காசு நம் அடிமை – 5

வங்கியாளர் என்று எப்படி கண்டு பிடிப்பீர்கள்?

வெய்யில் அடிக்கும் போது அவர் குடையை கடனாகத் தருவார். மழை அடிக்கும் போது திருப்பி வாங்கிக் கொள்வார். 

-மார்க் ட்வையின் 

தொடர் – 5

வட்டியின் மூன்று சித்து விளையாடல்கள் 

1) அது போட்டியை ஊக்குவிக்கிறது. 

வட்டி தான் பணத்தின் மூலம் போட்டியை உருவாக்கி, அதை வேகத்தோடு ஊக்குவிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, நீங்கள் ஒரு வங்கியாளரிடம் போய், உங்கள் காணியை ஈடு வைத்துக் கடனாக (mortgage loan ) ஒரு லட்சம் ரூபா கேட்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.  அவர் ஒத்துக் கொள்கிறார். ஒரு லட்சம் ரூபா தந்தாலும் அவர் ஒரு நிபந்தனை போடுகிறார். கடனை இரண்டு லட்சம் ரூபாவாக, 20 ஆண்டுகளில் கட்டி முடிக்க வேண்டும் என்கிறார்.

ஒரு லட்சம் மட்டுமே இப்போது உருவாக்கித் தந்திருக்கிறது வங்கி. கேட்ட  மிகுதி ஒரு லட்சம் ரூபாவுக்கு நீங்கள் எங்கே போவீர்கள்? ஞாபகம் இருக்கட்டும். உங்களால் பணத்தை உருவாக்க முடியாது. அது வங்கியால் மட்டுமே முடியும்.

என்ன செய்யப் போகிறீர்கள்?

ஆகவே அதை இப்படி எளிமையாக சொல்லலாம். நீங்கள் வெளியே போய், மற்றவர்களிடம் இருந்து பிடுங்கியோ அல்லது ஏமாற்றியோ அல்லது ஏதோ ஒன்று .. அது உங்கள் பிரச்னை. கொண்டு வரவேண்டும். அவ்வளவு தான்.

நீங்கள் கொடுக்க வேண்டிய அந்த மேலதிக பணம், அதாவது வட்டி என்பது ஏற்கெனவே யாராவது வைத்திருக்கும் மூலதனத்தில் இருந்து தான் வரவேண்டும்.

ஆகவே வட்டி என்ன சொல்கிறது? இன்னும் உருவாகாத பணத்தை எடுத்துக் கொண்டு வா. மற்றவர்களுடன் போட்டி போடு. கொண்டுவராவிட்டால் நீ திவால் ஆகிவிடுவாய். உன் காணி பறிபோய் விடும் என்று பயமுறுத்துகிறது.

இது போல ஒரு பயத்தை மக்கள் எப்போதும் மனதில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறது மத்திய வங்கி.

பணம் தருவதற்கு முன்,  திருப்பி உங்களால் கடனைத் தீர்க்க முடியுமா என்று என்று ஆராய்ந்த  (creditworthiness) பிறகே கடன் தரப்படுகிறது.

இல்லாத ஒரு பணத்தை, எப்படி மற்றவர்களில் இருந்து உங்களால் கைப்பற்ற முடியும், எந்த அளவு கெட்டிக்காரர் நீங்கள் என்று மத்திய வங்கி கூர்மையாக எடை  போடுகிறது.

இதில் இருந்து என்ன தெரிகிறது? இன்றைய பண அமைப்பு எல்லா மக்களையும் மொத்தமாகக் கடன் சுமையில் தள்ளி, வாழ்நாள் பூரா ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுகொண்டே  இருங்கள். பகைமையோடு வாழுங்கள். சுயநலம் தான் ஒரே வழி என்கிறது.

இயற்கை சொல்லித் தரும் பாடம் 

டார்வினின் படிநிலை மாற்றக் கொள்கையின்படி, வாழ்க்கையில் எது போராடி நின்று பிடிக்குமோ அது தான் உயிர் வாழும். சுய நலம் முக்கியம்  என்கிறது. அதற்கு இந்தப் பண அமைப்பு,  நானும் அதற்கு சாட்சி என்கிறது.

ஆனால் அப்படி உலகம் ஒன்றும் பயங்கரமானது அல்ல.

கூட்டுறவு தான் எல்லா உயிர் இனங்களையும் வாழ வைக்கிறது என்கிற உண்மைக்கு இன்று வந்துவிட்டோம். ஆராய்ச்சிகள் அந்தக் கருத்துக்கு இன்னும் திண்மை சேர்க்கின்றன.

கியோட்டோ பல்கலைக் கழகத்தின் சமூக உயிரியல் பேராசிரியர் இமானிஷி (Imanishi) சொல்கிறார்:

அனைத்து உயிர் இனங்களினதும் உடல்களில் இருக்கும் ஆகச் சின்ன உறுப்பு செல்கள். இந்த செல்கள் நுண்ணுயிர்களால் ஆனவை.  நுண்ணுயிர்களோ  ஒன்றோடு ஒன்று இணைந்து கூட்டுறவு மூலம் செல்களாய் உருவாகின.

நுண்ணுயிர்களில் கூட்டுறவு ஏற்பாட்டிருக்காவிட்டால், சுயநலம் தான் முக்கியம் என்று அவை நினைத்திருந்தால் எல்லாமே என்றோ அழிந்து போயிருக்கும். நாம் உட்பட, எந்த விலங்கினமும் தோன்றி இருக்க வாய்ப்பே இல்லை.

சிம்பயோசிஸ் (Symbiosis) என்னும் இந்தக் கொள்கை, மரபணு, நுண்ணுயிர் அறிவியலில் இன்று மிகப் பிரபலமாக இருக்கிறது. ஆராய்ச்சியாளர் லீன் மார்குலிஸ் (Lynn Margulis) முன்வைத்த இந்தக் கொள்கையை அன்று யாரும் ஏற்கவில்லை.

ஒரு பேருண்மையைக் கண்டுபிடித்த அந்தப் பெண்மணிக்கு நோபல் பரிசு கிடைக்கவே கூடாது என்பதில் விடாப்பிடியாய் இருந்தார்கள். அவரின் ஆதாரங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டன.

அவரும் முன்கோபக்காரர். வெட்டு ஒன்று. துண்டு ரெண்டு என்று பேசியவர். இன்று அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை தூசு தட்டியெடுத்துப்  புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

டார்வினின் படிநிலை மாற்றக் கொள்கை சரி என்றாலும் அவரின் கருத்து தவறு என்று சொல்லி, போட்டி அல்ல. சுயநலம் அல்ல. கூட்டுறவு தான் வாழ்க்கை என்று புது விளக்கம் தந்தது சிம்பயோசிஸ் கொள்கை.

2) முடிவே இல்லாத வளர்ச்சி (Endless growth) 

பேரில் என்ன இருக்கிறது?

மக்கள் ஆட்சி என்கிறார்கள். சோஷலிச நாடு என்கிறார்கள். கம்யூனிஸ்ட் நாடு என்கிறார்கள். நம் சர்வாதிகார நாடு அல்லவே  என்கிறார்கள் சிலர். எப்படியோ, எல்லாரும் கண்மூடி செய்யும் ஒரே தியானம் ஓம் அல்ல.  வளர்ச்சி..வளர்ச்சி..வளர்ச்சி…

உற்பத்திகளை, சேவைகளைப் பெருக்கிக் கொண்டே இருங்கள். தேவைகளையும் பெருக்கிக் கொண்டே இருங்கள். இதைத் தானே இன்று அரசுகள், விளம்பரங்கள், இணையங்கள், பத்திரிகைகள், செல்போன்கள் எல்லாமே சொல்லிக் கொண்டிருக்கின்றன?

இந்த உலகில் அள்ள அள்ளக் குறையாத வளங்கள் இருக்கின்றன. வேண்டும், இன்னும் வேண்டும் என்கிற பேராசையிலேயே வாழுங்கள். அனுபவி ராஜா அனுபவி.

அறிவுக்கோ, உண்மை நிலவரத்துக்கோ கிஞ்சித்தும் பொருந்தாத இன்றைய பொருளாதாரத்தின் அசுர வளர்ச்சிக்கு இன்றைய பணம் சொல்லி வைத்த மாதிரிப் பொருந்துகிறது.

குறைந்தது, கி.மு. 5000 களில் வாழ்ந்த சுமேரியர்களுக்காவது அறிவு இருந்திருக்கிறது. தொடர்ந்து கடனில் வாழ்ந்தால் கப்பலே மூழ்கிவிடும் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அதனால் தான் காலத்துக்கு காலம் மக்களின் கடன்களை ரத்து செய்து கொண்டே இருந்தார்கள்.

