தன்னுணர்வு அல்லது சுய நினைவு (consciousness) என்றால் என்ன? அதற்கு ஒரு வரைவிலக்கணம் இருக்கிறதா? அது எங்கே, எப்படி, எப்போது உண்டாகிறது?
Being You ஏட்டின் ஆசிரியர் அனில் செத் (Anil Seth) மூளை நரம்பியல் துறையில் தனக்கென்று தனித்துவமான இடத்தில் இருப்பவர்.
சுய நினைவு பற்றிப் பல கொள்கைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாக, அந்தக் கொள்கைகளை விவரித்துவிட்டு, அறிவியல் ஏற்றுக் கொள்ளும் கோட்பாடுகளை மட்டும் திறனாய்வு செய்கிறார். தவிர, ஏடு முழுதும் அவரின் சொந்தக் கருத்தியல் பரவிக் கிடக்கிறது.
சுய நினைவு என்பது இந்த உலகின் இயற்பியல், வேதியியல் விதிகளுக்குள் அடங்காத ஒரு தனித்துவமான சக்தியாக நிலைத்திருக்கிறதா? Vitalism என்கிற இந்தப் பழங்காலக் கொள்கை பண்டைய எகிப்தில், பின்பு கிரேக்க தத்துவங்களில் இருந்திருக்கிறது. இந்திய நாட்டின் சமண மதக் கோட்பாடுகளில் ஒன்றாகவும் இருக்கிறது. இருப்பினும் இன்று வளர்ந்திருக்கும் அறிவியல் இதை ஏற்றுக் கொள்வதில்லை.
Panpsychism கொள்கை : இதன்படி, இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருள்களிடமும் சுயநினைவு இருக்கிறது. நுண்துகள்களான எலெக்ட்ரான்கள் போன்றவை கூட (சிறிய அளவில்) சுயநினைவு கொண்டவை. உயிரற்றவை என்று எதுவுமில்லை. நிரூபிக்க முடியாத இந்தக் கொள்கையையும் அறிவியல் ஒதுக்கி விடுகிறது.
(ஆதாரங்கள், நிரூபணங்கள் மட்டுமே அறிவியலின் அடிப்படை. மற்றும்படி, மனிதர்களின் சொந்த நம்பிக்கைகளில் அறிவியல் தலையிடாது என்பது தெரிந்ததே.)
அடுத்து Mysterianism. சுயநினைவு என்பது நம்மால் ஒருபோதும் உணரமுடியாத, நம் அறிவுக்கு எட்டாத ஒரு புதிர் என்கிறது இந்தக் கொள்கை. ஆகவே அறிவியலுக்குள் இது வராது.
சில கொள்கைகள் மூளையின் செயல்பாடுகளையும் அதன் மூலம் ஏற்படும் நடத்தைகளையும் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கின்றன. பார்வைகள், சிந்தனைகள், உணர்ச்சிகள் எல்லாம் ஒன்று திரண்டு மூளையின் cerebral cortex பகுதியை அடைந்ததும் சுயநினைவாய் மாறுகின்றன.
(மூளையின் cerebral cortex பகுதியில் தான் சுய நினைவு மற்றும் சிந்தனைகள், நினைவுகள் ஏற்படுகின்றன என்று தெரிகிறது.)
கேள்வி என்னவென்றால், cerebral cortex போகும் வரை என்ன நடக்கிறது? பதில் சொல்ல முடியவில்லையே என்பதால் இன்னும் பல கொள்கைகளை நிராகரிக்கிறார் பேராசிரியர். (எடுத்துக்காட்டாக சில : Global Workplace Theory, Higher Order Theory ….)
அடுத்து Integrated Information Theory (IIT). ஒருங்கிணைந்த தொடர்புகளால் ஏற்படும் விளைவே சுய நினைவு என்று வாதிடுகிறது இந்தக் கொள்கை. பல அறிவியலாளர்கள் மத்தியில் இது பிரபலமாக இருந்தாலும் அதை முழுதாக ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார் பேராசிரியர்.
IIT கொள்கை சுய நினைவை அளவீடு செய்ய முனைகிறது. அதற்காக φ (phi) என்று ஒரு கணித அளவுகோலை வகுத்துக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக, φ சைபரை (zero) விட மேலதிகமாக இருந்தால் மட்டுமே எந்த உயிரினமும் சுய நினைவு உள்ளதாகச் சொல்ல முடியும்.
