கருந்துளைக்குள் (black hole) நுழைந்துவிட்டால் எந்தத் தகவலும் அழிந்துவிடும். குவாண்டம் உலகில் எதையும் முன்கூட்டியே சொல்லமுடியாது. இயற்பியலில் இவை பெரும் கேள்விகள், விவாதங்களாக இருக்கலாம். ஆனால் சாதாரண மக்கள் அது பற்றி எல்லாம் அலட்டிக் கொள்வதில்லை.
மனிதர்களை சொல்லிக் குற்றமில்லை. காரணம் : அறிவியல் வல்லுநர்கள் மக்களுக்குப் புரியாத மொழியில் அவர்களுக்குள்ளே பேசிக் கொள்கிறார்கள். அப்படி நடந்து கொள்வதில் ஒரு பெருமை. அவர்களின் செயல்பாடுகள் மதிப்பு மிக்கவை என்று ஒரு அகம்பாவம்.
ஆகவே சாதாரண மக்கள் அறிவியல் என்றாலே அதைத் தவிர்த்துக் கொள்ள நினைக்கிறார்கள். இந்த மனோநிலையைப் போலி அறிவியல்வாதிகள் அவர்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்கிறார் Existential Physics ஏட்டின் ஆசிரியர் Sabine Hossenfelder.
இன்றைய இயற்பியல் கொள்கைகளை எளிய முறையில் விளக்க முயல்கிறார் அவர். (ஓர் சின்னக் குறிப்பு : இயற்பியலில் இவரின் கருத்துகள் சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் இவரின் யூடியூப் சேனலை 30 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து பார்க்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.)
ஏட்டின் ஒவ்வொரு தொடரும் ஒரு கேள்வியோடு துவங்கி அதற்கான இயற்பியல் பதில் என்று நகர்கிறது.
ஒரு இளைஞன் ஏட்டின் ஆசிரியரிடம் கேட்ட கேள்வி : என் பாட்டி இப்போதும் உயிரோடு இருக்கிறாரா?
இதற்குப் பதில் இயற்பியல் மேதை ஐன்ஸ்டைனின் சமன்பாடுகளில் தெளிவாகவே இருக்கிறது : காலம் என்பது ஒரு மாயை. அது அறுதியானது அல்ல. அது சார்புத் தன்மை கொண்டது. Relative. எடுத்துக்காட்டாக, இதோ, இந்தக் கணத்தில் நான் பார்க்கும் சூரியன் சுமார் 7 நிமிடங்களுக்கு முன்பிருந்த சூரியன். இப்போது நான் பார்க்கும் North Star நட்சத்திரம் 434 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நட்சத்திரம்.
ஐன்ஸ்டைனின் சிறப்பு சார்புக் கொள்கைப்படி (Special Relativity Theory), இப்போது அல்லது இந்தக் கணம் என்று எதுவுமில்லை. இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்துப் பார்ப்பதற்கு இடமில்லை.
குவாண்டம் உலகில் (அணுக்கள் மட்டத்தில்) வேண்டுமானால் காலத்தின் முன்னும் போய் ரசிக்கலாம். எதிர்காலத்திலும் போய் நின்று வேடிக்கை பார்க்கலாம்.
ஆனால் குவாண்டம் விளைவுகள் அனைத்தும் சின்னஞ்சிறு அளவில் மட்டுமே ஏற்படுகின்றன. அதுவும் காற்றில் மிதக்கும் பல்வேறு மூலக்கூறுகளோடு (molecules) தாக்கங்கள் ஏற்பட்டால் அல்லது ஒளியோடு மோதினால் பட்டென்று உடைந்து சிதறிவிடுகின்றன.
இருந்தும் இயற்பியல் நோக்கில் நடந்து முடிந்த நிகழ்வுகள், நம் முன்னோர்கள் பற்றிய எல்லாத் தகவல்களும் அப்படியே அந்தந்த காலகட்டங்களோடு அழியாமல் அப்படியே இருக்கின்றன.
உங்கள் பாட்டி சாகாவரம் பெற்றவர். ஏன் நாம் எல்லாருமே சாகாவரம் பெற்றவர்கள் தான்.
