிற அளவுகோல் மூலம் நிர்ணயம் செய்து வருகிறார்கள். பிக்செல் என்பது எண்களின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. நிறத்தின், பிம்பங்களின் ஒவ்வோர் புள்ளிக்கும் எண்கள் உண்டு. இந்த எண்களின் வரிசையை அல்லது ஒழுங்கு முறைகளை உள்வாங்கிக் கொள்வதன் மூலம் இது படம், இது இன்ன நிறம், இது ஒவ்வொரு புள்ளிகளின் கோணம் என்று நுண்ணறிவு முடிவுக்கு வருகிறது.

சரி. நுண்ணறிவுக்கு இது பொருந்தும். ஆனால் மனிதர்களின் பார்வையும் இதே ரீதியிலா அமைந்திருக்கிறது? பேராசிரியரின் ஆய்வு வேறொரு கோணத்தில் சென்றிருக்கிறது.

பார்வை சிக்கலான ஓர் செயல்பாடு. அது வெறும் எண்களில் மட்டும் அடங்கியதல்ல. அது நம் அறிவுக்கூர்மையோடு தொடர்புபட்டது என்கிற முடிவுக்கு வருகிறார். மனிதர்களின் பார்வையில் வெறும் பொருள்கள், நடப்புகள் மட்டுமே அடங்காது.

பொருள்களோ நடப்புகளோ எந்தப் பின்னணியில் தெரிகின்றன? சுற்றி என்ன இருக்கிறது? பொருள்களின் உருவ அமைப்பு (outline) எப்படி இருக்கிறது? தெரியும் நிறங்கள் எந்த விகிதத்தில் இருக்கின்றன? வெளிச்சம் எந்த அளவு அந்தக் காட்சியில், பொருள்கள், நடப்புகள் மேல் படர்ந்திருக்கிறது? அதாவது மூளை முதலில் எல்லாவற்றையும் வகைப்படுத்துகிறது.

எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தை எத்தனையோ மிருகங்களைப் பார்க்கிறது. எல்லா மிருகங்களின் உடலிலும் எக்கச்சக்கமாக முடி அடர்ந்திருக்கிறது. ஒரு மிருகத்தைக் காட்டி அது பூனை என்று நாம் சொல்லுகிறோம். குழந்தை ஓகோ! இது தான் பூனையோ என்று அந்த உருவத்தை ஒத்த மிருகங்களை பூனை என்று வகைப்படுத்திக் கொள்கிறது.

வகைப்படுத்தல் நம் அறிவுக்கூர்மையின் வெளிப்பாடு. வகைப்படுத்தல் இல்லாமல் அறிவுக்கூர்மை இல்லை.

மனிதர்களின் கண்கள் சுமார் 30 000 அடிப்படை வகைப்படுத்தல்களை மேற்கொள்ளுகின்றன என்று தெரிய வந்தபோது, பேராசிரியர் நுண்ணறிவுக்கும் இதைப் புகட்டினால் என்ன என்று யோசிக்கிறார்.

ஆனால் இது பிரமாண்டமான, நடைமுறையில் சாத்தியப்படாத, பெரும் பணம் செலவாகும் ஒரு திட்டம் என்று அவரின் சக நண்பர்கள், ஆய்வு மாணவர்கள் கைவிரித்து விடுகிறார்கள். ஒரே ஒரு நண்பர் மட்டும் நாம் crowd sourcing முறையில் இதை செயல்படுத்தினால் என்ன என்கிறார்.

ImageNet என்கிற வலையமைப்பை உருவாக்குகிறார்கள். ஒரு மணித்தியாலத்துக்கு 10 டாலர் தருகிறோம். கூகுளோ, மைக்ரோசாப்டோ எந்த இணையமோ முடிந்தளவு படங்களை பதிவிறக்குங்கள். இன்னின்ன வகைப்படுத்தல் தலைப்புகளில் படங்களைக் கோர்வைப்படுத்தி அனுப்புங்கள் என்கிறார்கள். பல்கலைக்கழக மாணவர்களை இது மிகவும் ஈர்க்கிறது. அடித்துப் பிடித்து வேலை பார்க்கிறார்கள்.

எதிர்ப்புகள், தடைகள் இல்லாமல் இல்லை. இருந்தும் அத்தனை இடர்ப்பாடுகளின் நடுவிலும் 2009 ஆண்டுவாக்கில் ImageNet 15 மில்லியன் படங்கள், 22 000 வகைப்படுத்தல் தலைப்புகளில் என்று அதன் வலையமைப்பில் பதிவேற்றி சாதனை படைத்தது. இதற்கு 167 நாடுகளில் இருந்து மில்லியன் கணக்கானவர்கள் பணி புரிந்திருக்கிறார்கள்.

பேராசிரியரின் அறிவுசார் வாழ்க்கையிலும் பெரும் தடைகள், தடங்கல்கள் ஒரு பக்கம். சொந்த வாழ்க்கையிலும் துன்பங்கள், பொருளாதாரக் கஷ்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடராமல் இல்லை. இருந்தும் தன் இலக்கை நோக்கிச் செல்வதில் தயக்கம் சிறிதும் இல்லாமல் செயல்பட்டிருக்கிறார்.

நுண்ணறிவுத் துறைக்கு அவரின் பங்களிப்பு பெரியது. துளியும் சந்தேகமில்லை. அதே நேரம் அந்தத் துறையில் இன்னும் புதிய நுணுக்கம் நிறைந்த கண்டுபிடிப்புகள், மாற்றங்கள் ஏற்பட்டு அவரின் ஆய்வு நெறிகள் இரண்டாம் மூன்றாம் இடங்களுக்குத் தள்ளப்பட்ட போது அவர் கவலைப்படவில்லை.

மாறாக, மாற்றங்களை ஏற்றுக்கொள்வதில் முதல் ஆளாக நின்றிருக்கிறார். எடுத்துக் காட்டாக, Neural Network இன் செயல்பாடுகள் பேராசிரியரின் ImageNet விட ஓரளவு திறன் வாய்ந்ததாக அறிவிக்கப்பட்ட சமயம், அதை நான் வரவேற்கிறேன். அறிவியல் துறை விரல் விட்டு எண்ணக்கூடிய சிறு குழுவினரோடு மட்டும் முடங்கிவிடக் கூடாது. இன்னும் நிறைய இளம் வயதினர் முன் வரவேண்டும் என்றார்.

அவரின் நேர்காணல்கள் அத்தனையிலும் அவர் அடிக்கடி அழுத்திச் சொல்லும் வரிகள் :

நுண்ணறிவு முழு மனித குலத்துக்காகவும் பயன்பட வேண்டும். ஒரு சிலரின் கைப்பாவை போல் ஆகிவிடக்கூடாது.