இன்று பணத்துக்கு வட்டிக்கு மேல் வட்டி ஏறிக்கொண்டே இருக்கிறது. பணம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அதுக்கென்ன? வளர்ச்சி தேவை அல்லவா? பணமும் அதற்கேற்ற மாதிரி வளராவிட்டால். கப்பல் என்னய்யா கப்பல், குடியே முழுகிப் போய்விடும் என்கிறார்கள்.

வளர்ச்சி.. வளர்ச்சி என்று அறிவாளிகள்  விரிவுரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பணம்..பணம் என்று பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள் வங்கியாளர்கள்.

3) ஒரு சிலரிடம் மட்டும் குவியும் செல்வம் (Concentration of wealth effect)

மூன்றாவதாக, இன்றைய பணம் சில மனிதர்களிடம் மட்டும் போய்ச் சேர்வதற்கு வசதியாக, எல்லா வாசல்களையும் திறந்து விட்டிருக்கிறது.

அதற்கு இதோ புள்ளி விவரங்கள் என்று வந்து நிற்கிறார் மார்கரீட் கென்னடி. இன்றைய பண அமைப்பில், வங்கிகளோ, நிதி நிறுவனங்களோ மட்டும் வட்டி வாங்கவில்லை. மக்களும் வட்டி வாங்குகிறார்கள். கொடுக்கிறார்கள்.

அவரின் தரவுகளின் படி, 1982 ம் ஆண்டை எடுத்துக் கொண்டால்:

ஜெர்மனி நாட்டின் 80 சதவீமான மக்கள் (நடுத்தர, அடிமட்ட வாழ்க்கைத் தரத்தில் உள்ளவர்கள்) 34.2 பில்லியன் டொய்ச் மார்க்குகளை மிச்ச 20 சத வீதமான பணக்காரர்களுக்கு நிகர வட்டியாகச் (Net interest) செலுத்தி இருக்கிறார்கள்.

அமெரிக்க நாட்டின் தரவுகள் போதாது என்றாலும், 1975-1992 இடைவெளியில், 60 சத வீதமான நடுத்தர வர்க்கம், நாட்டின் 54.1 சதவீத உழைப்பை மிச்ச 40 சத வீதமான பணக்காரர்களுக்கு நிகர வட்டியாகச் (Net interest) செலுத்தி இருக்கிறார்கள்.

பணக்காரர்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் இடையில் பெரும் இடைவெளி வந்துவிட்டது. அது கூடிக் கொண்டே போகிறது என்று ஓயாமல் இன்று பத்திரிகைகளில், இணையங்களில் எழுதிக் கொண்டே இருக்கிறார்கள்.

அதே சமயம், பக்கத்தில் கட்டம் போட்டு உங்கள் பணத்தை இந்த வங்கியில் போடுங்கள். கொஞ்ச நாளில் நீங்களே வியந்து போகிற மாதிரி பெருக்கிக் காட்டுகிறோம் என்றும் விளம்பரங்கள்.

நீங்கள் ஏன் இன்னும் பிச்சைக்காரர் ஆகவே இருக்கிறீர்கள்? வெட்கம், மானம், சூடு சொரணை இல்லை? என்று மட்டும் தான் சொல்லவில்லை. மற்ற அத்தனை சொற்களும் உபயோகித்து நம்மை உசுப்புகிறார்கள்.

வங்கிகளில் வைப்பு நிதிகள் பெருக, அதையும் ஊகங்களில் (speculations) ஊதி  ஊதிப் பெரிதாக்கி மலை போல் குவித்து வைத்திருக்கிறார்கள்.

ஊகங்களுக்கென்றே தனி சந்தைகள் உலகம் பூரா இருக்கின்றன.

ஓடு ராஜா ஓடு !

குதிரைப் பந்தயங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். பார்த்திருக்கிறோம். தவிர, நாய்ப் பந்தயங்கள், தீக்கோழிப் பந்தயங்கள் ஏன் ஆமைப் பந்தயங்கள் கூட நடக்கின்றன. இந்த அப்பாவிப் பிராணிகள் ஓட ஓடப் பணம் கட்டியவர்கள் மனசு திக் திக் என்று அடிக்கிறது. கேட்டால், அதில் ஒரு கிக் இருக்கிறதே, தெரியாதா என்கிறார்கள்.

மத்திய வங்கிகளுக்கு இதைப் பார்த்ததும் ஒரு சபலம். நாமும் ஏன் பந்தயம் கட்டக்கூடாது? ஒவ்வோர் நாட்டு நாணயங்களை ஓட விட்டுப் பார்த்தால் என்ன என்று அற்புதமான ஒரு யோசனை தோன்றி இருக்கிறது.

ஒவ்வோர் நாட்டு  நாணயங்களின் மதிப்பையும் வைத்து வேறு பந்தயம் (Money speculation) நடந்து கொண்டிருக்கிறது. நாணயங்கள் குதிரைகள் போல் ஓடுகின்றன. மனிதர்கள், ஓடு ராஜா ஓடு! என்று கத்திக் கொண்டே இருக்க,  24 மணித்தியாலமும் ரேஸ் நடக்கிறது.

வைப்பு நிதிகளுக்கு கவர்ச்சியான பேர்கள் வைத்து மக்களை மயக்குவது ஒரு தந்திரம். வங்கிகள் கடனாய்க் கொடுத்த நிதிகளையும் இதில் சேர்த்து விட்டார்கள். கேட்டால் புது விளக்கம் தருகிறார்கள். அதே சமயம்  நாம் புரிந்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாய் இருக்கிறார்கள்.

இன்றைய பணம் ஏளனச் சிரிப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறது.

(தொடரும்..)

காசு நம் அடிமை – 6

எங்கே தேடுவேன் ? பணத்தை எங்கே தேடுவேன்?

-கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்

தொடர் – 6

சில்வியோ கெசெல் (Silvio Gesell) 

முதலாளித்துவ பொருளியல் கோட்பாடுகளுக்கு அடித்தளம் போட்டவர்களில் முக்கியமானவர் ஆடம் ஸ்மித் என்பதை அறிந்திருக்கிறோம்.

பொருளியலில் பொதுவுடைமைக் கோட்பாட்டைத் தடம் பதித்தவர் கார்ல் மார்க்ஸ் என்றும் அறிந்திருக்கிறோம்.

பொருளியல் மறந்துவிட்ட அல்லது அது அலட்சியம் செய்த அடித்தளமான துறை ஒன்று உண்டு என்றால் அது பண அமைப்பாகத் தான் இருக்க முடியும்.

பண அமைப்புக்குப் புதிய இலக்கணம் வகுத்தவர் சில்வியோ கெசெல். அவரும் ஒரு மேதை தான்.

இருந்தும் அவரின் சிந்தனைகளை இருட்டடிப்பு செய்துவிட்டார்கள். அவரின் கொள்கைப்படி செயல்பட்ட அமைப்புகள், வரலாற்று நிகழ்வுகளை அப்படியே மறைத்து விட்டார்கள்.

1862 ல் பிறந்தவர். ஜெர்மனி நாட்டவர். ஆர்ஜென்டீனா போய்ப் பெரும் பொருள் ஈட்டியவர். அவரும் வணிகர். அதனால் பணம் பற்றி இயற்கையாகவே ஆர்வம் இருந்திருக்கிறது.

சிலசமயங்களில், காசு தாராளமாய்ப் புரள்கிறது. சிலநேரங்களில் தட்டுப்பாடாய்  இருக்கிறது. ஏன்? என்று யோசித்ததில், எல்லாத் தருணங்களையும் பணத்தின்விலை  தான் தீர்மானிக்கிறது என்று கண்டறிந்தார். அதற்கு இரண்டு காரணிகள்:

1) மத்திய வங்கியின் வட்டி வீதம், அரசு அல்லது தனியார் வங்கிகளின் வட்டி வீதங்கள் இவை அனைத்தும் பணத்தின் விலையைத் தீர்மானிக்கின்றன.

2) பணம் பதுக்கி வைக்கப்பட்டு, வசதியான நேரத்தில் பாவனைக்கு விடப்படுகிறது.   

வட்டி வீதம் கூடும்போது, பணம் ஒளிந்து கொள்கிறது. நான் சொல்லும் வட்டி தருவாயா என்றுபேரம் பேசுகிறது. ஒத்துக் கொண்டால் மட்டும் வெளியே வருகிறது. வேறு வார்த்தையில் சொன்னால்: பணத்தின் விலை என்பது வட்டி.

