
தமிழ்மொழியை ஓரு கன்னிப் பெண்ணாக உருவகம் செய்வதில் சிலருக்கு மகிழ்ச்சி. தமிழன்னையே என்று பாசமலராய் நெகிழ்வதில் சிலருக்கு மகிழ்ச்சி. எல்லாமே சரி தான். ஆனால் கன்னட மக்கள் வாழும் கர்நாடக மாநிலம் போய், ஏய் ! உங்க மொழிக்கெல்லாம் தாய்மொழி நம்ம தமிழ்மொழி. ஞாபகம் வச்சிக்கோ ! என்று அடித்து உசுப்பிவிட்டது தான் பிரச்னை.
அண்மையில் சமூக வலைத்தளங்களில் தமிழில் இருந்து தான் தென்னிந்திய மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகள் தோன்றின என்று ஒரு பக்கம், அப்படி இல்லை என்று இன்னொரு பக்கம் என்று முடியவே முடியாத விவாதங்கள். இன்னும் ஆறாத சூடு.
உண்மையில் மேல் குறிப்பிட்ட மொழிகளின் அடித்தளம் தமிழ் தானோ? இந்த சமயத்தில் திராவிட மொழிகள் (The Dravidian Languages) என்கிற தலைப்பில் மொழி அறிவியலாளர், பேராசிரியர் பத்ரிராஜு கிருஷ்ணமூர்த்தி தொகுத்த ஆய்வேடு கிடைத்தது.
அதை வாசித்துப் புரிந்து கொள்வது மிகக் கடினம். பேராசிரியரே ஏட்டின் முகவுரையில் இது மொழியியல் கலையில் (Linguistics) பட்டம் பெற்ற மாணவர்களையும் ஆய்வாளர்களையும் மனதில் வைத்து எழுதப்பட்ட ஏடு என்கிறார். ஆகவே ஏட்டில் ஆங்காங்கே கிடைத்த சில தகவல்கள் இங்கே :
(பேராசிரியரின் ஊகங்கள், முடிவுகள் சில தமிழ் ஆர்வலர்களுக்குத் திகைப்பை உண்டு பண்ணலாம். திராவிடம் என்னும் சொல்லே சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். இங்கே வருவது தமிழ்நாட்டு அரசியல் அல்ல. மேலும் சிலர், அதென்ன திராவிட மொழிகள்? தமிழ்மொழிக்கும் அதற்கும் தொடர்பில்லை. யாரோ வெள்ளைக்காரர்கள் சொன்னார்கள் என்பதற்காக அப்படியே ஏற்றுக்கொள்வதா என்று மல்லுக்கு வரலாம்.)
எது எப்படியோ, சான்றுகள் மூலம் திராவிட மொழிகள் எனும் கருத்தாக்கத்தை உலகின் மொழியியல் அறிஞர்கள் ஒருமனதாக எப்போதோ ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். அந்தப் புள்ளியில் இருந்து நாம் துவங்கலாம்.
திராவிட எனும் சொல் முதன்முதலாக, கிபி 7ம் நூற்றாண்டிலே சமஸ்கிருத ஏடான தந்திரவர்த்திகா எனும் ஏட்டில் அறிமுகமாகிறது. மேலும் மகாபாரதத்தில், பாரதா எழுதிய நியாயசாஸ்திராவில், மற்றும் இந்து சமய சட்டங்கள் மற்றும் சாதி அமைப்பு நியதிகள் அடங்கிய மனுஸ்மிருதியில் திராவிட, திராவிடி என்கிற சொற்கள் வருகின்றன.
அன்றைய காலகட்டத்தில் சாதாரண மக்கள் பேசிக்கொண்ட பிராகிருதி மொழியைச் சேர்ந்த ஒரு சிறிய கிளைமொழியாக திராவிடி இருந்ததாக மனுஸ்மிருதியில் சொல்லப்படுகிறது. திராவிடி மொழி பேய்பிசாசுகளின் மொழி என்றும் திராவிடர்கள் கருப்பான, அசிங்கமான மக்கள் என்றும் அதில் குறிப்புகள் உள்ளன.