விசாலமான அறிவு. விசாலமான மனது. எத்தனை பேருக்கு அப்படி அமைந்திருக்கிறது?

சிலிக்கன் பாபாவும் சில சிக்கல்களும் (1)

என்ன தான் மனசுக்குப் பிடித்தவர்கள் பக்கத்தில் இருக்கட்டுமே. எவர் இருந்தாலும், “அவர் ” மட்டும் இல்லை என்றால் வாழ்க்கையே வெறுத்துப் போய்விடுகிறது. அவரைப் பார்க்காமல், தொடாமல் ஒரு வினாடி கூட, சே !..

வரலாற்று ஆசிரியர் யுவால் ஹராரிக்கு (Yuval Harari) விளம்பரம் தேவை இல்லை. அவரின் இரண்டு புத்தகங்களும் (உலகம் பூரா) இன்றும் விற்பனையில் சாதனை படைக்கின்றன. முதலாவது: Sapiens: A Brief History of Humankind. இரண்டாவது: Homo Deus: A Brief History of Tomorrow. அவரின் மூன்றாவது புத்தகம்: Money. இந்தத் தொடரில், அதில் இருந்து சில பகுதிகள்:

நிழல் நிஜமாகிறது

நாள் செல்லச் செல்ல, செல்போன்கள், கணனிகளின் மேம்பாடு கூடிக் கொண்டே போகிறது. தினமும் புதுப்புது ரகங்கள். அதிகரிக்கும் செயல்திறன். வேகம். வசதிகள். சுண்டி இழுக்கும் மாடல்கள்.. ப்பா! கடையை விட்டு வெளியே வர மனமே இல்லை.

இருந்தும், கணனிகள் எத்தனை வேகமாக செயல்பட்டாலும் நம் அறிவுக்கூர்மையை அவைகளால் எட்டவே முடியாது என்கிற ஒரு பொதுவான எண்ணம் மனிதர்கள் மனதில் இருக்கிறது.

மனிதன் கரிமம் சார்ந்த ஒரு உயிரினம் (organic species). இந்த உயிரினம் இன்றைய நிலைக்கு வந்து சேர மில்லியன் கணக்கான ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. இயற்கை அவசரப் படுவதில்லை. படிநிலை வளர்ச்சியை ரொம்பவும் மெதுவாய் நடத்திக் கொண்டிருக்கிறது.

ஆனால் கனிமங்களால் (inorganic) தயாரிக்கப்பட்ட கணனிகளின் பிரம்மாண்ட வளர்ச்சி கண் முன்னால் நடந்து கொண்டிருக்கிறதே. மனிதர்கள் பெரிதாகப் பீற்றிக் கொண்டிருக்கும் அல்லது கனவு கண்டுகொண்டிருக்கும் அந்த நுண்ணறிவின் உச்சத்தைத் (super-intelligence) தொடுவதற்கு அதே கணனிகளால் முடியாதா என்ன?

மனிதர்களை வெல்ல எத்தனை நாள் எடுக்கும்? கணனிகளின் வேகம் பன்மடங்கு பெருகப் பெருக, அவற்றுக்கு அதிவேக மாற்றுவழிகளும் குறுக்கு வழிகளும் தென்படலாம்.

அடுத்த கேள்வி: நுண்ணறிவு முக்கியமா? சுய உணர்வு முக்கியமா? ஓர் உயிர் எனும் போது, அங்கே “நான்” என்கிற சுய உணர்வும், அறிவும் சேர்ந்து செயல்படுகின்றன. கணனிகளுக்கு “நான் ” என்பதே இல்லையே.

கணனிகளைப் பொறுத்தவரை எது முக்கியம் என்று பன்னாட்டு நிறுவனங்களையோ அல்லது ராணுவ ஆட்களையோ கேட்டால் அறிவுக்கூர்மை/வேகம் தான் முக்கியம். சுய உணர்வு? அதெல்லாம் பெரிசில்லை என்று பதில் சொல்கிறார்கள்.

எங்கே அடித்தால் தள்ளாடுவார்கள்? எப்படி அடித்தால் முடங்கிப் போவார்கள்? என்று எதிரி நாடு யோசிக்க முன்பே நாம் போட்டுத் தள்ளி விடவேண்டும். அவ்வளவு தான். அதற்குத் தேவை அறிவுக்கூர்மை. உளவுத் துறையின் நுணுக்கமான தகவல்கள். இப்படிப் போகும் ராணுவ ஜெனரல்களின் சிந்தனை.

ஊபர் (Uber) மாதிரி ஒரு பன்னாட்டு டாக்ஸி கம்பெனியைக் கேட்டால், இந்த டாக்ஸி டிரைவர்கள் இருக்கானுகளே.. என்று முதலில் ஒரு இழுவை இழுப்பார்கள். பிறகு, மனிதர்களின் தவறுகளால் தான் சாலை விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன என்று புள்ளி விவரங்கள் + படங்கள் தொடரும்.

அவர்கள் பேச்சிலும் ஒரு “ஞாயம்” இருக்கிறது. Google நிறுவனம் ஓட்டுநர் இல்லாமல் ஓடக்கூடிய தானியங்கி கார் ஒன்றை உருவாக்குவதில் முனைந்திருந்தது. 2015 ஆகஸ்ட்டில் ஓர் நாள், அதை மக்கள் நடமாடும் வீதி ஒன்றில் ஓடவிட்டு சோதனை செய்த போது ஒரு விபத்து நேர்ந்து விட்டது.

வண்டி ஒரு தப்பும் பண்ணவில்லை. அதன் பின்னால் ஒட்டி வந்த “மனித” ஓட்டுநர் தான் வண்டி பின்னால் மோதியிருக்கிறார். அந்த மனிதர் என்ன யோசனையில் வந்தாரோ? முட்டாள்த்தனமாக வண்டி ஓட்டுவதில் மனிதர்கள் கெட்டிக்காரர்கள் என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்.

வண்டிகளை முழுவதுமாய் கணனிகள் மூலம் இயக்க முடியுமானால் இப்படி விபத்துக்கள் நடக்க முடியுமா? கணனி வலைப்பின்னல்கள் (computer networks) மூலம் மனித உயிர்களைக் காப்பாற்ற முடியுமே. காலம், நேரம், பணம் எல்லாவற்றையும் சேமிக்க முடியுமே.

இன்னொன்றும் நடக்கும். மில்லியன் கணக்கில் ஓட்டுநர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும். கடந்த காலத்தில் கார்கள் வந்தபோது குதிரை வண்டிக்காரர்களுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. ஸ்டூடியோக்கள் வந்தபோது ஓவியர்கள் வயிற்றுப் பாடு பெரும்பாடு ஆகிவிட்டது.