அதே சமயம், குவாண்டம் செயல்பாடுகள் மூலம் உங்கள் வாழ்க்கையை வளம் பெறச் செய்யலாம். உங்கள் நோய்களைக் குணமாக்கலாம் என்று சிலர் கிளம்பியிருக்கிறார்கள். இது ஏமாற்று வேலை.
நாம் அணுக்களால் ஆனவர்கள். ஆனால் அணுக்களின் உருவம், செயல்பாடுகளோடு நம் உடலை ஒப்பிடுவது மகா கேவலம். அது மைக்ரோ உலகம் (microworld). நாம் மேக்ரோ உலகத்தில் வாழ்பவர்கள் (macroworld). அந்த உலக நியதிகள் வேறு. நம் உலக நியதிகள் வேறு. அதையும் இதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது.
பிரபஞ்சத்துக்கு அடிப்படையாக நான்கு பொருள்கள் இருக்கின்றன. புவி ஈர்ப்பு, மின்காந்த அலைகள், வலிமை மிகுந்த அணுக்கரு விசைகள், வலிமை குன்றிய அணுக்கரு விசைகள் (strong and weak nuclear forces) என்கிற இந்த நான்கும் பிரபஞ்சத்தை உருவாக்கி இயக்குகின்றன என்று இயற்பியல் சொல்கிறது.
இந்த நான்கோடு கணிதமும் இன்னொரு அடிப்படையான அம்சமா? இது அடுத்த கேள்வி. சில இயற்பியலாளர்கள் அப்படி நினைக்கிறார்கள். இது தவறு என்கிறார் ஏட்டின் ஆசிரியர். கணிதம் என்பது இயற்கையை, அதன் நடப்புகளை விளக்க உதவும் ஒரு கருவி மட்டுமே.
என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். நான் ஒரு இயற்பியலாளர். எனக்கும் கணிதத்தில் மிகவும் ஈர்ப்பு உண்டு. இருந்தும் கணிதமும் அடிப்படை என்று நீட்டி முழக்குவது அவசியமே இல்லாதது. இந்த இயற்பியலாளர்கள் கணிதத்தையும் இயற்பியலையும் ஒன்றாக நினைத்து மயங்கிப் போயிருக்கிறார்கள் என்கிறார் அவர்.
தவிர, இயற்பியலில் ஏற்கெனவே பல அனுமானங்கள் மூலம் தான் சில முடிவுகளுக்கு வந்திருக்கிறோம். இந்த நிலையில் கணிதத்தையும் இன்னொரு அனுமானமாக சேர்த்துக்கொள்ள நினைப்பது அறிவியலுக்கே இழுக்கு. ஏன் கடவுளைக்கூட ஒரு அனுமானமாக சேர்த்துக் கொள்ளலாமே. ஏன் தயக்கம்? காட்டமாக விமர்சிக்கிறார் அவர்.
இன்னொரு தொடரில் கணிதத்துக்கும் கடவுளுக்கும் முடிச்சுப் போட்டு மிகவும் பிரபலமான ஒரு இயற்பியலாளருடன் சுவாரஸ்யமான ஓர் நேர்காணல் நடக்கிறது. இந்த இயற்பியலாளர் இன்று எல்லாரும் பேசும் காலநிலை மாற்றம் தொடர்பாக செய்த ஆய்வுக்காக (நோபல் பரிசுக்கு இணையான) பரிசு பெற்றவர்.
அந்த இயற்பியலாளர் சொல்கிறார் : சமய நம்பிக்கைகளை ஏன் நாம் நிராகரிக்க வேண்டும்? இயற்பியலுக்கும் சமயத்துக்கும் தொடர்புகள் உண்டு. பைபிள் சொன்னது போல் ஆண்டவர் 6000 ஆண்டுகளுக்கு முன்பு உலகைப் படைத்திருக்கலாம். அப்போது அவருக்குக் கணிதம் உதவி இருக்கிறது. என்னநடந்ததோ, திடீரென்று ஆண்டவருக்குப் போரடித்திருக்கிறது. எல்லாவற்றையும் கலைத்துப் போட்டவர் இனிமேல் தான் சரியான படைப்பைத் துவக்கப் போகிறேன் என்று நினைத்திருக்கலாம். அறிவியலுக்கு சவால் விடும் நிலையை ஏற்படுத்தி இருக்கலாம்.
