வந்துவிடு வட்டமிடு

இந்த உலகில் முதலாளிகளின் சாம்ராஜ்யம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும். பிறகு சோஷலிசம் மலர்ந்துவிடும். அப்படியே சமதர்ம யுகத்துக்குள் நுழைந்துவிடலாம் என்பதெல்லாம் புராணக் கதைகள் போல் வெறும் குருட்டு நம்பிக்கைகள். உண்மையில் இன்றைய உலகம் இன்றிருப்பதை விடப் படுமோசமான ஒரு சூழ்நிலையை நோக்கி நகரத் துவங்கிவிட்டது. அதை நாமும் சந்தோஷமாக வரவேற்றுக் கொண்டிருக்கிறோம் என்கிறார் பொருளியலாளர் யானிஸ் வரூஃபாக்கிஸ்.

இன்றைய பொருளியல் போக்கு பற்றி இவர் எழுதிய Technofeudalism ஏடு ஆளும் அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறதோ இல்லையோ பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எரிச்சலைக் கொடுத்திருக்கிறது.

பேராசிரியர் கார்ல் மார்க்சின் சீடர். அவர், ஏட்டின் முகவுரையில் இரண்டு கருப்பொருள்களைக் குறிப்பிடுகிறார். முதலாவது : இணையம் மக்கள் கைகளிலிருந்து தனியார் கைகளுக்குப் போன கதை . அதாவது அமெரிக்கா, சீனா இரண்டிலும் உள்ள டெக் பெரும் புள்ளிகள் இணையத்தைப் பங்கு போட்டுக் கொண்ட கதை. அடுத்து, 2008 இல் ஏற்பட்ட பெரும் நிதி நெருக்கடிக்குத் தீர்வு காணப்போகிறோம் என்று சொல்லியபடி மேற்குலக அரசுகளும் மத்திய வங்கிகளும் அடித்த முட்டாள்த்தனமான கூத்து.

மேல் சொன்ன நிகழ்வுகளால் பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் முன்னைய சின்ன வளையத்தில் இருந்து வெளியேறி இப்போ ஒரு பெரிய வளையத்தில் இருந்து கும்மியடிக்கிறார்கள் என்கிறார் பேராசிரியர்.

செயற்கை நுண்ணறிவு நல்லதா கெட்டதா என்று பட்டி மன்றங்களில் விவாதங்கள் இன்று பொறி பறக்கின்றன. தெரிந்ததே. ஆகவே ஏட்டின் தலைப்பைப் பார்த்துவிட்டு (Technofeudalism) இவரும் ஏதோ சொல்லப் போகிறார் என்று நினைத்தால் தப்பு. செயற்கை நுண்ணறிவு பாசறைக்குள் நாம் ஏற்கெனவே நுழைந்துவிட்டோமே. தெரியவில்லை? இப்போ போய் … கேள்வி கேட்கிறார்.

இந்த விவாதத்தில் மாட்டிக் கொள்ளாமல் அதன் பின்னால் யார் யார் ஒளிந்திருக்கிறார்கள், இந்தப் புதிய பிரபுக்கள் நம்மை ஏய்க்க என்னென்ன உத்திகளைப் பயன்படுத்துகிறார்கள், நாம் ஏன் பண்ணை அடிமைகள் போல் ஆகிவிட்டோம் என்று ஆராய்வதே ஏட்டின் நோக்கம்.

நமக்குத் தெரிந்த மூலதனம் என்ன என்றால் நாம் கேள்விப்பட்ட பொருளாதாரத்தில் முதலீடாகப் போடப்பட்ட பணம், எந்திரங்கள், ஆலை, அது இயங்கும் நிலப்பகுதியின் மதிப்பு, இன்னும் பல .. என்று இவைகளின் மொத்தப் பெறுமானம் தான் மூலதனம் என்று அறிந்திருக்கிறோம்.

ஆனால் பேராசிரியர் விவரிக்கும் மூலதனம் (cloud capital) கொஞ்சம் இசகு பிசகானது என்றாலும் அதன் உள்ளே போகப் போகப் புரிகிறது. இணையத்தில் இயங்கும் எந்திர வலைப்பின்னல், செயற்கை நுண்ணறிவை இயக்கும் கணனி விதிமுறைகளின் தொகுப்பு, உலகளாவிய தரவுகளில் இருந்து சேமித்த தகவல் முடிவுகள் .. இவை எல்லாம் சேர்ந்த மொத்தப் பெறுமானம் cloud மூலதனம். ஆங்கிலத்தில் சொன்னால் : Cloud capital is the total value of network machinery, AI algorithms and data derived from worldly information.