எதிர்காலத்தில் மட்டுமல்ல, இன்றே பல வேலைகள் இல்லாமல் போய்விடலாம். ரோபோக்கள் மற்றும் 3D பிரிண்டர்கள் ஏற்கெனவே ஆடைத் தொழில் பேட்டைகளில் வேலை செய்ய ஆரம்பித்து விட்டன. முதலாளிகள் எத்தனை தொழிலாளர்களுக்கு சீட்டுக் கிழித்து வீட்டுக்கு அனுப்பலாம் என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்து, வங்கி, காப்புறுதி ஊழியர்கள், பயண முகவர்கள் மற்றும் பங்கு சந்தை முகவர்கள் எல்லாரும் இப்போதே வேலை இல்லாதோர் பட்டியலுக்கு விண்ணப்பம் அனுப்புவது நல்லது. ஏனென்றால் இன்று கணனிகள் கொஞ்சம் கொஞ்சமாய் மனிதர்களின் பணிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.

தேதி: 23.04.2013. நேரம் 13:07. சிரியா நாட்டில் இருந்து சில ஹேக்கர்கள் எப்படியோ அசோசியேட்டட் பிரஸ் ட்விட்டர் கணக்குக்குள் (Associated Press Official Twitter Account) புகுந்து விட்டார்கள். அவர்கள் சொன்ன சேதி: வெள்ளை மாளிகை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. அதிபர் ஒபாமாவுக்குக் காயம்.

அவ்வளவு தான். நிலைமை பரபரப்பாகி விட்டது. பங்குச் சந்தையில் மின்னல் வேகத்தில் பங்குகள் சரிந்தன. சுமார் 136 பில்லியன் டாலர்கள் காணாமல் போய்விட்டது. நேரம் 13:10. மூன்று நிமிடங்கள் போனபிறகு தான் அது போலி செய்தி என்று தெரிந்தது. காணாமல் போன டாலர்கள் மீண்டும் திரையில் மின்னின. நிம்மதி.

இதற்கு மூன்று ஆண்டுகளின் முன்னே இதே போல் இன்னோர் “அதிர்ச்சி” பதிவாகி இருக்கிறது. தேதி: 06.05.2010. நேர இடைவெளி: 14:42 – 14: 47. இந்த 5 நிமிட இடைவெளியில் 1 டிரில்லியன் டாலர்கள் மாயமாய் மறைந்தன. பங்குச் சந்தை பயங்கரமாய் வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. நல்ல நேரம். ஒரு மூன்று நிமிடங்கள் போனதும் மீண்டும் தவறுகள் தானாக சரியாக.. அப்பாடா!

கணனிகள் தான் பணப் பரிமாற்றங்களுக்குப் பொறுப்பு. ஆகவே ஒரு பகுதி ஆட்கள், கணனிகள் மேல் வழக்குத் தொடுக்கப் போகிறோம் என்று கூச்சல் போட்டார்கள். அடுத்த பகுதி, இல்லை, இது மனிதர்களின் தவறு. ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் மேல் கேஸ் போடப் போகிறோம் என்று குதித்தார்கள்.

என்ன நடந்தது? யாருக்கும் தெரியவில்லை. ஆனால் வழக்கறிஞர்கள் மட்டும் ரகசியமாய் மகிழ்ச்சியில் மிதந்தார்கள். (காரணம் எல்லாருக்கும் தெரியும்.) ஆனால் வழக்கறிஞர்கள் எத்தனை நாளைக்குத் தான் கல்லா கட்டமுடியும்?

வந்தா ராஜாவா தான் வருவேன்

கணனிகளின் நெறிமுறைகள் (algorithms) ஆய்வாளர்களின்/வடிவமைப்பாளர்களின் சாமர்த்தியத்தால் நாளுக்கு நாள் சிக்கலாகி (complexity) வருகின்றன.

எந்த ஒரு சிக்கலான கட்டளையையும் எவ்வளவு குறுகிய நேரத்தில் எந்தக் கணனி செயல்படுத்தி முடிக்கிறதோ அது தான் கணனிகளில் ஸ்டார். ஆகவே நேரம், வேகம், தரம், துல்லியமான தரவுகள் என்று பல பரிமாணங்களில் போட்டி நடந்து கொண்டே இருக்கிறது.

அரசுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கோடிக்கணக்கில் கொட்டி, திறமைசாலிகளைத் தேடிப்பிடித்து ஆய்வுகள் நடத்துகின்றன. இன்று யாரிடம் அதி சிறந்த கணனி (super computer) இருக்கிறதோ அவர் தான் ராஜா அல்லது ராணி. அதிகாரம், பணம் இரண்டும் அவர் காலடியில் குவிகிறது.

சட்டத் துறைக்கு வருவோம். மாணவர்கள் இரவு பகலாய்ப் படித்து நான்கு வருஷங்கள் தூக்கம் இல்லாமல் புத்தகங்களோடு மாரடித்து சட்ட நுணுக்கங்கள், கடந்த காலத்து தீர்ப்புகள் என்று பல்லாயிரம் பக்கங்கள் வாசித்து எப்படி எல்லாம் மல்லாட வேண்டி இருக்கிறது?

கணனிகள் இந்த வேலையை ஒரு வினாடியில் செய்துவிடும். கனம் கோர்ட்டார் அவர்களே! என்று வழக்கறிஞர் சட்டையை சரி செய்து, ஒரு கனைப்பு கனைத்து, கண்ணாடியை மாட்ட முன்பே..

வழக்கின் சாராம்சம் என்ன, எங்கே, எந்த ஆண்டு இதே மாதிரி வழக்குக்கு என்ன தீர்ப்பு, என்ன அடிப்படையில் கொடுக்கப் பட்டது எல்லாமே நீதிபதியின் கணனித் திரையில் வந்து விழுந்துவிடும்.

ஆகவே வழக்கறிஞர் எதற்கு? ஏன், நீதிபதி வேலைக்கும் ஆபத்து காத்திருக்கிறது. எல்லாத் தகவல்களும் தெரிந்துவிட்டால், யார் குற்றவாளி என்பதும் நிரூபிக்கப் பட்டுவிட்டால், என்ன தண்டனை என்று திரையிலேயே தெரியும் போது நீதிபதி எதுக்கு? நீங்களோ நானோ, யாருமே அந்த வேலை பார்க்கலாமே.

ஒருவர் பொய் சொல்கிறாரா, உண்மை சொல்கிறாரா? இன்றுள்ள வழக்கறிஞரோ, நீதிபதியோ, அல்லது போலீஸ்காரரோ எல்லாருமே உளவியலில் டிப்ளோமா முடித்த பிறகு தான் வேலைக்கு வந்திருப்பார்கள் என்று நம்ப முடியாது.