கி.மு 7ம் நூற்றாண்டின் அய்த்ரேயபிராமணம் சொல்லும் கதை : ஆரிய முனிவர் விஸ்வாமித்திரர் அவருக்குப் பிறந்த 50 பிள்ளைகளும் உருப்படாமல் போனதால் ஒரு சாபம் போட்டாராம் : நீங்கள் எல்லாரும் ஆந்த்ரா, சபாரா, புந்ரா, புலிந்தா, முட்டிபா குழுக்கள் போல வேட்டையாடி அல்லது கிடைத்ததை உண்ணும் நாகரிகம் இல்லாத காட்டுவாசிகள் போல் ஆவீர்களாக!
பிள்ளைகள் காட்டுவாசிகளாக மாறினார்களோ இல்லையோ அது முக்கியமில்லை. இதில் கவனிக்க வேண்டியது : ஆந்த்ரா, சபாரா இரண்டும் திராவிட மொழிகள்.
ஆரியர்கள் சுமார் கிமு 1500 ஆண்டுகள் வாக்கில் இந்தியாவுக்குள் நுழைந்தபோது ஏற்கெனவே அங்கே திராவிடர்களின் குடியிருப்புகள் இருந்திருக்கின்றன.
ஈரான் நாட்டில் இருந்து ஆரியர்கள் இந்திரன் என்பவன் தலைமையில் இந்தியா வந்திருக்க வேண்டும். பாரதா, யது, புரு, துர்வாச, மருத் ஆயுத என்பவர்கள் இவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டும் என்று ஊகிக்கிறார் பேராசிரியர். அவர்களின் நிறம் வெண்மையாய் (?) இருந்தாலும் காலம் செல்லச் செல்ல உள்ளூர் மக்களுடன் கலந்ததால் அவர்கள் பெருமையாய் சொல்லிக்கொண்ட உடல் நிறம் மாறிப் போனது சோகம் தான் (அவர்களுக்கு).
திராவிட மொழிகள் சமஸ்கிருத மொழியில் இருந்து தோன்றியவை அல்ல. அவை தனித்துவம் கொண்டவை என்று இலக்கணம் மற்றும் மொழியியல் வழியாக நிறுவிய ராபர்ட் கால்டுவெல், அவரின் Comparative Grammar (1856) ஏட்டில் கிரேக்க, லத்தீன், இப்ரூ மொழிகளில் திராவிட மொழிச் சொற்கள் இருப்பதை நாம் கவனிக்க வேண்டும் என்கிறார்.
1816 களில் பிரான்சிஸ் எல்லிஸ் என்பவர் தமிழ், தெலுங்கு கன்னடம் ஆகிய மூன்று மொழிகளுக்கும் சமஸ்கிருதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவுடன் சொல்லியிருக்கிறார். இவர் ராபர்ட் கால்டுவெல்லுக்கு முன்பே தென்னிந்தியா வந்தவர்.
ஆரிய இனம் வேறு, வேறு திராவிடர் இனம் வேறு என்பது தவறு. உலகில் ஒன்றுடன் ஒன்று கலவாத தனித்தனி இனங்கள் என்று எதுவுமே கிடையாது என்கிறார் பேராசிரியர்.
திராவிட மொழிகள் உருவாக முன்பே அதற்கும் முந்திய ஓர் தொன்மை மொழி இருந்திருக்க வேண்டும் என்பது திராவிட ஆய்வாளர்களின் கணிப்பு. இதை Proto – Dravidian என்கிறார்கள். (முந்தைய திராவிடம் அல்லது முந்து திராவிடம் என இந்த மொழியை அழைக்கலாம்.)
ஆரியர்களின் வருகையின் போது வாழ்ந்தவர்கள் முந்து திராவிட மக்கள். இவர்கள் நகரங்கள் அமைத்து வாழ்ந்திருக்கிறார்கள். விவசாயம் முக்கிய தொழில். அந்த காலகட்டத்தில் இவர்கள் பண்பாட்டில் உயர்ந்த நிலையில் இருந்திருப்பது தெரிகிறது. மாறாக, ஆரியர்கள் ஆடுமாடுகளோடு, நாடோடிகளாக மேய்ச்சல் நிலங்கள் தேடி அலைந்திருக்கிறார்கள்.