இந்தக் கதையை நம்புவோர் நம்பலாம். அது அவரவர் விருப்பம். அவரின் அறிவியல் ரீதியான சில வானவியல் தகவல்கள் இன்றைய இயற்பியல் கொள்கைகளுடன் ஒத்துப் போகிறது. மறுக்கமுடியாது. ஆனாலும் இயற்பியலாளர்களுக்கென்று ஒரு எல்லை இருக்கிறது. அதைத் தாண்டுவது ஆபத்து. சிலர் அதையும் மீறினால் என்ன செய்ய முடியும்? – ஆசிரியர்.
அடுத்து, பிரபஞ்சம் எப்படித் தோன்றியிருக்கும்? எப்படி அழியப் போகிறது?
பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி Big Bang Theory, Inflation Theory, Latest Fifth Force (2006), Conformal Cyclic Cosmology, Enpyrotic Universe என்று பல்வேறு கோட்பாடுகள் இயற்பியலில் இருக்கின்றன. ஆசிரியர் ஒவ்வொன்றையும் சுருக்கமாக சில வரிகளில் சொல்கிறார். அதே சமயம், இவை அனைத்துமே நிரூபணம் செய்யமுடியாத கொள்கைகள் என்கிறார்.
பிரபஞ்சம் தோன்றி ஓர் ஒழுங்கான வரிசையில், இயற்பியல் விதிகளுக்கு உட்பட்டு, கடிகார முட்கள் போல் பிறழாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். இந்த இயற்பியல் விதிகள் திடீரென்று மாறினால் என்ன நடக்கும்? இந்தக் கேள்விக்கு இன்று வரை பதில் சொல்ல முடியவில்லை.
இயற்பியலில் Free Energy என்பதுவும் Entropy என்பதுவும் முக்கியமான கருப்பொருள்கள். பிரபஞ்சம் தோன்றியபோது அதன் சக்தி (Free Energy) அதிகமாக இருந்தது. பிரபஞ்சம் தொடர்ந்து விரிந்து கொண்டே இருப்பதால் அது சக்தியை இழந்து கொண்டே இருக்கிறது.
Entropy அதற்கு எதிரானது. பிரபஞ்சம் தோன்றியபோது இது குறைவாக இருந்தது. பிரபஞ்சம் விரிவடைய, விரிவடைய இது கூடிக் கொண்டே போகிறது. இந்த Entropy கூடிக்கொண்டே போவதால் தான் காலம் என்பது பின்னால் ஓடாமல் முன்னால் மட்டுமே ஓடுவதற்குக் காரணம் என்கிறது இயற்பியல்.
Free Energy குறைந்து கொண்டே போவதை நம்மால் கவனிக்க முடியும். ஒரு எடுத்துக் காட்டு : குளிர்சாதனப் பெட்டி. நாள் செல்லச் செல்ல அதன் தெம்பு குறைகிறது. (Entropy கூடுகிறது.)
கண்ணாடி உடைந்துவிட்டால் மீண்டும் ஒட்டிக் கொண்டு பழைய நிலைக்குத் திரும்பாது. அரிசி, உழுந்து போட்டு கிரைண்டரில் தோசைக்கு மாவரைக்கிறோம். தோசை மாவிலிருந்து பழையபடி அரிசியையும் உழுந்தையும் திருப்பி எடுக்க முடியாது. காரணம் காலம் பின்னோக்கி ஓடுவதில்லை. (Entropy கூடுகிறது.)
சூரியனும் அதன் சக்தியை இழந்து கொண்டே இருக்கிறது. Entropy. அதற்கும் முடிவு ஒரு நாள் நிச்சயம் வரும். ஆனால் நாமிருக்க மாட்டோம். ஆகவே கவலைப்பட ஒன்றுமில்லை.
(நம்மால் ஏன் காலம் பூரா இளமையாக இருக்க முடியவில்லை? இதற்காக உங்கள் உடம்பை நொந்து கொள்ளாதீர்கள். Entropy மேல் பழியைப் போடுங்கள் என்கிறார் ஆசிரியர் இன்னொரு கேள்வியில்.)
மேலே குறிப்பிட்ட Conformal Cyclic Cosmology கோட்பாட்டின்படி, குறைந்த Entropy உடன் ஒவ்வொரு யுகமும் (ஆயிரம் மில்லியன் ஆண்டுகள்) துவங்குகிறது. Entropy அதன் உச்சத்தை எட்டியதும் எல்லாத் தகவல்களும் அழிந்து மீண்டும் ஒரு யுகம் பிறக்கிறது.