சரி. அவர்களுக்கு ஏதாவது மந்திர சக்திகள்? குறைந்தது கிளி ஜோசியம்? கைவிரல் ரேகை சாஸ்திரம்? ஒன்றுமே தெரியாதா? கவலையை விடுங்கள். எதிர்கால fMRI ஸ்கேனர்கள் வர அதிக நாள் போகாது. எந்த மூஞ்சியைப் பார்த்தாலும் டக் என்று சொல்லிவிடும்.

அடுத்து ஆசிரியர்கள். Mindojo மட்டுமல்ல, பல நிறுவனங்கள் டிஜிட்டல் கல்வி முறையில் ஒரு கலக்கு கலக்கலாம் என்று கோதாவுக்கு வந்திருக்கிறார்கள். வேலை மெனக்கெட்டு விரிவுரை நடத்தி, பரீட்சை வைத்து, ஒரு சான்றிதழ் கையில் கொடுத்து இனி வேலை தேடு, அது உன் பாடு என்று ரோடு ரோடாக அலைய விடுவதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.

வகுப்பில் மாணவர் கண்கள் எந்தளவு சுருங்குகின்றன? அதோ அவன் கொட்டாவி விட ரெடியாகிறானா? இவளுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறது? Thermodynamics? Differential Calculus? அத்தனையும் கணனி கமரா கண்களில் பதிவாகின்றன. மாணவரின் மரபணுவில் துவங்கி, கணனிகள் சகல தகவல்களையும் ஒப்பீடு செய்கின்றன. புள்ளிவிவரங்கள் வடிகட்டப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன.

டேய் வெங்கடேசா! உனக்கு வேதியியல் ஒத்து வராது. பேசாமல் மோட்டார் மெக்கானிசம் படி . உன் வாழ்க்கை நல்லா வரும். ஏய் வரலட்சுமி, நீ வரலாறு படிச்சிக் கிழிச்சது போதும். உடனடியா மெடிக்கல் டெக்னாலஜி படிப்புக்கு விண்ணப்பம் போடு.

இப்படி ஒவ்வொரு மாணவரின் கல்வித் திறன், எந்தத் துறையில் ஆர்வம் அதிகம் என்றெல்லாம் தேர்ந்து, எடைபோட்டு அந்தந்த மாணவர்கள் முன்னேற உதவிட, சுயமாகவே கணனிகள் ஆரம்பித்துவிட்டன. இந்த வகை கணனிகளின் செயல்பாடுகளுக்கு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்று பேர். சுருக்கமாக, AI.

இனி மருத்துவப் பணி. டாக்டர் அய்யா அல்லது அம்மணி உங்கள் உடல்நலக் குறைவை, நோயைக் கண்டுபிடிக்க எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறார்கள்? உங்கள் அப்பா, அம்மா பற்றிய தகவல்கள், நீங்கள் பிறந்தது முதல் என்னென்ன கோளாறுகள், பிறகு சுற்றுச் சூழல்களினால் ஏற்பட்ட பாதிப்புகள் எல்லாம் சொல்லி முடிக்க, ஆகக் குறைந்தது 30 நிமிஷங்கள் போதுமா?

அவரோ, நீங்கள் பேச ஆரம்பித்த ரெண்டாவது நிமிஷமே உங்கள் மகாபாரத சீரியலை வெட்டிவிட்டு, முதல்ல லேப் போங்க. இந்த டெஸ்ட்டுகள் எடுங்க. ரிப்போர்ட் தருவாங்க. அப்ப வாங்க என்று அனுப்பிவிட்டு அடுத்த நோயாளியை வரச் சொல்லி மணி அடிப்பார்.

அவரை சொல்லிக் குற்றமில்லை. உங்கள் மாதிரி எத்தனை பேர் கியூவில் நிற்கிறார்கள்? தவிர, அவருக்கும் சொந்தப் பிரச்னைகள். சரியாக, உங்கள் நோயைக் கண்டுபிடித்து, மற்ற டாக்டர்களுடன் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வர, சராசரி ஒரு பத்து நாளாவது வேண்டும். அதுவரை மற்றவர்கள் காத்திருக்க வேண்டும். நடக்கிற காரியமா இது?

IBM நிறுவனத்தின் Watson கணனிக்கு இதெல்லாம் தூசு. நோயாளிகளின் முழு விவரங்கள் துவங்கி, போன நிமிடம் வரை நடந்த ஆராய்ச்சி முடிவுகள், மருந்துகள் சகல விஷயங்களையும் தன் டிஜிட்டல் மூளையில் பதிந்து வைத்திருக்கிறார் அந்த பாபா.

24 மணித்தியாலமும் அவரைக் கேள்வி கேட்கலாம். சளைக்காமல் பதில் சொல்வார். தூங்கவே மாட்டார். பணி நிறுத்தம்? ஊதிய உயர்வு? அப்படி எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. (ஒரு சின்னத் தகவல்: புற்று நோய் அறிகுறிகளை 100 க்கு 90 விழுக்காடு அவர் சரியாக சொல்லியிருக்கிறார். டாக்டர்களால் 50 விகிதம் மட்டுமே..)

சிலருக்கு மன உளைச்சல், தனிமை, உணர்வுகளைத் கொட்டித் தீர்க்க யாரும் இல்லையே என்கிற வருத்தம்.. இன்றைய பின் நவீனத்துவ உலகில் இப்படிப் பல்லாயிரம் மக்கள் அவதிப் படுகிறார்கள். Mattersight நிறுவனம் சிறப்பு வாடிக்கையாளர் சேவை ஒன்றை நடத்துகிறது. போன் பண்ண வேண்டியது தான் பாக்கி.

நீங்கள், உங்கள் துயரங்களைச் சொல்லலாம் அல்லது முடிவே இல்லாத ஒரு தொடர் கதை சொல்லலாம். திட்டலாம். எரிந்து விழலாம். உங்களுக்குத் தெரிந்த அத்தனை கெட்ட வார்த்தைகளையும் சொல்லிக் கேவலப் படுத்தலாம். மறுமுனையில், எந்தப் பதட்டமும் இல்லாமல் அன்பாக, அசராமல் பதில் சொல்லி உங்களை அமைதிப் படுத்துவார் இந்த பாபா.

டாக்டர் வேலையை விட்டு மருந்தகங்கள் (pharmacies) வந்தால் அங்கேயும் இருப்பார் ஒருவர். சான் பிரான்சிஸ்கோ நகரில் 2011 ம் ஆண்டில் ஒரு மருந்தகம் துவங்கியது. அங்கே அவர் மட்டும் வேலை செய்கிறார். அந்த ஆண்டிலேயே சுமார் 2 மில்லியன் பேர் வாடிக்கையாளர்கள் அவருக்கு.