இதை ஏற்றுக் கொண்டால் மனிதர்கள் மட்டுமே அறிவுக் கூர்மையில் சிறந்தவர்கள். மற்ற உயிரினங்கள் எல்லாம் மட்டமானவை என்கிற நிலைக்கு இந்தக் கணித அளவீடு தள்ளிவிடுமே என்று அதைக் கடுமையாக எதிர்க்கிறார் பேராசிரியர்.
சுயநினைவு பற்றி அவர் சொல்லும் வரைவிலக்கணம் : அகநிலையில் தோன்றும் எந்த ஒரு அனுபவமும் சுய நினைவு.
அதாவது, ஒருவருக்கு ஏற்படும் அனுபவம் எப்படிப்பட்டதாக இருக்கட்டுமே. அது இப்படித்தான் இருக்கும். இப்படித்தான் நடந்தது அல்லது நடக்கப் போகிறது என்று ஏற்கெனவே அவர் எப்படிக் கற்பனை செய்திருப்பாரோ அதைத் தான் அவரால் காணமுடியும். உணரமுடியும்.
நம்மைப் போலவே மற்ற உயிரினங்களும் அந்தந்த உயிரினங்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றபடி கிடைத்த அனுபவங்களைக் கொண்டிருக்கின்றன. அனுபவங்கள் கற்பனைகளாக உருவெடுக்கின்றன. அந்தக் கற்பனைகள் மூலமாக உலகைக் காண்கின்றன. உணர்கின்றன. ஆகவே (பேராசிரியரின் வரைவிலக்கணப்படி) அனைத்துயிர்களும் சுய நினைவுள்ளவை.
எனக்கு மொழி தெரியுமே. எனக்கு அறிவு இருக்கிறதே. என்னால் நினைத்தபடி அசைய முடியுமே. இப்படி சில நடத்தைகளை மட்டுமே வைத்துக் கொண்டு எனக்கு சுய நினைவு இருக்கிறது என்று முடிவு கட்ட முடியாது .
சில நோயாளிகளால் பேச முடியாது. உடலை அசைக்க முடியாது. சிலர் கோமா நிலையில் இருப்பார்கள். சிலரால் மீண்டு வர முடியும். சிலரால் முடியாமலே போகலாம். ஆனால் அவர்களுக்கும் சுய நினைவு இருக்கிறது. இவர்களை locked-in-patients என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள்.
Elle பத்திரிகை பெண்களுக்கான மாத இதழ். (ஆண்களும் வாசிக்கலாம். தடையில்லை.). 1995 களில் அதன் ஆசிரியருக்கு மூளையில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் படுக்கையிலேயே முடங்கிவிட நேர்ந்தது. உடலை அசைக்க முடியாது. பேச முடியாது. ஒரு கண்ணை மட்டும் சிமிட்ட முடியும். அந்த நிலையில் அவர் ஒரு புத்தகமே எழுதி வெளியிட்டிருக்கிறார். தலைப்பு : The Diving Bell And The Butterfly.
சில சமயங்களில் சுய நினைவு மந்தமாக அல்லது ரொம்ப சுமாராக வேலை செய்வது போலிருக்கும். கவனித்திருக்கலாம். வயிறு நிறைய பகல் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துவிட்டு வேலையில் அமர்ந்திருக்கிறாளே அந்தப் பெண்! அவள் பகல் கனவு காண்கிறாளா இல்லை?….
ஆனால் கடுமையான, சில அவசரமான கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். டப் டப் என்று பதில் வருகிறதே. எப்படி? பகல் கனவு கண்டாலும் சுய நினைவு மட்டும் கிண் என்று விழித்திருக்கிறது.
இனி பார்வைப் பக்கம் வருகிறார் பேராசிரியர் : என் முன்னால் ஒரு கோப்பை இருக்கிறது. ஏன் கோப்பையின் அடித்தளம் மேலேயும் கோப்பையின் வாய்ப்பக்கம் கீழேயும் தெரியவில்லை? தவிர, கோப்பையின் உட்புறம் வெளியிலும் வெளிப்புறம் உள்ளேயும் இருப்பது போல் என் பார்வை காட்டுவதில்லையே. ஏன்?
என் மூளை கோப்பை இருக்கும் மேசை, அதைச் சுற்றி இருக்கும் சூழல் .. எல்லா அம்சங்களையும் கவனிக்கிறது. கோப்பையோடு தொடர்புபட்ட பழைய நிகழ்வுகளையும் சீர் தூக்கிப் பார்க்கிறது.