வட்டி வீதம் குறையும் போது, பணத்தின் விலை குறைந்துவிடுகிறது. அது தாராளமாய்ப் புழங்குகிறது. ஆனால் அது நீண்ட நாள் நீடிக்காது. தருணம் பார்த்து விரைவிலேயே மீண்டும் பதுங்கிக் கொள்கிறது.

பணத்தின் ஒளிந்து விளையாடும் கலையை உன்னிப்பாகக் கவனித்தவர் சில்வியோ.

தன் அவதானிப்புகளைக் கோர்த்து முடிவுகளுடன் புத்தகமாகவே  வெளியிட்டார். பேர்: The Natural Economic Order. (இணையத்தில் இருக்கிறது.)

உதாரணமாக, விலைகள் ஏன் உயர்கின்றன? என்று கேட்டால் உற்பத்தியில், தொழிலாளர்களின் ஊதியம் கூடிவிட்டது அல்லது பணவீக்கம் அல்லது விலைகளைக் குறைக்க அரசு இன்னின்ன செய்யும் என்று போகும். அசல் காரணங்களைச் சொல்லி முடிக்க மாட்டார்கள்.

பொருள்கள், சேவைகளின் தாராளம் அல்லது கிராக்கி என்பதைத் தீர்மானிப்பதே பணத்தின் விலை (வட்டி) தான் என்று அழுத்தமாகவும் ஆதாரத்துடனும் சொன்னவர் அவர்.

பொருள்களோ, சேவைகளோ ஒரே நிலையில் இருப்பதில்லை. நாள் செல்லச்செல்ல, பொருள்கள் துருப்பிடிக்கும் அல்லது பாவனைக்கு உதவாமல் போய்விடும். சேவைகள் கூட, தம்மைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் யாரும் கூப்பிட மாட்டார்கள்.

சில்வியோ முடிவுக்கு வந்தார்:

பொருள்கள், சேவைகளின் மதிப்புகள் நாளடைவில் மங்கத் துவங்குகின்றன. இருந்தும் அதை மதிப்பிடும் பணத்துக்கு மட்டும் ஏன் சிறப்பு சலுகை கொடுக்க வேண்டும்? அதையும் ஏன் பண்டங்களின், சேவைகளின் தரத்துக்குக் கொண்டுவரக்கூடாது?

வைத்திருக்க, வைத்திருக்கப் பணமும் தன் மதிப்பை இழக்கிறது என்னும் கோட்பாட்டுக்கு நாம் வரவேண்டும்.

ஆகவே அதை சேர்த்து வைத்திருக்க யாராவது யோசித்தால், அதன் மதிப்பை மாதாமாதம், அல்லது மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு தடவை அல்லது ஆண்டுக்கு ஒரு தடவையாவது அதன் மதிப்பை இத்தனை சத வீதமாக என்று கழித்து மதிப்பிட வேண்டும்.

பணத்தின் மதிப்பைக் குறைத்துவிட அறவிடும் இந்தக் கட்டணத்துக்கு  Demurrage charge என்று பேர்.

பணத்தைத் தேக்கி வைத்துக் கொண்டால், அது ஒரு சிறு குழுவுக்கு மட்டுமே நன்மை செய்யும். மக்களுக்கு அல்ல. அது ஓடிக் கொண்டே  இருந்தால் தான் (dynamic system) பொருளாதாரம் பெருகும் என்றார்.

இதெல்லாம் ஒரு கற்பனை உலகத்தில் தான் நடக்க முடியும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால் நடந்தது.

வோர்ல் நகரத்தில் முதல் மாதிரி சோதனைக்களம்  

1932 ம் ஆண்டு. முதலாம் உலகப் போர் முடிந்திருந்த சமயம். பெரும் பொருளாதாரக் கஷ்டத்தில் இருந்தன அய்ரோப்பிய நாடுகள். பணவீக்கம் அதன் உச்சத்தில் இருந்தது.

எங்கும் பஞ்சம், பட்டினி. வேலையின்மை பெருகிப்போய்,  என்ன செய்வது என்றே தெரியாமல் நகர நிர்வாகங்கள் தத்தளித்துக் கொண்டிருந்தன.

ஒரு ரொட்டி வாங்க, ஒரு  கைவண்டி நிறைய பண நோட்டுகளை அள்ளிக் கொண்டு போக வேண்டி இருந்த சூழ்நிலை.

வோர்ல் நகரத்தின் (ஆஸ்திரியா) அன்றைய மேயர், தற்செயலாக சில்வியோவின் புத்தகத்தை வாசித்திருக்கிறார். சில்வியோவின் கோட்பாடுகளை சோதனை செய்து பார்த்தால் என்ன? என்று யோசித்திருக்கிறார்.

தலைக்கு மேலே வெள்ளம் போய்க்கொண்டிருக்கிறது. அதில் சாணாவது, முழமாவது? அந்த அளவுக்கு நொந்து போயிருந்தார் அவர்.

அந்த சின்ன ஊரில் சுமார் 500 பேர் வேலை இல்லாமல் அலைந்து கொண்டிருந்தார்கள். போதாதற்கு, அதை விட,  இன்னும் அதிகமான ஆட்கள் வேறு, அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்து வந்து ஏதாவது வேலை இருக்கா, இருக்கா? என்று வீடு வீடாய்த் தட்டி, வயித்தெரிச்சலைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள்.

நகர நிர்வாகத்திடம் மிஞ்சிப் போனால் 40 000 ஷில்லிங்குகள் தான் இருந்தன. பிச்சைக் காசு. அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?

அந்தக் காசை அவர் அங்கிருந்த ஒரு உள்ளூர் வங்கியில் வைப்பு நிதியாகப் போட்டார். வங்கியின் மேலாளரிடம் சொன்னார்: இந்த பணத்துக்குப் பதிலாய், நான் இந்த ஊருக்குத் தனியாக ஒரு சிறப்புப் பணம் அச்சடிக்கப் போகிறேன். 40 000 ஷில்லிங்குகள். வோர்ல் நகரத்து ஷில்லிங் என்று பேர். என்ன பிரச்னை வந்தாலும் நான் உத்தரவாதம் என்றார். ஒப்பந்தம் முடிவாயிற்று.

இந்த சிறப்பு ஷில்லிங், ஒரு பெரிய நோட்டு. நாலாய் மடித்துப் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம். அவர் விளம்பரம் போட்டார்: வேலைகள் இருக்கின்றன. இந்த நோட்டுகள் தான் உங்கள் ஊதியம். உங்கள் செலவுகளுக்கு இது உத்தரவாதம்.

Related image
வோர்ல் ஷில்லிங் நோட்டு

ஆனால் ஒரு நிபந்தனை: ஒவ்வொரு மாத முடிவிலும், நோட்டுகளின் மதிப்பு ஒரு சத வீதமாகக் குறைந்துவிடும். அதற்கு அத்தாட்சியாய், அஞ்சலகத்தில் போய்க் கொடுத்து நோட்டுகளில் ஒரு முத்திரை ஒட்டிக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அடுத்த மாதம் செல்லுபடி ஆகாது.

ஆலை இல்லா ஊருக்கு இலுப்பம்பூ சர்க்கரையாம். எல்லாரும் வேலைகளுக்கு அடித்துப் பிடித்து ஒடி வந்தார்கள். பண நோட்டுகளை சேர்த்து வைக்கிற யோசனை யாருக்கும் வரவில்லை. என்ன பைத்தியமா?

விறுவிறு என்று என்று வேலைகள் நடந்தன. சிதிலமாய் இருந்த நீர் விநியோகம் சீர் செய்யப்பட்டது. வீதிகள், நடை பாதைகள் அமைத்தார்கள். ஏன், நகர நிர்வாகத்துக்குக் கட்ட வேண்டிய வரியைக் கூட அதே புதுப் பணத்தில் கட்டிவிட்டார்கள்.

ஒரு பாலமும் கட்டி முடித்தார்கள். அதில் ஒரு வாசகம் பொறிக்கப்பட்டது : இந்தப் பாலம், எங்கள் வோர்ல் நகரத்துப் பணத்தால் கட்டப் பட்டது.

அத்தனை பெருமை அந்த ஊர் மக்களுக்கு. முன்பு பாவனையில் இருந்த ஷில்லிங்கை விட, இந்த ஷில்லிங் 12-14 மடங்கு அதிகமான வேலைகளை உருவாக்கிற்று. அதன் பாவனை 416 மடங்காக உயர்ந்தது. அந்த சின்ன ஊரின் பொருளாதார செயல்பாடுகள் அன்றே 2.5 மில்லியன் ஷில்லிங்குகள்! (இன்றைய மதிப்பில் 7.5 மில்லியன் டாலர்கள்.)

