நீயா நானா

இருட்டறையில் கருப்புப் பூனையைத் தேடுவது கடினமான வேலை. அங்கே பூனையே இல்லை என்று வைத்துக் கொண்டால் வேலை இன்னும் கடினமாகி விடுகிறது.

அறிவியல் பக்கம் போகிறோம். ஆய்வாளர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

சிலர் வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, சிலர் ஏடுகளை வாசித்துக் குறிப்புகள் எடுக்க, சிலர் ஆய்வுக்கூடங்களில் சோதனைகள் செய்து கொண்டிருக்க, இப்படிப் பல ரகங்களில் இருந்தாலும், சிலர் காண்டீனில் டீ அல்லது காபி குடித்தபடி மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பதும் உண்டு.

இருந்தும், இவர்களிடம் ஒரு பொதுப்பண்பு இருப்பதைப் பார்க்கலாம். எல்லாருமே கருப்புப் பூனையைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் இருட்டில்.

இங்கே வருகிறார் பேராசிரியர் Stuart Firestein. அவரின் Ignorance ஏடு, நம் அறியாமை பற்றி அல்லது இன்னும் நமக்குத் தெரியாத நடப்புகள், உண்மைகள் பற்றி வேறு ஒரு கோணத்தில் அலசுகிறது. புதிதாக ஆய்வுகள் மேற்கொள்ளப் போகும் மாணவர்களுக்காக அவர் எழுதி இருந்தாலும் சுவையோடு சொல்வது அவர் பாணி.

அறியாமை எனும் சொல் பொதுவாகப் பேச்சு வழக்கில், எழுத்து வடிவத்தில் மிகவும் கீழான, இகழக்கூடிய மற்றும் கேலிக்குரிய எனும் பொருளில் வரும். அதாவது உண்மை தெரியாத ஓர் மனோநிலையின் வெளிப்பாடாக இந்தச் சொல் சமுதாயத்தில் வழங்குகிறது.

பேராசிரியர் சொல்லும் அறியாமை அல்லது தெரியாமை அதுவல்ல.

அறிவியல் என்ன தான் புதுப்புது உண்மைகளைக் கண்டுபிடித்தாலும், சிக்கல்களுக்குத் தீர்வுகளை முன்வைத்தாலும் முட்டித் தள்ளிவிட்டு, அதே உண்மைகள், தீர்வுகள் மேலே நின்றுகொண்டு இன்னும் கேள்விகளோடு சவால் விடுகிறதே. பதில் சொல்லத் தெரியவில்லையே என்று திணறும் நிலையை அறியாமை என்கிறார் அவர்.

அறிவு ரொம்பப் பெருசு. அதை விடப் பெருசு அறியாமை.

யோசித்துப் பார்த்தால், அறியாமையைக் கண்டு நாம் பயப்படுகிறோம். அது மட்டுமல்ல, பதில் தெரியாத கேள்விகளை முடிந்தளவு தவிர்க்கப் பார்க்கிறோம். அவமானம், கூச்சம் என்று பல்வேறு உணர்வுகளால் அல்லாடுகிறோம்.

ஆனால் ஆய்வாளர் என்றால் அறியாமையைப் பெருமையோடு ஏற்றுக் கொள்ளவேண்டும். அதற்கு மதிப்புக் கொடுக்கவேண்டும். தெரியாவிட்டால், தெரியவில்லை என்று நேர்மையாக ஒப்புக்கொள்வது தான் ஒரு ஆய்வாளரின் இயல்பாக இருக்கவேண்டும் என்கிறார் பேராசிரியர்.

ஆய்வாளருக்குக் கேள்விகள் முக்கியம். ஆனால் எதுவுமே தெரியாது என்று துவக்கத்திலேயே முடிவு செய்து கேள்விகளைத் தயார் பண்ணுவது பிரச்னைகளில் மாட்டிவிடும். இன்னொரு சிக்கல் : ஒரு கேள்விக்கு அடுக்குகள் போலப் பல பதில்கள் இருக்கக்கூடும்.