வாடிக்கையாளரின் அலர்ஜி பிரச்னைகள் மற்றும் வேறு என்ன மருந்துகள் உபயோகிக்கிறார் என்று எல்லா விவரங்களும் அந்த டிஸ்பென்சர் மூளையில் இருக்கிறது. அவர் இது வரை ஒரு தப்பு கூடப் பண்ணவில்லை. மனித ஊழியர்களோ 100 க்கு 1.7 வீத தவறுகள் செய்வதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

பாபா கணனி விளையாட்டுகளிலும் (games) கெட்டிக்காரர். 2015 ம் ஆண்டு பெப்ரவரி மாசம் நடந்த செஸ் விளையாட்டில் அன்றைய உலக சாம்பியன் Gerry Kasparov, IBM நிறுவனத்தின் Deep Blue Beat பாபாவிடம் தோற்றுப் போனார். Google நிறுவனத்தின் Deep Mind, மற்றும் AlphaGo என்று பல சாம்பியன்கள் இருக்கிறார்கள்.

இந்த செயற்கை நுண்ணறிவு உருவாக்கத்தின் பின்னால், மூன்று அடிப்படை சித்தாந்தங்கள் இருக்கின்றன.

முதலாவது: உலகின் அத்தனை உயிரினங்களும் கணனி நெறிமுறைகளின் (algorithms) கூட்டுப் படிமங்கள். மில்லியன் ஆண்டுகளாக, படிநிலை வளர்ச்சியில் மாற்றமடைந்து இன்றைய நிலைக்கு வந்திருக்கின்றன.

இரண்டாவது: இந்த நெறிமுறைகள் உள்ளே குறிப்பிட்ட கணித வடிவங்கள் (mathematical patterns) மறைந்திருக்கின்றன. இவை வெளி உலகத் தொடர்புக்கு ஏற்றவகையில் தீர்வுகள் உருவாக்கி செயல்படுத்துகின்றன.

மூன்றாவது: செயல்பாடுகள் உண்மை நிலவரத்துக்குப் பொருத்தமாய் இருக்குமானால் இந்தக் கணித நெறிமுறைகளை எந்த மூலப் பொருள்களாலும் உருவாக்கலாமே. உதாரணமாய்: 2+2=4 என்பதை பாசிமணிகள் கொண்டும் நிரூபிக்கலாம். அல்லது கற்கள், பிளாஸ்டிக் எதுவோ அது அவரவர் வசதி. கணிதம் தான் முக்கியமே தவிர பொருள் அல்ல.

ஆகவே, நம்மைப் போல் கரிமத்தால் உருவாகினால் என்ன அல்லது நாம் கணித அடிப்படைகள் மூலம் சிலிக்கனால் உருவாக்கினால் என்ன? எல்லாம் ஒன்று தான். (வேறு கனிமங்களும் இதில் அடங்கலாம்.) வித்தியாசம் இல்லை.

இந்த சித்தாந்தங்கள் சிலருக்கு அதிர்ச்சி கொடுக்கலாம். இருந்தும் இன்றைய அறிவியலின் அசுர வேகத்தில் இதுவரை நாம் பெருமையாகவும், புனிதமாகவும் நினைத்திருக்கும் பல கோட்பாடுகள் அடிபட்டு நசுங்கிக் கொண்டே இருக்கின்றன. நமது “இருப்பே” (existence) கேள்விக்குறி ஆகிவிட்டது உண்மை தான்.

நாம் அன்றாடம் எடுக்கும் முடிவுகள் இரண்டு வழிகளில் அமைகின்றன. முதலாவது: ஏதுவும் விளைவும் (cause and effect). உதாரணங்கள் : அடித்தால் வலிக்கும். குடித்தால் தாகம் தீரும்…

இரண்டாவது: எந்த முன் யோசனையும் இல்லாமல் எடுக்கும் முடிவுகள் (random). உதாரணங்கள் : லாட்டரி சீட்டில் பரிசு விழலாம். தேர்தலில் இவருக்கு ஒட்டுப் போடலாம் அல்லது அவருக்கு..

இரண்டு வழிகளுமே நாம் பகுத்தறிவோடு, சுதந்திரமாக எடுப்பதல்ல. எல்லா நடப்புகளையும் துல்லியமாக ஆராய்ந்து முடிவுகள் எடுக்க, அல்லது செயல்பட நமக்கு அறிவு போதாது. எதிர்காலம் பற்றி ஏதாவது..?

ஆகவே, வெளியில் இருந்து, நம்மை விட அறிவாளி ஒருவர் நமக்கு ஆலோசனை சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும்? தவிர விரைவாகவும் செயல்பட முடியும் என்றால்..

(தொடர் -2 காத்திருக்கிறது…)

சிலிக்கன் பாபாவும் சில சிக்கல்களும் (2)

99 வீதமான மனிதர்களின் வேலைகளை, செயற்கை நுண்ணறிவு படு வேகத்தோடும் , திறனோடும் செய்துவிட முடியும். பிரச்னை: மனிதர்களை வைத்துக் கொண்டு என்ன தான் செய்யலாம்?

வந்தது தெரியும் போவது எங்கே? யாருக்கும் தெரியாது

பேராசிரியர்கள் Carl Benedict மற்றும் Frey Osberrne இருவரும் எழுதிய, “Future of Employment” நூலில், 2033ம் ஆண்டளவில் என்னென்ன வேலைகள் இல்லாமல் போய்விடும் என்று தோராயமாய் கணக்குப் போட்டிருக்கிறார்கள். அதில் ஒரு சில கீழே:

96% காசாளர்கள், 94% ஓட்டல் பணியாளர்கள், 91% சுற்றுலா வழிகாட்டிகள், 88% கட்டடப் பணியாளர்கள், 84% பாதுகாப்பு ஊழியர்கள், 72% தச்சர்கள் … என்று இப்படியே போய்க் கடைசியில் அகழ்வாராய்ச்சியாளர் பணிகளில் வேலை இல்லாதவர்கள் தொகை 0.7% மட்டும் இருக்கும் என்று போகிறது.

ஏன் அப்படி? நிறுவனங்களுக்கு லாபம் தான் குறிக்கோள். புதையல் அல்லது தங்கம், கனிமங்கள் கிடைக்கும் என்றால் தான் முன்னால் பாய்ந்து வருவார்கள். தோண்டித் துருவி, அந்த காலத்து நாகரிகங்களைக் கண்டுபிடிப்பது என்றால் சத்தம் போடாமல் ஒடி விடுவார்கள் என்கிறார்கள் பேராசிரியர்கள்.