செய்தி கேட்டு, அக்கம் பக்கத்து ஊர்க்காரர்கள் அசந்து போனார்கள். 1933 களில், கிட்டத் தட்ட, 170 ஊர்கள் இந்த முறையைப் பின்பற்ற ஆரம்பித்தன. அவர்கள் துவங்க, கொஞ்ச நாளில் இன்னும் 200 ஊர் நிர்வாகங்கள் என்று ஒரே உற்சாகம்.

நாலு நல்லவர்கள் என்று இருந்தால் அங்கே ஒரு வில்லனும் இருப்பான் என்பது தானே உலக நியதி? ஆஸ்திரியாவின் மத்திய வங்கிக்கு இந்த மக்களின் ஆர்வத்தைப் பார்க்கப் பார்க்க மனசுக்குள் ஒரே புகைச்சல். பயம். இத்தனை நாள் நாம் போட்ட ஆட்டத்துக்கு வேட்டு வைத்து விடுவார்களோ?

பண நோட்டு அடிப்பது எங்கள் உரிமை என்று நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்கள். 1933 ம் ஆண்டு நவம்பர் மாதம், அவர்களின் வழக்கையே தள்ளிவிட்டது அந்த நீதிமன்றம். அவர்கள் விடவில்லை. உயர்நீதி மன்றம் போனார்கள். அவர்களுக்கு சார்பாகத் தீர்ப்பு வந்தது.

தேவைகள்  தோன்றினால் அதை நிறைவேற்ற வழிமுறைகள் தானாகவே தோன்றும். அதை வெளியில் இருந்து கொண்டுவர வேண்டிய அவசியமில்லை  என்கிறார்கள் விஷயம் தெரிந்த பொருளியலாளர்கள்.

(எப்போதும் அறிவியலாளர்கள் பொடி வைத்துப் பேசுவது தான் வழக்கம்.  நேரடியாக எதுவும் சொல்வதில்லை. என்னமோ, அது அவர்களுக்குப் பழகிவிட்டது. பாவம்.)

அவர்கள் சொன்னதன் அர்த்தம்: மத்திய வங்கியோ, அரசோ எதுவோ, அல்லது ஒரு குறிப்பிட்ட தலைமையோ, மக்களின் தேவைகள் என்ன என்று எனக்குத் தான் தெரியும். எனக்குத் தான் தீர்க்கத் தெரியும் என்று திமிரோடு பேசுவது முட்டாள்த்தனம்.

அந்த வேதனையான தீர்ப்பின் பின், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் அதல பாதாளத்தை நோக்கிப் பாயத் துவங்கியது. அரசியல் பூசல்கள் இன்னும் மோசமாகின. மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள்.

அப்போது தோன்றினார் ஒரு ரட்சகர். அவர் முழங்கினார்: வரலாற்றிலேயே இல்லாத முறையில் உங்கள் நாட்டைக் கட்டி எழுப்புவேன் என்று இதோ நான் உங்களுக்கு வாக்குத் தருகிறேன். என்னை அரியணையில் அமர்த்துங்கள்!

அவர் பேர்: அடோல்ப் ஹிட்லர். ஆஸ்திரிய நாட்டின் ஆன்ஷுலூஸ் நகருக்கு 1938 ல் அவர் வந்தபோது மக்கள் தந்த மகத்தான வரவேற்பை சொல்லி மாளாது.

அடுத்து நடந்தவை உங்களுக்குத் தெரியும்.

அமெரிக்கா போன வோர்ல்  நகரப்  புகழ் 

அதே 1933 ம் ஆண்டில், வோர்ல் நகரத்துப் பெருமை அங்கேயும் போய்ச் சேர்ந்திருந்தது.

டீட்டர் சூர் (Dieter Suhr) எழுதிய Capitalism at its Best எனும் நூலில், அமெரிக்க நாட்டின் அன்றைய பொருளியலாளர்கள், ஹான்ஸ் கோர்சன், இர்விங் பிஷர் இருவரும் சேர்ந்து சில்வியோவின் கொள்கைகளைப் பரப்புரை செய்ய நினைத்தார்கள் என்று விவரிக்கிறார்.

100 க்கும் மேலான நகரங்கள், நாமும் செய்து பார்ப்போமே என்று துவங்கின. இதில் சிக்காகோ போன்ற பெரு நகரங்களும் அடக்கம்.

செய்தி, நாட்டின் கருவூலத்துக்குப் (Treasury) பொறுப்பாக இருந்த செயலர் வரை போனது. அவரோ, இதற்கு நான் எந்த மறுப்பும் சொல்ல மாட்டேன். தவிர, எனக்கு எந்த அதிகாரமும்  இல்லையே என்றார்.

அந்த ஆண்டு மார்ச் மாதம், நாட்டின் அதிபர், ரூஸ்வெல்ட், அப்படி எல்லாம் யாரும் துவங்க முடியாது. மத்திய அரசு தான் பணம் அச்சடிக்கும் என்று ஒரேயடியாய் உத்தரவு போட்டு விட்டார்.

முளையிலேயே கிள்ளிவிட்டார்கள்.

எப்படி புதிய பணத்தைப் பாவனைக்கு விடலாம்?

பொருளியலாளர் யோஷிட்டோ ஒட்டானி (Yoshito Otani) இந்தப் புதிய பணம் பற்றி விளக்கம் தருகிறார்:

இந்தப் பணத்தைப் பாவனையில் விடப் போகிறோம்,  ஒவ்வோர் தவணையிலும் அதன் மதிப்பைக் குறைக்கப்  போகிறோம் என்றால் என்ன நடக்கும்?  இந்தக் கழிவுக் கட்டணத்தைப் பார்த்து யாரும் பயம் கொள்ளத்  தேவை இல்லை.

இன்றைய 90 சத வீதமான பணம், கணனிகளில் வெறும் இலக்கங்களாக மட்டுமே இருக்கிறது. புதிய பணத்தின்படி, ஒவ்வொரு பாவனையாளரிடமும் இரண்டு வங்கிக் கணக்குகள் இருக்கும். ஒன்று நாளாந்த பாவனைக் கணக்கு (Current Account). இந்தக் கணக்கு மூலம் உங்கள் நாளாந்த/மாத வருமானம், செலவுகளைக் கவனித்துக் கொள்ளலாம்.

மற்றது சேமிப்புக் கணக்கு (Savings Account). மாத முடிவில், நாளாந்தக் கணக்கில், உங்கள் செலவுகள் போக மிஞ்சுவது எதுவோ, அதன் 1/2 சத வீதம் மாதாமாதம், அல்லது ஆண்டுக்கு 6 சத வீதம் கழிக்கப்பட்டு பாவனை வரியாக சேமிப்புக் கணக்குக்கு மாற்றப் பட்டுவிடும்.

பாவனை வரி தான் பணம் வீணாகப் பெருகாமல் இருக்க உதவப் போகிறது.

வாடிக்கையாளரின் சேமிப்புக் கணக்குக்கு வந்திருக்கும் இந்தத் தொகையை வங்கிகளும் சேர்த்து வைக்க முடியாது. அவர்களும் பாவனை வரிக்குள் வருகிறார்கள்.

ஆகவே வங்கிகள் இந்தப் பணத்தை தேவைப் படுபவர்களுக்குக் கடனாய்க் கொடுக்கலாம். அதற்கு ஓர் சிறு கட்டணம் அறவிடலாம். (வட்டி அல்ல.) வங்கிகள் தமது செலவுகளை ஈடு செய்து கொள்ள இது ஒரு வழி.

வங்கி, மற்ற பாவனையாளருக்குக் கொடுத்த அந்தக் கடன் திரும்பி வர, அது  மீண்டும் சேமிப்புக் கணக்கில் சேர்க்கப் பட்டுவிடும் (வட்டி இல்லாமல்). சேமிப்புக் கணக்கில் எந்த மாற்றமும் வராது.  நாளாந்தக் கணக்கில் இருந்து  சேமிப்புக்கு வந்த தொகை அப்படியே இருக்கும்.

ஆகவே யாரும் அச்சம் கொள்ளத் தேவை இல்லை. பணத்தின் மதிப்பு அப்படியே இயற்கையாக இருக்கும்.

இது ஒட்டானியின் யோசனை.