பேராசிரியர் சொல்லும் மூலதனம் வித்தியாசமானது. இன்று இணையம் உலகை ஆள்கிறது. ஆகவே எவர் கையில் தரவுகள் கூடுதலாகக் குவிகிறதோ அவர் கையில் அதிகாரமும் பணமும் அபரிமிதமாகக் குவிகிறது என்று பொருள்.

நீங்கள் எப்படியான ஆள்? உங்கள் தேவைகள் என்ன? உங்களுக்குள் ரகசியமாக இருக்கும் ஆசைகள் என்ன? எதை அவசியமில்லாதது என்று நினைக்கிறீர்கள்?.. இப்படி இப்படி முழுத் தகவல்களும் என் கைக்குள் வந்துவிட்டால் நான் தான் ராஜா அல்லது ராணி. நான் சொல்கிறபடி நீங்கள் ஆடுவீர்கள். பாடுவீர்கள். என் கட்டளைப்படி எது வேண்டுமானாலும் செய்வீர்கள். இது தான் பேராசிரியர் சொல்லும் மூலதனத்தில் மறைந்திருக்கும் சூட்சுமம்.

முதலில் பணம் போட்டு முதலீடு செய்வோம். பிறகு அதில் லாபம் பார்ப்போம் என்னும் வழக்கமான முதலாளித்துவம் அந்தக் காலம் போல் இன்று இல்லை. பேராசிரியரின் பார்வையில், “பழைய முதலாளித்துவம் தற்கொலை செய்து கொண்டுவிட்டது. அந்த இடத்துக்கு cloud மூலதனம் வந்துவிட்டது. இங்கே லாபம் முக்கியமில்லை. “வாடகை” தான் (rent) முக்கியம்.”

cloud மூலதனத்தை பெருந்தொகையாக வைத்திருக்கும் பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் இன்று மகாப் பிரபுக்களாக மாற்றம் அடைந்து கொண்டிருக்கிறார்கள். அரசுகளே அவர்களிடம் அறிவுரைகள் கேட்டு நடக்கும் அளவுக்கு ரொம்ப மேலே போய்விட்டார்கள். அவர்களின் கீழே பணியாற்றும் அவர்களின் “படைப்பிரிவுகளாக” இன்றைய டெக் பொறியியலாளர்கள் மாறியிருக்கிறார்கள். (இவர்களுக்கு cloud proles என்று பேர் சூட்டியிருக்கிறார் பேராசிரியர்.) அந்த காலத்துப் பண்ணை அடிமைகள் போல் நாம் மாறியிருக்கிறோம். (சாதா ஆட்களான நமக்கு அவர் வைத்த பேர் : cloud serfs.)

இருந்தும் ஒரு வித்தியாசம் : அன்றைய அடிமைகள் கண்ணீர் விட்டபடி கொடுமைகளை எதிர்கொண்டார்கள். இன்று மகாப் பிரபுக்கள், பிரபுக்கள், எடுபிடி பிரபுக்கள் என்று பல ரேஞ்சுகளில் இருக்கும் பிரபுக்களுக்கு அவரவர் வசதிப்படி படைப்பிரிவுகளும் இருக்கின்றன. சந்தோஷமாக நாம் அவர்களின் அடிமைகளாகி மனமுவந்து வாழ்க்கை நடத்துகிறோம்.

அதென்ன “வாடகை” ? அது எப்படி செயல்படுகிறது?

ஏகப்பட்ட செயலிகள் (apps), மென்பொருள்கள் (software), மென்பொருள் வடிவமைப்பாளர்கள், code எழுதும் விற்பன்னர்கள், புதுப்புது games உருவாக்குவோர்.. என்று இணையம் அவசர கதியில் இயங்கிக் கொண்டே இருக்கிறது. நீங்கள் எந்தப் பொருளை அல்லது சேவையை வாங்கினால் என்ன, விற்றால் என்ன, உற்பத்தி செய்தால் என்ன அல்லது ஜாலியாக கேம் விளையாடினால் என்ன, அனைத்துக்கும் செயலிகளும் மென்பொருள்களும் ஓடிவந்து உதவக் காத்திருக்கின்றன.