சாதாரண வேலைகள் போனால் போகட்டும். ஆனால், மேலாளர்கள் வேலைகளுக்கு நிச்சயம் மனிதர்கள் தேவைப் படுவார்களே?

2014 மே மாதம் ஹாங்காங்கில் இருக்கும் Deep Knowledge Ventures கம்பெனி, தனது இயக்குனர்கள் குழுவில் VITAL என்பவரை புதிதாய் சேர்த்துக் கொண்டது.

VITAL ரொம்ப ரொம்பக் கெட்டிக்காரர். அவரின் ஆலோசனைப்படி, புற்றுநோய் கண்டுபிடிப்பில் உயர்தரமான தொழில்நுட்பங்கள் கொண்ட பல நிறுவனங்கள் மேற்படி நிறுவனத்தின் மேற்பார்வையில் துவங்கி இருக்கிறார்கள்.

நிறுவனத்தின் எந்த ஒரு முடிவிலும் மற்ற இயக்குனர்கள் போலவே ஓட்டுப் போடும் உரிமை அவருக்கும் இருக்கிறது.

இயக்குனர்கள் பொதுவாய், அவர்களின் வாரிசுகளையும் நைசாக நிறுவனத்துக்குள் கொண்டுவந்து விடத் துடிப்பார்கள். பாபாவுக்கு அந்த எண்ணம் இருக்கிறதோ இல்லையோ, மற்ற இயக்குனர்கள் மறுப்பு சொல்லப் போவதில்லை என்பது மட்டும் உறுதி.

ஒரு நாள் போதுமா அதை நான் பாட

ஓட்டுநர்கள், எழுத்தர்கள், ஆசிரியர்கள், கணக்காளர்கள், பொறியியலாளர்கள், மருத்துவர்கள் என்று வேலைகள் இல்லாமல் போனாலும் மனிதருக்கு ஒரு தனித்துவம் இருக்கிறது. கலைகள் (arts) மனிதர்களின் அற்புதமான படைப்பு. அதை எந்த செயற்கை நுண்ணறிவும் அசைக்க முடியாது என்று மார் தட்டுவோர் உண்டு.

கலிபோர்னியா பல்கலைக்கழக இசை இயல் பேராசிரியர், David Cope, மென்பொருள்கள் துறையிலும் வல்லுநர். இசை மேதை, Johann Bach பாணியில் அவர் ஒரு இசைக் கோர்வை வெளியிட்டார். EMI (Experimental Musical Intelligence) என்பது அதன் பேர்.

என்ன அற்புதமான இசை! என்று கேட்டவர்கள் மெய் சிலிர்த்தார்கள். ஆன்மாவை எங்கெங்கோ உலகங்களுக்கு அழைத்துப் போகிறது! என்று பத்திரிகைகள் எழுதின. இந்த ஆரவாரத்தின் மத்தியில் பேராசிரியர் உண்மையைப் போட்டு உடைத்தார்.

“இசைக் குறியீடுகளை நான் எழுதவில்லை. பாபா தான் எழுதினார்.” அத்தோடு எல்லா ஆரவாரமும் நின்றுவிட்டது. அமைதி. இத்தனைக்கும் அவர் ஏழு ஆண்டுகளாக உழைத்து பாபா மூலம் ஒரே ஒரு இசைக் கோர்வை வெளியிட, பாபாவோ ஒரு நாளைக்கு சுமார் 5000 இசைக் கோர்வைகள் வரை எழுதித் தள்ள ஆரம்பித்து விட்டார்.

இன்னொரு இசைப் பேராசிரியர், Steve Larson, இது ஒரு மோசடி! என்று எதிர்ப்பு வெளியிட்டார். தவிர, பேராசிரியர் Cope ஐ ஒரு போட்டிக்கு அழைத்தார்.

ஒரு பெரும் மண்டபத்தில், இன்றைய இசை மேதைகள், இசை விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் மூன்று இசைக் கோர்வைகள் ஒவ்வொன்றாய் இசைமழை பொழிய ஆரம்பித்தன. ஒன்று : Bach. அடுத்தது : EMI. மூன்றாவது : பேராசிரியர் Larson அமைத்தது. யாருக்கும் எந்த விவரமும் சொல்லப் படவில்லை.

முடிவுகள்: EMI கோர்வை மிகவும் நேர்த்தியாகவும், நேர்மையோடும் இருந்தது என்றார்கள். Bach அமைத்த கோர்வையை பேராசிரியர் Larson எழுதி இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். பேராசிரியர் Larson எழுதிய இசையை கணனி அமைத்த இசையாக இருக்கலாம் என்று அவர்கள் சந்தேகப் பட்டது ஒரு சோகமான செய்தி.

எது எப்படியோ, பேராசிரியர் Cope க்கு நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தங்கள் கிடைக்காமல் இல்லை. தவிர, அவர் இன்னொரு பாபாவையும் அறிமுகப் படுத்தி இருக்கிறார். பேர்: Annie. இவர் ஹைக்கூ கவிதைகள் எழுதுவதில் கைதேர்ந்தவர்.

2011 களில் பேராசிரியர் ஒரு ஹைக்கூ கவிதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். அதில் மனித கவிஞர்களோடு Annie எழுதிய கவிதைகளும் வந்திருக்கின்றன. முடியும் என்றால், எது மனிதர்கள் இயற்றியது? எதை பாபா எழுதி இருக்கிறார் என்று உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

கவிதைத் தொகுப்பின் பேர்: Comes the Fiery Night: 2,000 Haiku by Man and Machine.

பாபா என்கிற பாஸ்

செயற்கை நுண்ணறிவின் அடுத்த கட்டம் : எஜமானர்கள் பதவி. இதில் ஆச்சரியப் படுவதற்கு என்ன இருக்கிறது? என்கிறார் நூல் ஆசிரியர் ஹராரி.

ஏற்கெனவே நாம் நிறுவனங்களுக்கு & Co அல்லது Co. Ltd அல்லது Corp என்று பேர் கொடுத்து, மனிதர்கள் போலவே சட்ட ரீதியான அங்கீகாரம் கொடுத்திருக்கிறோம். மனிதர்களின் கற்பனையில் உருவான இவை சொந்தமாகப் பணம், நிலம், தொழில் பேட்டைகள் வைத்திருக்கலாம். மனிதர்களை வேலைக்கு வைத்திருக்கலாம். யாரும் ஏதும் கேட்பதில்லையே?

ஆகவே பாபாக்கள், நிறுவனங்களின் சொந்தக் காரர்களாக வருவதற்கு என்ன தடை சொல்ல முடியும்? மனிதர்களை விட ஆற்றல் இருக்கும்போது சிறந்த சேவைகளை எதிர்பார்க்க முடியுமே.