இந்தப் புதிய பணம்  வங்கிகளுக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுக்கும். இனி அவர்களின் நாட்டாமை வேலைக்கு அவசியம் இருக்காது. கொள்ளைக்காரனுக்குத் தூக்கம் வருவதில்லை என்று ஒரு பழமொழி உண்டு. அவர்கள் நிம்மதியாக உறங்கலாம்.

மார்கரீட் கென்னடியின் யோசைனைகள்:

வங்கிகளில் இருக்கும் பாவனையாளர்களின் (மேலே சொன்ன) இரண்டு கணக்குகளையும் ஒரு நொடியில் சரிசெய்து விடலாம். பாவனையில் இருக்கும் பண நோட்டுகளின் மதிப்பை எப்படிக் குறைப்பது?

இன்று அழுக்காய்ப் போன, கிழிந்துபோன நோட்டுகளுக்குப் பதிலாக,  மத்திய வங்கி புது நோட்டுகள் அடிக்கிற செலவை விட இந்த நோட்டுகளுக்கு ஆகும் செலவு குறைவு. 

இன்று பண நோட்டுகளில் முத்திரை ஓட்டுகிற வேலை ஒத்து வராது. புதுப் புது வண்ணங்களில் பண நோட்டுகளை ஆண்டுக்கு ஒரு தடவையோ இரண்டு தடவையோ பாவனைக்கு விடலாம். எப்போது, எந்த நாளில் என்பதை ரகசியமாய் வைத்துக் கொள்ளலாம்.

பணத்தைப் பதுக்க முடியாது என்பதால் அதைக் காணி நிலங்கள், கட்டிடங்கள், சொத்துக்கள், உடைமைகள் மீது முதலீடு செய்து சேர்த்து வைக்கலாமே என்னும் சிந்தனைகள் சீக்கிரமே வந்துவிடும்.

காணி நில சீர்திருத்தங்கள் வேண்டும். இல்லாவிட்டால் மோசமான சூழல் சீர்கேட்டுக்கு அது வழி வகுத்துவிடும். காணி நிலங்களின் மதிப்புக்குப்  பந்தயம் கட்டி அந்த மாதிரிப் பணம் சேர்க்க யோசிப்பார்கள். காணி நிலங்களை அரசு தன் கைக்குள் கொண்டுவர வேண்டும்.

சீட்டிழுப்பு முறையில் அல்லது ஏலம் போட்டு, வீடுகள் வேண்டுவோர்க்குக் கொடுக்கலாம். எல்லாரும் வாடகை கட்டுவார்கள். எங்கு கூடிய காலம் வசித்தார்களோ, அங்கு அவர்களால் தொடர்ந்து வாழ முடியும் அல்லது அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்.

உடைமைகள் என்றாலே தங்கம், வெள்ளி முதலில் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியாது. பெண்களுக்கு அதில் மோகம் அதிகம். இந்த மனோநிலையை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார் மார்கரீட் கென்னடி. அவரும் பெண்.

வருமான வரி என்பதற்குப் பதிலாய் உற்பத்தி வரி, சுற்றுச்சூழல் வரி என்று  அறிமுகப்படுத்தலாம்.

இன்றைய சொகுசு வாழ்க்கையில் எந்தப் பொருளையும் கொஞ்சநாள் தான் உபயோகிக்கிறோம். பிறகு தூக்கி எறிந்து விடுகிறோம். அதைப் பழுது பார்க்க நேரமில்லை. வீணாக, நாம் இன்னும் இயற்கை வளங்களை சுரண்டுகிறோம். எதிர்கால சந்ததிகளைப் பற்றி யோசிப்பதே இல்லை. காரணம்: இன்றைய பணம். வளர்ச்சி தான் அதன் ஒரே நோக்கம்.

புதிய பணம் பாவனைக்கு வரும்போது இவை கவனத்துக்கு வரும். உதாரணமாய், இயற்கை வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துகிறீர்களா? அதற்கான புதுத் தொழில் நுட்பங்களைப் புகுத்துகிறீர்களா? உங்களுக்கு உற்பத்தி வரி குறைவு.

சுற்றுச் சூழல் பாதுகாப்பில் கவனமாக நடந்து கொள்கிறீர்களா? உங்களுக்கு சுற்றுச் சூழல் வரி குறைவு …  இப்படி ஆரம்பிக்கலாம்.

ஆண்களிடம் சந்தேகப் பார்வை அதிகம். மற்ற ஆண்களிடம் எச்சரிக்கையாய் இருக்கும் குணம், போட்டி போடுவதில் தான் கூடுதல் ஆர்வம் என்று அவர் பொதுவாகப் பட்டியல் போட்டாலும் எல்லாரையும் அவர் சொல்லவில்லை.

பெண்களிடமோ, குழு மனப்பான்மை இயற்கையிலேயே இருக்கிறது. அவர்களுக்கிடையில் நட்பு தோன்ற அதிக நேரம் போகாது. எதையும் குழுவாய் சேர்ந்து செய்ய ஆர்வம் அதிகம். ஆகவே பெண்கள், ஆண்களை விட, புதிய பணத்தை வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறார் அவர்.

காசு நம் அடிமை – 7

என் வாழ்க்கையின் மதிப்பை  ஒரு இலக்கம்  முடிவு செய்வதா?

-யாரோ 

தொடர் -7

மூன்றாம் உலக நாடுகள்

நிதிப் பற்றாக்குறையை சரிசெய்ய அந்த காலத்தில் ஒவ்வொரு நாடும் அடுத்த நாட்டைக் கொள்ளை அடிப்பதில் நாட்டம் காட்டின என்று கண்டோம். அடிமை வர்த்தகமும் அதில் அடக்கம்.

இன்று என்ன நடக்கிறது?

வளர்முக நாடுகள் என்று சொல்லப்படும் நம் நாடுகளுக்கு, ஏகாதிபத்தியங்கள் அரசியல் விடுதலை கொடுத்துவிட்டாலும் அவர்களின் பொருளாதாரப் பிடியில் விடுதலை கிடைத்துவிட்டதா?

அடிமை வர்த்தகம் இப்போது இல்லையா?

மேற்கு நாடுகளிடம் கெஞ்சிக் கூத்தாடிக் கடன் வாங்கிவிட்டு , ஏதோ ஆண்டவன் புண்ணியம் என்று சந்தோஷப் படுகிறோம். கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் தவிக்கிறோம். வட்டியை மட்டும் கட்டுகிறோம்.

வளர்முக நாடுகளின் கடன்கள் 1986 களிலேயே ஒரு ட்ரில்லியன் டாலர்கள். இதில் மூன்றில் ஒரு பங்கு வட்டி. மேற்கு நாடுகள் கடனை ரத்து செய்வதில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை.

கேட்டால், முதல்ல அவனை ரத்து செய்யச் சொல்லு. அப்ரம் நான் செய்றேன் என்று ஆளுக்காள் கைகாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மூன்றாம் உலகத்தை சுரண்டுவது மூலமாகத் தான் அவர்களின் நடுத்தர, எளிய மக்களை அவர்கள் ஜாலியாக இல்லாவிட்டாலும் திருப்தியாக சரி வைத்திருக்க முடிகிறது. இன்றேல் அவர்களின் அரசியல் அழுகி நாற்றமெடுக்க அதிகநாள் போகாது என்று அந்த அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே தெரியும்.

புதிய பணம் இந்த அநீதியை சரி செய்ய உதவும் என்கிறார் மார்கரீட் கென்னடி.

இன்று நடைமுறையில் இருக்கும் புதுப் பணம்

இன்றைய கால கட்டத்தில் மேற்குலகில் பல நாடுகளில் அவர்களின் தேசிய பணத்துக்குப் (டாலர், யூரோ.. ) பதிலாக  Complimentary currencies என்று சொல்லப்படும் வெவ்வேறு வகைப் பணங்கள் அறிமுகமாகிப் பல ஆண்டுகள் ஆகின்றன. இப் பணத்தை மாற்றுப் பணம் என்று சொல்லலாமா?

இவ்வகைப் பண அமைப்புகள் அந்தந்த அரசுகளின் அனுமதியோடு சிறு அளவில் பாவனையில் இருக்கின்றன. சில்வியோ கெசெலின் கோட்பாடுகளுக்கு ஏற்ப இயங்குகின்றன.

இந்தப் பணம், ஒரு குறிப்பிட்ட மாவட்டம் அல்லது நகரம் என்று அதன் எல்லைக்குள் மட்டும் பாவனையில் இருக்கும். அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு இது உதவுகிறது.

