எங்கிருந்தோ வந்தாள்

மதமாக இருக்கட்டும். மொழியாக இருக்கட்டும். இலக்கியங்களாக இருக்கட்டும். எதுவாக இருந்தாலும் ஒரு சமுதாயத்தின் பண்பாடுகள் வேறு பண்பாடுகளுக்குள் நுழையும்போது மாற்றங்கள் ஏற்படுவதில் வியப்பில்லை.

கண்ணகி இலங்கையில் எப்போது காலடி எடுத்து வைத்தாள்? ஒவ்வொரு காலகட்டங்களிலும் என்னென்ன உருவெடுத்தாள்? தமிழ்நாட்டின், இலங்கையின் அரசியலில், அந்தந்த மக்கள் வாழ்வில் எப்படிக் கலந்தாள்?

இலங்கையின் மதிப்புமிக்க மானிடவியலாளர், கணநாத் ஒபேசேகர எழுதிய ” The Cult of the Goddess Pattini ” ஏட்டில் இருந்து சில தகவல்கள் இங்கே வருகின்றன. புகழ் பெற்ற அமெரிக்க பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் மானிடவியல் பிரிவின் தலைவராக இருந்தவர் பேராசிரியர். ஒய்வு பெற்ற பிறகும் தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கிறார். (இலங்கையில் அவருக்கு ஆதரவும் உண்டு. எதிர்ப்பும் உண்டு.)

வாசிக்க வாசிக்க அதிர்ச்சி. காரணம் : நாம் கேள்விப்பட்ட சிலப்பதிகாரக் கதையை, அதனோடு தொடர்புபட்ட சேரமன்னன் செங்குட்டுவன், சோழமன்னன் கரிகாலன், இலங்கை மன்னன் கஜபாகு இன்னும் பல மன்னர்கள் வரலாறுகளை அப்படியே கலைத்துப் போட்டிருக்கிறார் பேராசிரியர்.

இலங்கையின் நாட்டுப் பாடல்கள், நாட்டுக் கூத்துகள் (தமிழ், சிங்களம் இரண்டிலும்) ஏட்டில் பெருமளவு விரிகின்றன. பவுத்த காவியங்கள், சிங்கள இலக்கிய ஏடுகளில் இருந்து கூர்மையுடன் உண்மை வரலாற்று நிகழ்வுகளைப் பிரித்தெடுக்க முயன்றிருக்கிறார் பேராசிரியர்.

கண்ணகி கோயில்கள், நாட்டுக் கூத்துகள் நடக்கும் இலங்கையின் பல்வேறு ஊர்களுக்கும் போய்த் தகவல்கள் சேகரித்திருக்கிறார். கேரளம் போயிருக்கிறார். அங்கே கொடுங்கோளூரில் சேரன் செங்குட்டுவன் கட்டியதாக நம்பப்படும் கண்ணகி கோயில் மற்றும் அங்கிருக்கும் மக்களின் நம்பிக்கைகள், தகவல்களைத் திரட்டி இருக்கிறார்.

சிங்களத்தில் பத்தினி தெய்யோ என்பது கண்ணகி தெய்வம். இலங்கையின் பவுத்தத்தில் கண்ணகி மட்டுமல்ல, பல்வேறு தெய்வங்கள் உண்டு. புத்தர் உயர்நிலையில் இருக்க, அனைத்து தெய்வங்களும் அவரின் கீழ் வருகிறார்கள். அந்தக் கோயில்களில் பிக்குகள் இல்லை. பூசாரிகள் (கப்புராளைகள்) இருக்கிறார்கள். பூசைகள் சிங்களத்திலோ, பாளி மொழியிலோ ஏன் சமஸ்கிருத சுலோகங்களில் கூட நடக்கின்றன.

கண்ணகி நாட்டுக்கூத்து இதே கப்புராளைகளால் சிங்கள மொழியில் ஆடப்படுகிறது. கூத்துகள் ஒரு மண்டபத்தில் அல்லது தென்னோலைக் கொட்டகைகளில் அல்லது பொதுவெளியில் கூட ஆடப்படலாம். கிழக்கிலங்கையில் தமிழில் கண்ணகி கூத்துப் பாடல்கள் (சிலப்பதிகாரத்தின் வழக்குரை காதை) அரங்கேறுவதைப் பேராசிரியர் பதிவு செய்திருக்கிறார்.