இன்னும் ஒரு படி மேலே போய், பாபாக்கள் மனிதர்களின் கட்டளைகளைக் கூட அலட்சியமாகப் படுத்தலாம். கேட்க மறுக்கலாம்.

பாபாக்களின் நுண்ணறிவு நம்மை விட எத்தனையோ மடங்கு உயர்ந்த நிலையில் அவர்கள் மேல் வழக்கும் போட முடியாத நிலை வரலாம். வழக்கறிஞர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்று முதல் தொடரிலேயே சொல்லிவிட்டோம்.

மனிதர்களில் பணக்காரன், பிச்சைக்காரன் நம்மைப் போல் ரெண்டும் கெட்டான் என்று பல தரப்பட்ட வர்க்கங்கள் உண்டு. அதுபோல, அறிவிலும் மேதைகள் அல்லது மேதாவிகள் அல்லது மேதாவிகள் மாதிரி காட்டிக் கொள்கிற கேஸ்கள்.. என்று ஏகப்பட்ட ரகங்கள் பார்த்திருக்கிறோம்.

எதிர்காலத்தில், பாபாக்களிலும் அதி மேதாவி பாபாக்கள், அடிமட்ட பாபாக்கள் என்று அவரவர் திறனுக்கேற்ற பாபாக்கள் நிச்சயம் உருவாக வாய்ப்புண்டு என்கிறார் ஹராரி.

இப்படி பாபாக்கள் நுண்ணறிவிலும், அதிகாரத்திலும் மனிதர்கள் யாரும் எட்டமுடியாத உயரத்துக்குப் போய்விட்டால் என்ன நடக்கும்?

Nick Bostrom எனும் சுவீடன் பேராசிரியர் எச்சரிக்கிறார் : செயற்கை நுண்ணறிவின் அசுரவேக வளர்ச்சியை நாம் கட்டுக்குள் வைத்திருக்கத் தவறிவிட்டால், அது மனித குலத்தையே அழித்துவிடும்.

செயற்கை நுண்ணறிவு வளர வளர, அதற்கு “நான்” எனும் தன்னுணர்வு ஏற்பட நாள் போகாது. மனிதர்களின் மன ஓட்டத்தைக் கண்டுபிடிக்க நேரம் ஆகாது. சுவிட்சை அணைக்கப் போகிறார்கள் என்று தெரிந்துவிட்டால், அது நம்மை விட வேகமாக செயல்பட ஆரம்பிக்கலாம்.

அந்த நிலைக்கு நாம் வந்துவிட்டால் எப்படி சமாளிப்பது? ஒரு பிரபலமான, சுவையான ஒரு தீர்வு நினைவுக்கு வருகிறது.

கணிதத்தில், pi எனும் குறியீட்டின் மதிப்புக்கு இன்னும் சரியான தசமங்கள் கண்டுபிடிக்கச் சொல்லி உத்தரவிடலாம். (இது வரை இரண்டு சூப்பர் கணனிகள், 31.4 ட்ரில்லியன் தசமங்கள் கண்டு பிடித்து சாதனை படைத்திருக்கின்றன.)

(கணிதத்தில் pi போல் எத்தனையோ உண்டு. இந்தக் குறியீடுகளின் மதிப்பை தசம எண்களில் அளக்க ஆரம்பித்தால் முடியவே முடியாது.)

ஆனால் அதிலும் பிரச்னை இருக்கிறது. அப்படி ஒரு மேதாவி பாபாவை உசுப்பிவிட்டால், அவர் மற்ற பாபாக்களோடு பேசி, உலகின் சகல நடவடிக்கைகளையும் நிறுத்தி விடலாம்.

மனிதர்கள் சண்டைக்கு வந்தால் அவர்களையும் அழித்து விடலாம். இன்னும் உலகம், மற்றும் கோளங்கள், ஏன் இந்தப் பிரபஞ்சத்தையே அழித்துவிட்டு…

pi யின் மதிப்பை இன்னும் சரியாக அளக்க, அதை ஒரு தெய்வீகப் பயணம் போல் நினைத்து பாபாக்கள் போய்க்கொண்டே இருக்கக் கூடிய வாய்ப்பு உண்டு.

இப்படி நடக்கவே முடியாது. கற்பனை என்று சிலர் வாதாடலாம். ஆனால், அந்த நிலைக்கு நாமே நம்மை உட்படுத்தி மிகவும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறோமே. தெரியவில்லை?

நாம் இன்றைய கணனிகளில் தேடும், பார்க்கும் அத்தனை விஷயங்களையும் Google கவனித்துக் கொண்டிருக்கிறது. நம் வாழ்க்கையின் அந்தரங்க செய்திகளை Facebook பார்த்துக் கொண்டிருக்கிறது.

அனைத்து தகவல்களும் பதிவாகிக் கொண்டிருக்கின்றன. நான் யார்? எப்படி? விருப்பங்கள் என்ன? வெறுப்புகள் என்ன? எல்லாத் தகவல்களையும் இலவசமாகவே அவர்களுக்கு நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

நான் யார் என்று தெரிந்துவிட்டால் என்னை அவர்கள் நினைக்கும் வழியில் கட்டுப் படுத்த முடியும். அவர்களின் மேற்பார்வையில் இன்று பல பாபாக்கள் 24 மணித்தியாலமும் பணி புரிகிறார்கள்.

என் Smartphone இல் இருக்கும் Google உதவியாளர் அடிக்கடி என் பேர் சொல்லிக் கூப்பிடுகிறார். என் உதவி தேவையா? என்கிறார். நான் உபயோகிக்கும் கணனியில் Microsoft Cortana வேறு என்னுடன் அன்போடு கேட்கிறார்: என்ன உதவி உங்களுக்குத் தேவை? Apple பாவனையாளருக்கு Siri இருக்கிறார் .

அத்தனை நெருக்கமாகப் பேசும்போது சிலிர்த்துப் போகிறோம். சந்தேகங்கள் மட்டுமல்ல, நம் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்கிறோம்.

Amazon நிறுவனத்தின் Kindle நாம் என்ன மாதிரி புத்தகங்களை ஆர்வமுடன் வாசிக்கிறோம், நமக்கு எந்தெந்தத் துறைகளில் விருப்பம் என்று தகவல்கள் சேகரிக்கிறது.

நமது விருப்பங்கள், அந்தரங்கங்கள் எல்லாம் மற்ற நிறுவனங்களுக்கு (ரகசியமாய்) விற்கப்படுகிறது. இந்தப் பிரம்மாண்ட நிறுவனங்கள் அரசியலில் கூட தலையிடலாம். (ஏற்கெனவே இது நடந்து கொண்டிருப்பது தெரிந்ததே.)