கோப்பையின் அடித்தளம் மேலே இருப்பது போல் காட்டினால் அதன் உள்ளே இருக்கும் தேநீரை எப்படிக் காட்டுவது? ஒரு பழைய சம்பவம் : இது போல் ஒரு சமயம் நடந்தபோது கோப்பைக்கு ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் தேநீரோ நிலமெல்லாம் கொட்டிக் கிடந்ததே. இப்போது அப்படி அல்ல. தேநீர் கோப்பையின் உள்ளே இருக்கிறது.
இரண்டாவது : கோப்பையின் உட்புறத்தை வெளியில் தெரிகிற மாதிரி காட்டலாம். ஆனால் கோப்பையின் உள்ளே இருக்கும் தேநீரை எப்படிக் காண்பிப்பது?
மூளை முதலில் ஒவ்வொரு சாத்தியக் கூறுகளையும் யோசிக்கிறது. முன்பு நடந்த நிகழ்வுகளை ஒப்பு நோக்கிப் பார்க்கிறது. உடனடியாகவே அது முடிவுக்கு வருவதில்லை. எதில் நடைமுறை சாத்தியம் அதிகம் என்று பார்த்துப் பார்த்து, தவறான பார்வைகளை ஒவ்வொன்றாக டிக் பண்ணி அழிக்கிறது. கடைசியில் இது தான் சரியாக இருக்கலாம் என்று முடிவெடுக்கிறதா? அதுவும் இல்லை. இது தான் மிகச் சரியான ஊகம் (அல்லது சிறந்த ஊகமாக இருக்க வேண்டும்) என்று எனக்கு கோப்பைப் படம் காட்டுகிறது.
இந்த எடிட்டிங் வேலையை மூளை ஒரு சில மில்லி செக்கண்டுகளுக்குள் செய்து முடித்துவிடுகிறது. அத்தனை வேகம்! அது வரை நான், அதாவது என் முன்னால் கோப்பை இருக்கிறது என்பதை நான் பார்க்கும் அந்தக் கணம் வரை, இருட்டறையில் இருக்கும் குருடன் போல் இருக்கிறேன். மூளை தான் எனக்கு எல்லாக் காட்சிகளையும் காட்டுகிறது.
எதில் நடைமுறை சாத்தியம் அதிகம் என்று பார்த்துப் பார்த்து, தவறான பார்வைகளை ஒவ்வொன்றாக டிக் பண்ணி அழிக்கிறது. பேராசிரியர் இந்த செயல்பாட்டை prediction error minimisation என்கிறார்.
அங்கே சிவப்பாக ஏதோ தெரிகிறதே. மூளைக்கு சிவப்பு, பச்சை … என்று எந்த நிறமும் தெரியாது. ஆனால் ஒப்பு நோக்கத் துவங்குகிறது. இந்த அனுபவத்தை நான் பார்த்ததில்லையே. அந்த அனுபவம் போல இந்த அனுபவம் இல்லையே.
பச்சை, வெள்ளை .. என்று ஏற்கெனவே பல நிற அனுபவங்களை ஏற்கெனவே அது கண்டிருப்பதால், அதில்லை இது, இதுவல்ல அது என்று ஒவ்வொன்றாக டிக் பண்ணி அழிக்கிறது. கடைசியாக, சிவப்பு என்று ஒரு குறிப்பிட்ட அனுபவத்தைக் காண்பிக்கிறது. அதை நாம் சிவப்பு என்றோ red என்றோ அல்லது வேறு எந்தப் பேரிலும் அழைக்கிறோம்.
பார்வை மட்டுமல்ல, காதால் கேட்பது, வாசத்தை நுகர்வது, தொடும் உணர்வுகள் எல்லாமே ஊகங்கள் தான். நம்மால் உண்மை நிலவரத்தை ஒரு போதும் காணமுடியாது. உணர முடியாது. மூளையின் ஊகங்களோடு வாழ்க்கையை நடத்துகிறோம்.
உண்மை அல்லாத இந்த மாயத் தோற்றங்கள் (hallucinations) எதற்காக?
படிநிலை வளர்ச்சி (evolution) நம்மை ஆபத்துகளில் இருந்து தற்காத்துக் கொள்ள, உணவு தேட, வாழ்விடம் அமைத்துக் கொள்ள இந்த மாயையை உருவாக்கி வைத்திருக்கிறது.