முந்து திராவிடர்களின் கடவுள் நம்பிக்கைகள் எதுவாக இருந்திருக்கும்? ஒருவேளை மிருகங்களைப் பலி கொடுத்து வேண்டுதல்கள் செய்திருப்பார்களோ? தெரியாது.
பாகிஸ்தானில் இருக்கும் அரப்பா – மொகஞ்சதாரோ நாகரிகங்கள் முந்து திராவிடர்களுடையதா? அகழ்வுகளுக்கு இன்று வரை பதில் இல்லை. இந்த நாகரிகங்களின் எழுத்துகளின் பொருளும் தெரியவில்லை. எதிர்காலத்தில் தெரிந்து விடும் என்றால் திராவிடர்கள் வரலாறு கிமு 3000 ஆண்டுகளுக்கு மேலானது என்பது உறுதியாகிவிடும் என்கிறார் பேராசிரியர்.
ராபர்ட் கால்டுவெல்லின் ஆய்வுகள் ஆறு திராவிட மொழிகளோடு நின்றுவிட்டன. இன்றோ 26 மொழிகளைத் திராவிடக் குடும்பத்தில் சேர்த்திருக்கிறார்கள். இதில் நான்கு பிரிவுகள் உண்டு.
1) தென் திராவிடம் : இதில் தமிழ், மலையாளம், கன்னடம் உட்பட 11 மொழிகள்.
2) நடுவண் திராவிடம் : இதில் 6 மொழிகள்.
3) வட திராவிடம் : பாகிஸ்தானின் வடகோடியில் வழங்கும் பிராகுயி மொழி உட்பட 3 மொழிகள்.
4) நடுவண் தென் திராவிடம் : இதில் தெலுங்கு உட்பட 6 மொழிகள்.
மொழிகள் ஒலிக்கும் பாங்கு, வசன அமைப்பு, சொற்களின் ஒப்பீட்டு வடிவங்கள் என்று பல தரப்பட்ட களங்களில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகள் மூலம் இந்த நான்கு பிரிவுகளும் அமைகின்றன.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய பெரு மொழிகள் தவிர்த்து மிகுதி மொழிகளில் சில எழுத்து வடிவம் இல்லாதவை. சில மொழிகள் பேசும் மக்களின் எண்ணிக்கை குறைவு. விதிவிலக்குகளும் உண்டு. எடுத்துக்காட்டாக, துளு, குடகு மொழிகள் பேசும் மக்களின் பண்பாடுகளும், இலக்கிய நயங்களும் குறிப்பிடத் தக்கவை.
இனி தமிழ்மொழிக்கு வந்தால், செந்தமிழ் என்பது மேட்டுக்குடி மக்களின் மொழியாக இருக்க, சாதாரண, உழைக்கும் மக்கள் பேசும் மொழியாக கொடுந்தமிழ் இருந்திருக்கிறது.
மதுரை, திருநெல்வேலி மாவட்ட அகழாய்வுகளில், கி மு 2ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி (தமிழி) எழுத்துகள் கிடைத்திருக்கின்றன.
தெலுங்குமொழித் தடயங்கள் கி.பி 2ம் நூற்றாண்டில் இருந்து தெரியத் துவங்குகின்றன. கன்னடம் கி.பி 5ம் நூற்றாண்டில். மலையாளம் கி.பி 9ம் நூற்றாண்டில்.
அரப்பா – மொகஞ்சதாரோ நாகரிகங்களுக்கும் ஆரியர்களுக்கும் தொடர்பில்லை. ஆரியர் வருகைக்கு முன்பே இந்த நாகரிகங்கள் வீழ்ச்சி அடைந்துவிட்டன. அரப்பா மக்களுக்கு சிங்கம் தெரியாது. குதிரை தெரியாது. ஆரியர்களோ புலியைக் கண்டதில்லை. யானையைக் கண்டதில்லை. இவை ஒரு சில எடுத்துக்காட்டுகள்.