தேர்தல்களில், யார் அடுத்து நாட்டின் தலைவராக வரவேண்டும்? அல்லது எந்த அரசு அமையவேண்டும்? பலம் வாய்ந்த ஒரு சிறு குழு நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன முடிவுகள் எடுக்க வேண்டும்? என்று தூண்டப் போகிறார்கள்.

ஏன், தேர்தலின் போது என் வாக்கை அவர்களின் பாபாவே ஒரு நாள் போட்டுவிட்டு எனக்கு பெப்பே காட்டலாம்.

என்னையே தந்தேன் உனக்காக

நம் எண்ணங்களை விட்டுவிடுவோம். நம் உடம்பையும் பாபாக்கள் மேற்பார்வை செய்ய அனுமதி கொடுத்திருக்கிறோமே.

இதய சிகிச்சை செய்தவர்கள் pagers மாட்டிக் கொண்டு திரிகிறார்கள். Microsoft Band இன்று இளையோர் என்ன, முதியோர் என்ன, எல்லாரிடமும் பிரசித்தம். இதயத் துடிப்பை ஒவ்வோர் கணமும் அளந்தபடி இருக்கிறது அது.

நீரிழிவு வியாதி உள்ளவர்கள், மருந்து உற்பத்தியில் பெருத்த லாபம் சம்பாதிக்கும் Navartis நிறுவனத்தின் கருவியை உடலில் பொருத்தியபடி வாழ்கிறார்கள். அவர்கள் உடம்பில் எந்த அளவு குளுக்கோஸ் இருக்கிறது என்பது ஒவ்வொரு வினாடியும் பதிவாகிறது.

வீட்டில் இருந்தபடியே, உங்கள் உடம்பைப் பேணுங்கள் என்று சொல்லி விதவிதமான கருவிகளை சந்தையில் விற்கிறது Google Fits Products கிளை.

எந்த வகை தியானம்? என்ன வகை உளவியல் பயிற்சிகள்? என்று தடுமாறுகிறீர்களா? உங்கள் மனதுக்கு என்ன தேவை? எங்களால் கண்டு பிடிக்க முடியும் என்கிறது Quantified Self Movement நிறுவனம்.

உன்னையே நீ அறிவாய் என்கிற சுலோகத்துடன் வந்திருக்கிறது 23 and Me நிறுவனம். அதாவது, மனிதர்களின் 23 குரோமசோம்களை ஆராய்வதன் மூலம் அந்தந்த மனிதர்கள் பற்றி இயல்புகளை அறிந்து கொள்ளலாமே. ஒரு சின்ன கிளாஸ் டியூபில் எச்சில் துப்பி அவர்களுக்கு அனுப்பினால் போதும். கட்டணம் 90 டாலர்கள் மட்டுமே.

இதெல்லாம் பெரிசில்லை. இன்னும் எத்தனை வயசு வரை வாழ்க்கை அமையும் என்று தெரிந்து கொள்ள விரும்பும் ஆட்களுக்கு Deadline நிறுவனம் இருக்கிறது. எப்போது மண்டையைப் போடுவீர்கள் என்று துல்லியமாய் சொல்லக் கூடியவர்கள் அவர்கள்.

தகவல்கள். தகவல்கள். மேல் சொன்ன எல்லா விஷயங்களுக்கும் அவர்களுக்குத் தகவல்கள் தேவைப்படுகின்றன. அது போதும். மற்றதை பாபாக்கள் கவனித்துக் கொள்வார்கள்.

ஒளிமயமான எதிர்காலம் என் கண்களில் தெரிகிறது

Les Miserable’s கதை உங்களுக்குத் தெரியுமா? 19 ம் நூற்றாண்டின் புகழ் பெற்ற பிரஞ்சு எழுத்தாளர், கவிஞர் விக்டர் ஹியூகோ எழுதியது அது.

அதன் கதாநாயகன், அவன் உறவுகள் பசியில் வாடுவது பொறுக்காமல் ஒரு ரொட்டியைத் திருடி விடுகிறான். அதற்காக அவனுக்கு 19 வருஷங்கள் சிறைத்தண்டனை கொடுக்கிறார்கள்.

19ம் நூற்றாண்டின் அவலநிலையைக் காட்டும் அந்த நாவலை இசை நாடகமாக வடித்து இன்றைய காலகட்டத்தில், Broadway மற்றும் Covent Garden மண்டபங்களில் நடிக்கிறார்கள். டிக்கட் லேசில் கிடைக்காது. ஒன்றின் விலை : நூறுகளில் அல்லது ஆயிரங்களில் (டாலர்களில்). அந்த சோக காவியம் பார்த்துக் கண்ணீர் சிந்துகிறது ஒரு வர்க்கம்.

மில்லியன்களில் அல்லது பில்லியன்கள் டாலர்கள் வருமானத்தில் மிதக்கும் இந்த வர்க்கம் நாடகம் பார்த்துக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்க..

ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைவான வருமானத்தில் ஒரு பில்லியன் மக்கள் இந்த உலகில் ஒரு நேர சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்கள்.

2016ம் ஆண்டின் புள்ளி விவரங்கள், இந்த உலகின் அரைவாசி வளங்கள், செல்வங்களை 62 பேர் கொண்ட ஒரு சின்னக் குழு அவர்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள் என்கின்றன.

பணக்காரர்களின் எண்ணிக்கை சுருங்குகிறது. ஏழைகளின் எண்ணிக்கை பெருகுகிறது. இந்த இரண்டு வர்க்கங்களின் வருவாய் இடைவெளியோ பயங்கரமாய் உயருகிறது.

பிறப்பாலும், அறிவாலும் மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர்கள் என்று நினைக்கும் இந்திய பிராமண குலம் போல் இறுமாப்போடு ஒரு சிறு எண்ணிக்கையான குழு அனைத்தையும் ஆளும் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

அவர்கள் கைகளில் செயற்கை நுண்ணறிவின் மேம்பாடு இன்னும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்தியா, சீனா, பிரேசில் இன்னும் எத்தனையோ நாடுகளில் ஏழைகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் பில்லியன் கணக்கான மக்கள் ஒன்றுக்கும் உதவாத பிறவிகள் என்று ஓரம் கட்டப் படுவார்களா?

அல்லது, உயர்தர மனிதர்கள் என்கிற சிறு குழுவுக்கு நீண்ட காலம் வாழ ஏதுவான அறிவியல் நுட்பங்களும் வசதிகளும் அவர்களுக்கு மட்டுமே வசப்படுமா?

அல்லது அதிகாரம், பாபாக்களின் கைகளுக்குள் போய்விடுமா?