இந்த சேவைகளுக்கு ஒரு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் சிறு துளியோ அல்லது பெருந்துளியோ எதுவோ வெள்ளம் போல் பெருகுகிறது. அதில் டெக் பொறியியலாளர்களுக்குக் கொஞ்சம், பிரபுக்களின் முகவர்களுக்குக் கொஞ்சம் என்று கோயில் தீர்த்தம் போல் கொடுக்கப்படுகிறது. மீதி 99 விழுக்காடு கடைசியில் கார்ப்பரேட் முதலாளிகளின் பைகளில் மொத்தமாகப் போய்ச் சேர்கிறது என்கிறார் பேராசிரியர். ஆச்சரியமாக இல்லை?

எந்த வணிகத்திலும் மூலப் பொருள்களின் விலைகளை சமாளித்து, ஊழியர்களைத் தாஜா பண்ணி சம்பளம் கொடுத்து … இப்படிப் பல சவால்களை சந்தித்துத் தான் லாபம் பார்க்கலாம். ஆனால் வாடகை என்பது வணிகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் மறைந்திருக்கிறது. இன்றைய வணிகம் பெருமளவில் இணையத்தின் ஊடாக நடப்பதால் எல்லா நடப்புகளுக்கும் ஏற்கெனவே தீர்மானித்தபடி ஒரு “குறிப்பிட்ட தொகை” அடங்கலாக விலை இருக்கும். நீங்கள் நன்றாக பிசினஸ் செய்தாலென்ன, நாசமாய்ப் போனாலென்ன அந்தத் தொகை ஆட்டோமெட்டிக்காக மகாப் பிரபுக்களிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது.

டெக் பொறியியலாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவு நுட்பமாக உதவுகிறது. இணையத்துக்குள் நுழைய வானத்தில் சுற்றும் துணைக்கோள்கள் (satellites) அல்லது கடலுக்கடியில் போடப்பட்டிருக்கும் கேபிள்கள் இருக்கின்றன. இவை அனைத்தின் சொந்தக்காரர்கள் கார்ப்பரேட் மகாப் பிரபுக்கள்.

முதலாளிகள் பொருள்களை அல்லது சேவைகளை விற்றுப் பணம் சம்பாதிக்க இணையத்தில், தொலைக்காட்சிகளில் காசைக் கொட்டி விளம்பரங்கள் செய்கிறார்கள். சாலைகளில் பிரம்மாண்டமான கட் அவுட்கள் வைக்கிறார்கள். ஆனால் இவர்கள் என்ன தான் கூவினாலும் Alexa மற்றும் Google Assistant என்கிற இரண்டு பெண் குரல்களுக்கு ஈடாகாது என்பது உண்மை தான். இன்னும் ChatGPT யையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இருந்தாலும் இவை உணர்ச்சியுள்ள மாந்தர்கள் போல நடிப்பதில் கில்லாடிகள். நம்மிடம் உற்ற தோழன் அல்லது தோழி போல் பேசி நம் உள்ளத்தை எடை போடுகின்றன. தகவல்களை அந்தந்தப் பிரபுக்களின் டெக் பொறியியலாளர்களுக்கு அனுப்புகின்றன.

இந்த செயற்கை நுண்ணறிவு முதலில் நம்மிடமிருந்து பயின்று கொள்கிறது. ஒரு கட்டம் வந்ததும் அதன் வழியில் நம்மைப் பயிற்றுவிக்கத் துவங்குகிறது. இது தான் மகாப் பிரபுக்கள் எதிர்பார்க்கும் நிலை. இந்த அபாயகரமான சூழலுக்குள் நாம் மூழ்கத் துவங்கும் போது நம் “சுயத்தை” இழக்கிறோம். பிரபுக்கள் கொண்டு வந்து திணிப்பதை மறுபேச்சின்றி ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறோம். ஆபத்து வருகிறது என்று தெரிந்தும் அலட்சியம் செய்கிறோமா?

ID அட்டை மூலம் நாம் என்னென்ன பொருள்கள் வாங்குகிறோம் என்பது நம் வங்கிக்குத் தெரியும் . நம் குடும்பம் மற்றும் நண்பர்கள் விவகாரங்கள், விவரங்கள் அனைத்தும் முகநூலுக்குத் தெரியும். நம் வாழ்க்கையின் சின்னச் சின்னத் தருணங்களில் தோன்றும் உணர்ச்சிப் பெருக்கை Twitter (இன்றைய X) அறிந்து வைத்திருக்கிறது. Apple, Google இரண்டும் நாம் எதைப் பார்க்கிறோம், எதை வாசிக்கிறோம், எதை வாங்குகிறோம் என்று துல்லியமான கணிப்புகள் வைத்திருக்கின்றன.