இருந்தும், இன்று இவ்வகை நாட்டார் ஆடல், பாடல் கலைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போய்விட்டன என்பதையும் கவலையுடன் குறிப்பிட்டிருக்கிறார். காரணம் தெரிந்ததே.

தமிழ்நாட்டில் கண்ணகி முதலில் ஒரு பவுத்த-சமண தெய்வமாகவே தோன்றியிருக்கிறாள். வைதீக (பிராமணீய) மதத்துக்கும், திராவிட மதங்களுக்கும், அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதற்கு ஆதாரங்கள் காட்டுகிறார்.

இலங்கையில் கண்ணகி வழிபாடு தொடரவேண்டும் என்பதற்காக பவுத்த தொன்மங்களில் சுவாரஸ்யமான ஒரு மாம்பழக் கதை இருக்கிறது. புத்தர் பரிநிர்வாணம் அடைந்த அதே சமயத்திலேயே கண்ணகியும் பிறவாத நிலை அடைந்திருக்கிறாள். ஆனால் பெண்கள் பரிநிர்வாணம் அடைய வேண்டுமானால் மீண்டும் ஒரு ஆணாகப் பிறந்து தான் அதற்கு முயற்சி செய்யவேண்டும் என்னும் நியதி பவுத்தத்தில் இருப்பதால் தொடர்ந்து தியானத்தில் மூழ்கி இருக்கிறாள்.

இந்த சமயம் பார்த்து சக்கரன் கடவுள் (இலங்கை பவுத்தத்தில் இவர் முக்கியமான தெய்வம்) அவள் முன் தோன்றி, “பாண்டிய மன்னன் மோசமானவன். சிவன் கடவுளின் மூன்றாவது கண் போல் அவனுக்கும் கிடைத்துவிட்டால் பூமியையே ஆளலாமே என்று கணக்குப் போடுகிறான். அவனை மட்டம் தட்ட, நீ மீண்டும் பூமியில் போய்ப் பிறக்கவேண்டும்” என்கிறார்.

கண்ணகி ஒத்துக் கொள்கிறாள். அவளை ஒரு தங்க மாம்பழம் போல் உருமாற்றிப் பாண்டியன் வீட்டுத் தோட்டத்தில் தொங்கவிடுகிறார் சக்கரன். பழம் ஜொலிக்கிறது. ஆனால் யாராலும் பறிக்க முடியவில்லை. சக்கரன் யாருக்கும் தெரியாதபடி, அவரே அம்பு எய்து மாம்பழத்தை அதுவும் பாண்டியனின் நடுக்கண்ணில் விழ வைக்கிறார். அவன் பேயோ பிசாசோ என்று பயந்துபோய் மாம்பழத்தை ஒரு பேழையில் வைத்துக் காவிரி நதியில் தள்ளிவிடுகிறான்.

பேழை மிதந்து சோழநாட்டில் நுழைகிறது. நதியில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு செல்வந்தர்கள் கண்ணில் படவே, அதில் ஒருவர் அதை வீட்டுக்கு எடுத்துப் போகிறார். என்ன அதிசயம் ! சரியாக ஏழு நாட்களின் பின் மாம்பழம் ஓர் அழகிய பெண் குழந்தையாக மாறிவிட்டது. பத்தினி தெய்யோ (கண்ணகி) பிறந்துவிட்டாள். பிறகு அவளின் சிறு வயதிலேயே அவளுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். மணமகன் பேர் : பாலங்கா. (தமிழில் : கோவலன்)

இதன் பிறகு சிலப்பதிகாரத்தில் வருவது போலவே கிட்டத்தட்ட எல்லா நிகழ்வுகளும் நடக்கின்றன – சில மாற்றங்கள் தவிர. சிலப்பதிகாரத்தின் படி, கண்ணகியைத் திருமணம் செய்த பிறகு தான் மாதவியைக் கண்டு மையல் கொள்கிறான் கோவலன்.