இது ஒன்றும் புதிய செய்தி அல்ல. கிமு 4ம் நூற்றாண்டின் கிரேக்க தத்துவ ஆசிரியர் பிளாட்டோ சொன்ன உருவகக் கதை : ஒரு குகையில் சிறைக்கைதிகள் திரும்பிப் பார்க்க முடியாதபடி, பிணைக்கப்பட்டு குகையின் சுவரைப் பார்த்தபடி இருக்கிறார்கள். பின்னால் நெருப்பு எரிகிறது. அதைத் தாண்டியபடி உருவங்கள் கடந்து செல்கின்றன. உருவங்களின் நிழல்கள் குகைச் சுவரில் தெரிகின்றன. அந்த நிழல்கள் தான் உண்மை என்று கைதிகள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கைதிகள் வேறு யாருமல்ல – மனிதர்கள்.
அதோ ஒரு ரயில் வேகமாக வருகிறது. எல்லாம் மாயை என்றால் நான் ஓடிப்போய் அதன் முன்னால் குதித்துப் பார்த்தால் என்ன? ஏன் பயப்பட வேண்டும்? மூளை இங்கே இரண்டு விதமான தனித்திறன்களோடு செயல்படுகிறது. முதல் கட்டத்தில் நீங்கள் ரயிலை நோக்கி ஓட நினைத்தாலும் அதன் இரண்டாம் கட்டத் திறன் மூலம் உங்கள் செய்கையைத் தடுத்து நிறுத்துகிறது.
சுயநினைவு என்பது முன்பு பெற்ற அனுபவங்கள், மதிப்பீடுகள், நோக்கங்கள் , நினைவுகள், மற்றும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் உலகம் பற்றிய ஊகங்கள் அனைத்தும் சேர்ந்த கலவை. கவுதம புத்தர் சொன்னது போல் அது ஒரு சடப் பொருள் அல்ல.
பேராசிரியர் அவரின் கோட்பாட்டுக்கு “Beast Machine Theory” என்று பேர் வைத்திருக்கிறார். நாமெல்லாம் ரத்தமும் சதையும் கொண்ட எந்திரங்கள். உணர்வுகள் கொண்ட வாழும் எந்திரங்கள்.
நம் குறிக்கோள் உயிர் வாழ்வது மட்டுமே. வேறு எதுவுமே இல்லை என்கிறார் அவர்.
சுயநினைவுக்கு அறிவுத்திறன் (intelligence) அவசியமில்லையா? இல்லை. அறிவு என்பது இல்லாமலே நாம் இன்பமோ துன்பமோ துய்க்கமுடியும்.
Artitificial Intelligence, AI : செயற்கை நுண்ணறிவு சுய நினைவு அடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று செய்திகள் வராத நாளே இல்லை.
சுய நினைவு ஏற்படுவதற்கு நம்மிடமும் மற்ற விலங்குகளிடம் இருப்பது போல நியூரான்களோ ஏன் சிலிக்கன் மூலப்பொருள்கள் கூட அவசியமே இல்லை என்று பல அறிவியலாளர்கள் நம்புகிறார்கள்.
முதலாவதாக, Functionalism என்கிற இந்தக் கொள்கையின் படி, ஓர் அமைப்பு தோற்றத்தில் எப்படி செயல்படுகிறது அல்லது அதன் நடப்புகள் எப்படி இருக்கின்றன என்பதை மட்டும் நாம் கவனிக்க வேண்டுமே தவிர, அதன் உள் கட்டமைப்பு பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையே இல்லை என்கிறது.
சரியான விகிதத்தில் ஓர் அமைப்பின் உள் கட்டமைப்பு அமைந்துவிட்டால் அதற்கு சுய நினைவு தானாகவே வந்துவிடும் என்று இந்தக் கொள்கையாளர்கள் நினைக்கிறார்கள். இந்தக் கொள்கையை மறுக்கிறார் பேராசிரியர்.
இரண்டாவதாக, மிகவும் ஆற்றல் கொண்ட அறிவுத்திறன் அதன் முக்கிய பின்புலமாக இருந்தால் மட்டுமே அப்படி சுய நினைவு கொண்ட அமைப்பு உருவாக முடியும் என்பது அவர்களின் அடுத்த கணிப்பு.