LETS அமைப்பு 

ஒவ்வொரு கிராமங்கள், ஊர்கள், நகரங்களில்,  இன்னின்ன பொருள்கள் விற்பனைக்கு இருக்கின்றன, அல்லது இன்னின்ன சேவைகள் வழங்கலாம் என்று தனிப்பட்டவர்கள், விளம்பரங்கள் அச்சடித்துப் பொது இடங்களில் ஒட்டியிருப்பதைக் காண்கிறோம். இல்லாவிட்டால் பத்திரிகைகளில், ஏன் இணைய தளங்களில் கூட வருகின்றன.

இவர்களுக்கு இன்றைய வங்கிகளோ அல்லது அங்காடி வசதிகளோ யாரும் ஏற்படுத்தித் தருவதில்லை. அவர்களும் மனிதர்கள். அவர்கள் வாழ்க்கைக்குப் பணம் தேவைப்படுகிறது. அவர்களின் பொருள்கள், சேவைகள் நமக்குத் தேவைப்பட்டாலும் அலட்சியமாய் இருந்து விடுகிறோம்.

இதனால் எத்தனையோ மனிதர்களின் உழைப்பு வீண் போய்விடுகிறது. அவர்களில்  திறமைசாலிகள் இருந்தும் அவர்களின் குரல் கேட்காமலேயே  போய்விடுகிறது.

LETS என்பது Local Exchange Trading System என்பதன் சுருக்கம். நேரடியான மொழிபெயர்ப்பில், உள்ளூர் வணிக பரிமாற்ற அமைப்பு என்று பொருள் கொள்ளலாம்.

உள்ளூர் மக்களின் பொருளியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய  கனடா, பிரிட்டன், அமெரிக்கா, நியூ சிலாந்து, ஆஸ்திரேலியா என்று பல நாடுகளில் திருப்திகரமாக செயல்படுகிறது இந்த LETS அமைப்பு.

இதில் யாரும் உறுப்பினராய் சேர்ந்து கொள்ளலாம். ஒருவரை ஒருவர்  அறிந்து கொள்வதும் நம்பிக்கை கொள்வதும் இதில் மிக முக்கியம்.

ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு வடிவங்களில் இந்த அமைப்பு செயல்பட்டாலும் அதன் அடிப்படை ஒன்று தான்.

கனடா 

கனடாவை எடுத்துக் கொள்வோம். பல நகரங்களில் இதன் பேர்: Green Dollars. இந்தப் பசுமை டாலர்கள் பேரிலேயே சுற்றுச் சூழல், இயற்கையைப் பேணுதல் என்னும் நோக்கம் அடங்கி இருக்கிறது. 1990 களில் சுமார் 600 பேர் அங்கத்தவர்கள். இன்று ஆயிரக்கணக்கில் ஒவ்வோர் ஊரிலும் இருக்கிறார்கள்.

பொருளியல் பரிமாற்றங்களை ஒருங்கிணைக்க, ஓர் மத்திய  செயல்பாட்டு நிலையம் இருக்கிறது. உறுப்பினர்கள், என்னென்ன பொருள்கள், சேவைகள் இருக்கின்றன என்பதைக்  கணணிகள்/செல்போன்கள் மூலம் அங்கு அனுப்பி விடுகிறார்கள். அதன் இணையத்தில் எல்லாரும் பார்க்கலாம்.

ஏதாவது தேவையா? உறுப்பினர் விற்பவரோடு தொடர்பு கொள்கிறார். விலை பேசி முடித்தபின், மதிப்பு பச்சை டாலர்களில்,  விற்பவரின் கணக்கில் வரவு, வாங்குபவரின் கணக்கில் பற்று என்று மத்திய நிலையத்தில் பதிவாகிறது.

பச்சை டாலரின் மதிப்பும் கனடா நாட்டின் தேசிய பணமான கனடா டாலரின் மதிப்பும் ஒன்றே.

யாரும் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியாது. பச்சை டாலர் நோட்டுகள் என்று தனியாகப் பாவனையில் இல்லை. ஒரு சிறப்பு அட்டை  மூலம் உங்களிடம் எவ்வளவு பணம் வரவு இருக்கிறது அல்லது பற்று (கடன்) இருக்கிறது என்று எப்போதும் பார்த்துக் கொள்ளலாம்.

வரவு இருந்தால் கனடா தேசிய டாலருக்கு மாற்றி எடுக்கலாமா? முடியாது.

கூடுதலாக வரவு இருந்தால் அதை செலவு செய்துவிடுங்கள்  என்று அடிக்கடி நினைவூட்டுவார்கள். இல்லாவிட்டால் அது குறிப்பிட்ட காலத்தின் பின் அதன் மதிப்பு குறைந்து கொண்டே போகும். (சில்வியோ கெசெலின்  கோட்பாடு.)

கடன் இருந்தால், அந்த மதிப்பை கனடா தேசிய டாலரில் செலுத்த வேண்டும். அடிக்கடி நினைவூட்டுவார்கள். செய்துவிட்டால் பிரச்னை இல்லையே.

இதில் தெரிவது: பச்சை டாலர் சேர்த்து வைக்க உருவானதல்ல.

ஒருவரின் உழைப்பு உருவாகி அது விலையாகும்போது  பச்சை டாலர் உருவாகி அவர் கணக்கில் வரவு ஆக சேர்கிறது. இன்னொருவர் அந்த உழைப்பை வாங்கும்போது அது அவரின் கணக்கில் செலவு என்று ஆகி மறைந்து போகிறது.

இந்த அமைப்பு உருவானபோது எதிர்ப்புகள் நிறைய எழுந்தன என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். சிலர் இது கம்யூனிஸ்ட்டுகளின் சதி என்று புரளி கிளப்பி விட்டார்கள்.

இவர்களுக்கு எதிராகப் பெண்கள் கூட்டம் கூடியது. எங்களுக்கு அது நிறைய நன்மைகள் செய்திருக்கிறதே. அதற்கு என்ன சொல்கிறீர்கள்? என்று அவர்கள் திருப்பிக் கேட்கப்போக, சொன்னவர்கள் கப்சிப்.

இந்த அமைப்பு ஒரு விதத்தில் பண்டமாற்று முறையைத் தான் இன்னொரு வடிவில் கொண்டு வருகிறது.  ஒரு வரவு செலவு அமைப்பு இது.

இன்னார் சிறப்பு அம்சம் : யாரும் பச்சை டாலரைக் களவாட முடியாது.

இந்த அமைப்பில் இருக்கும் குறைகள் :

இந்தப்  பரிமாற்றங்களில்  வரி ஏய்ப்பு செய்ய நிறையவே வாய்ப்புகள் உண்டு. ஆகவே நகர நிர்வாகங்கள் இந்த அமைப்புக்கு ஊக்கம் தருவதில்லை.

நகர நிர்வாகமும் இந்த அமைப்பும் ஒன்று சேர்ந்தால் வேலை இல்லாமல் தவிக்கும் எத்தனையோ பேருக்கு உதவலாமே.

அடுத்து, வரவுகளும், பற்றுகளும் அளவுக்கு அதிகம் போய்விட்டால், அதை சீர் பண்ணுவது சிரமமான வேலையாக இருக்கிறது. எனவே எந்த நேரமும் கண்காணிப்பு அவசியம்.

இது சில சமயங்களில் உறுப்பினர்களுக்கு  எரிச்சலை உண்டு பண்ணி, அமைப்பில் இருந்து விலகிவிட அல்லது அமைப்பின் மீது ஆர்வம் குறைந்துபோய்விட ஏதுவாகிறது.

குறைகள் இல்லாது உலகில் எந்த அமைப்பும் இல்லை. இருந்தும் அமைப்பின்  நன்மைகளை ஒட்டுமொத்தமாய் நோக்கும்போது குறைபாடுகள் அற்பமாகி விடுகின்றன.

நம் ஊரில் எத்தனையோ மனிதர்கள் பயன் பெறுகிறார்களே என்கிற திருப்தியை, உணர்வை  உறுப்பினர்கள் மனதில் அது விதைக்கிறதே.

மேலும் அறிந்துகொள்ள:

LETS System UK

LETS System Australia, New Zealand

Chiemgauer Money (கிம்கோவேர்  பணம்) 

ஜெர்மனியின் கிம்கோவ் (Chiemgau) நகரில் பாவனையில் இருக்கும் கிம்கோவேர் பணம் (1932 களில் வோர்ல் நகரத்தில் அமுல் செய்யப்பட்ட அதே சில்வியா கேசெலின் கோட்பாட்டில்) இன்று பாவனையில் இருக்கிறது.