இலங்கைக் கதையின் படி, கண்ணகியைக் கல்யாணம் முடித்தாலும் கோவலனுக்கும் கண்ணகிக்கும் இடையிலே திருமண உறவு ஏதும் இருக்கவில்லை. திருமணத்துக்கு முன்பிருந்தே அவன் அந்த நடன மங்கை மாதவியோடு தொடர்பில் இருந்திருக்கிறான்.

கோவலன் கொலையின் பின்னர் பாண்டியனிடம் நீதி கேட்டுப் புறப்படுகிறாள் கண்ணகி. பிறகு மதுரையை எரிக்கத் தயாராகிறாள். தீயிலிருந்து யார் தப்பப் போகிறார்கள்? புத்த பிக்குகள், புத்த புனித சின்னங்கள், நல்லவர்கள், வணிகர்கள், இடையர்கள், விவசாயிகள், துணி வெளுப்பவர்கள் இவர்களைத் தவிர, மற்ற எல்லாரையும் எரித்துத் தள்ளு என்று ஆவேசத்துடன் தீக் கடவுளுக்கு ஆணை இடுகிறாள்.

சிலப்பதிகாரத்தின் படி, பார்ப்பனர்களும் கற்புக்கரசிகளும் இந்தப் பட்டியலில் இருந்திருக்கிறார்களே. இலங்கைக் கதையில் ஏன் இல்லை? பார்ப்பனர்கள் மேலிருந்த அவநம்பிக்கை முதலாவது காரணம். அடுத்து, சிங்களப் பண்பாட்டில் கற்பு என்று யாரும் ஒத்தைக் காலில் நிற்பதில்லை. யதார்த்தமான மக்கள் என்கிறார் பேராசிரியர்.

அவள் கற்புக்கரசி கண்ணகி அல்ல. தனக்கு நேர்ந்த அநியாயத்துக்காக, வெறுமனே கதறி அழுதுவிட்டுப் போகாமல் தனி ஆளாகத் தீரத்துடன் நீதி கேட்டுப் போராடிய கண்ணகி.

போராட்டம் முடிந்துவிடுகிறது. கோவலன் மேலுலகத்தில் இருந்து வந்து கண்ணகியைக் கூட்டிப் போகிறான். சிலப்பதிகாரம் முடிவுரை எழுதி ஏட்டை மூடிவிடுகிறது. ஆனால் இலங்கை விடுவதாக இல்லை.

சேரமானுக்கு (சேர மன்னன்) தீராத தலைவலி வந்து ரொம்பவும் அவதிப்படுகிறான். கண்ணகி அவன் கனவில் வருகிறாள். இந்த இடத்தில் பார்ப்பனர்கள் மன்னன் கனவுக்குப் பலன் சொல்கிறார்கள். மன்னா, நீ இலங்கைக்குப் போய் கண்ணகிக்கு மண்டபம் கட்டி, யாகங்கள், சடங்குகள் செய்தால் உன் நோய் குணமாகும் என்கிறார்கள். மண்டபத்தை மேலுலக சிற்பி விஸ்வகர்மாவே பூமிக்கு வந்து கட்டிக் கொடுத்திருக்கிறார். இலங்கையில் கண்ணகி கூத்து, பாடல்கள் ஆரம்பித்த கதை இது .

தங்க மாம்பழம், மூன்றாவது கண் கதைகள் ஒவ்வொரு ஊர் பத்தினி தெய்யோ பாடல்களில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மாற்றங்களுடன் வருகின்றன. இந்தக் கதைகளில் தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், பவுத்த, சமண மதங்கள் ஓரங்கட்டப்பட்டு வைதீகத்தின் செல்வாக்கு உயர்ந்து வந்ததைக் கவனிக்கலாம். கோவலன் கொலைக்குக் காரணமான பாண்டியன் தூற்றப்படுகிறான். சோழன் கரிகாலன், சேர மன்னன், இலங்கைக் கஜபாகு மன்னன் மூவரும் புகழப்படுகிறார்கள்.

கிபி 14ம் நூற்றாண்டு வரை நாத, விபீஷண, விஷ்ணு, சமன், கதிர்காம தெய்வங்கள் சிங்கள மக்களின் மிகவும் பிரபலமான தெய்வங்கள். தவிர, கூடவே இன்னும் கணிசமான சிறுதெய்வங்கள் இருந்திருக்கின்றன. அதிலும் தொலொகா தேவியோ என்கிற பனிரெண்டு சிறுதெய்வங்கள் பற்றி ஏடு விவரிக்கிறது. பேய்களை விரட்ட, பில்லி சூனியம் வைக்க, தீராத நோய்களைக் குணமாக்க… என்று இந்தத் தெய்வங்களிடம் பலவகை வேண்டுதல்கள் செய்திருக்கிறார்கள்.