ஒரு எடுத்துக்காட்டு : இணையத்துள்ளே நுழைந்து தட்டினால் எந்தக் கேள்விக்கும் பதில் வருகிறது. எடுத்துக்காட்டாக, கூகுள் தளத்தில் அறிவுடைமை (knowledge) பற்றி எத்தனை பேர் கேட்டிருக்கிறார்கள் என்றால் 495 மில்லியன் என்று வருகிறது. அறியாமை பற்றிக் கேள்வி கேட்டவர்கள் 37 மில்லியன் தானாம். இதை நம்பலாமா? கூகுள் பாகுபாடு காட்டுகிறது என்று சந்தேகம் வரவில்லையா?

வேறு எந்த வலைத்தளத்தில் பதில்கள் இருந்தாலும் ஆய்வாளர்களுக்கு எந்தப் பதிலையும் அப்படியே ஏற்றுக் கொள்வதில் தயக்கம் உண்டாகிறது. அதே நேரம் உண்மை என்று சொல்லப்படும் தகவல்கள், தரவுகள் எதையும் ஒரேயடியாக எந்த ஆய்வாளரும் நிராகரிப்பதில்லை. மாறாக, இன்னும் ஆழமாக உள்நோக்கி ஆராய முனைகிறார்கள்.

1950 களின் தொலைக்காட்சிகளில் Question Man என்கிற கேள்வி-பதில் போட்டி நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக இருந்தது. போட்டியாளருக்குப் “பதில்” ஒன்று கொடுக்கப்படும். போட்டியாளர் சரியான கேள்வியைக் கண்டுபிடிக்க வேண்டும். அதை இன்றைய நாளில் மீண்டும் அறிமுகம் செய்தாலென்ன என்கிறார் பேராசிரியர்.

அறியாமை எனும் அடித்தளத்தில் இருந்து தான் அறிவியல் பிறக்கிறது. அது மட்டுமல்ல, அறிவியலை இயக்குவதும் அறியாமை தான்.

எதுவும் நிலையானதல்ல. இன்று வந்திருக்கும் முடிவு நாளை மாறிவிடலாம். நீங்கள் ஆண்டுகளாக, மாதங்களாக, இரவு பகலாகப் பாடுபட்டுக் கண்டறிந்த முடிவுகள் ஒரு நொடியில் தவறு என்று தகர்ந்து போய்விடலாம். உங்கள் ஆய்வுகளின் முடிவுகள் மேலேயே சந்தேகத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார் பேராசிரியர்.

ஏனென்றால் தகவல்கள் என்றுமே “பாதுகாப்பானவை” அல்ல. தினம் தினம் புதிய தகவல்கள் சேர்கின்றன. பழைய தகவல்களை யாரும் சீண்டுவதில்லை. பிழை என்று சில தகவல்களைக் குப்பைத் தொட்டிக்குள் வீசிவிடுகிறார்கள்.

ஆய்வுக்கருவிகள் நாளுக்கு நாள் மேம்பட்டுக் கொண்டே இருக்கின்றன. புதிய அளவீடுகள் இன்னும் துல்லியமாக வரும்போது உங்களின் அளவைகளின் தவறுகள் சுட்டிக் காட்டப்படலாம். உங்களின் புள்ளி விவரக் கணக்கீடுகள் தரம் குறைந்தவை ஆகிவிடலாம்.

அறிவியலில் ஒருவரின் ஆய்வு முடிவை இன்னொருவர் தவறென்று நிறுவுவது இயற்கையே.

அறிவியலாளர்களே உண்மை என்று நம்பிக் கொண்டிருந்த ஒரு கருத்தைத் தவறு என்று நிரூபணம் செய்தவருக்கு நோபல் பரிசு கூடக் கிடைத்திருக்கிறது. 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில், ஆல்பர்ட் மைக்கேல்சன் (Albert Michelson) என்பவர் ஒளியின் வேகத்தைக் கணக்கிட எத்தனையோ தடவை முயன்றும் தோல்வி தான்.