இந்த செயற்கை நுண்ணறிவு என்ன தகவல்கள் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளட்டும். ஆனால் தகவல்கள் யாருக்கு சொந்தம் என்பதில் தான் என் கவலை என்கிறார் பேராசிரியர்.

Cloud மூலதனம் எப்போ தொடங்கியது? இதில் இணையத்தின் சொந்தக் கதை இணைந்திருக்கிறது. முதலில் இணையம் அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதை அணுகும் கணனி நெறிமுறை (protocol) TCP/IP, POP, IMAP என்று காலப்போக்கில் மாற்றங்கள் அடைந்து இன்று நாம் அறிந்த HTTP இல் வந்து நிற்கிறது.

துவக்க கால கணனியிடம் படிப்படியான கட்டளைகளைக் கொடுத்து (இந்த வழிமுறைகளுக்கு algorithms என்று பேர்) ஒரு குறிப்பிட்ட ஒரு முடிவுக்கு வா என்று அதை வடிவமைத்த டெக் பொறியியலாளர்கள் ஏவியதை மின்னல் வேகத்தில் அது செய்து காட்டியது. இது கணனிகளின் வளர்ச்சியில் முதல் படி. இந்த செய்தி Wall Street போன்ற நிதிச் சந்தைகளின் பிதாமகர்கள் காதுக்குப் போயிற்று. அடடே ! கணனி மூலம் நம்மிடம் இருக்கும் பணத்தை இன்னும் பெருக்கலாமே என்று அவர்கள் யோசிக்கத் துவங்கினார்கள்.

காலம் போகப் போக, தொழில்நுட்ப வளர்ச்சியில் கணனிகளின் பாய்ச்சல் இன்னும் அதிகரித்தது. ஒரு முடிவு மட்டுமல்ல, பல முடிவுகளை எடு. தற்செயலாக, வெளிப்புற சக்திகள் அந்த முடிவுகளில் தாக்கங்கள் ஏற்படுத்தும் என்றால் எது சிறந்த முடிவாக இருக்கும்? சொல்லு ராஜா என்றதும் அதையும் செய்து காட்டியது கணனி. இது இரண்டாவது கட்டம்.

மூன்றாவது கட்டத்தில், கட்டளைகள் தருகிறோம். உன் முடிவுகளை சீர் தூக்கிப் பார். என்னென்ன தவறுகள் செய்தாய்? அடுத்த தடவை இன்னும் சிறப்பாகச் செய்ய முடியுமா? உன்னைப் புதுப்பித்துக் கொள்ள முடியுமா?

அதாவது, மனிதர்களின் மூளை நரம்புகள் செயல்படுவதைப் போல் ஏறக்குறைய, சிக்கலான ஓர் படிநிலைக்கு ஏற்றி வந்திருக்கிறது செயற்கை நுண்ணறிவின் செயல்திறன்.

அப்படி என்றால் நம்மைப்போல் செயற்கை நுண்ணறிவுக்கென்று ஓர் மனநிலை ஏற்பட்டுவிட்டதா? (கணனி அறிவியல் மொழியில் இதை singularity என்கிறார்கள்.) அல்லது அந்த நிலையை விரைவில் அடையப் போகிறதா? அது மனித குலத்துக்கு ஆபத்தாக வந்து முடியுமா? யாருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை.

பேராசிரியர் கருத்தின் படி, செயற்கை நுண்ணறிவு சுயமாக சிந்திக்க ஆரம்பித்தாலும் அதற்கு மனிதர்கள் போல் உணர்வுகள் இருக்கப் போவதில்லை. அவரவர் பிரபுக்களுக்கு ஏவல் செய்யும் வெறும் எந்திரங்களாகவே இருக்கும். வேண்டுமானால் மனிதர்களின் வேலைகளைப் பறித்துக் கொள்ளலாம். அதை வடிவமைத்த பொறியலாளர்களையே வீட்டுக்கு அனுப்பலாம். அதை இப்போதே கண்கூடாகக் காண்கிறோமே.