இரண்டாவது கணிப்பை இன்னும் தீவிரமாக எதிர்க்கிறார் பேராசிரியர். இது சுய நினைவை அறிவோடு வலிந்து திணிக்கும் செயல்பாடு என்கிறார். இது சரி என்றால், மனிதர்கள் அறிவு மிக்கவர்கள். எனவே அவர்களுக்கு சுய நினைவு உண்டு. மிருகங்களுக்கு அறிவு போதாது. ஆகவே அவைகளுக்கு சுய நினைவு போதாது அல்லது இல்லை என்று சொல்ல வைக்குமே இந்தக் கொள்கை. இது முற்றிலும் தவறு என்கிறார் அவர்.
எந்த ஒரு அமைப்பும் (1) வெளிப்புறத் தூண்டல்களுக்கு எதிர்வினை ஆற்றுகிறதா? (2) அல்லது அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா? (3) அல்லது கிடைக்கும் பரிசு இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கிறதா? (4) அல்லது ஒரு குறிக்கோள் வைத்திருக்கிறதா?
அப்படி என்றால் அந்த அமைப்பு சுய நினைவு கொண்டது என்று முடிவு செய்து கொள்கிறார்கள் சில ஆய்வாளர்கள். இது வினோதமான நினைப்பு. ஒரு கணனியை எப்படி சுய நினைவு கொண்டதாக உருவாக்கம் செய்ய முடியும்? கேள்வி எழுப்புகிறார் பேராசிரியர்.
சில ஆய்வாளர்கள் செயற்கை நுண்ணறிவு ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டிவிட்டால் (Artificial General Intelligence அல்லது Global Availability) தானாகவே அதற்கு சுய நினைவு வந்துவிடும் என்கிறார்கள்.
அந்த சுய நினைவு அழுமா? சிரிக்குமா? கண்ணீர் விடுமா? துன்பத்தில் தவிக்குமா? ஆச்சரியப்படுமா? சோகத்தில் மூழ்குமா? மகிழ்ச்சியாக இருக்குமா? உணர்ச்சி வசப்படுமா?
நம் சுய நினைவும் அதன் சுய நினைவும் ஒன்று தானா? நமக்கு எப்படித் தெரியும்?
அதன் நடப்புகள் நம்மை எப்படி பாதிக்கப் போகின்றன? புதிர்கள் நிறைந்த ஒரு சமூகத்தில் எப்படி நாம் வாழப் போகிறோம்? பேராசிரியரின் கேள்விகள் சரமாரியாக வந்து விழுகின்றன.
“Beast Machine Theory” இந்த உலகின் இயற்கைக்கு உட்பட்டு அதன் மூலம் பெற்றிருக்கும் சுய நினைவு பற்றிப் பேசுகிறது. நம் சுய நினைவு, நம் உடலின் ஒவ்வொரு அங்கங்கள், செல்கள் வரை ஏற்படும் மாற்றங்கள், வாழ்வதற்கான தேவைகள், முயற்சிகள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.
நமக்குத் தெரியாத, நம்மைப் பற்றிப் புரிந்து கொள்ளாத அல்லது புரிந்து கொள்ளவே முடியாத, ஒரு சிலிக்கன் சுயநினைவை நம் சொந்த சுய நினைவோடு ஒப்பிடுவதா? இது ஓர் முரண்நகையாகத் தெரியவில்லை? – பேராசிரியர்.
அசுர வேகத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் முன்னேறிக் கொண்டிருக்க, எது உண்மை, எது பொய் என்று வேறுபடுத்த முடியாத ஒரு நிலையை நோக்கி மனித இனம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
சக மனிதரோ, விலங்குகளோ ஆபத்தில் மாட்டிக் கொண்டால் ஓடிப்போய் உதவு செய்ய நினைக்கிறோம். இது மனித இயல்பு. எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் மிக மிக சாதாரணமாக நடமாடும் ஒரு நிலைமை வரலாம். இந்த நிலையில் ஒரு விபத்து ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். ரோபோக்களும் சுய நினைவு உள்ளவை என்று நாம் எண்ணும்போது யாருக்கு முன்னுரிமை கொடுப்பது? ரோபோக்களா? மனிதர்களா?
மனிதர்களைத் தவிர்த்துவிட்டு ரோபோக்களைத் தூக்கிப் பிடிக்கும் பண்பு மனிதர்களிடம் ஓங்கிவிட்டால் நம் மனித அறம் அல்லது மனித நேயம் எங்கே போய் நிற்கும்?