விண்வெளி முழுவதும் ஈதர் (ether) வாயு நிறைந்திருப்பதாக அன்றைய நாட்களில் நம்பிக் கொண்டிருந்தார்கள். இந்த வாயுவின் தன்மைகளோடு ஒளியின் வேகத்தைக் கணிப்பிட்டால் எல்லா முடிவுகளும் தப்புத் தப்பாகவே வந்து கொண்டிருந்தன. தாங்க முடியாத எரிச்சல். ஒளியின் வேகத்தை ஒத்திப் போட்டுவிட்டு விண்வெளியில் ஈதர் வாயு இருக்கிறதா இல்லையா என்கிற ஆராய்ச்சியில் இறங்கினார்.

அப்படி எதுவுமே இல்லை என்று நிரூபித்தார். இதற்காக 1907ம் ஆண்டின் நோபல் பரிசு அவருக்குக் கிடைத்தது.

இது இயற்பியலில் முக்கிய திருப்பம். இந்தக் கண்டுபிடிப்பு இல்லாமல் இயற்பியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவரின் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை எழுதி இருக்கவே முடியாது.

பேராசிரியர் நரம்பியல் துறையில் மணம் அல்லது வாசம் பற்றி ஆய்வுகள் செய்பவர். மூளையில் இருக்கும் நியூரான்கள் எப்படி மணத்தைக் கண்டறிகின்றன, வேறுபாடுகளை உணர்கின்றன என்பதை ஆராயும் துறைக்கு ஆங்கிலத்தில் olfaction என்று பெயர். அவரின் விரிவுரைகளில் அவரே விட்ட தவறுகளையும் அவர் ஒளிவு மறைவின்றி விளக்குகிறார்.

20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இரண்டு நரம்பியல் அறிவியலாளர்கள் ஆய்வுகள் செய்த போது, மூளையில் மின் தூண்டல்கள் (electronic impulses) ஏற்படுவதைக் கண்டார்கள். தோலில், விழித்திரையில் (retina) ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்றபடி, அவற்றின் மின் அழுத்தங்களும் (voltage) மாறுவதைக் கவனித்தார்கள்.

எனவே தோலில் ஏற்படும் உணர்வுகள், கண்பார்வை அனைத்துக்கும் மின் தூண்டல்கள் தான் ஒரே காரணம் என்று அவர்கள் முடிவெடுத்ததை மற்ற அறிஞர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.

சுமார் 75 ஆண்டுகளாக இந்தக் கொள்கை தொடர்ந்தது. பேராசிரியரும் அதை மாணவர்களுக்குக் கற்பித்திருந்தார். இன்று அது மாறிவிட்டது. மின் தூண்டல்கள் ஒரு காரணம் மட்டுமே. இரண்டாவதாக, இதில் வேதியியல் தாக்கங்களுக்கும் பங்குண்டு என்று இப்போது தெரிய வந்திருக்கிறது.

இன்னோர் நிகழ்வு : 2009 களில் ஒரு இளம் ஆய்வாளர் ஆர்ஜென்டினாவில் இருந்து பேராசிரியருக்குப் போன் போட்டிருக்கிறார். மூளையின் நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் கிலியல் செல்கள் (glial cells) எத்தனை இருக்கின்றன? ஒரு மதிப்பீடு செய்ய இந்த எண்ணிக்கை தேவை என்று கேட்டிருக்கிறார்.

பேராசிரியரும் அவரின் மாணவர்களுக்கு வழக்கமாக சொல்லிக் கொண்டிருந்த அதே தகவலைச் சொல்லியிருக்கிறார் : கிட்டத்தட்ட 100 பில்லியன் நியூரான்கள். அதை விட 10 மடங்கு கூடியவை கிலியல் செல்கள்.