அதில் கிரி அம்மா தெய்வம் மிகவும் கனிவு பொருந்திய தெய்வம். என்ன நடந்ததோ, இந்தத் தெய்வம் மெல்ல மெல்ல அருகி மறைய, அந்த இடத்துக்கு 15ம் நூற்றாண்டளவில் பத்தினி தெய்யோ வந்து சேர்கிறாள். 18ம் நூற்றாண்டில் இலங்கையின் கண்டி அரசில் நாத, விஷ்ணு, கதிர்காம தெய்வங்களோடு நாலாவது முக்கிய தெய்வமாக சேர்ந்து கொள்கிறாள்.

மதுரையை எரித்தபின் கண்ணகியின் கோபம் தணிகிறது. கண்களில் கருணை பொங்குகிறது. பாண்டியன் மனைவி கோப்பெருந்தேவி எந்தத் தவறும் செய்யவில்லை என்று உணர்கிறாள். (சிலப்பதிகாரத்தில் கணவன் இறந்தபோது அவளும் உயிர் துறந்தாள் என்று வருகிறது.) இங்கே அப்படி அல்ல. இலங்கை பவுத்தம் அவளுக்கு மறுவாழ்வு கொடுக்கிறது. இனிமேல் நீயே அரசை ஏற்று நடத்து என்கிறாள் கண்ணகி.

கால ஓட்டத்தில், கேரளத்தில் கண்ணகி, கோபம் கொண்ட காளி – பகவதி தெய்வமாக மாறிப்போக, இலங்கையின் நாட்டுப் பாடல்களில் பவுத்தம் காளியை மிக அமைதியான சுபாவம் கொண்டவளாக மாற்றி விடுகிறது. அடுத்து, ஆச்சரியப்படும் விதத்தில் பத்தினி தெய்யோவுக்குப் பணிவிடை செய்பவளாகவும் காட்சி தருகிறாள் காளி.

சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்தபோது இலங்கை மன்னன் கஜபாகுவும் அங்கிருந்ததாக சிலப்பதிகாரம் பாடுகிறது. மணிமேகலை காவியமும் அதை உறுதி செய்கிறது. ஆனால் செங்குட்டுவனின் காலகட்டத்தை மதிப்பிட உதவிய இலங்கையின் தீபவம்சம் (கிபி 4ம் நூற்றாண்டு) மற்றும் மகாவம்சம் (கிபி 5ம் நூற்றாண்டு) இரண்டிலும் கஜபாகு மன்னன் தென்னிந்தியா போனது பற்றி எந்தக் குறிப்பும் இல்லையே ஏன்? கொக்கி போடுகிறார் பேராசிரியர்.

தனிமனித வழிபாட்டுக்கு பவுத்தம் இடம் கொடுப்பதில்லை. ஆகவே அது மறைக்கப் பட்டிருக்கலாம் என்று சில இந்திய வரலாற்று ஆசிரியர்கள் கருதுவதை பேராசிரியர் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த இரண்டு ஏடுகளும் பவுத்த மதம் சாராத எத்தனையோ நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கின்றனவே. இந்த வாதம் தவறு என்கிறார்.

இன்னும், பிற்காலங்களில் வந்த இலங்கையின் பவுத்த வரலாற்று ஏடுகள் பூஜாவலிய (13ம் நூற்றாண்டு), ராஜரத்னாகார (16ம் நூற்றாண்டு ) ஏடுகளும் பத்தினி தெய்யோ பற்றி ஒரு வரி கூட எழுதவில்லையே. ஏன்? இவை இலங்கை மன்னர்கள் பற்றி மட்டுமல்ல, பண்பாடு பற்றியும் தாராளமாகப் பேசுகின்றன.

17 அல்லது 18ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டதாக நம்பப்படும் ராஜாவலிய ஏட்டில் தான் இலங்கையில் பத்தினி தெய்யோ தோன்றுகிறாள்.