பல பிரபஞ்சக் கோட்பாட்டின்படி, (Multiverses Theory – இது பற்றிக் கீழே வருகிறது.) குறைந்த Entropy உடன் பிரபஞ்சங்கள் எல்லையில்லாமல் உருவாகின்றன.
நாம் பிரதிகள் பிரதிகளாக (copies) வேறு பிரபஞ்சங்களில் வாழ்கிறோமா? இந்தப் பல பிரபஞ்சக் கோட்பாடு (Multiverses Theory) இன்று மிகவும் பிரபலமாகப் பேசப்படுகிறது. இதன் படி, நாம் இந்தப் பிரபஞ்சத்தில் மட்டும் வாழ்வதில்லை. நம்முடைய பிரதிகள் வேறு பிரபஞ்சங்களில் இருக்கின்றன. நான் இங்கே பிட்ஸா சாப்பிட, இன்னொரு நான் வேறொரு பிரபஞ்சத்தில் இட்லி சாப்பிட்டுக் கொண்டிருக்கலாம்.
இந்தக் கோட்பாடு கணித அடிப்படையில் உருவாக்கப்பட்டது. மேலும் வேறு பிரபஞ்சங்கள் வேறு வேறு இயற்பியல் விதிகளின் படி இயங்கக்கூடும் என்கிறார்கள் இந்த இயற்பியலாளர்கள்.
Ekpyrotic Universe கோட்பாட்டின்படி, இரண்டு பிரபஞ்சங்கள் ஒரே சமயத்தில் தோன்றுகின்றன. ஆனால் Entropy என்பது தவறான கொள்கை. இரண்டு பிரபஞ்சங்களும் சிக்கலான (complexity) முறையில் இயங்க ஆரம்பிக்கின்றன என்று சொல்வதே சரி.
ஏட்டின் ஆசிரியர் வேறொரு கருத்தை முன் வைக்கிறார்: Entropy என்பதே நம் அறியாமையின் அளவுகோல். இந்த சொல்லைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக, macrostates (உயர்நிலைகள்) microstates (தாழ்நிலைகள்) என்று கருதலாம்.
இன்னும் microstates உள்ளே தான் இருக்கிறோமா? இல்லை macrostates நிலைகளுக்குள் வந்துவிட்டோமா? உச்சத்துக்கு வந்துவிட்டோமா இல்லையா? எல்லாம் விடை தெரியாத கேள்விகள்.
குவாண்டம் உலகம் புரிந்து கொள்ள முடியாதபடி சிக்கலானதா? இல்லைவே இல்லை என்கிறார் ஆசிரியர்.
ஆனால் குவாண்டம் காலணிகள், குவாண்டம் நாணயங்கள், குவாண்டம் மிருகங்கள் என்று சமூக வலைத்தளங்கள் தான் கிறுகிறுக்க வைக்கின்றன. இவை தான் புரியாத புதிர்கள். உங்களுக்கு இதில் ஏதாவது புரிந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று கிண்டலடிக்கிறார் ஆசிரியர்.
கணிதம் பல தளங்களில் விரிந்தாலும் அதன் அடிப்படைக் கட்டுமானத்திலிருந்து (அடிப்படை உண்மைகள் – axioms, விதிகள் – rules) விலகாது. விலகவும் முடியாது.
அதற்காகக் கணிதத்தை நாளாந்த பேச்சு வழக்கில் அல்லது சொற்களில் மொழி பெயர்க்க வேண்டிய அவசியமே இல்லை. அதை அதன் போக்கில் விட்டுவிடுவதே சிறந்த வழி.
ஒரு கல்லை வானத்தை நோக்கி வீசினால் எந்த நேரத்தில் எங்கே போய் விழும் என்பதை நாம் துல்லியமாகக் கணிக்க முடியும். சந்திரனுக்கோ வேறு கோள்களுக்கோ ஏவப்படும் ராக்கெட்களையும் இது போல் துளியும் பிசகாமல் இப்போதே சொல்லிவிடலாம். (இயற்பியல் மேதை ஐசாக் நியூட்டனின் விதிகள் இதற்குத் துணை செய்கின்றன.) இந்த உலகம் மேக்ரோ உலகம் – macroworld.