அரப்பா – மொகஞ்சதாரோ நாகரிகங்களின் காலம் கிமு.2500-1700 ஆண்டுகளுக்கு இடைப்பட்டது. அவர்களின் எழுத்துக்களில் ஏறக்குறைய 3000 முத்திரைகளும் 419 குறியீடுகளும் இருப்பது மட்டுமல்ல, சில வாசிப்புகள் இடமிருந்து வலமாக வரவேண்டும். சில இடமிருந்து வலமாக வரவேண்டும்.
பாரதா எழுதிய நியாயசாஸ்திரா கி.மு 4ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அதில் “விபாசா” எனும் சொல்லாடலில் (விபாசா என்றால் சமஸ்கிருதமோ பிராகிருத மொழியோ அல்லாத அந்நிய மொழிகள் என்று பொருள்) சில ஆதிவாசிகள் பேசும் மொழிகள் திரமிலா, ஆந்த்ரா என்று வருகிறது.
இதில் திரமிலா (Dramila) முந்து தமிழைக் குறிக்கிறது. ஆந்த்ரா முந்து தெலுங்கு மொழியைக் குறிக்கிறது. இந்த காலகட்டத்தையும் கி.மு 7ம் நூற்றாண்டின் அய்த்ரேயபிராமணம் சொல்வதையும் வைத்துப் பார்த்தால் ஆகக் குறைந்தது கி.மு 11 நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே முந்து தமிழும் முந்து தெலுங்கும் இருந்திருக்கின்றன என்று மதிப்பிடலாம் என்கிறார் அவர்.
முந்து தமிழ்மொழியில் இருந்து தமிழ்மொழி சுமார் கி.மு 5ம் நூற்றாண்டுகள் வாக்கில் வேறுபடத் துவங்குகிறது. தமிழ்ச் சங்க கால இலக்கியங்களின் வரவு கி.மு 2 அல்லது 3 நூற்றாண்டுகள் என்று வைத்துக் கொண்டால் தமிழ் பிரிந்த காலத்தை கி.மு 5ம் நூற்றாண்டுகள் என்று மதிப்பிடுகிறார் பேராசிரியர்.
முந்து தமிழும் கன்னடம், கோரகா, துளு ஆகிய மொழிகளும் கி.மு 6ம் நூற்றாண்டுகள் வாக்கில் ஒவ்வொன்றாகப் பிரிந்து போகத் துவங்கின என்பது அவரின் இன்னோர் கணிப்பு .
முந்து தென் திராவிடமொழியில் (Southern Proto – Dravidian) இருந்து பிரிந்த முந்து தமிழ்மொழி (Pre -Tamil) இன்னும் 11 மொழிகளாக மாறுகிறது (இன்று வழக்கத்தில் இருக்கும் தமிழ், மலையாளம், கன்னடம், இருளா, குருளே, குறும்பா, கொடகு , தோடா, கோடா, படகு, கோரகா).
கி.மு 5ம் நூற்றாண்டுக்குள் சமஸ்கிருத சொற்கள் தமிழுக்குள் நுழையத் துவங்கிவிட்டன. கி.மு 1 – 2 ம் நூற்றாண்டு இடைவெளியில் தொகுத்ததாக நம்பப்படும் தொல்காப்பியத்தில் சமஸ்கிருத வார்த்தைகள் இருக்கின்றன.
தென்னிந்தியாவில் மகாபாரதம், ராமாயணம் போன்ற காவியங்களின் வரவுகள் இன்னும் வைணவமும் சைவமும் சேர்ந்து சம்ஸ்கிருத மொழிக்கு வலிமை சேர்த்தன.
கல்வெட்டுகளில் உள்ளூர் பிரபலங்களின் பெயர்கள் தமிழில் இருக்க, மன்னர்களின் பெயர்கள் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன : குலோத்துங்க, நிர்ப்பதுங்க, ராஜராஜ …
1900 ஆண்டு வாக்கில் இருந்த தமிழ் வசன நடையில் சுமார் 45-50 விழுக்காடு சம்ஸ்கிருத சொற்களே.
சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்துத் தமிழில் “தனித்தமிழ் இயக்கம்” தோன்றியதில் 1975 ஆண்டு வாக்கில் அது 20 விழுக்காடாக சுருங்கியது.