எப்படிப் பார்த்தாலும், 16 ம் நூற்றாண்டு வரை இலங்கையில் கண்ணகி வழிபாடு இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்கிறார் பேராசிரியர்.

12ம் நூற்றாண்டின் இலங்கை மன்னன் இரண்டாம் கஜபாகு சோழநாடு போய் அங்கு சிறைப்பட்டிருந்த 12000 சிங்களப் போர்வீரர்களை மீட்டது மட்டுமல்ல, பழிக்குப் பழியாக 12000 தமிழ்நாட்டு இளைஞர்களையும் பணயக்கைதிகளாக இலங்கை கொண்டுவந்ததாக (மிக மிகத் தாமதமாக) 16 -17ம் நூற்றாண்டுகளில் வந்த ராஜாவலிய, ராஜரத்னாகார ஏடுகள் குறிப்பிடுகின்றன.

இது நடந்திருந்தால் தமிழ்நாட்டில் எங்கோ, எப்படியோ, ஏதோ ஓர் இடத்தில் இந்தச் செய்தி பதிவாகி இருந்திருக்கும். மேலும், 12ம் நூற்றாண்டின் இந்த மாபெரும் சிங்கள மன்னனின் வெற்றியை 13ம் நூற்றாண்டின் பூஜாவலிய நிச்சயம் புகழ்ந்து தள்ளியிருக்கும். ஏன் தவறிவிட்டது?

(இந்த மன்னன் கஜபாகு போல் உலகமே கண்டதில்லை. இந்தியா போக, கடலில் தன் தண்டாயுதத்தால் அவன் அடித்தபோது கடலே பயந்துபோய் இரண்டாகப் பிரிந்து போக வழிவிட்டிருக்கிறது. அத்தனை 12000 தமிழ்நாட்டு ஆட்களையும் தன்னந் தனியாகவே இழுத்து வந்திருக்கிறான்.)

இப்படிக் காவியங்களில், நாட்டுப் பாடல்களில் பொதிந்திருக்கும் புனைகதைகளுக்குக் காரணம் இருக்க வேண்டுமே?

பல்வேறு காலகட்டங்களில் தென்னிந்தியாவின் படையெடுப்புகளால் இலங்கை துவண்டு போயிருந்தது. தலைநகர் அனுராதபுரத்தைக் கைவிட்டுப் பாதுகாப்பான தெற்குப் பகுதிக்கு இலங்கை மன்னர்கள் அடிக்கடி ஓட வேண்டிய சூழ்நிலை. ஆக்கிரமிப்பாளர்கள் பிராமணீயம் சார்ந்தவர்கள். சிங்கள பவுத்த பண்பாட்டுக்கு ஆபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன.

வாழ்க்கையில் தாங்கமுடியாத இன்னல்கள், அச்சுறுத்தல்கள் ஏற்படும்போது மக்களுக்கு ஒரு வடிகால் தேவைப்பட்டிருக்கிறது. ஒரு கனவுலகைப் படைத்து அதில் அவர்கள் ஆறுதல் பெற்றிருக்கலாம். சாதாரண மன்னர்களை வீராதி வீரர்களாக, பண்பாட்டைக் கட்டிக் காத்த உன்னத மனிதர்களாகக் கற்பனைகள் செய்திருக்கலாம். நடந்தாலென்ன, நடக்காவிட்டாலென்ன கதைகளை மீண்டும் மீண்டும் கேட்டு மகிழ்ந்திருக்கலாம். காலம் செல்லச்செல்ல, அதையே உண்மை என்று நினைக்கும் மனப்போக்கு வளர்ந்திருக்கலாம் என்கிறார் பேராசிரியர்.

புனைகதைகளுக்குத் தமிழகத்திலும் பஞ்சமில்லை. காலங்காலமாக மாறுவதும் புதுக் கற்பனைகள் உருவாவதும் இயற்கையே. கண்ணகிக்கு விழா எடுத்த சேரன் செங்குட்டுவனை ஒரு சாதா மன்னன் போல் சித்தரிப்பதில் இளங்கோ அடிகளுக்கு உடன்பாடு இருந்திருக்காது.