கொஞ்சநாள் கழித்து அர்ஜென்டினாவில் இருந்து மீண்டும் அதே ஆய்வியலாளரின் போன் : பேராசிரியர் அவர்களே, நியூரான்களின் எண்ணிக்கையை அளவிடுவதற்காக ஓர் சிறப்பான வழிமுறையைக் கண்டு பிடித்திருக்கிறோம். இதன்படி, 86 பில்லியன் நியூரான்களும் கிட்டத்தட்ட அதே அளவு கிலியல் செல்களும் அல்லவா இருக்கின்றன!

என்ன நடந்தது? எல்லாருமே கிளிப்பிள்ளை போல் ஆவணங்களில் இருந்த தகவலைத் திரும்பத் திரும்ப மீட்டிருக்கிறோமே தவிர, யாருக்கும் சரி பார்க்கத் தோன்றவில்லை என்கிறார் பேராசிரியர்.

எதிர்காலத்தில் அறிவியலில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகலாம் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம். பத்திரிகைகளில், ஊடகங்களில் இது போல கேள்விகளும் பதில்களும் வருகின்றன.

எடுத்துக்காட்டாக, பல ஆண்டுகளுக்கு முன் இன்னும் 10 ஆண்டுகளில் , அல்லது 25 ஆண்டுகளில் மலேரியா வியாதி இல்லாமல் போய்விடும், புற்றுநோய்க்கு மருந்து வந்துவிடும் .. என்று செய்திகள் வந்து கொண்டிருந்தன. இவை கேட்க இனிமையாக இருக்கலாம். தப்பில்லை. ஆனால் எச்சரிக்கையாக இருப்பது இன்னும் நல்லது.

ஆய்வு என்பது பல நிலைகளில் செயல்படுகிறது. ஏற்கெனவே இருக்கும் தகவல்களை சரி பார்த்துக் கொண்டு முன்னேறுதல் ஒரு வழி. போகப்போக, ஒரு கருதுகோளை (hypothesis) உருவாக்கிக் கொள்ளலாம். சில சமயம் ஆய்வில் கிடைக்கும் தரவுகள் கருதுகோளை மாற்றி அமைக்கலாம். முற்றிலும் தவறு என்கிற நிலைக்கும் கொண்டு வந்துவிடலாம். இளம் ஆய்வாளர்களுக்கு இது பெரிய சவால் தான்.

அடுத்தது : பெரும் புரட்சிகரமான கண்டுபிடிப்புகளுக்குத் தான் விளம்பரம் கிடைக்கிறது. அரசு மானியம் ஒதுக்கப்படுகிறது. இதுவும் இளம் ஆய்வாளர்களை சலிப்படையச் செய்யலாம். தவிர, இவர்கள் எப்படியாவது விரைவில் விடை கண்டுபிடித்துவிட வேண்டும் என்று அவசரப்படுவது இயல்பே.

ஆய்வில் கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள் அவசரப்படுவதில்லை. புகழ் பெறவேண்டும் என்று துடிப்பதில்லை. ஆராய்ச்சி மட்டுமே அவர்களின் குறிக்கோள். தெரிந்துவிட்டால் எதுவுமே போரடிக்கும். அலுப்பு மேலிடும்.

தெரியாத ஒன்றைத் தேடுவதில் கிடைக்கும் சுகம் வேறு எதில் இருக்கிறது?

அறியாமை மட்டுமே ஆய்வாளனுக்கு ஒரு டானிக் போல் புத்துணர்ச்சி ஊட்டுகிறது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார் பேராசிரியர்.

இருட்டறையில் கறுப்புப் பூனையைக் கண்டுபிடிக்க விடாமுயற்சி செய்கிறீர்கள். எவ்வளவோ சிரமங்கள். தற்செயலாக அங்கிருக்கும் ஒரு சுவிட்சை தட்டப்போய் விளக்கு எரிகிறது. பூனையைத் தேடுவது ஒரு பக்கம் இருக்கட்டும். சுவிட்ச் போட்டதும் விளக்கு எரியும் என்பது முன்பு தெரியாத ஒரு புதிர். இப்போது தெரிந்துவிட்டதே.

இது போலப் பல செயல்பாடுகள் ஆய்வுகளின் வரலாற்றில் பதிந்திருக்கின்றன.