உள்ளூர் ஆசிரியர் ஒருவரால் (கிறிஸ்டியான் கெல்லரி) 2003 ஆண்டில் அவரின் மாணவர்களுடன் துவங்கப்பட்ட இந்தப் பணம் எப்படி இயங்குகிறது என்பதை Youtube இல் காணலாம். (ஆசிரியரும் பேசுகிறார்)

அந்தப் பண நோட்டை வடிவமைப்பது, அதை நிர்வகிப்பது, கணக்குகளைக் கையாள்வது, விளம்பரம் செய்வது எல்லா வேலைகளையும் அவரின் மாணவர்களே பார்த்துக் கொள்கிறார்கள்.

ஒரு கிம்கோவேர் = ஒரு யூரோ

யூரோ, நாட்டின் தேசிய பணமாக இருந்தாலும், உள்ளூர் கிம்கோவேர் பணத்தையும் உபயோகிப்பதில் மக்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள்.

இந்தப் பணத்தின் சிறப்பு அம்சம் :  பாவனையில் அந்த நகர வங்கிகளும் நகர நிர்வாகமும் இணைந்திருக்கின்றன.

மேலும் அறிந்துகொள்ள:

Chiemgayer money (PDF)

Chiemgauer money-The Guardian UK

Time Banks அமைப்பு  

இது அமெரிக்காவில் இயங்கும் அமைப்பு. இவர்கள் பணம் என்பதற்குப் பதிலாக, நேரம் என்பதை அளவுகோலாக வைத்திருக்கிறார்கள்.

பணத்தின் மூலம் தான் நாம் எல்லாவற்றையும் அளவிட வேண்டுமா?  என்று கேட்கிறார்கள் இவர்கள்.

LETS அமைப்பு, பொருள்கள் சேவைகளை மதிப்பிட டாலரை வைத்திருக்க, இவர்கள் நேரத்தைக் கொண்டு பொருள்கள், சேவைகளை மதிப்பிடுகிறார்கள்.

கிட்டத்தட்ட 30, 000 – 40, 000 பேர் வரை இந்த அமைப்பில் பங்குகொண்டு பயன் பெறுகிறார்கள் என்பது கணிப்பு.

ஓர் சிறப்பு மென்பொருள் (software) அமைப்பின்  பரிமாற்றங்களைக்  கண்காணிக்கிறது. இல்லாவிட்டால் மத்திய ஒருங்கிணைப்பாளருடன் தொடர்பு கொள்ளலாம்.

இவர்களின் கொள்கைகள்:

ஒவ்வொருவரும் மற்றவர் உடன் பகிர்ந்துகொள்ள ஏதோ ஒன்று வைத்திருக்கிறார்கள்.

சில தொழில்களை பணத்தால் மதிப்பிட முடியாது. உதாரணம்: குடும்ப உறவுகள், அண்டை அயலாரோடு நல்லுறவு, எல்லார் உணர்வுகள், குரல்களுக்கு மதிப்பளித்தல் , சமுதாய நீதியை இன்னும் மேம்படுத்தல்.

இவற்றைப் பணத்தால் அளவிட  முடியுமா? ஆனால் இவைகளுக்கு நம் அமைப்பில் வரவுகள் உண்டு. அவற்றை நாம் மதிப்பிடுகிறோம் என்கிறது இந்த அமைப்பு.

ஒவ்வொருவரும் சிறு சிறு குழுக்களாய் இயங்குங்கள். பின்பு ஒவ்வொன்றையும் இணையுங்கள். ஒரு வலைப் பின்னல் போல எல்லாக் குழுக்களும் இயங்கட்டும்.

எப்படி இயங்குகிறது இந்த அமைப்பு?

உதாரணமாக, ஒரு டாக்டர் ஒரு மணித்தியாலம் உங்களுக்கு மருத்துவ சேவை தரலாம் என்கிறார். நான் ஒரு சாதாரண மெக்கானிக். ஆகவே என் சேவையை அதற்குப் பதிலாய் 3 மணித்தியாலமாய்த் தருகிறேன் என்கிறேன்.

நம் இடையில் ஒப்பந்தம் உருவாகிவிட்டால் அது மத்திய நிலைய மென்பொருளில் பதியப் படுகிறது.

எப்போது சேவை பரிமாற்றம் என்பதெல்லாம் நாம் இருவரும் பேசி முடிவுக்கு வரலாம்.

குறிப்பிட்ட காலத்துள் உறுப்பினர்களின் வரவுகளும் செலவுகளும் மேல் சொன்ன மற்ற அமைப்புகள் போலவே சரி செய்து கொள்ள வேண்டியது மட்டுமே பாக்கி.

மேலும் அறிந்துகொள்ள:

https://timebanks.org/

WIR அமைப்பு, சுவிட்சர்லாந்து

சாதாரண மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மேல் சொல்லப்பட்ட அமைப்புகள் உதவுகின்றன. அப்போ, சாதாரண சிறு வணிகர்களுக்கு?

இதோ நாங்கள் இருக்கிறோம்! என்று உதவிக்கு முன்வருகிறது WIR அமைப்பு.

பெரும் பன்னாட்டு நிறுவனங்கள், பெரு வணிகங்கள் பொதுவாக, சிறு வணிகங்களை வளரவிடாமல் அழித்துவிட என்னென்ன சூழ்ச்சிகள் செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்கின்றன. இதற்கு அரசியல்வாதிகளும் கூட்டாளிகள் என்பது வேதனையான செய்தி.

சிறு வணிகர்களுக்காக, 1934 களிலே வெறும் 16 பேரோடு சுவிட்சர்லாந்தில்  துவங்கிய இந்த அமைப்பில் இன்று சுமார் 62,000 வணிகர்கள் உறுப்பினர்கள்.

அதே சில்வியோ கெசெலின் கோட்பாடுகள் செயல்படுகின்றன. வணிகர்களின் கொள்முதல் பற்று வைக்கப்படுகிறது. பண்டங்களின் மதிப்பை அளவிட மட்டும் சுவிஸ் நாட்டின் தேசிய பணத்தை (Swiss Francs) உபயோகிக்கிறார்கள். பொருள் வாங்கிய வணிகர்கள் கணக்கை நேர் செய்யும்போது வரவு வைக்கப்படுகிறது.

யாரும் கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது. வரவுகள் கூடிவிட்டால் கட்டாயமாக செலவு செய்யும்படி அடிக்கடி வற்புறுத்தல்கள் வரும். மதிப்பும் குறையும். செலவுகள் கூடிவிட்டால் கட்டாயமாக சீர் செய்ய வேண்டும் அல்லது சுவிஸ் தேசிய பணத்தில் கட்டிவிடவேண்டும்.

WIR இணைய தளத்தில், உறுப்பினர்கள் என்னென்ன பொருள்கள், சேவைகள் கொடுத்து வாங்க விரும்புகிறார்கள் என்று விவரங்கள் உடனுக்குடன் கிடைக்கின்றன.

உறுப்பினர்களுக்கு, அவரவர் தரத்துக்கு ஏற்றபடி அமைப்பில் இருந்து கடன் வாங்கலாம். வட்டி இல்லை. நிர்வாக செலவுகளுக்கு சிறு கட்டணம் அவ்வளவே.

மேலும் அறிந்துகொள்ள:

WIR System, Switzerland

WIR System – The Guardian UK

JAK அமைப்பு 

முதலாம் உலகப் போர் முடிந்திருந்தாலும் மக்கள் யுத்தத்தின் கோரப்பிடியில் இருந்து மீள்வது கடினமாகவே இருந்தது.

டென்மார்க்கில் விவாசாயிகள் கடன் தொல்லையால் பெரும் துன்பத்தை எதிர்கொண்டார்கள். அரசு கைவிரித்த நிலையில், தனியாரிடம் கடன் வாங்கியும் கட்டமுடியாத இக்கட்டில் இருந்தார்கள். காரணம் அநியாய வட்டி. அதன் எதிரொலியாக, சொந்த நிலங்களையே பறிகொடுக்க வேண்டிய சூழ் நிலை இருந்தது.

இந்த சமயத்தில், சில விவசாயிகள் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாக, விளைச்சலை வாங்கவரும் வியாபாரிகளோடு பேசினார்கள். ஒரு ஒப்பந்தம் போட்டார்கள். வியாபாரிகள் வட்டி இல்லாக் கடன் கொடுப்பார்கள். பதிலாக, விளைச்சலை ஒரு நியாயவிலைக்கு விவசாயிகள் அதே வியாபாரிகளுக்கு மட்டும் கொடுப்பது என்று முடிவாயிற்று.