அவனை வடநாடுகளை வென்ற வீரனாக்குகிறார். கனக விஜய மன்னர்கள் தலைகளில் கல்லை ஏற்றுகிறார். இலங்கைக் கஜபாகுவை இழுத்து வந்து கண்ணகி விழாவில் பத்தோடு பதினொன்றாவதாக உட்கார வைக்கிறார்.

சேரன் செங்குட்டுவன் மட்டுமல்ல, சோழன் கரிகாலன் கதைகளிலும் ஏகப்பட்ட புனைவுகள் இருக்கின்றன என்கிறார் பேராசிரியர். ஆதாரங்கள் இல்லை என்பதற்கு அவர் ஆதாரங்கள் தருகிறார்.

சிலப்பதிகாரம் உண்மையில் ஓரு சிறந்த இலக்கியம். மறுக்க முடியாது. இளங்கோ அடிகள் சமணர். அவர் பல சமண, பவுத்த ஏடுகளின் தொகுப்பாசிரியராய் இருந்திருக்க வேண்டும். முழு சிலப்பதிகாரத்தையும் அவர் தான் எழுதினாரா அல்லது தொகுத்தாரா?

மணிமேகலை காவியம் எழுதிய சீத்தலை சாத்தனார் ஒரு பவுத்தர். கண்ணகி கோவலனோடு மேலுலகம் போனதை என் கண்ணால் கண்டேன் என்கிறார். சீத்தலை சாத்தனார் அவர் காலத்தில் யாராவது கண்ணகி நாடகம் போட்டதைப் பார்த்திருப்பாரோ? அதில் கோவலன்- கண்ணகி மேலுலகம் போவது போலக் காட்டி இருக்கலாம். அதை உண்மை என்று நம்பினாரோ அல்லது மனப் பிரமையோ?

சிலப்பதிகாரத்தைத் தொகுத்துக் கொண்டிருந்த இளங்கோ அடிகள் சீத்தலை சாத்தனார் சொன்ன இந்தக் கதையையும் சேர்த்திருக்கலாம் அல்லது சாத்தனார் என்பது பிற்காலத்தில் புகுத்தப்பட்ட ஒரு கற்பனைப் பாத்திரமாகக் கூட இருக்கலாம். சந்தேகப்படுகிறார் பேராசிரியர்.

கண்ணகி கதை செங்குட்டுவன் காலத்துக்கு முன்னரே பவுத்த – சமணக் கதையாக, வழிபாடாக இருந்திருக்கிறது. அந்த வழிபாட்டை அரசன் என்கிற கோதாவில் அவன் அதற்கு மாட்சிமை அளித்திருக்கிறான்.

இளங்கோ அடிகள் வாழ்ந்த காலம் கிபி 5ம் நூற்றாண்டுக்கும் 9ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம். அவர் கிபி 2 ம் நூற்றாண்டின் சேரன் செங்குட்டுவனைப் பார்த்திருக்கவே முடியாது. கேள்விப்பட்டிருக்கிறார். அவ்வளவு தான்.

இலங்கையின் வடக்கில் வைதீக நெறிகளின் செல்வாக்கு கூடிப்போனதில் கண்ணகி வேறு பெயர்களில் பிராமணீய தெய்வமாக மாறிப்போனாள். அங்கு சாதிக் கட்டமைப்பு இறுக்கமானது.

கிழக்கில் வைதீகத்தின் தாக்கம் குறைவு. காலங்காலமாக, கிழக்கு அதிகமாக, சிங்கள மன்னர்களின் கீழ் இருந்திருக்கிறது. வடக்கை விட, கிழக்கில் வாழ்ந்த தமிழர்கள் சிங்கள மக்களுடன் திருமணம், வணிகம், தொழில் வாய்ப்புகள் என்று நெருங்கிய உறவு பேணி வந்திருக்கிறார்கள். கண்ணகி நாட்டுப் பாடல்களில் இரு சமூகங்களுக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமைகளை எடுத்துக் காட்டுகிறார்.

12000 பேர் கதையை ராஜரத்னாகார ஏடு இன்னும் சுவையோடு கொண்டு செல்கிறது. இவர்களுக்கு என்ன நடந்தது? கஜபாகு 12000 சிங்கள வீரர்களையும் இலங்கையின் தம்பதெனிய பகுதிகளில் குடியேற வைத்தானாம். 12000 தமிழ்நாட்டு வீரர்களையும் இலங்கையின் மேற்குப் பகுதிகளில் வாழ வைத்தானாம்.