அணுத் துகள்களின் (குவாண்டம் உலகம் – microworld) கதையே வேறு. ஒரு அணுத் துகள் எங்கே, எப்படி இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. தவிர, ஒரு அணுத் துகள் (particle) ஒரு அட்டையின் இரண்டு துளைகளுக்கூடாக ஒரே சமயத்தில் போகக்கூடியது என்று அறிந்திருக்கிறோம். இயற்பியல் தெரியாதவர்கள் அதெப்படி என்று யோசிக்கலாம். ஆனால் இயற்பியலாளர்களுக்கு இது 2+2=4 போல சர்வ சாதாரணம்.
ஒரு துகளின் இருப்பை அளக்க இயற்பியலாளர் Schrodinger வகுத்த சமன்பாடுகள் மூலம் (Schrodinger’s equations) இலகுவாகவே தெரிந்து கொள்ள முடியும். (அது எங்கே இருக்கலாம் என்னும் சாத்தியக்கூறு மட்டுமே. அறுதியாக அல்ல.)
இயற்பியலாளர்கள் எல்லாவற்றையும் அலைகளின் இயக்கங்களாக (wave functions) அணுகும் கண்ணோட்டம் கொண்டவர்கள். எலெக்ட்ரானுக்கு ஒரு wave function. ஆப்பிள் பழங்களுக்கு ஒரு wave function. மூளைகளுக்கு ஒரு wave function. ஏன் பிரபஞ்சத்துக்கே ஒரு wave function என்று போய்க் கொண்டே இருக்கும்.
குவாண்டம் உலகம் அப்படித்தான் இயங்குகிறது. இந்த உண்மையை ஏற்றுக் கொண்டால் ஏன் சிக்கல்கள்? – ஆசிரியர்.
மேல் சொன்ன கோட்பாட்டைத் தான் பள்ளிகளில் படிக்கிறோம். இதை Copenhagen Interpretation அல்லது Standard Interpretation என்பார்கள்.
பல பிரபஞ்சக் கோட்பாடு (Multiverses Theory) அணுத் துகள்களின் இயக்கத்தை வேறு விதமாக விவரிக்கிறது. துகளை ஒவ்வோர் தடவையும் அளக்க முயற்சி செய்யும் போது பிரபஞ்சம் இரண்டாகப் பிளக்கிறது.
அணுத் துகள் அட்டையின் வலது புறமாக செல்கிறதா? அப்போது வலது புறம் ஓர் பிரபஞ்சம் உருவாகி அது இன்னும் பல கிளைகளை எல்லையே இல்லாது உருவாக்கிக் கொண்டே போகிறது. துகள் இடது புறம் போகும் போதும் அதே போல நடக்கிறது.
பிரச்னை என்னவென்றால் யாருமே பிரபஞ்சம் பிளவுபடுவதையோ, பிரபஞ்சங்கள் உருவாகுவதையோ பார்த்ததே இல்லை. ஏட்டின் ஆசிரியர் இந்தக் கோட்பாட்டை மறுக்கவில்லை. இருந்தும் அதற்கு எந்த ஆதாரமும் இல்லையே. முன்பு சொன்னது போல், கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்கிற அனுமானம் போலத் தான் இதுவும். வேறென்ன சொல்ல இருக்கிறது என்கிறார்.
நாம் அனைவரும் கணனியில் உலவும் சாயல்களா (computer simulation)? இதுவும் பல பிரபஞ்சக் கோட்பாடு போல் பரபரப்பாகப் பேசப்படும் செய்தியாகிவிட்டது. இதை Nick Bostrom, Neil de Grasse Tyson போன்ற பிரபலமான இயற்பியலாளர்கள் நம்புகிறார்கள். பணக்காரப் பெரும் புள்ளி Elon Musk நம்புகிறார். அதாவது, அறிவில் நம்மை விட மேலோங்கிய ஓர் சூப்பர் நாகரிகத்தில் இருக்கும் ஒருவரின் அல்லது பலரின் கணனிகளில் உருவாக்கப்பட்ட பிம்பங்களா நாம்?
இதை நினைத்துப் பார்க்கவே அவமானமாக இருக்கிறது. இதற்கு அறிவியல் பின்புலம் துளி கூட இல்லை.