தினசரி Microsoft, Google, amazon என்று ஏகப்பட்ட பிரபுக்கள் அவர்களின் டெக் ஊழியர்களை பல்லாயிரக்கணக்கில் வேறு வேலை தேடுங்கள் என்று சீட்டுக் கிழிக்கிறார்களே.

இத்தனைக்கும் எப்படி செயற்கை நுண்ணறிவு இயங்குகிறது? யாருக்கும் தெரியாது. algorithms எழுதும் டெக் பொறியியலாளர்களுக்கே தெரியாது – அன்றிலிருந்து இன்று வரை.

அமெரிக்காவின் பிரபுக்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் பேராசிரியர் சீனாவின் பிரபுக்களையும் பட்டியல் போடத் தவறவில்லை. ஏன் என்றால் இன்று பொருளாதாரத்தில் அமெரிக்காவுக்கே தண்ணி காட்டும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது சீனா.

உதாரணமாக, TikTok, AliBaba, Tencent, WeChat …. என்று சீனாவிலும் மகாப் பிரபுக்கள் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லாரும் சீன அரசுக்கு அடங்கி நடக்கிறார்கள். சீனா ஓர் சர்வாதிகார நாடு. எனவே அரசு அதன் மக்களை உளவு பார்க்க, அளவுக்கு மிஞ்சினால் தூக்கி உள்ளே போட . . என்பது மாதிரி செயல்களுக்கு அந்த நாட்டின் செயற்கை நுண்ணறிவு மிகவும் துணை போகிறது என்பதில் அய்யமில்லை.

அய்ரோப்பா இதில் வராதா என்று பேராசிரியரிடம் கேட்பது மடத்தனம். நாம் பெரிய சைஸ் திமிங்கிலங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். சின்ன சைஸ் சுறாக்கள், மீன்கள் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?

(மேற்கு அய்ரோப்பிய நாடுகளின் தொழிலதிபர்கள் கிடைக்கும் லாபத்தை அமெரிக்காவில் கொண்டு போய்க் கொட்டி அமெரிக்க டாலர்களில் மாற்றி வைத்துக் கொள்கிறார்களே தவிர, அவர்களுக்கு வேறு யோசனைகள் இருப்பதாகத் தெரியவில்லை என்கிறார் பேராசிரியர்.)

யார் இந்த மகாப் பிரபுக்கள் என்றால் Amazon, Google, Microsoft .. என்று பெரும் பட்டியலே நீள்கிறது.

மகாப் பிரபுக்களின் வலையிலிருந்து எப்படி நம்மைத் தற்காத்துக் கொள்வது? பக்கம் 181 முதல் 210 வரை அவரின் யோசனைகள் நம்மை யோசிக்க வைக்கின்றன. சில நடைமுறை சாத்தியமானவை. முயன்றால் சில திட்டங்களை அரசமட்டத்தில் சட்டரீதியாக அமுல்படுத்த முடியும். மற்றவை எட்டாத கனிகள்.

எது எப்படியோ, தர்க்க ரீதியாக, ஏராளமான தகவல்கள் மூலம் பேராசிரியர் அவரின் சிந்தனைகளை முன் வைக்கிறார். அதே சமயம் அவருக்கு எதிர்ப்புக் குரல்களும் இல்லாமல் இல்லை. இவர்களை முன்னால் அனுப்பிவிட்டுப் பின்னால் இருந்து வேடிக்கை பார்க்கிறார்களோ கார்ப்பரேட் பிரபுக்கள்?

என்ன ஆனாலும் சாதாரண மக்கள் ஏமாந்துவிடக் கூடாது. பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் பசப்பு வார்த்தைகளில் மயங்கிவிடக் கூடாது. அவர்களின் கைகளில் ஆடும் பொம்மைகளாக மாறிவிடக் கூடாது என்கிற அவரின் சமூக நீதிக்கான சிந்தனையும் அக்கறையும் ஏட்டின் ஊடே தெரிகின்றன.

ஏட்டின் ஒரு சில பக்கங்களே இந்த அறிமுகத்தில் வந்தாலும் பொருளியல் நடப்புகளைத் தெளிவுடன் விளக்கும் பாங்கு, கணீர் என்று முழங்கும் அழுத்தம் திருத்தமான வார்த்தைகள், ஆங்கில சொல்வளம்… மனதில் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன.

Thanks for your comment!