மேற்குப் பகுதியின் நீர்கொழும்பு முதல் சிலாபம் வரை வாழும் கரையோர மக்கள் இன்றும் தமிழும் சிங்களமும் பேசுவதைக் காணலாம். இதில் நீர்கொழும்பின் தெற்குப் பகுதி மக்கள் முழுவதுமாக சிங்களவர்களாக மாறிவிட்டார்கள். இவர்கள் கராவ சாதியை சேர்ந்தவர்கள் என்றும் மகாபாரதத்தில் வரும் கவுரவர்கள் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்றும் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.

உண்மையில் இந்தக் கரையோர மக்கள் யார்? தென்னிந்தியாவில் 7ம், 8ம் நூற்றாண்டுகளின் பின் பவுத்த, சமண மதங்கள் (ஆசீவகம் உட்பட ) பெரும் பின்னடைவை சந்திக்க ஆரம்பித்தன. இந்த மதத்தினருக்கு நிந்தனைகள், உயிர் ஆபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. எனவே பாதுகாப்பான பவுத்த இலங்கைக்கு சிறு சிறு குழுக்களாக இடம் பெயர்ந்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இலங்கை மன்னர்கள் ஆதரவு கிடைத்திருக்கிறது.

இருந்தாலும், அகதிகளை எப்போதும் இளக்காரமாகப் பார்ப்பது இனங்களின் இயல்பு. அவர்களுக்கு ஒரு சிறப்பு அடையாளம் கொடுத்துவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடுமே. ராஜரத்னாகார ஏட்டின் புனைகதை அதைத் தான் செய்திருக்கிறது.

இந்த அகதிகள் கண்ணகியை இலங்கைக்கு அறிமுகம் செய்திருக்கலாம். தவிர, கேரளத்தின் பெரும் வணிகர்கள் 1341- 1415 ஆண்டுகளின் இடைப்பட்ட காலங்களில் இலங்கையின் அரசியலில் பெரும் தாக்கம் செலுத்தி இருக்கிறார்கள். இலங்கையின் கோட்டே அரசுக்கு அதன் பொருளாதாரத்துக்கு, கடல் வணிகத்துக்கு இவர்கள் துணையாய் இருந்திருக்கிறார்கள். பெரும்பாலும் சமணர்களாக இருந்த இவர்களையும் இந்தக் கணிப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் பேராசிரியர்.

தென்னிந்தியாவில் பவுத்த – சமணக் கண்ணகி வைதீக நெறியில் பிணைக்கப்பட்டு சக்தி, காளி, துர்கா, பகவதி என்று மாறிப்போக, இலங்கையில் அசல் பத்தினி தெய்வமாக இருக்கிறாள். இலங்கையின் நவகமுவ, கண்டி நகரங்களில் அவள் கோயில்கள் இருக்கின்றன.

முத்தாய்ப்பாக, கண்ணகி கதையின் வேர்கள் எங்கிருக்கின்றன என்றால் பேராசிரியர் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு ஆசியாவை நோக்கி விரல் நீட்டுகிறார். மனித நாகரிகங்கள் தொடங்கிய காலத்தில் பெண் தெய்வங்கள் அங்கே தான் பெருமளவில் தோன்றின. அந்தத் தெய்வங்களின் ஒரு நீட்சி தான் கண்ணகி என்கிறார் அவர்.

மானிடவியல் ஆய்வாளர்கள், மாணவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய அறிவுக் களஞ்சியம் பேராசிரியரின் ஏடு. இந்தக் கட்டுரை ஓர் சிறு அறிமுகம் மட்டுமே.

607 பக்கங்களில் எந்த சமரசத்துக்கும் இடம் தராமல் பல நூற்றுக்கணக்கான தடயங்களோடு முடிகிறது ஏடு. மாற்றுக் கருத்துகள் இருக்கின்றனவோ இல்லையோ, இலங்கை – இந்திய மானுடவியலில் தவிர்க்கவே முடியாதவர் பேராசிரியர் கணநாத் ஒபேசேகர.