வேற்று மொழிகள் தமிழில் வந்து கலப்பதில் வெவ்வேறு கருத்துகள் முன்வைக்கப் படுகின்றன. நல்லது தானே என்று ஒரு சாரார். மொழியின் தூய்மை அழிந்து விடுமே என்று ஒரு சாரார். ஒரு வரம்புக்குள் இருந்தால் நல்…. என்று இழுப்பவர்கள் இன்னோர் சாரார்.
சமஸ்கிருதம் தவிர, ஆயிரத்துக்கு மேற்பட்ட உருது சொற்கள் தமிழில் கலந்திருக்கின்றன. (குமாஸ்தா, ஜில்லா, தாலுகா…)
அடுத்து போர்த்துக்கேய சொற்கள் : சோப்பு, டவல், சாவி, வாத்து, அலமாரி …
ஆனால் எதையும் பற்றிக் கவலைப்படாமல் கன்னடமும், தெலுங்கும், மலையாளமும் போட்டி போட்டபடி சமஸ்கிருத சொற்களைத் தாராளமாக உள்வாங்கிக் கொண்டிருக்கின்றன.
ஒரு காலகட்டத்தில் “பச்ச மலையாளம்” என்று கேரளத்தில் ஓர் இயக்கம் துவங்கி சமஸ்கிருதத்துக்கு ஒரு வரம்பு போடப் பார்த்தது. அது வெற்றி பெறாமல் போனது ஒரு புறம் இருக்க, இன்றைய மலையாள இலக்கியம் சமஸ்கிருத சொற்களை இன்னும் தீவிரமாகப் பயன்படுத்துகிறது.
தமிழ் பிராமி (தமிழி ) எழுத்துகளின் முன்னோடி கி.மு 3ம் நூற்றாண்டின் அசோக காலத்து பிராமி எழுத்துகள் என்பது பேராசிரியரின் ஊகம். வட நாட்டில் இருந்து தென்னிந்தியா வந்த பவுத்த, சமணத் துறவிகளின் செல்வாக்கினால் எழுத்து வடிவங்கள் வட்டெழுத்துகளாக மாற்றம் அடைந்திருக்கலாம்.
பின்பு ஆட்சிக்கு வந்த பல்லவ மன்னர்கள் வட்டெழுத்துக்களை மாற்றினார்கள். கிரந்த எழுத்துகளை (ஹ,ஷ, ஜ, ஸ, க்ஷ) தமிழில் புகுத்தினார்கள்.
தமிழிலும் மலையாளத்திலும் அசை (syllable) முந்து தமிழில் இருந்தது போலவே மாற்றம் அடையாமல் அப்படியே இருப்பதை சுட்டிக் காட்டுகிறார் பேராசிரியர்.
பேராசிரியர் காலக் கணிப்புகள் எதையும் இது தான் என்று அறுதியிட்டுச் சொல்லவில்லை. என் ஊகங்களை எதிர்கால ஆய்வுகள் மாற்றலாம் அல்லது உறுதி செய்யலாம் என்கிறார்.
எதுவாக இருந்தாலும் திராவிட மொழிகளின் ஆய்வுகள் இன்னும் குழந்தைப் பருவத்திலேயே இருக்கின்றன என்கிற ஆதங்கத்தையும் பதிவு செய்கிறார்.
இந்திய நாட்டின் தொல்குடிகள் திராவிடர்களே, ஆரியர்கள் அல்ல என்று நிறுவுவதில் பேராசிரியர் பெருமுனைப்பு காட்டியிருக்கிறார். தமிழ்நாடு தவிர்த்து, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மற்றைய தென்னிந்திய மாநில மக்கள் அவர்கள் மொழிகளின் ஊற்றுக்கண் தெரியாமல் வாழ்வது ஓர் முரண்நகை.
ஏட்டின் முதல் பதிப்பு 2003ல் வெளிவந்தது. கடந்த ஆண்டு (2024) தமிழ்நாட்டில் கீழடி அகழாய்வு ஆய்வறிக்கை வெளிவந்திருப்பது அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனென்றால் 2012ல் பேராசிரியர் காலமாகிவிட்டார்.
பேராசிரியரின் தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் முடிந்தளவு அவர் எந்தப் பக்கமும் சாராமல் சமநிலையுடன் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன்.