ரோபோக்களை முதலில் உற்பத்தி செய்வோம். பிறகு நடப்பைப் பார்த்து முடிவு செய்வோம் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள். இது பைத்தியக்காரத்தனம் என்கிறார் பிரபல நரம்பியல் நிபுணர் டெனெட் (Daniel Dennett).
மனித குலத்தின் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் சட்டங்களைக் (preventive ethics) கொண்டு வந்த பிறகு தான் செயற்கை நுண்ணறிவு ரோபோக்களின் உற்பத்திக்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்கிறார் ஜெர்மனியின் பிரபல தத்துவ ஆசிரியர் மெட்சிங்கர் (Thomas Metzinger).
செயற்கை நுண்ணறிவு ஒரு பக்கம் இருக்கட்டும். cerebral organoid என்பது மனித stem செல்களில் இலிருந்து எடுக்கப்பட்டு, உண்மையான நியூரான்களைக் கொண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட மூளை போன்ற அமைப்பு.
மனித மூளையின் ஆரம்ப கட்ட வடிவமைப்பு போலவே இந்த மினி-மூளை இருக்கிறது. இதில் ஏற்படும் மின் தூண்டல்கள், குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையின் மூளையை ஒத்திருக்கிறது. மூளைப் பாதிப்பு நோயாளிகளின் சிகிச்சைக்காக பரிசோதனை சாலைகளில் இந்த மூளையில் ஆய்வுகள் நடக்கின்றன.
இந்த மினி-மூளை சுய நினைவு உள்ளதாக இருக்கும் என்று பேராசிரியர் நம்பவில்லை. இருந்தும், இப்படி மினி-மூளைகள் பண்ணை ஒன்று ஆரம்பித்தால் என்ன என்று இந்த ஆய்வில் பங்கெடுக்கும் ஒரு முக்கிய ஆய்வாளர் யோசனை வெளியிட்டிருக்கிறார்.
என்னது? பேராசிரியருக்கு உடனடியாகவே சந்தேகம் வந்திருக்கிறது. மேலே சொன்ன preventive ethics சட்ட மூலங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்கிறார் அவர்..
செயற்கை நுண்ணறிவின் நன்மை தீமைகளை முன்கூட்டியே பதிவு செய்வதில் பிரபலமானவர் Nick Strom. அவர் சொல்கிறார் : எதிர்காலத்தில் மனிதர்கள் வாழ உடல் அவசியமில்லாமல் போகக்கூடும். கணனியில் உருவேற்றப்பட்ட பிம்பங்களாக, சிரஞ்சீவியாய் வாழக்கூடும்.
ரத்தமும் சதையுமான இந்த உடம்பு விரைவில் அழிந்து விடுமே என்று கவலைப்படாத மனிதர்களே இல்லை. என்றென்றும் இறப்பே இல்லாத வாழ்வு நமக்குக் கிடைக்காதா என்று எல்லா மனிதர்களும் ஏங்குகிறார்கள். அவர்கள் அடி மனதில் இந்த வேட்கை ஆழப் புதைந்திருக்கிறது.
என்றென்றும் இளமையோடு வாழும் ஓர் சூப்பர் கணனியாக நான் மாறிவிட்டால் … இந்த நினைப்பு தான் மனிதர்களை செயற்கை நுண்ணறிவின் மேல் காதல் கொள்ள வைக்கிறதோ?
கணனிகளில் உருவேற்றங்கள் (simulation) மற்றும் மாதிரிகள் (models ) மூலம் சுய நினைவை ஆய்வு செய்வதைப் பேராசிரியர் வரவேற்கிறார். மூளைப் பாதிப்பால் அவதிப்படும் நோயாளிகளுக்கு இது உதவுமே. ஆனால் மினி-மூளைகள் அல்ல.
நம் உடல் மூலமாகவே இந்த உலகை நாம் உணர்கிறோம். இயற்கையோடு அதன் உள்ளிருந்து பெறும் அனுபவங்களே நாம். இயற்கைக்கு எதிரான எதுவும் நாம் அல்ல.
ஏட்டை இப்படி முடிக்கிறார் பேராசிரியர் : நாம் எங்கிருந்து வந்தோம்? இந்த வாழ்வு முடிந்த பிறகு எங்கே போகப் போகிறோம்? இரண்டுமே பெரிய மர்மமாக இருக்கும்போது இடையில் வரும் இந்த வாழ்க்கையிலும் கொஞ்சம் மர்மம் இருந்துவிட்டுப் போகட்டுமே.