ஒரு எடுத்துக்காட்டு : பால் டிராக்ட் (Paul Diract) ஓர் இயற்பியல் மேதை. குவாண்டம் இயக்கவியலில் (Quantum Mechanics) அவர் பதித்த முத்திரைகள் இன்றும் புகழப்படுகின்றன. அவரின் கணித சமன்பாடுகளின்படி, எலெக்ட்ரானுக்கு எதிரான ஓர் துகள் (அல்லது அலை) நிச்சயம் பிரபஞ்சத்தில் இருக்கவேண்டும் என்று காட்டியது.

எலெக்ட்ரான் எதிர்மறை மின்னேற்றம் (negative charged) கொண்டது என்று தெரியும். அப்படியானால் எதிர்த் துகள் நேர்மறை மின்னேற்றம் (positive charged) கொண்டிருக்க வேண்டும் என்று புலனாகிறது. அதற்குப் பேரும் வைத்தாயிற்று – பாசிட்ரான் (positron).

இருந்தும் இது ஓர் கற்பனையின் தோற்றம். உண்மையாய் இருக்கமுடியாது. யாரும் அதைக் கண்டுபிடிக்கவும் முடியாது என்றார் அவர். மேலும் யாருமே முன்பு பாசிட்ரான் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. இது நடந்தது 1928 ம் ஆண்டில்.

1932 களில் உண்மையிலேயே அப்படி ஒரு துகள் (அல்லது அலை) இருக்கிறது என்று இன்னொரு ஆய்வாளர் நிரூபித்துக் காட்டினார். ஆனால் எந்தப் பயனும் இல்லாத ஒன்று என்றார் அவர்.

1970 ம் ஆண்டில் மருத்துவமனைகளில் பாவனைக்கு வந்த PET Scanner பாசிட்ரானை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. எந்திரத்தை வடிவமைத்தவர்கள் உயிரியல் – பொறியியலாளர்கள். மருத்துவத்தில் இந்த scanner இன்று இன்றியமையாத சாதனம்.

ஒன்றைத் தேடப்போய் இன்னொன்றைக் கண்டுபிடித்த செய்திகள் பல உண்டு. இன்னும் சான்றுகள் தருகிறார் பேராசிரியர்.

ஆகவே ஆய்வு என்பது எந்தத் திசையில் நகரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. உறுதியற்ற தன்மைதான் அறிவியலின் சிறப்பு என்றால் அதன் உந்துசக்தியாக இருந்து ஊக்குவிப்பது அறியாமை.

கண்டுபிடிக்கப்பட்ட கறுப்புப் பூனைகள் தான், பொதுவாக தொலைக்காட்சிகளில், பிரபல இதழ்களில் ஆகோ, ஓகோ என்று டாலடிக்கின்றன. இன்னும் கண்டுபிடிக்கப்படாத எத்தனையோ பூனைகள் இருக்கின்றனவே.

ஆய்வு என்பது துப்புத் துலக்கும் வேலை. அதற்காகப் புதிய ஆய்வாளர்களுக்கு நிறையத் தடயங்கள் தருகிறார் பேராசிரியர்.

அதில் ஒன்று : அண்மைய கண்டுபிடிப்புகளில் நேரத்தை விரயமாக்காதீர்கள். ஏற்கெனவே பலர் அதில் ஈடுபட்டிருப்பார்கள்.

ஒரு 10 ஆண்டுகளோ 20 ஆண்டுகளோ பின்னோக்கிப் போய்ப் பாருங்கள். அன்றைய காலகட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்களின் ஆய்வுக்கட்டுரைகளில் விடுபட்டுப் போன இடைவெளிகளை நோக்கி உங்கள் கவனம் திரும்பட்டும். அதில் ஏதோ ஒன்று உங்களுக்குப் புதிய ஒரு பாதையைக் காட்டலாம். இதுவரை மற்றவர் கண்களுக்குப் புலப்படாமல் இருந்ததை உங்கள் கண்கள் காணக்கூடும்.