JAK என்னும் கடன் கொடுக்கும் வங்கி இப்படி உருவாயிற்று. வட்டி இல்லாக் கடன் கொடுக்கும் இந்த அமைப்பு பெரிதாக வளர்ந்தாலும்,  1934 – 1938 கால இடைவெளியில் இந்த வங்கிக்குத் தடை போட்டிருந்தது அரசு. மீண்டும் 1960 களில் இயங்க ஆரம்பித்தது வங்கி.

1992 ல் சுவீடனில் இந்த வங்கி  துவங்கியது. உறுப்பினர்கள் நாட்டின் தேசிய பணத்தை (சுவீடன் க்ரோனர்) இந்த வங்கியில் வைப்பு நிதியாகப் போடலாம். ஆனால் வட்டி கிடைக்காது. இன்று அந்த நாட்டில் 30 கிளைகளுடனும் 33,000 உறுப்பினர்களுடனும் வளர்ந்து நிற்கிறது.

நாம் சாதாரண வங்கியில் சேமிப்பு துவங்கினால் வட்டி தருவார்கள். அதே சமயம், கடன் வாங்கினால் (வீடு வாங்க, கட்ட அல்லது ஒரு தொழிலுக்கு முதலீடு) அவர்கள் நம்மிடம் அறவிடும் வட்டி இன்னும் அதிகம்.

JAK வங்கியில் முதலில் சிறிது சிறிதாக நாம் சேமிப்பு துவங்கலாம். நாள் போகப்போக, வட்டி வராது. பதிலாய் சேமிப்புப் புள்ளிகள் (credit points) கூடிக்கொண்டு போகும். குறிப்பிட்ட காலத்தின் பின் உங்களுக்கு வட்டி இல்லாத கடன் கிடைக்கும்.

நீங்கள் போட்ட பணம் அப்படியே இருக்கும். கிடைத்த கடனையும் வட்டி இல்லாமல் திருப்பி செலுத்தலாம். நிர்வாகத்துக்கு ஒரு சிறு கட்டணம் செலுத்தினால் போதும்.

நடுத்தர வர்க்கம் இதில் நாட்டம் கொள்வதில் ஆச்சரியம் இருக்காது. அந்த நாட்டின் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பணக்காரர்களும் இதில் வைப்பு நிதிகள், சேமிப்புகள் என்று  சேர்ந்திருக்கிறார்கள்.

என்ன காரணம்? பணம் ஒரு பக்கம் இருக்கட்டும். நாலு பேருக்கு உதவுகிறோமே. அது பெரிய விஷயம் இல்லையா! என்று நம்மிடம் அவர்கள் சொல்லும்போது ஆம் என்று தான் சொல்லமுடியும். இல்லை என்று சண்டையா போட முடியும்?

இந்த அமைப்பின் விவரங்களை, மார்கரீட் கென்னடி, JAK வங்கி நிர்வாகி, அதன் ஊழியர்கள், திட்ட அமைப்பாளர்கள்  பேசும் தொடர்கள் நான்கு பாகங்களாக Youtube இல் இருக்கிறது. முதல் பாகம் கீழே.

மேலும் அறிந்துகொள்ள:

JAK bank, Sweden

JAKbank,Sweden,-Monneta organization

(தொடரும்..)

காசு நம் அடிமை – 8

வருமான வரி கட்டும்போது புன்னகை செய்யுங்கள் என்கிறார்கள்.  நானும் புன்னகை செய்து பார்த்தேன். அவர்கள் சொன்ன பதில் : புன்னகை  எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். காசு எங்கே?

-ஜாக்கி மேசன் 

தொடர் – 8

இந்தத் தொடர் இத்துடன் முடியவில்லை. தொடரட்டுமே.

இதுவரை வாசித்தவர்கள்  அனைத்தையும் விவாதப் பொருளாக்கினால் அடுத்த தளம் நோக்கிப் போகலாம்.

மேலும் சில குறிப்புகள்:

மார்கரீட்  கென்னடியின் Interest and Inflation Free Money புத்தகம் தான் இந்தத்  தொடரை எழுதத் தூண்டியது. புத்தகம் (PDF வடிவம்) இணையத்தில் இருக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் அதை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அவரின் ஆய்வுகள் ஆச்சரியம் தருகின்றன.

எல்லாருக்கும் புரியும் எழுத்து நடையில் எழுதி இருக்கிறார்.

அடுத்து பெர்னார்ட் லீட்டேர் எழுதிய The Future of Money தொடர்ந்து ஆவலைத்  தூண்டியது.

மார்கரீட் கென்னடி, அவரின் யோசனைகளை நான்கு கட்டங்களாக முன் வைக்கிறார்:

(1) மக்கள் குழுவாக இயங்க விரும்பினால் எப்படி ஓர் சிறு அமைப்பாகத் தொடரலாம்?

(2) அரசு எப்படி நாடு தழுவிய அளவில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்  படுத்தலாம்?

(3) இதை நடைமுறையில் எப்படி இன்னும் விரிவுபடுத்தி அனைத்து மக்களையும் பங்குகொள்ள வைக்கலாம்?

(4) எதுவுமே நடைமுறையில் சிக்கல்களை உருவாக்கும். எழும் பிரச்னைகளை எப்படித் தீர்க்கலாம்?

இதற்குத் தேவாலயங்கள், மசூதிகள், விகாரங்கள், கோயில்கள் என்று அனைத்து ஆன்மீகத் தளங்களிலும் மட்டுமல்ல, நாத்திகர்கள் மத்தியிலும் பொருளியல்/பண அமைப்பு பற்றிய புதுக் கருத்துக்கள் பரவலாக வேண்டும்.

பெரியவர்கள் மட்டுமல்ல, ஏன் பள்ளிப்பருவ மாணவர்கள் இடையேயும் ஆரம்பிக்கலாம். பணம் பற்றிய தெளிவு அவர்களிடம் இருப்பது அவசியம்.

பணம் பற்றிய இக் கருத்து பணக்காரர்களுக்கு எதிரானதல்ல. அவர்களும் கைகோர்த்துக் கொள்ளலாம் என்கிற உறுதிமொழி கொடுக்கப் படவேண்டும். ரத்தம் சிந்தி எதையும் சாதிக்க முடியாது.

மார்கரீட்  கென்னடி சொல்வது போல் இது முதலாளித்துவம் அல்ல. கம்யூனிசமும் அல்ல.

இது மூன்றாவது வழி. இதில் வன்முறை இருக்காது. புரிதல் இருக்கும். மக்களாட்சி என்பது இங்கிருந்து தான் துவங்க முடியும். 

இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில், இந்தப் புதிய பண அமைப்பு பற்றி எதுவுமே தெரியாமலேயே உலகின் அத்தனை அரசியல்வாதிகளும் இருப்பார்கள் என்று நம்ப முடியாது. இதை அமுல் படுத்திப் பார்க்கலாமே என்று இதுவரை அவர்களில் யாரும் சொன்னதில்லை.

என்ன காரணம்? அவர்களின் அதிகாரங்கள் குறைந்துவிடும் என்கிற பயமா? அல்லது வேறு ஏதாவது தடுக்கிறதா?

இந்த சந்தேகத்தை வாசிப்பவர்களிடமே விட்டுவிடுகிறேன்.

அடுத்து, பணம் என்பது அரசில் தான் உயிர் வாழ முடியும் என்றாலும் அதை அதிகாரத்தில் உள்ளவர்களில் இருந்து மீட்டுக் கொள்ள முடியாதா?

அரசியல்வாதிகள் வேண்டுமானால் பொருளியல் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கலாம். (அவர்களுக்கு இப்போது நல்ல பேரே இல்லை என்பது தெரிந்ததே.) அவர்கள் உண்மையான தலைவர்களாக மாறுவதற்கு இது நல்ல சந்தர்ப்பமாய் அமையலாம்.

அதிகாரம் நம்மிடம் இருக்கட்டும்

ஏனென்றால் உழைப்பவர்கள் நாம். வரி கட்டுபவர்களும் நாம் தான்.

பணம் என்பது நம் மூளையில் (மனம் ) இருக்கிறது. நம் கையில் (நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் நம்பிக்கையில்) இருக்கிறது.

—————————————————————————————-

மேல் சொன்ன இரண்டு புத்தகங்களை விட, இந்தத் தொடர் எழுத உதவியவை :

  1. The Nature of Money, Geoffrey Ingham
  2. Debt: The First 5,000 Years, David Graeber
  3. In Whose Interest? Mark Kinney
  4. Money: 5,000 Years of Debt and Power, Michel Aglietta
  5. Islam and the West, Brian Beedham, The Economist, 6th August 1994 
  6. The warrior monks who invented banking, BBC, 30th January 2017
  7. Wikipedia