இதன் பின்னால் இருப்பது நியூரோன்கள் (neurons) கூட்டமா அல்லது நாங்கள் நியூரோன்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் செயற்கை ட்ரான்சிஸ்டர்கள் குழுவா?
அது உண்மையாக இருந்தால் உலகின் அத்தனை அணுக்கள் துவங்கி உயிரினங்கள், தாவரங்கள், நிலப்பரப்பு, கடல்கள், காலநிலை மாற்றங்கள் என்று எண்ணிலடங்காத தகவல்களை நிர்வகிக்க எல்லையே இல்லாத எண்ணிக்கையில் சுயநினைவு கொண்ட வாழும் உயிர்களோ அல்லது கணனி நெறிமுறைகளோ (algorithms) தேவை. இது சாத்தியமே இல்லாதது.
பல பிரபஞ்சக் கோட்பாடு போல தரவுகள், ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் வெறும் அதீத நம்பிக்கையில் உருவாகிய இந்தக் கணனி சாயல்கள் கோட்பாட்டையும் புறந்தள்ளுகிறார் ஆசிரியர். அறிவியலாளர்களுக்கும் சில சமயங்களில் வேடிக்கைகள், பொழுதுபோக்குகள் தேவைப்படுகிறதோ என்னமோ? கேலி செய்கிறார்.
பிரபஞ்சம் சிந்திக்கிறது? அப்படி அது சிந்தித்தாலும் சீரியஸாக சிந்திக்கிற மாதிரி தெரியவில்லையே.
Entanglement என்பது குவாண்டம் இயக்கவியலின் ஒரு முக்கிய கருப்பொருள்.
நாம் வாழும் மேக்ரோ உலகத்தில் பொருள்கள் உடைந்து போவதும் சிதறுவதும் வெகு சாதாரணம். அது போல அணுத் துகள்களும் உடைகின்றன/ சிதறுகின்றன (decaying).
ஒரு பெரிய அணுத் துகள் உடைந்து இரண்டாகப் பிளக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். ஒன்று இடது புறமாகப் பறக்கிறது. அடுத்தது வலது புறமாகப் பறக்கிறது. இருந்தும் நாம் ஒரு துகளை சோதனைக்கு உள்ளாக்கினால் அடுத்த துகளுக்கு அது எப்படியோ தெரிந்துவிடுகிறது – அது பிரபஞ்சத்தின் எந்த மூலையில் இருந்தாலும். இதை குவாண்டம் இயக்கவியலில் Entanglement என்பார்கள்.
ஒளியை விட வேகமாக செல்லமுடியாது என்று ஐன்ஸ்டைனின் சார்புக் கொள்கை (Theory of Relativity) வரையறுக்கிறது. எப்படி இரண்டு துகள்களும் ஒளியை விட வேகமாக செய்தி அனுப்பிக் கொள்கின்றன?
இது இன்று வரை புரியாத புதிர். ஒருவேளை பிரபஞ்சத்தின் சிந்தனைக்கும் இந்த செயல்பாட்டுக்கும் ஏதாவது தொடர்பிருக்குமோ?
எலெக்ட்ரான்களுக்கு சுயநினைவு உண்டா? நம்மால் ஒரு பிரபஞ்சத்தை உருவாக்க முடியுமா? சுயநினைவு பற்றி இயற்பியல் என்ன சொல்கிறது? அறிவுக்கு எல்லை இருக்கிறதா? இந்த மேக்ரோ உலகையும் குவாண்டம் உலகையும் இணைக்கும் பொதுக் கொள்கை, அதாவது – அனைத்துக் கோட்பாடு (Theory of Everything) சாத்தியமா? இந்தப் பிரபஞ்சம் நமக்காகப் படைக்கப் பட்டதா?
இப்படிப் பல கேள்வி – பதில்களோடு ஏடு வெளிவந்திருக்கிறது. பொது வாசகர்களுக்கும் இயற்பியல் மாணவர்களுக்கும் சேர்த்து விளக்கங்கள் தந்திருக்கிறார் ஆசிரியர் – அவர் கோணத்தில்.
கருத்துகளும் எதிர்க்கருத்துகளும் மோதுவதால் தானே அறிவியல் என்றும் உயிர்ப்போடு இருக்கிறது?