உங்களுக்குப் போட்டி இருக்காது. நிதானமாக, உங்கள் அறியாமையை எடை போட்டபடி வேலையை ஆரம்பியுங்கள் என்கிறார் அவர்.

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அறிவியலின் கண்டுபிடிப்புகளில், செய்திகளில் ஆர்வம் கட்டுவதில்லை . ஆனால் அவர்கள் மீது குற்றமில்லை. இன்றைய அறிவியலாளர்களின் அணுகுமுறை மற்றும் மனோபாவம் சாதாரண மக்களை அறிவியலை விட்டு விலகச் செய்துவிட்டன என்கிறார் பேராசிரியர்.

16ம் நூற்றாண்டின் இத்தாலியின் கத்தோலிக்க பாதிரியார்கள் இயற்பியலாளர் கலிலியோவின் கருத்துக்களைக் கண்டு அதிர்ந்தாலும் அவர்களிலும் புத்திஜீவிகள் இருந்தார்கள். அவர்கள் கலிலியோவின் அறிவியல் கருத்துக்களை ஏற்றுக் கொண்டார்கள்.

பிரச்னை என்னவென்றால் பூமி தான் பிரபஞ்சத்தின் மையம். பூமியைச் சுற்றித் தான் கோள்கள் சுழல்கின்றன என்று மக்களிடம் ஏற்கெனவே சொல்லி வந்திருக்கிறோமே. அப்படி இல்லை என்று எந்த முகத்தோடு மக்களிடம் போய்ச் சொல்வது என்று மிரண்டு போனார்கள். வேறு வழியின்றி கலிலியோவை வீட்டுச் சிறையில் வைக்க முடிவெடுத்தார்கள்.

ஆனால் கலிலியோவின் சிந்தனைகள் விரைவில் அய்ரோப்பா முழுதும் பரவ ஆரம்பித்தன. அதைத் தொடர்ந்து பல அறிவியலாளர்கள் கலிலியோவின் ஏட்டைப் போலவே மக்களுக்குப் புரியும் மொழியில் எழுதத் துவங்கினார்கள்.

அன்றைய அறிவியல் ஏடுகள் பெரும் ஆரவாரத்தோடு வெளியிடப்பட்டன. வந்ததுமே வாங்க மக்கள் முண்டியடித்தார்கள். ஏடு பற்றிய விவாதங்களைக் கேட்க மக்கள் திரண்டார்கள்.

இன்றைய அறிவியலாளர்கள் யாருக்கும் புரியாத சங்கேத மொழியில் பேசிக் கொள்கிறார்கள். சாதாரண மக்களுடன் அவர்களுக்குத் தொடர்பே இல்லாமல் போய்விட்டது – விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரைத் தவிர.

அவர்களின் சிந்தனைகளை மக்களுடன் பகிர்ந்துகொள்ள ஏன் மறுக்கிறார்கள்? சில கருத்துக்களை இலகுவாகச் சொல்லமுடியாது தான். இருந்தாலும் சாராம்சத்தை, மேலோட்டமாக விளக்குவதில் என்ன இழப்பு நேர்ந்துவிடப் போகிறது?

மக்களிடம் நெருங்க நெருங்க அறிவியல் இன்னும் மேலோங்குமே. மக்களின் ஆதரவு கண்டு அரசுகளும் ஆய்வுகளுக்கு அதிக நிதி ஒதுக்க முன்வரும். அதனால் வாழ்வு இன்னும் மேம்படுமே என்கிறார் பேராசிரியர்.

ஏராளமான வரலாற்றுச் செய்திகளுடன் தன் கருத்துக்களையும் கெட்டித்தனமாகக் கலந்திருக்கிறார் அவர். மறுப்பே சொல்லமுடியாத எழுத்து.

2 thoughts on “நீயா நானா

  1. Laxana Dev's avatar Laxana Dev says:

    This is an interesting read. Also the “black cat in a dark room” is interesting.

    We just have to embrace not knowing and be honest about it. There lies the joy for learning!

    Like

Leave a reply to Laxana Dev Cancel reply